கொழும்பு: முத்தரப்பு 'டுவென்டி-20' தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் வங்கதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கையில் முத்தரப்பு 'டுவென்டி-20' தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டார்.
சகால் அசத்தல்
வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (11) ஏமாற்றினார். சகால் 'சுழலில்' தமிம் இக்பால் (15), சவுமியா சர்கார் (1) சிக்கினர். அபாரமாக விளையாடிய சபிர் ரஹ்மான் அரை சதம் விளாசினார். உனத்கட் 'வேகத்தில்' சபிர் (77), ரூபெல் (0) ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் மெஹிதி அதிரடி காட்டினார். முடிவில், வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. மெஹிதி (19), முஷ்டபிஜுர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சகால் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரோகித் அரை சதம்
பின், களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (10) ஏமாற்றினார். ரெய்னா டக்-அவுட்டானார். ரூபெல் 'வேகத்தில்' லோகேஷ் ராகுல் (24) ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ரோகித் (56) அரை சதம் அடித்தார். மணிஷ் பாண்டே 28 ரன்களில் திரும்பினார். இந்த நேரத்தில், வரமாக வந்தார் தினேஷ் கார்த்திக். ரூபெல் ஓவரில் இரண்டு சிக்சர், 2 பவுண்டரி விளாசி, இந்திய ரசிகர்களை மகிழ்வித்தார். பந்துகளை வீணடித்த விஜய் ஷங்கர் 17 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில், தினேஷ் சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் (29), வாஷிங்டன் சுந்தர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், இந்திய அணி கோப்பையை தட்டிச்சென்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE