மூச்சுக்கு மூச்சு முருகா -சீர்காழி! என்பார்வை| Dinamalar

மூச்சுக்கு மூச்சு முருகா -சீர்காழி! என்பார்வை

Added : மார் 22, 2018 | கருத்துகள் (5)
 மூச்சுக்கு மூச்சு முருகா -சீர்காழி! என்பார்வை

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் போல என்றும் நினைவில் அகலாத இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் தமிழிசைக்கு தனிப்பெருமை தந்தவர். இவர் 1933 ஜன.,19 ல் பிறந்து 1988 மார்ச் 23ல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார். இன்று அவரது நினைவுநாள். திருஞானசம்பந்தரும் முத்துதாண்டவரும் அவதரித்த சீர்காழி என்ற திருத்தலத்தின் பெயரை தன் பெயரோடு இணைத்து வாழ்ந்தார் சீர்காழி கோவிந்தராஜன். இவரது தந்தை சிவசிதம்பரம், தாய் அவையம்மா.
இம்மேதை இளம் வயதிலேயே இசைஆர்வம் கொண்டவர். ஆரம்ப காலத்தில் சீர்காழியில் உள்ள வாணிவிலாஸ் பாடசாலையில் கல்வி பயின்றார். சீர்காழி சட்டநாதன் கோயில் திருவிழாக்களில் நாதஸ்வர நிகழ்ச்சிகள், தேவார இசை நிகழ்ச்சிகளை கேட்டு உள்ளம் பூரிப்படைவார். ஆரம்பக்கல்வி படிக்கும்போதே தன் அண்ணன் சொக்கலிங்கத்துடன் இணைந்து 'சாரங்கதரா' நாடகத்தில் நடித்தார்.அதோடு செம்பொன்னார் கோயிலில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் திருமுருகன் வேடமணிந்து, 'சம்போ மகாதேவா!' என்ற பாடலைபாடி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தேவி நாடக சபாவில் ஓராண்டு காலம் பல்வேறு நாடகங்களில் பங்கு கொண்டார். இசையில் ஆர்வம் கொண்ட அவர் சென்னை தமிழிசை கல்லுாரியில் 1949 ல் சேர்ந்து 'இசைமணி' பட்டம் பெற்றார். கல்லுாரியில் படிக்கும்போதே அமரர் கோபாலகிருஷ்ண பாரதி படைப்புகளை பாடி அப்போதைய கவர்னர் ராஜாஜியிடம் தம்புராவை பரிசாக பெற்றார். சாஸ்திரிய சங்கீதத்திற்காக மத்திய கர்நாடக இசை
கல்லுாரியில்பயின்று 'சங்கீத வித்வான்' பட்டம் வென்றார்.


உயர்ந்த நோக்கம்


நெற்றியில் திருநீறு அணிந்த திருமுகம், இருபுருவங்களிடையே சிவந்த குங்குமம், அருள் சுரக்கும் பார்வை, சிலேடையாச் சிரிக்க வைக்கும் பேச்சு, காண்போரை கவரக்கூடிய அன்பு, எடுப்பான குரலில் ஸ்ருதி சுத்தத்துடன் மரபுமுறை வழுவாமல் தீர்க்கமாக உச்சரித்து பாடுவதே இவரது தனிச்சிறப்பு.வேய்குழல் வேந்தர் திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை சிறந்த இசை விற்பன்னர். இம்மேதையிடம் குருகுலமுறைப்படி மரபு வழுவாத இசையை கற்றார் சீர்காழி. மரபு வழுவாமல் பாடுதல், இசை நுட்பத்துடன் இசைத்தல், தெளிவாக பொருள் உணர்ந்து பாடுதல்,ராகநுட்பம், லயவழியில் தாளநுட்பம் அறிதல் போன்றவற்றை
கற்றுணர்ந்தார். இதனால்1953ல் சங்கீத வித்வத் சபையில் ராகம், தாளம், பல்லவி போட்டியில் முதற்பரிசை பெற்றதை இசை உலக ரசிகர்கள் அறிவர். அக்காலத்தில் இப்போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்கள் பிரபல வித்வான்கள் சித்துார் சுப்ரமண்யபிள்ளை, இசைபேராசிரியர் சாம்பமூர்த்தி ஆவர். குருநாதர் சுவாமிநாத பிள்ளையின் அறுபது வயது நிறைவு விழாவை சீர்காழியே சிறப்பாக நடத்தி வைத்தார். தன்னை அரவணைத்த இசைக்குருவை என்றும் நினைவிலிருக்கும்படி செய்த பெருமை இவரை சாரும். குருவை நினைத்துருகும் பாடலை இசை நிகழ்ச்சி நிறைவு அடையும்போது சீர்காழி பாடுவார்.அது... ''என் குருநாதன் வேய்குழல் வேந்தன்இசை அறிவூட்டிய ஞானபோதன்அன்னை தந்தை அதன் பிறகவரேஅகண்ட உலகில் எனக்கு வாழ்வளித்தவரே (என் குருநாதன்)நக்கீரனை போலே சொற்கூறும் பண்பாளன்நற்காதலை காட்டிலும் கலைவேண்டும் என்பான்என்கீத ஞானம் அவர் தந்த வாழ்வுஎன் உள்ளம் என்றும் அவருக்குத்தாழ்வு (என் குருநாதன்)''இப்பாடலை இயற்றியவர் புலவர் கந்தசாமி. இப்பாடலை பாடாது நிகழ்ச்சியை, சீர்காழி நிறைவு செய்யமாட்டார். குரு அருளால் திருஅருள் பெற்றவர் இவர்.


தமிழிசைக்கு முக்கியத்துவம்


சீர்காழி 1956 ஆக., 26 ல் உளுந்துார்பேட்டையில் சுலோசனாவை திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு டாக்டர் ஞானவல்லி, டாக்டர் சிவசிதம்பரம் என இரு செல்வங்கள். டாக்டர் சிவசிதம்பரம் மருத்துவ துறையில் பணியாற்றினாலும், இசைத்துறையிலும் சாதித்து வருகிறார்.சீர்காழி கோவிந்தராஜன் தமிழிசைக்கே தனி முக்கியத்துவம் கொடுத்தார். கம்பீரமான குரலில் உணர்வுப்பூர்வமான பொருள் உணர்ந்து பாடும் திறனால்
எண்ணற்ற இசைக்கச்சேரிகள் இவரை நாடி வந்தன. மூன்று மணிநேர இவரது இசை நிகழ்வில் முதல் ஒரு மணிநேரம் சாஸ்த்ரீய சங்கீதம். இதனை சாம்பார் சாதம் என்பார். இரண்டாவது ஒரு மணிநேரம் தமிழிசை பக்தி பாடலை ரசம் சாதம் என்பார். அடுத்து வரும் ஒரு மணி நேரம் திரைஇசைப்பாடல்களை மோர் சாதம் எனக்கூறுவார். சீர்காழிக்கு எல்லாவகை ரசிகர்களையும் தன் வயப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் உண்டு.


நினைவில் 'சாஸ்த்ரீய சங்கீதம்'சென்னையில் ஸ்ரீகிருஷ்ணகான சபா செயலர் அமரர் யக்ஞராமன் நிறைவான ஞானம் பெற்றவர். இவருக்கு சீர்காழியின் வெண்கல குரல் நாதத்தில் தனி மயக்கம் உண்டு. வயலின் எம்.எஸ்., கோபாலகிருஷ்ணன், மிருதங்கம் உமையாள்புரம் சிவராமன் பக்க துணையுடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அன்று அடியேனும் விமர்சகர் சுப்புடுவும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர இசை நிகழ்வு கேட்டது இன்றும் நினைவு அலையில் வருகிறது. நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு சீர்காழி என்னிடம் கூறிய ஒரே வார்த்தை 'இன்று நம் நிகழ்ச்சி முழுக்க முழுக்க சாம்பார் சாதம்', தமக்கே உரித்தான சிலேடை மொழியில் சீர்காழி அப்படி கூறினார்.


