'கப்பம்' கட்டும் அதிகாரிகள்; ஏமாற்றி 'ஏப்பம்' விடும் புரோக்கர் கூட்டம்

Updated : மார் 20, 2018 | Added : மார் 20, 2018 | |
Advertisement
கொளுத்தும் வெயிலில், வருணனின் கருணையால், திருப்பூரில் சாரல் மழை பெய்தது. பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலுக்கு செல்வதற்காக, வண்டியில் கிளம்பிய சித்ராவும், மித்ராவும், மழையில் நனைந்தவாறே, ஜாலியாக பேசிக்கொண்டே சென்றனர்.''எந்த வருஷமும் இல்லாத மாதிரி, வழக்கத்துக்கு மாறாக மழையும் வெயிலும் ஒரே 'டைமில்' அடிக்குது பார்த்தியா,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா. மழை மட்டும்
'கப்பம்' கட்டும் அதிகாரிகள்; ஏமாற்றி 'ஏப்பம்' விடும் புரோக்கர் கூட்டம்

கொளுத்தும் வெயிலில், வருணனின் கருணையால், திருப்பூரில் சாரல் மழை பெய்தது. பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலுக்கு செல்வதற்காக, வண்டியில் கிளம்பிய சித்ராவும், மித்ராவும், மழையில் நனைந்தவாறே, ஜாலியாக பேசிக்கொண்டே சென்றனர்.

''எந்த வருஷமும் இல்லாத மாதிரி, வழக்கத்துக்கு மாறாக மழையும் வெயிலும் ஒரே 'டைமில்' அடிக்குது பார்த்தியா,'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா. மழை மட்டும் வழக்கத்துக்கு மாறாக பெய்யவில்லை. அதிகாரிகள் 'டிரான்ஸ்பரும்'தான் நடக்குது,'' என்று மித்ரா சொன்னதும், ''ஊரக வளர்ச்சி பிரிவில், நடந்த 'டிரான்ஸ்பர்' பத்தி தானே சொல்கிறாய்?'' என்று சித்ரா குறுக்கிட்டாள்.

''வழக்கமாக, அரசு துறைகளில் நிதியாண்டு முடியும் மார்ச் மாதத்தில் 'டிரான்ஸ்பர்' உத்தரவு போட மாட்டார்கள். இந்த முறை எதையும் பொருட்படுத்தாமல் நடந்திருச்சு. இது யாரோட வேலைன்னு, மத்த அதிகாரிகள் ஆராய்ச்சியில இறங்கியிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

அதற்குள், குமார் நகர் சிக்னலில் வண்டி நிற்கவே, அருகிலேயே உடுமலை செல்லும் அரசு பஸ் நின்றது. அதைப்பார்த்தவுடன், சித்ரா, ''எது எப்படியோ, பல்லடம் வந்து போய்ட்டிருந்த, 'சத்ய'மான ஆபீசருக்கு, உடுமலைக்கே டிரான்ஸ்பர் போட்டுட்டாங்க. இப்போ அவருக்கு அலைச்சல் மிச்சம்தானே,'' என்றாள் மித்ரா.

அதற்குள் பச்சை சிக்னல் எரிந்ததும், வண்டியை கிளப்பிய சித்ரா, ''புரமோஷனில், 'மான்செஸ்டர்' ஊருக்கு மாற்றலாகி போன 'முருகன்' பேர் கொண்ட ஆபீசர், கூடவே, தனக்கு 'சப்போர்ட்' பண்றவரையும் கூட்டிட்டு போயிட்டாராம், தெரியுமா மித்து?'' என்றாள்

''ஆமாம்... நானும் கேள்விப்பட்டேன். ஏராளமான புகார்களுக்கு ஆளான அலட்டல் ஆபீசர், போன மாதம் மாறுதல் பெற்று, அங்கு சார்ஜ் எடுத்த நேரம்அவருக்கு புரமோசனும் கெடச்சிருச்சு. அவருடைய எல்லா 'காரியங்களுக்கும்' ஒத்துழைத்து வந்த 'முத்தான' அதிகாரியையும் சென்னைக்கு கூட்டிட்டு போய், அவருக்கும் சேர்த்து 'புரமோசன் கம் டிரான்ஸ்பர்' ரெண்டையும் தன்னோட செலவுல வாங்கியிருக்கார்,'' என்றாள் மித்ரா.

''அட... பரவாயில்லயே, எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்?'' என்ற சித்ரா, எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னல் ஓபனாகி இருந்ததால், சற்று வேகமாக போனாள்.

''ஆமாங்க்கா. இந்த 'அலட்டல்' ஆபீசர், லிங்கேஸ்வரர் ஊரிலிருந்து, 'மூலமான' ஊருக்கு போனாரில்ல. அங்கேயும், தனது வேலையை காட்டிட்டாராம்,'' என்று மித்ரா சொன்னதும்,
''சும்மா.. சஸ்பென்ஸ் வைக்காம, விஷயத்தை சொல்லு,'' என்று சித்ரா சொன்னதும், மழை பெரிதாக பெய்தது. உடனே, இருவரும், ரோட்டோரம் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர்.காபி ஆர்டர் கொடுத்த மித்ரா,

''சொல்றேன்க்கா. அந்த பகுதியில, 'விண்ட் மில்' அமைக்க, ஒருத்தர் அப்ளிகேஷன் கொடுத்தாராம். அதுக்கு, கலெக்டர்தான் ஆர்டர் கொடுக்கணுமாம். ஆனால், யூனியன் லெவலில் இவரே ஆர்டர் போட்டுட்டாராம். இந்த விஷயம் தெரிஞ்சு, கலெக்டர் ஆபீசில், விசாரணையும் கூட நடந்துதாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.

''ம்.. அப்புறம் என்னாச்சு?'' என்று சித்ரா ஆர்வமாக கேட்டதும், ''விண்ட் மில் லெட்டரை தன் வீட்டில் இருந்தே டைப் பண்ணி கொடுத்திருக்கார். அதனால, அது சம்பந்தமான எந்த ரெக்கார்டும் இல்லையாம். எப்படியிருந்தாலும், 'விண்ட் மில்'காரர், கலெக்டரிடம்தானே வரணும். அப்ப பார்த்துக்கலாமுன்னு, விட்டுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அப்ப... தலைக்கு மேல கத்தி தொங்குதுன்னு சொல்லு, மித்து,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா. அப்போது, ஆவி பறக்க காபி வரவும், இருவரும் குடிக்க துவங்கினர்.

மழைக்கு இதமாக காபியை குடித்துக்கொண்டே, ''கட்சிக்காரங்களுக்கு மட்டும்தான் நலத்திட்டம் கிடைக்குங்கறது சரியாத்தான் இருக்குது,'' என்றாள் மித்ரா.

''ஸ்கூட்டி மேட்டர்தானே,'' என்று சித்ரா சொன்னதும், ''நோ.. நோ... நான் சொல்ல வந்தது, திருப்பூர் மாவட்டத்துல நடக்கற மேட்டர்க்கா. கலெக்டர் ஆபீசில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அயர்ன் பாக்ஸ் கொடுக்கறது, தையல் மெஷின், பட்டான்னு எந்த திட்டமா இருந்தாலும், எம்.எல்.ஏ.,வ கேட்டுத்தான் பயனாளிகள முடிவு பண்ணனும்னு அமைச்சர் 'கறாரா' சொல்லிட்டாராம்,'' என்று விளக்கினாள் மித்ரா.

''ஓ.... அப்ப எம்.எல்.ஏ.,வ 'பார்த்தா' தான் நலத்திட்டம் கிடைக்குமா?'' என்று சொன்ன சித்ரா, ''நெருப்பில்லாம புகையுமாங்கறது 'ைஹவேஸ்' விஷயத்துல தெளிவாயிடுச்சு,'' என்றாள்.''என்னக்கா சொல்றீங்க?'' என்று மித்ரா கேட்டதும்,

''கலெக்டர் ஆபீஸ் ஆய்வுக்கூட்டத்துல, நம்ம ஸ்டேட்லயே திருப்பூர் ரோடுகள் தான் மோசம்னு எம்.எல்.ஏ.,க்கள் 'சவுண்ட்' விட்டிருக்காங்க. 'பாலம் கட்றது சரியில்லை... ரோடு மோசம்...'ன்னு நெடுஞ்சாலைத்துறைய வறுத்து எடுத்தாங்களாம்,'' என்று சித்ரா சொன்னதும், ''எம்.எல்.ஏ.,க் களுக்கு இது இப்பதான் தெரிஞ்சுதா? இதில, வேற ஏதோ உள் குத்து, இருக்கும்போல?'' என்று சந்தேகமாக கூறினாள் மித்ரா.

''அட.. கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே..! 'ைஹவேஸ்' சார்பில், ரோடு, பாலம்னு ஒவ்வொரு வருஷமும் பல கோடிக்கு வேலை நடக்குது. இதில், கமிஷன் எங்கே போகுதுன்னே தெரியலை. 'மாஜி' மட்டும் வாங்கிட்டு, 'ஆனந்தமா' வைச்சிருக்காருன்னு,' ஒரு பேச்சு ஏற்கனவே அடிபட்டது. அதோட, தொடர்ச்சிதான், ஆய்வு கூட்டத்தில், 'தாட்... பூட்'ன்னு சத்தம் போட்டது,''

''ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு 'கப்பம்' கட்டியும் கூட, நாம் பேச்சு வாங்கணுமா? அப்படின்னு, 'ைஹவேஸ்' அதிகாரிங்க நொந்துட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

காபிக்கு 'பில்' கொடுத்துவிட்டு, இருவரும் புறப்பட்டனர். மழை நின்றாலும், 'ஜில்' என்று காற்று வீசியது. உற்சாகமான சித்ரா, வண்டியை முறுக்கினாள்.

''கூட்டுறவு தேர்தல் வந்தாச்சுங்கறாங்க. மாவட்டத்துல சத்தமில்லையே,'' என்று மித்ரா கேட்டதும், ''கலெக்டரை கண்டுக்காம தேர்தல் வேலை 'ஜரூரா' நடக்குது. அவரு மேற்பார்வையாளரா இருந்தா, தேர்தல் ஒழுங்கா நடக்கும். ஆனா, இங்க 'தடி எடுத்தவங்க தண்டக்காரர்'ன்னு. ஒவ்வொருவரும், தேர்தல் அதிகாரியா மாறிட்டாங்க. எதிர்க்கட்சியினரும், தோழர்களும் கண்டுக்கறதில்ல. போன தடவ மாதிரியே, ஆளுங்கட்சிக்காரங்க, பதவிகளை அள்ளிடுவாங்க போல,'' என்று பதிலளித்தாள் சித்ரா.

அதற்குள், பூண்டி வந்து விடவே, திருமுருகநாதசுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தில் இருவரும் அமர்ந்தனர்.

''மாற்றுத்திறனாளிகள்கிட்ட, புரோக்கர்கள் 'காசு' வாங்கி 'ஏப்பம்' விடுவது பற்றி, ஏற்கனவே பேசியிருந்தோம். இன்னும் அதுக்கு ஒரு தீர்வு காணலை. இதனால, புரோக்கர்கள் இன்னும் அதிகமா ஆட்டம் போடறாங்களாம். இந்த மேட்டரில், கலெக்டர் தலையிட்டா நல்லது'' என்று தேங்காயை கடித்தபடியே சொன்னாள் மித்ரா.

''ஏன்... மித்து, 'சிட்டியில' இந்த டிராபிக் போலீஸ் பண்ற அட்டகாசம் தாங்க முடியலைன்னு, பலரும் சொல்றாங்களே. உண்மையா?'' என்று சித்ரா கேள்வி எழுப்பினாள்.

''நுாற்றுக்கு நுாறு உண்மைதான். எல்லா 'ரெக்கார்டு' இருந்தாலும், 'வரி' வசூல் பண்ணாம, விடறதில்லையாம். இப்படித்தான், தாராபுரம் ரோடு கோவில்வழி போலீஸ் செக்போஸ்டில், 'எல்லா ரெக்கார்டு' இருந்தும்கூட, ஒரு ஏட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த நபரும், நுாறு ரூபாய், கொடுத்துட்டு போய், வீட்டில சொல்லியிருக்காரு. அதைக்கேட்ட, அவங்க ஒட்டுமொத்தமா, ஸ்டேஷனுக்கு போய், இன்ஸ்பெக்டருகிட்ட, புகார் செஞ்சாங்களாம். எஸ்.ஐ., மட்டும்தான், வாகன சோதனை செய்யணும்ன்னு, கமிஷனர் சொல்லியும், யாரும் கேட்பதாக இல்லை,'' என்றாள் மித்ரா.

''அதே மாதிரி, பழவஞ்சிபாளையத்தில், ரெண்டு போலீஸ்காரங்க, புது டூவீலரில் வந்தவரை பிடிச்சு, 'அதைக்காட்டு, இதை காட்டு,'ன்னு 'டார்ச்சர்' பண்ணிருக்காங்க. கடைசியா, 'எமிஷன் சர்டிபிகேட்' கேட்டாங்களாம். புது வண்டிக்கு எதுக்கு கேக்கறீங்கன்னு, பக்கத்துல இருந்தவங்க, சத்தம் போட்டதும், அவரை விட்டுட்டாங்களாம்,'' என்று 'வரி வசூல்' போலீஸ் குறித்து, சொன்னா, சித்ரா, ''அதுசரி... மித்து. ரெண்டு, டி.சி., கிட்டேயும், சிக்கி, போலீஸ் பட்டபாடு தெரியுமா?'' என்றாள்.

''தெரியாதே,'' என்று மித்ரா சொன்னதும், ''கமிஷனர் அலுவலகத்தில், போலீசாருக்கு 'அட்மின்' டி.சி., பயிற்சி வகுப்பு நடத்தினார். அப்போ, பலரும் துாங்கி வழிஞ்சாங்களாம். இதைப்பார்த்த டி.சி., 'என்ன காலையில 'பெரேட்' செஞ்ச மாதிரி இப்படி துாங்குறீங்க'ன்னு கேட்டதும், 'ஆமா... சார்'ன்னு, எல்லோரும், கோரஸா சொன்னாங்களாம்,''

''டி.சி., மேடம், ஒவ்வொரு சனிக்கிழமையும் பெரேடு வைக்கிறாங்க. அதனாலேதான், 'டயர்டா' இருக்கு. 'பெரேட்' முடிஞ்சு, ஸ்டேஷனுக்கு போய், ரெகுலர் டியூட்டி பார்த்துட்டு, இதுக்கு வந்தோம்ன்னு, விளக்கம் சொன்னாங்களாம்,'' என்று சித்ரா விவரித்தாள்.''இப்படி ரெண்டு டி.சி., கிட்ட, போலீஸ்காரங்க, மத்தளம் மாதிரி, ரெண்டு பக்கமும் அடி வாங்கறாங்கன்னு சொல்லு,'' என்றாள் மித்ரா.

''சிட்டி மேட்டரை விடு. ரூரல் ஸ்டேஷன் குன்னத்துார் பகுதியில் லாட்டரி ஓேஹான்னு விற்குதாம். சிட்டியில கெடுபிடி ஜாஸ்தியாயிட்டதால, நேரா 'டேரா'வை அங்கே போட்டுட்டாங்களாம். அதனால, ஸ்டேஷன் அதிகாரி 'தவமே' பண்ணாம, 'மணி'யை சம்பாதிக்கிறாரு,''என்று சித்ரா குறுக்கிட்டு சொன்னாள்.

''என்னக்கா.. கார்ப்ரேஷன் மேட்டர் எதுவும் சொல்லவேயில்லையே,'' என்று மித்ரா கேட்டதும், ''இருக்குப்பா... சொல்றேன். 'பில்டிங் அப்ரூவல்' கொடுக்க, சம்பந் தப்பட்ட இடத்தை பார்த்துட்டு, கொடுக்கணுங்கறது ரூல்ஸ்.

ஆனா, நம்ம ஆபீசருங்க, உட்கார்ந்த இடத்திலயே, வைட்டமின் 'ப' வாங்கிட்டு, ஓ.கே., சொல்றாங்களாம். இப்படி பல வருஷமா நடக்குறதால, சிட்டியில மட்டும், ஆயிரக்கணக்கான 'பில்டிங்' விதிகளை மீறிதான் கட்டியிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அதிகாரிங்க தப்பு பண்றதாலதான் பிரச்னையே 'ஸ்டார்ட்' ஆகுது,'' என்றாள் மித்ரா.''இதையுங்கேளு, மித்து. 45 வது வார்டில் 'வாட்டர் சப்ளை' பார்க்குற பொறியாளர் ஒருத்தர், ரொம்ப நேரம் 'வாட்டர் சப்ளை' செய்றாராம். அந்த வார்டு 'மாஜி'யோட, 'கவனிப்பு' மிகச்சிறப்பாக இருப்பதால், தாராளமாக வாரி வழங்குகிறார்,'' என்று கூறிய சித்ரா, ''சரி கிளம்பலாம்...'' என்றதும், ''அக்கா, பக்கத்துல இருக்கிற 'முனியாண்டி' ஓட்டலில், 'டிபன்' வாங்கிட்டு போயிடலாம்,'' என்று மித்ரா சொன்னதற்கு, ''ஓ.கே.,'' என்ற சித்ரா விறுவிறுவென்று நடந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X