சுதந்திரத்திற்கு முன் பிழைப்பு தேடி மலேசியா சென்ற தமிழர்கள், தேயிலை தோட்டங்களில் அடிமைகளாய் வாழ்ந்த சரித்திர பக்கங்கள் கறுப்பானவை. கடின உழைப்பால் வீறுகொண்டு எழுந்து பல சாதனைகளை இன்று சத்தமின்றி செய்து வரும் தமிழர்கள், உலகளவில் தமிழ் மொழியை துாக்கிப் பிடித்தும் கொண்டாடியும் வருகின்றனர்.
மலேசிய தமிழர்கள் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த 'மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்' சார்பில் இன்று தமிழ்மொழியை வளர்க்கும் வகையில் 28 ஆண்டுகளாக இலக்கிய, கவிதை, சிறுகதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் புத்தகங்கள், படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, 6 லட்சம் ரிங்கிட் (மலேசிய ரூபாய்)பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட இச்சங்கத்தின் சாதனைகளுக்கு பின்னணியில் உள்ளவர், 'தான்ஸ்ரீ' சோமசுந்தரம். இவரது நம்பிக்கைக்கு உரியவர் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் குமரன். இவர், நல்வாழ்வு, கிராமப்புற மேம்பாட்டு திட்ட துறைகளின் இணை அமைச்சராக மட்டுமின்றி, சட்டசபை உறுப்பினர், ராஜிய சபா உறுப்பினர், ஐ.நா.,விற்கான பிரதிநிதி என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
மதுரை வந்த குமரன் நம்மிடம்...
மலேசியாவில் தமிழர் வளர்ச்சிக்காக தோட்ட தொழிலாளர் வியர்வை சிந்தி பெற்ற கூலி மூலம் சிறுக சிறுக சேமித்து, ஓராண்டு காலத்தில் 25 லட்சம் ரிங்கிட்டில் தேயிலை தோட்டம் விலைக்கு வாங்கப்பட்டது. இதன் பின் இச்சங்கம் உருவாக்கப்பட்டு தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
மலேசியாவில் தீபாவளி, தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்று தந்தது உட்பட பல்வேறு தமிழர் சார்ந்த விஷயங்கள் இச்சங்கம் முயற்சியால் நடந்துள்ளன. தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு கோடி ரிங்கிட்டும், தமிழ் கலைகள் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக ஒரு கோடி ரிங்கிட்டும் 'டெபாசிட்' செய்யப்பட்டு, அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம் உலக அளவில் சிறந்த தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டியில் புத்தகம் சிறுகதை, கவிதை படைப்புக்களை தேர்வு செய்ய மலேசியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன் நாடுகளின் தமிழர் பிரதிநிதிகள் நடுவராக இருப்பர். இந்தாண்டு பரிசளிப்பு விழா ஆக., 31ல் நடக்கிறது.
இனத்தை அடையாளம் காட்டிய மொழிக்கு, அதை வளர்த்து பேணி பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் உண்டு. மலேசிய தமிழர்களுக்கு அந்த பொறுப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என ஆச்சரியப்பட வைக்கிறார்.இவரை tadho.kumaran@gmail.com ல் பாராட்டலாம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE