ஸ்வரங்களின் ஸ்வாகதா| Dinamalar

ஸ்வரங்களின் ஸ்வாகதா

Added : மார் 25, 2018 | |
மதுரையில் பூத்த மல்லிகை...கருவில் உருவாகும் குழந்தைக்கும், தாய்க்குமான பாசத்தை பாடலாக தந்து, இன்றைய இளசுகளின் மனதில் இடம்பிடித்த இளம் பின்னணி பாடகி ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன். தினமலர் வாசகர்களுக்காக கலகலப்புடன் மனம் திறக்கிறார்...* உங்களை பற்றி சொல்லுங்களேன்?நானும் மதுரை பொண்ணு தாங்க. அப்பா எஸ்.கிருஷ்ணன் பி.எஸ்.என்.எல்., (ஓய்வு) ஊழியர், அம்மா ஆசிரியை கீதா. டி.வி.எஸ்., லட்சுமி
ஸ்வரங்களின் ஸ்வாகதா

மதுரையில் பூத்த மல்லிகை...கருவில் உருவாகும் குழந்தைக்கும், தாய்க்குமான பாசத்தை பாடலாக தந்து, இன்றைய இளசுகளின் மனதில் இடம்பிடித்த இளம் பின்னணி பாடகி ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன். தினமலர் வாசகர்களுக்காக கலகலப்புடன் மனம் திறக்கிறார்...

* உங்களை பற்றி சொல்லுங்களேன்?நானும் மதுரை பொண்ணு தாங்க. அப்பா எஸ்.கிருஷ்ணன் பி.எஸ்.என்.எல்., (ஓய்வு) ஊழியர், அம்மா ஆசிரியை கீதா. டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். எனது சிறுவயது இசை ஆசிரியை விஜயலட்சுமி ராமசேஷன். பெங்களூருவில் பி.டெக்., முடித்து பின்னணி பாடகியானேன்.

* இசையின் முதல் பயணம்?எஸ்.பி.பாலசுப்ரமணியனின் 'வானம்பாடி' என்ற நிகழ்ச்சியில் பாட துவங்கினேன். எங்கள் குடும்பத்தில் யாரும் திரைப்பட துறையில் இல்லை. திறமை இருந்தால் காலதாமதம் ஏற்பட்டாலும், வெற்றி கிடைத்தே தீரும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறு சிறு பாடல்களை பாடினேன். இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர்ராஜா, இமான், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் இசையில் குழு பாடகராக பாடினேன். இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் என் நண்பர், அவருக்கு அதிக பாடல் பாடியுள்ளேன்.

* நீங்கள் உலகம் சுற்றி பாடகியாமே?ஆமாங்க. எஸ்.பி.பாலசுப்ரமணியனின் 50 ஆண்டு சினிமா சுற்றுப்பயண குழுவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா,ரஷ்யா, அமெரிக்கா, துபாய், இலங்கை கச்சேரிகளில் சித்ரா, எஸ்.பி.பி.,யுடன் பாடியுள்ளேன். மாஸ்கோ கிரம்ளின் பேலசில் பாட வாய்ப்பு கிடைப்பதே அபூர்வம். அம்மேடையில் எஸ்.பி.பி.,யுடன் 'அந்திமழை பொழிகிறது', பாடினேன்.

* 'கரு' படத்தில் 'ஆலாலிலோ' பாடிய அனுபவம்?இயக்குனர் விஜய்யின் 'கரு' படத்தில் மதன் கார்க்கி எழுதி, சி.எஸ்.,சாம் இசையமைத்த 'ஆலாலிலோ' பாடலை 4 மணிநேர 'டேக்கில்' பாடி முடித்தேன். தாய், குழந்தை பாசத்தை உணர்வு பூர்வமாக காட்டும் பாடல். இதை 'யூ டியூப்பில்' கேட்ட இளைஞர்கள் லட்சக்கணக்கில் 'லைக்' போட்டுள்ளனர். பாடகர் சத்யபிரகாஷ் உடன் டூயட் பாடியுள்ளேன். எப்போதும் அம்மாவிற்கு மகன் பாடுவது போன்று தான் பாடல் வரிகள் இருக்கும். ஆனால் 'கரு' படத்தில் அம்மாவிற்கு பெண் குழந்தை பாடுவது போன்ற பாடல் பாட, எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. 2010 ல் இருந்து 25 பாடல் பாடியுள்ளேன்.

* பி.டெக்., முடித்து இசைக்குள் வர காரணம்?பி.சுசிலா, ஜானகி, கே.எஸ்.சித்ரா எனது ரோல்மாடல். அவர்களை போன்று பாட வேண்டும். நான் இன்ஜினியரிங் படித்தாலும், வாழ்வில் அதிக நாட்கள் ஓட வைக்கும் ஒரே துறை இசை. அதற்காகவே இவற்றை தேர்வு செய்தேன்.

* பெண்களை பற்றி உங்கள் கருத்து?அனைத்து பெண்களும் 'பட்டர்பிளைஸ்' தான். அவர்கள் சாதிக்க, உடன் இருப்பவர்கள் தொந்தரவின்றி நம்பிக்கையுடன் வாய்ப்பு தந்தால், திறமையுடன் நிச்சயம் வளர்ச்சி பெறுவர். ஆணும், பெண்ணும் சமம் தான். பெண்களும் திமிரு இன்றி வளர்ச்சி பாதையில் தங்களை செலுத்தினால் தான், நம் மீது அவர்களுக்கு மரியாதை வரும்.

* இசை மீது இளைஞர்களின் எதிர்பார்ப்பு?இன்றைய இளைஞர்கள் துள்ளலான வெஸ்டர்ன் மியூசிக்கை தான் விரும்புகின்றனர். இருந்தாலும், 'மெலடி' பாடலுக்கு வரவேற்பு இருக்கிறது. பாடலாசிரியர் மதன்கார்க்கி இன்றைய காலத்திற்கேற்ப பாடல் வரிகளை பயன்படுத்துகிறார். இதனாலேயே அவரை திரைத்துறையில் 'லிரிக் இன்ஜினியர்' என அழைப்போம். பாடகர் பாடல் வரிகள், டியூன், பாடல் வரிகளில் உள்ள உணர்வுகளை புரிந்து கொண்டு, பாடினால் மட்டுமே, சினிமா ரசிகர்களிடம் வெற்றியாளராக வரமுடியும்.
* லட்சியம்...அன்றாடம் இசைத்துறையில் கற்றுக் கொண்டே இருக்கிறேன். எதிர்காலத்தில் நல்ல பாடல்களை மக்களுக்கு தரும் பாடகியாக வேண்டும். ஒவ்வொரு பாடகருக்கும் இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.அவ்வகையில் நானும் இசை அமைப்பாளராக ஆசைப்படுகிறேன். என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X