உடன்பிறப்புகள் கடன் ரெண்டு கோடி: மறுபடியும் மணம் முடித்தது 26 ஜோடி!| Dinamalar

உடன்பிறப்புகள் கடன் ரெண்டு கோடி: மறுபடியும் மணம் முடித்தது 26 ஜோடி!

Updated : மார் 27, 2018 | Added : மார் 26, 2018
Share
கோடையின் தாக்கம், காலையிலேயே தெரிந்தது; பந்தயச்சாலையில், ஒரு 'ரவுண்ட்' வாக்கிங் முடிவதற்குள், சித்ராவுக்கும் மித்ராவுக்கும் வியர்த்துக் கொட்டியது. முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தவாறு, கேட்டாள் மித்ரா...''என்னக்கா! 'சிஎம்' பங்ஷனுக்கு நேத்து கூட்டம் எப்பிடி இருந்துச்சாம்?''''பரவாயில்லை... வழக்கம்போல, கூட்டி வந்த கூட்டம் தான். பழனி சாமி, சி.எம்., ஆன பிறகு,
சித்ரா, மி்தரா, கோவை

கோடையின் தாக்கம், காலையிலேயே தெரிந்தது; பந்தயச்சாலையில், ஒரு 'ரவுண்ட்' வாக்கிங் முடிவதற்குள், சித்ராவுக்கும் மித்ராவுக்கும் வியர்த்துக் கொட்டியது. முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தவாறு, கேட்டாள் மித்ரா..

.
''என்னக்கா! 'சிஎம்' பங்ஷனுக்கு நேத்து கூட்டம் எப்பிடி இருந்துச்சாம்?''

''பரவாயில்லை... வழக்கம்போல, கூட்டி வந்த கூட்டம் தான். பழனி சாமி, சி.எம்., ஆன பிறகு, ஒரு வருஷத்துல மூணு பங்ஷனுக்கு அவர் நம்மூருக்கு வந்திருக்காரு. இது நாலாவது... ஆனா, கட்சி நிகழ்ச்சின்னு பார்த்தா, இது தான் பர்ஸ்ட். அதே மாதிரி, ஓ.பி.எஸ்., கூட வந்ததும் இப்பதான். அதனால, ஓரளவுக்குக் கூட்டம் கூட்டிட்டாங்க,'' என்றாள் சித்ரா.

''70 ஜோடிக்கு தான் கல்யாணம்னு போட்ருந்தாங்க; ஆனா, நேத்து 86 ஜோடியாக்கீட்டாங்க. ஏதாவது நியூமராலஜியா?'' என்று கேட்டாள் மித்ரா.

''அதெல்லாம் இல்லை... ஒவ்வொரு ஜோடிக்கும் 70 பொருட்கள் சீரோட, அம்பதாயிரம் ரூபா கொடுத்ததால, கட்சிக்காரங்க ஆளுக்கு ஆளு, ஜோடிகளைக் கூப்பிட்டு வந்து சேர்த்து விட்டு, அதுலயும் காசு பாத்திருக்காங்க. நேத்து கல்யாணம் நடந்த, 86 ஜோடிகள்ல, 26 ஜோடி, ஏற்கனவே கல்யாணமான ஜோடிகளாம். கட்சிக்காரங்களே பேசிக்கிட்டாங்க!'' என்றாள் சித்ரா.

''கட்சி நிகழ்ச்சியில எப்பிடி, மேம்பாலம், குடிநீர்த் திட்டம்னு அரசு திட்டங்களை சி.எம்., தொடங்கி வச்சாரு?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் மித்ரா.

''இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா... அதுல ஒரு சுவராஸ்யமான காட்சி என்னன்னா, இந்த திருமண ஜோடிகளோட நம்ம சிஎம்ஏ பிரகாஷ், 'செல்பி' எடுத்துக்கிட்டது தான். ஆனா, குடிநீர் வடிகால் வாரியம், கார்ப்பரேஷன் ஆபீசர்களெல்லாம், அரசு நிகழ்ச்சி முடிஞ்சதும், முதல்வருக்கு கும்பிடு போட்டுக் கிளம்பிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''பழைய காங்., எம்.எல்.ஏ., மகேஸ்வரி தான், தொகுப்பாளினியாகி, நீட்டி முழக்குனாங்களாமே?'' என்றாள் மித்ரா.

''ஆமா மித்து... பச்சைப் பட்டுடுத்தி, வர்ணனையாளரே தோற்றுப்போகுற அளவுக்கு அவரு ஒவ்வொருத்தருக்கும் வர்ணனை கொடுத்ததைப் பார்த்துட்டு, ரத்தத்தின் ரத்தங்களே உறைஞ்சு போயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.

''ஓ.பி.எஸ்.,க்கு உரிய மரியாதை கொடுத்தாங்களா... அவரு ஏன் 'அக்ரி யுனிவர்சிட்டி'க்கு வரலியாம்?'' என்று விடாமல் கேள்வி கேட்டாள் மித்ரா.

''அந்த பங்ஷன் அழைப்பிதழ், பேனர் எதுலயும் அவரோட பேரு, படம் எதுவுமில்லை. கல்யாண நிகழ்ச்சியில, அவரைப் பார்த்து, அவரோட பழைய விசுவாசி ஆறுக்குட்டி, கும்பிடு போட்டாரு; அதை அவர் கண்டுக்கவே இல்லை; இன்னமும் கோபம் போகலை போலிருக்கு!'' என்றாள் சித்ரா.

''அவருக்கு மட்டுமா கோபம்... எங்க பக்கத்து வீட்டுப் பாட்டி, அங்க போய், நெரிசல்ல சிக்கிட்டு, வாய்க்கு வந்தபடி திட்டிட்டே இருந்துச்சு!'' என்றாள் மித்ரா.

''ரொம்ப சின்ன இடம்கிறதால, பயங்கர நெரிசலாகி, பல பேரு மயக்கமாயிட்டாங்க... அங்க வந்திருந்த லேடீஸ் பல பேரும் திட்டிட்டு தான் இருந்தாங்க. வீடு வீடாப் போய், சேலை, வேட்டி கொடுத்து அழைச்சதால, உள்ளூர்ல இருந்தே நிறைய்யப்பேரு வந்துட்டாங்க. பொள்ளாச்சி, பவானி, கோபியில இருந்தெல்லாம் வண்டியில கூப்பிட்டு வந்திருந்தாங்க. சிலருக்கு மட்டும் தான் பணம், சாப்பாடு கொடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''சாப்பாடுன்னதும் எனக்குப் பசிக்குது... சூப் சாப்பிடலாம்,'' என்று ஒதுங்கினாள் மித்ரா.

இருவரும், பச்சைப்பயறு, சூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பெரும் சத்தத்தோடு விமானம் ஒன்று, மேலே பறந்து போய்க்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சித்ரா கேட்டாள்...

''மித்து... சென்னையில இருந்து சேலத்துக்கு, 'டைரக்ட் பிளைட்' வந்துட்டதால, இனிமே சி.எம்., இங்க அடிக்கடி வர மாட்டாராம்!''

''ஆமாக்கா... நம்மூரு ஆபீசர்கள் எல்லாம் ஒரே குஷியாயிட்டாங்க... இனிமே, மணிக்கணக்கா, ஏர்போர்ட்ல போய் காத்திருக்க வேண்டியிருக்காது. கால் கடுக்க போலீஸ்காரங்க நிக்க வேண்டியதில்லை,'' என்றாள் மித்ரா.

''ஆனா, நம்ம 'ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன்' அப்பிடியே நின்னு போயிரும்னு இன்டஸ்ட்ரிகாரங்க வருத்தப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.

''எத்தனை சி.எம்., மாறுனாலும், நம்ம மாவட்டத்துல 'தலையாட்டி பொம்மை' ஆபீசர்கள் இருக்கும் வரைக்கும், விமான நிலைய விரிவாக்கத்தை, காத்துல தான் எழுதி வைக்கணும்,'' என்றாள் மித்ரா.

''நீ சொல்றது எந்த ஆபீசரைன்னு தெரியுது... அவரு அடுத்த மாசம் போயிருவார்னு சொல்றாங்க; ஆனா, அவரோட பங்களாவுல, காய்கறி பயிரிடுறதுக்கு பெருசா பசுமைக்குடில் போட்ருக்காராமே; இன்னும் கொஞ்ச நாள் ஓட்டலாம்னு பாக்குறாரோ?'' என்றாள் சித்ரா.

''ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இருந்தா, கவர்மென்ட் இருக்குற வரைக்கும் ஓட்ட வேண்டியது தான்!'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சி 'சப்போர்ட்'டா என்னன்னு தெரியலை... ஆனா, எல்.பி.ஏ.,வுல இப்போ இருக்குற ஆபீசர், தன்னோட ஆபீஸ்ல வச்சே, தைரியமா லஞ்சம் வாங்குறாராம். யாரு என்ன 'ரெகமண்டேஷன்' பண்ணுனாலும், பைசா இல்லைன்னா பைலை தொடவே மாட்டாராம்!'' என்றாள் சித்ரா.

''வி.சி.,யையே துாக்குன விஜிலென்ஸ், இப்பேர்ப்பட்ட ஆளுங்களை மட்டும் ஏன் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க... இதே மாதிரித்தான், கார்ப்பரேஷன்ல 'ரெவின்யூ'வைக் கவனிக்கிற உதவி ஆபீசர் மேல, ஏகப்பட்ட 'கம்பிளைன்ட்' வருது. தன்னோட வசூலைக் கவனிக்கிறதுக்காகவே, ரிட்டயர்டு ஆன ஏ.ஆர்.ஓ., ஒருத்தரை, தன்னோட ஆபீஸ்ல முழுநேரப் பணியாளரா உட்கார வச்சிருக்காராம்'' என்று மித்ரா சொல்லும்போதே இடைமறித்தாள் சித்ரா...

''அவர் இடையில வராம இருந்தார்ன்னு சொன்னாங்க?''

''பழையபடி வர ஆரம்பிச்சிட்டார்; இப்போ, பில் கலெக்டர்களை மெரட்டி, அவர் பண்ற வசூலுக்கு அளவே இல்லைங்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''இதே மாதிரித்தான், நம்மூர்ல இருக்குற டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் பெரிய ஆபீசர், வசூல் அள்ளித்தட்டுறார்னு பல முறை பேசிருக்கோமே... இப்பதான், அவரோட வீடுகள்ல விஜிலென்ஸ் 'ரெய்டு' அடிச்சிருக்காங்க. அவரும் இதே மாதிரி, 'வேணு'ன்னு ஒரு புரோக்கரை வச்சு தான் வசூல் பண்ணிட்டு இருந்தாரு. அவரைப் பிடிச்சு விசாரிச்சா, பல மேட்டர் வெளிய வரும்,'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா... அந்த 'ஆனந்தமான' ஆபீசரோட ஆபீஸ்ல இருந்து ஒரு 'டைரி'ய விஜிலென்ஸ் எடுத்திருக்காங்க. அதுல, புரோக்கர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் தர்ற மாமூல் பத்தியெல்லாம் விவரம் இருந்துச்சாம்,'' என்றாள் மித்ரா.

''மித்து... அந்த ஆபீசருக்கு திருச்சியில ஒரு பெரிய மாட்டுப்பண்ணை இருக்குது... இவர் 'கன்ட்ரோல்'ல வர்ற நாலு மாவட்டத்துல, மாடு கடத்துற லாரிகள் எங்க பிடிபட்டாலும், அதுல இருந்து நல்ல மாடுகளை இறக்கி வச்சிட்டு அனுப்பச் சொல்லிருவாரு. கடைசியில, அந்த மாடு எல்லாம், அவரோட பண்ணைக்குப் போயிருமாம்!'' என்றாள் சித்ரா.

''அப்பிடின்னா... பல மாடுகளோட உசிரைக் காப்பாத்திருக்காரு... அவரு நல்லவரா, கெட்டவரா?'' என்று சிரித்துக் கொண்டே கேட்ட மித்ரா, அவ்வழியாக 'வாக்கிங்' சென்ற முன்னாள் மண்டலத் தலைவர் ஒருவரைப் பார்த்ததும், ''அக்கா... அண்ணாச்சி மேல ஒரு லேடி புகார் கொடுத்தாங்க; அதுக்கு, இவரும் பதிலுக்குப் புகார் தரப்போறதா சொன்னாரு... இன்னும் கொடுக்கலையா?'' என்று கேட்டாள்.

''அது தெரியலை... ஆனா, பள்ளிக் கல்வித்துறையில இருக்குற அய்யாவோட அண்ணன், ராஜவீதி ஸ்கூல்ல மியூசிக் டீச்சரைப் பார்த்து, 'வெளிய போடா'ன்னு சொன்ன விவகாரம், கலெக்டர், செகரட்டரி, அமைச்சர் வரைக்கும் போயிட்டு இருக்கு. அந்த அண்ணன் எப்பிடி தப்பிக்கப் போறாரோ?'' என்றாள் சித்ரா.

''செகரட்டரின்னதும், நம்ம உயர் கல்வித்துறை செகரட்டரி ஞாபகம் வந்துச்சு...நேத்து நடந்த சிண்டிகேட் கூட்டத்துல, ரொம்பவே மனசு விட்டுப்பேசிருக்காரு...'நான் சென்னையில உட்கார்ந்துட்டு, வேலையைப் பார்க்கலாம்...வாராவாரம் ஏன் இங்க வர்றேன்... சிஸ்டத்தை சரி பண்ணனும்னு நான் நினைக்கிறேன்; ஆனா, நீங்க 'கரப்ட் வி.சி.,'யோட இன்னும் கான்டாக்ட்ல இருக்கீங்க. அவரு செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லுங்க'ன்னு பேசிருக்காரு'' என்றாள் மித்ரா.

''சூப்பர்...அதைவிட சூப்பர், இந்த 'டுபாக்கூர்' தொலைதுார கல்வி மையங்களை மூடச் சொன்னது தான்...அவர் சொல்லாத ஒரு விஷயம்...யுனிவர்சிட்டியில இருக்குற, 17 பேர் மேல, விஜிலென்ஸ் புதுசா எப்.ஐ.ஆர்.,போடப்போறாங்க'' என்றாள் சித்ரா.

''இன்னொரு 'ஹாட் டாபிக்' கேள்விப்பட்டேன்... தி.மு.க., நடத்துன மண்டல மாநாட்டுக்கு, கோயம்புத்துார்ல இருக்குற முக்கிய உடன்பிறப்புகளுக்கு, ஆளுங்கட்சி தரப்புல இருந்து ரெண்டு கோடி ரூபா, 'டொனேஷன்' போயிருக்காம்... இதை வாங்குனது, எந்த 'மாவட்டம்'னு தெரியலைங்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''நாங்க ஆட்சிக்கு வந்தா, திரும்பத்தர்றோம்னு கடனா வாங்கிருப்பாங்களோ,'' என்று சிரித்த சித்ரா, 'கிளம்பலாம்' என்று சிக்னல் கொடுக்க, வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X