மதுரைக்கும், சினிமாவுக்கும் நாடகம் தொட்ட காலம் முதல் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் என்னவோ மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார், இன்று 'டிவி' சீரியல் நாடகங்களில் தவிர்க்க முடியாத நபராகி உள்ளார். நடிப்பதற்காக மதுரைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கும் இவர், சண்டே ஸ்பெஷலுக்காக இங்கே பேசுகிறார்.
''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மதுரைதான். அப்பா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன்பிறகு சென்னை சத்தியபாமா பல்கலை நிறுவனர் ஜேப்பியாரிடம் பணியாற்றினார். இதனால் குடும்பத்துடன் இடமாறினோம். பல்கலையில் எனக்கும் வேலை கிடைத்தது. ஆனால் சினிமா மீதான காதலால், ஓராண்டாக சான்ஸ் தேட ஆரம்பித்தேன். குடும்ப பின்னணி, பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தால்தான் நடிக்க முடியும் என தெரிந்துக்கொண்டேன். அந்த ஓராண்டு குறும்படங்களை எடுத்தேன். பின்னர் 'டிவி' சீரியல்களில் சான்ஸ் தேடினேன். அப்போது கங்கா(உயிருள்ள வரை உஷா படத்தில் நடித்தவர்) ஒரு சீரியல் எடுத்தார்.
அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தேன். மெயின் கேரக்டரில் நடித்த 2 பேர் சொதப்பியதை பார்த்து, 'சார், நானே அந்த இரண்டு கேரக்டரையும் சேர்த்து பண்ணவா' என கேட்டேன். அவரும் 'ஓ.கே.,' என்றுசொல்ல கேமரா கூச்சம், பயம் இல்லாமல் நடித்து பாராட்டப்பட்டேன். குறும்படங்கள் எடுத்தது அப்போது எனக்கு கைகொடுத்தது.
2006 முதல் தொடர்ந்து அனைத்து 'டிவி' சேனல் சீரியல்களிலும் நடித்து வருகிறேன். ஒரு கட்டத்தில் 'போர்' அடித்ததால் மதுரைக்கே திரும்பி வந்துவிட்டேன். இப்போது நண்பருடன் சேர்ந்து விளம்பர படங்களை எடுத்து தருகிறேன். நடிக்காவிட்டால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள் என்பதற்காக சென்னைக்கு சென்று சீரியல்களிலும் நடித்து வருகிறேன். ஒரு படத்திலும் நடித்துள்ளேன். மாதவன் நடித்த 'யாவரும் நலம்' என்ற த்ரில்லர் படத்தில் 'டிவி' சீரியல் காட்சி வரும். அதில் இன்ஸ்பெக்டராக நடித்தேன். இப்போதும் சினிமா வாய்ப்பும் தேடி வருகிறது. இந்தாண்டு 'பீஷ்மா' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். நடிப்பு தவிர குறும்படங்களையும் எடுத்து வருகிறேன்.
ஜாதி, மதம் தேவையில்லை. மனிதம்தான் தேவை என்பதை அடிப்படையாக கொண்டு கதை ஒன்றை உருவாக்கி உள்ளேன். இந்த படம் வெளிவந்த பிறகு நிச்சயமாக அனைவரிடமும் 'ரீச்' ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்கிறார் இந்த மதுரை வில்லன்.இவரை பாராட்ட 96291 49374
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE