அன்று விதைத்தீர்கள்; இன்று அறுவடை!

Updated : மார் 27, 2018 | Added : மார் 24, 2018 | கருத்துகள் (2) | |
Advertisement
'பார்லிமென்ட்டை செயல்பட விடாமல் தடுப்பதும், ஜனநாயகத்தின் ஒரு வகை தான்; மற்ற வகைகளைப் போல...'- இப்படி திருவாய் மலர்ந்தவர் யார் தெரியுமா... பா.ஜ., கட்சியிலிருந்து, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறாரே, சுஷ்மா சுவராஜ்... அவர் தான்! எப்போது இப்படி பேசினார்... மோடி பிரதமராவதற்கு முன் இருந்த, காங்., ஆட்சியின் போது!காங்., செயல்பாடுகள், தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறி,
 அன்று விதைத்தீர்கள்; இன்று அறுவடை!

'பார்லிமென்ட்டை செயல்பட விடாமல் தடுப்பதும், ஜனநாயகத்தின் ஒரு வகை தான்; மற்ற வகைகளைப் போல...'- இப்படி திருவாய் மலர்ந்தவர் யார் தெரியுமா... பா.ஜ., கட்சியிலிருந்து, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறாரே, சுஷ்மா சுவராஜ்... அவர் தான்! எப்போது இப்படி பேசினார்... மோடி பிரதமராவதற்கு முன் இருந்த, காங்., ஆட்சியின் போது!
காங்., செயல்பாடுகள், தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறி, அக்கட்சி எந்த மசோதா தாக்கல் செய்தாலும், எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட்டை நடத்த விடாமல் தடுப்பதை, பா.ஜ., வழக்கமாகக் கொண்டிருந்தது.இக்காட்சிகளை, லோக்சபா, 'டிவி' மூலம் பார்த்த போதெல்லாம், எரிச்சல் எரிமலையாய் வெடித்தது. மன்மோகன், வாயே திறக்காமல் அமர்ந்திருப்பார்; எம்.பி.,யாக இருந்த சோனியாவோ, வாயை, வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் கூட்டி, தன் அதிருப்தியை வெளிப் படுத்திய படி இருப்பார்.

அந்த சமயத்திலேயே, 'நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் அல்லது தெரிந்தே புதைகுழியில் விழுந்து விட்டோம்' என, மனதில் பட்டது.ஆனால், காங்., ஆட்சியின், அவலங்களைச் சகிக்க முடியாமல்,2014லோக்சபா தேர்தலின் போது, மோடியின் அதிரடி மற்றும் அனாயாசப் பேச்சைக் கேட்டு, அனைவரும் அவருக்கு ஓட்டு போட்டு, ஆட்சியை கையில் கொடுத்தோம். அவர் பதவிக்கு வந்தவுடன், நமக்கும், அவருக்குமான, 'ஹனிமூன்' நல்லபடியாகவே நடந்தது, அவர், பண மதிப்பிழப்பு

நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி.,யையும் அமலாக்கும் வரை!அதற்குப் பின், மக்கள், எதிராகக் குரல் கொடுக்கத் துவங்கினர். ஆதார், நிரவ் மோடி, காவிரி, ஆந்திரா விவகாரம் என, மக்கள் வேறு பிரச்னைகள் பற்றிப் பேசத் துவங்கியதும், காங்., தலைவரும், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியிலிருந்து, எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ராகுல், அதைக் கையில் எடுத்து, தினமும் தானும், அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து, பார்லிமென்ட்டை ரணகளப்படுத்துகிறார்.

மார்ச் 5ல் கூடிய பார்லி., கடந்த, ௧௬ நாட்களாக, முடங்கி விட்டது; இனி, நாளை மறுநாள் தான் கூடும்!இதைப் பார்க்கும் போது, ௨௦௧௨ல், அதாவது, மத்தியில், காங்., ஆட்சி செய்த போது, பா.ஜ.,வின் முக்கிய தலைவரான, அருண் ஜெட்லி, 'பார்லிமென்ட் நடப்பதைத் தடுப்பது, அரசின் இயலாமையை வெளிக்காட்டுவதற்காக, எதிர்க்கட்சிகள் கையாளக்கூடிய சட்ட ரீதியான தந்திரம்' என, திருவாய் மலர்ந்தது, நினைவுக்கு வருகிறது.

அதற்காக இப்போது, பா.ஜ., நிறைவேற்றும் சட்டங்களும், திட்டங்களும், அராஜகமானவை என்று கூறி விட முடியாது. எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இல்லை; உப்பு சப்பில்லாமல் அனைவரும் பேசுகின்றனர் என்பது வெளிப்படை.ஆதார் விஷயத்தை ஒரு காலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் ஆதரித்தார்; இப்போது எதிர்க்கிறார்.

நிரவ் மோடி விவகாரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியினர், ஆழம் தெரிந்தோ, தெரியாமலோ கால் விட்டதற்கு, பா.ஜ.,வும், நிதியமைச்சரும் எப்படி பொறுப்பேற்க முடியும்?தோண்டித் துருவிப் பார்த்தால், நிரவ் மோடி, பிசினஸ் செய்யத் துவங்கிய காலத்தில், ஆண்டது யார்; நிதியமைச்சராக இருந்தது யார்; அவர்களுக்கும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அப்போதைய தலைமைக்கும் தொடர்பிருந்ததா என்பதையெல்லாம் ஆராய வேண்டும். ஆராய்ந்தால், காங்., தான் சிக்கலில் மாட்டும்.

அடுத்து, ஆந்திரா விஷயத்துக்கு வருவோம்... ஆந்திராவில் கவர்னராக இருப்பவர், இ.எஸ்.எல்.நரசிம்மன். இவர், பா.ஜ., அனுதாபி. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அனைத்து விதமான, 'செயல்பாடு'களும், இவருக்கு அத்துப்படி. நம்மூர் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் போல் இல்லை என்றாலும், அவ்வப்போது குடைச்சல் கொடுத்தபடி இருக்கிறார்.

அம்மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு, முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்கும், கவர்னருக்கும் ஆகாமல் போனது.ஜனவரியில், ஆந்திர அரசுக்கும், அம்மாநில கவர்னருக்கும் பனிப்போர் நடந்தது. அப்போதிலிருந்தே, 'குட்டக் குட்டக் குனிபவன் நான் இல்லை' என்ற மனநிலைக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்து விட்டார் போலும்!

அதன் பிறகு தான், 'பா.ஜ., அரசு, என் மாநிலத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்யவில்லை; கூட்டணி முறிவு' என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துச் சுழற்றத் துவங்கினார் நாயுடு.ஆக, 'தானிக்கு தீனீ சரி போயிந்தி' கணக்கில் தான், பா.ஜ.,வும், சந்திரபாபு நாயுடுவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனரே தவிர, 'இவர் நல்லவர்; அவர் வல்லவர்' என்ற கணக்கெல்லாம், சும்மா, 'உலுலுவாயி!'கடந்த லோக்சபா தேர்தலில், மரண அடி வாங்கிய, காங்.,குக்கு, தற்போது புதிதாய் வந்துள்ள தைரியத்திற்கான காரணம்,

உ.பி., லோக்சபா இடைத்தேர்தலில், பா.ஜ., தோற்றுப் போனது தான். இத்தனைக்கும், காங்., கட்சிக்கு, 'டிபாசிட்' கூட கிடைக்கவில்லை; இந்த லட்சணத்திலேயே, பார்லி.,யில் இவ்வளவு, 'சவுண்டு' கொடுக்கிறது.பா.ஜ., தோற்றதற்குக் காரணம், உட்கட்சிப் பூசல் மற்றும் பகுஜனும், சமாஜ்வாடி கட்சியும் கைகோர்த்தது தானே தவிர, பண மதிப்பிழப்பு விவகாரமோ, ஆதார் விவகாரமோ, ஜி.எஸ்.டி., விவகாரமோ அல்ல.

ஏனெனில், ஜி.எஸ்.டி., விவகாரம் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், அதை அமலாக்கிய சில மாதங்களிலேயே நடந்த, மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., தோற்றிருக்கும்.மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில், மேகாலயாவிலும், திரிபுராவிலும், பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது.

நாகாலாந்திலும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் ஆதரவில், உள்ளூர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.உ.பி.,யைப் பொருத்தவரை, உட்கட்சி விவகாரத்தை, பா.ஜ., அலட்சியம்
செய்தால், அடுத்து வரக் கூடிய சட்டசபை தேர்தல்களில், அக்கட்சிக்குத் தோல்வியே ஏற்படும் என்பது உறுதி. ஆனால், பகுஜனும், சமாஜ்வாடியும் ஒன்றாக கைகோர்ப்பரா, முதல்வர்
நாற்காலிக்கு எப்போதுமே சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு கட்சிகளும், ஒரே அணியில்
இருக்குமா என்பதையெல்லாம் இப்போது கணிக்க முடியாது.

இந்த விஷயங்கள் பற்றி, காங்., தலைவர் ராகுல் சிந்திந்திருப்பார் எனத் தோன்றினாலும், பார்லிமென்டிலும், வெளியேயும் அவர் பேசும் பேச்சுகள், அரைவேக்காட்டுத் தனமாகவே இருக்கின்றன.இந்த ஆண்டில், இன்னும் ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மிசோரம், கர்நாடகா, ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய, இந்த ஐந்து மாநிலங்களில், முதல் இரண்டில், காங்., ஆட்சியும், கடைசி மூன்றில், பா.ஜ., ஆட்சியும் நடக்கிறது.

இந்த மாநிலங்கள் அனைத்திலும், காங்., ஆட்சி மலரும் என, ராகுல் கூறி இருக்கிறார். அவரின்
பக்குவம், வரும் தேர்தல்களில், அவருக்கு எந்தளவு கைகொடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கப் போகிறோம். கடந்தாண்டு இறுதியில், அதாவது, மேலே சொல்லப்பட்ட மூன்று மாநில
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி, 'தேர்தல்களில் வெற்றி பெறுவது மட்டுமே எங்கள் நோக்கமாக இருந்திருந்தால், கடும் எதிர்ப்பை மீறி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி., அமல்படுத்துதலையும் நாங்கள் மேற்கொண்டிருக்க மாட்டோம். மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும்' என, கூறி இருந்தார்.

அதே பக்குவத்துடன் செயல்பட்டால், வரும் தேர்தல்களிலும், பா.ஜ., வெற்றி பெறும்.அதே நேரம், இவருடைய பக்குவப்பட்ட மனநிலை, பா.ஜ.,வினர், குறிப்பாக, அருண் ஜெட்லிக்கும், சுஷ்மா சுவராஜுக்கும் இருந்திருந்தால், தற்போதைய பார்லி., களேபரம், அன்றும் அரங்கேறி இருக்காது; இன்றும் சபை 'களை' கட்டி இருக்கும்!அன்று விதைத்தீர்கள்; இன்று அறுவடை செய்கிறீர்கள். இந்த அறுவடை, மக்களுக்குப் பாயாசமாக இல்லை; 'பாய்சனாக' இருக்கிறது. இனி வேண்டாம் இது போன்ற விதைகளும், அறுவடைகளும்!

இ-மெயில்: kvbalasubramaniam11@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (2)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
26-மார்-201811:10:05 IST Report Abuse
Sridhar அன்று பாராளுமன்றத்தை முடக்கியது இந்தியாவையே ஸ்தம்பிக்க செய்த ஊழல்களால். 2G ஊழலுக்கு கூட்டு நாடாளுமன்ற குழுவை உடனே அமைத்திருந்தால், அந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனால் இன்றோ தேவையில்லாமல் பொறுப்பற்ற முறையில் பாராளுமன்றத்தை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். இதற்க்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டுபிடித்த ஆகவேண்டும். ஒரு பத்து உறுப்பினர்கள் நினைத்தால் பாராளுமன்றத்தை முடக்கலாம் என்ற நிலைமை ஆபத்தானது. நிறைய நாட்களாகவே ஒரு சிந்தனை - தமிழக சட்டசபையில் இவ்வாறு ரகளை செய்பவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போடுகிறார்களே பார்லிமென்டில் மட்டும் என் அதை செய்ய தயங்குகிறார்கள்? பார்க்கப்போனால் விவாதிக்கப்படும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவையல்லவா? சட்டமன்றங்கள் சட்டங்கள் இயற்றப்பட மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். அது சம்பந்தமான விவாதங்களுக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்படவேண்டும். வேறு அரசியல் கருத்துக்கள் பேச ஒரு துளியும் இடமளிக்க கூடாது. மசோதாக்கள் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து அவை சட்டமாக்கப்படவில்லை என்றால் வரும் பாதிப்புகள் விளைவுகள் பற்றியும் பத்திரிகைகளின் வாயிலாகவும் வேறு பல வடிவங்களிலும் முன்னதாகவே தெரிவிக்கவேண்டும். சமூக பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் பரிசீலிக்கப்படும்போது, முதலில் குழுக்களுக்கு அனுப்பி வைத்து பரிசீலனை செய்து பிறகு பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டால் விவாதங்கள் சீராக அமையும். கூச்சல் குழப்பங்களை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
25-மார்-201810:39:48 IST Report Abuse
Nallappan Kannan Nallappan அன்று பி ஜே பி பார்லிமெண்டை முடக்கியத்துக்கு காரணம் தினம் ஒரு ஊழல் வெளிவந்துகொண்டு இருந்தது அதற்க்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை காங்கிரசால் இப்போது அப்படி இல்லை சுயநல அரசியல் கொள்ளை அடிப்பதை தடுப்பதால் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X