தெய்வீக பாடல்பக்தியில் திளைத்த தமிழிசை அன்பர்கள் உள்ளங்களில் நிலையாக நின்று கொண்டிருப்பது சீர்காழியின் வெண்கல குரல்நாதம். 'நீ அல்லால் தெய்வமில்லை - முருகா' -அற்புதமான தெய்வீக பாடல். அறுபடை வீடு கொண்ட திருமுருகா, மதுரை அரசாளும் மீனாட்சி, தேவன்கோயிலில் மணியோசை' என்ற காலத்தால் அழியாத திரைப்பட பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
கந்தரலங்காரம், கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, திருப்புகழ், திருமந்திரம், திவ்ய பிரபந்தம், சண்முக கவசம், சிவபுராணம், திருவருட்பா, சகல கலாவல்லி மாலை போன்ற பக்தி பாடல்களை உடைய இலக்கியங்களை டி.ஆர்., பாப்பா இசை அமைக்க இம்மேதை பாடியிருப்பதை தெய்வபக்தி நாடும் இசை அன்பர்கள் அறிவர். உலக பொதுமறையான திருக்குறள் பாடல்களையும் தமிழிசை
மூவர் பாடல்களையும் சீர்காழி பாடியிருப்பது சிறப்பு.1953 ல் பொன்வயல் என்ற திரைப்படத்தில் 'சிரிப்புத்தான் வருகுதைய்யா' என்ற பாடலை முதல் முதலில் பாடினார். எங்கள் வீட்டு மகாலட்சுமி திரைப்படத்தில் 'பட்டினம்தான் போகலாமடி', தை பிறந்தால்வழி பிறக்கும் படத்தில் 'அமுதும் தேனும் எதற்கு', வண்ணக்கிளி படத்தில் 'மாட்டுக்கார வேலா' போன்ற பாடல்களால் திரை ரசிகர்களை கவர்ந்தவர். திரைப்படத்தில் தானே வேடமேற்று பாடி நடித்துள்ளார். தசாவாதாரத்தில் நாரதராகவும், அகத்தியராக தெய்வ திருமகன் படத்திலும், பாகவதராக தாய் மூகாம்பிகை படத்திலும், ராஜராஜசோழன் படத்தில் நம்பியாண்டார் நம்பியாகவும் கதாகாலாட்சேபம் செய்யும் பாகவதராக
'நம்பினார் கெடுவதில்லை' என்ற படத்திலும் நடித்துள்ளார்.
திருவையாறில்
திருவையாறு சத்குரு தியாகராஜ ஆராதனை இசை விழாவில் மூன்று ஆண்டுகள் பிரபல வித்வான் பாலமுரளி கிருஷ்ணாவுடனும், வீணை பிச்சைமணி ஐயருடனும் செயலாளராக பணியாற்றிய (1974 _ 1979) பெருமை இவருக்கு உண்டு.இவருக்கு 1949ல் இசைமணி பட்டம், 1951 ல் சங்கீத வித்வான், 1968 ல் குன்றக்குடி அடிகள் வழங்கிய இசையரசு பட்டம், 1971ல் தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருது, 1984ல் தர்மபுரம் ஆதினம் வழங்கிய இசைப்புலவர் பட்டம், தமிழக அரசின் கலைமாமணி விருது, 1978ல் இலங்கையில் இன்னிசை தென்றல், ஏழிசை வேந்தர் விருதுவழங்கப்பட்டது.'தோன்றிப் புகழோடு தோன்றுக, அல்லாது தோன்றலின் தோன்றாமை நன்று'' வள்ளுவரின் வாய்மொழி.. இம்மாமேதை புகழோடு பிறந்தார். புகழாக இசை பயின்றார். புகழாக வாழ்ந்து குறுகிய காலமான 55 ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்து தமிழ் மண்ணிற்கும், தமிழுக்கும் புகழை சேர்த்தார்.
மூச்சுக்கு மூச்சு முருகா என்று கூறும் முருகபக்தர் சீர்காழியார் பங்குனி வளர்பிறை சஷ்டியன்று நம்மை விட்டு மறைந்தார். தமிழுக்கும், தமிழிசைக்கும் பெருமை சேர்த்த சீர்காழி புகழ் என்றும் நிலைத்திருக்கும்.- ஏ.சங்கரசேது இசை விமர்சகர்,காரைக்குடி 94889 50999We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X