'நால்வரோடு அறுவராகி அட்டகாசம்' என்று தணியுமிந்த 'லஞ்ச' பேயின் ஆட்டம்!

Added : மார் 27, 2018
Advertisement
தோழி வீட்டு திருமணத்துக்கு செல்ல தயாராகி சித்ராவும், மித்ராவும் புறப்பட்டனர். மொபட்டில் செல்லும் போது, மித்ரா கேட்டாள், ''ஏன்கா, கல்யாணத்துக்கு ஒரு நாள் லீவு போட்டு இருக்கலாமே,'' என்றாள். ''ஆளுங்கட்சி தொழிற்சங்கத்திலா இருக்கிறேன். இஷ்டம் போல் லீவு வாங்குவதற்கு. இதற்கு பர்மிஷன் வாங்கிட்டு வர்றதுக்குள்ள போதும்போதும் என்றாகி விட்டது,'' என்றாள் சித்ரா.
சித்ரா, மித்ரா, திருப்பூர்

தோழி வீட்டு திருமணத்துக்கு செல்ல தயாராகி சித்ராவும், மித்ராவும் புறப்பட்டனர். மொபட்டில் செல்லும் போது, மித்ரா கேட்டாள், ''ஏன்கா, கல்யாணத்துக்கு ஒரு நாள் லீவு போட்டு இருக்கலாமே,'' என்றாள்.

''ஆளுங்கட்சி தொழிற்சங்கத்திலா இருக்கிறேன். இஷ்டம் போல் லீவு வாங்குவதற்கு. இதற்கு பர்மிஷன் வாங்கிட்டு வர்றதுக்குள்ள போதும்போதும் என்றாகி விட்டது,'' என்றாள் சித்ரா.

''அதுசரிங்க. லீவுக்கும், ஆளுங்கட்சிக்கும் என்ன சம்பந்தம்,'' என்றாள் மித்ரா.

''தாராபுரம் கிளை அரசு பஸ் டெப்போவில ஒரு கண்டக்டர், உடல் நலம் சரியில்லையின்னு சொல்லி, போன மாசம், 24ம் தேதி லீவு கேட்டாராம். ஆனால், தர மறுத்து விட்டனர். இவர் வேற வழியில்லாமல் லீவு லெட்டரை கொடுத்துட்டு, போய்ட்டார். ஆனால், லீவு கொடுக்காமல் ஆப்சென்ட் போட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''சரி அப்பறம் என்னாச்சு,' என்று ஆர்வமாக கேட்டாள் மித்ரா.

''அன்னைக்கு, ஜெ. பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு போக, 15 பேர் ஏற்கனவே லீவு வாங்கிட்டாங்க. இதுக்கு லீவு கொடுத்தவங்க, ஆஸ்பத்திரி போக கூட லீவு கொடுக்க மாட்டாங்களான்னு மற்ற ஊழியர்கள் புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.

''இவங்க பாடு இப்படி இருக்கா. மோசடி வழக்கில், சிக்கின நபரை ரிமாண்ட் பண்றதுக்குள்ள போலீஸ் பட்ட பாடு, பெரும் பாடாக போய் விட்டது,'' என்றாள் மித்ரா.

''ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். பல்லடம் பக்கத்துல, போலி ஆவணம் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த 'சூரிய' ஆசாமியை, புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் பிடிச்சிருக்காங்க. ஆனால், அந்த வில்லாதி வில்லன் போலீசை படாத பாடு படுத்தி விட்டார். காலை முதல் எதுவும் சாப்பிடாமல் முரண்டு பிடித்துள்ளார். தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், பாலக்காட்டில் இருந்து மருந்து வாங்கித்தாங்க. அப்புறம்தான், சாப்பிடுேவன்னு அடம் பிடித்துள்ளார். ரொம்ப நேரம் கழிச்சு, பல்லடம் ஜி.எச்., ல் டிரிப்ஸ் போட்டு, கோவை ஜெயிலில் அடைத்தனர்,'' என்று விளக்கினாள் சித்ரா.

அதற்குள் திருமண மண்டபம் வந்து விடவே, வண்டியை பார்க் செய்து விட்டு இருவரும் உள்ளே சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்த மித்ரா, ''அக்கா, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம். கூட்டம் ஜாஸ்தியா இருக்குது,'' என்றாள்.

அருகில் இருந்த, சேர்களில் உட்கார்ந்தனர். உடனே, சித்ரா, ''வண்டியில வர்றப்ப, ஏதோ, பாம்பு கோவில் விஷயம் இருக்குதுன்னு சொன்னியே. என்ன அது?'' என்றாள்

''ஆமாங்கா. சோமனுாருக்கு ரயில்வே 'டிராக்' பக்கத்துல, இருக்கிற அம்மன் கோவிலில், மக்களே முன்னாடி நின்னு, விழா நடத்துறாங்க. இதை தெரிஞ்சுட்டு, சாமளாபுரத்துக்கு பக்கத்துல இருக்கிற பிரபலமான 'பாம்பு' கோவில் ஊழியர்கள், மூணு பேர், 'வசூல்' செய்ய, போனாங்களாம். நாங்களே கைக்காசை போட்டு, செலவு செய்றோம். இதில், இவங்க வேற வசூலுக்கு வந்துட்டாங்களா?'ன்னு கேட்டு சண்டை போட்டாங்களாம்,''

''தகவல் தெரிஞ்சு வந்த போலீசார், இரு தரப்பிலும் 'பஞ்சாயத்து பண்ணி வெச்சாங்களாம். அதுக்கப்புறம், ஆளுக்கு, ஐநுாறு ரூபாய் கொடுத்து அனுப்பினாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''பஞ்சாயத்துனு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்திருச்சு. ஊராட்சி செயலாளர்களுக்கு 'டிரஸரி' மூலமாக சம்பளம் போட போறாங்களாம். அதுக்காக, சில செயலாளர்கள பேசி மயக்கி, 'பசையான' பஞ்சாயத்துக்கு மாத்தி தர்றோம்னு சொல்லி, அதிகாரிங்க 'டிரான்ஸ்பர்' பண்றாங்களாம்.
உள்ளாட்சி பிரநிதிகள் இல்லாத நேரத்தை பயன்படுத்திக்கங்கன்னு, பி.டி.ஓ.,க்கள் மூலமாக பேசி 'டிரான்ஸ்பர்' கொடுக்கறாங்களாம். இதுக்கு ஒரு 'அமவுன்ட் பிக்ஸ்' பண்ணிட்டு, அடிக்கடி 'டிரான்ஸ்பர்' போட்டுட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஓ.. இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களா? அக்கா... இதைக்கேளுங்க. ஏ.டி.காலனி 'வெல்பேர்' துறையில், ஏதாவது குறை இருந்தா யார் கிட்டயும் புகார் கொடுக்க முடியறதில்லையாம்..'' என்றாள் மித்ரா.

''யாரும் கேட்காம போனா என்ன. மாவட்ட ஏ.டி., ஆபீசருக்கு 'போன்' போட வேண்டியது தானே,'' என்று குறுக்கிட்டாள் சித்ரா.

''முழுசா நான் சொல்றத கேளுங்க. ஏ.டி., ஆபீசர்கிட்ட சொல்றதுக்கு, போன் போட்டா, அவர் அவ்ளோ, சீக்கிரமாக, அட்டெண்ட் பண்றது இல்லையாம். அப்படியே பேசினாலும், 'நான் மீட்டிங்ல இருக்கேன்,'னு சொல்லி 'கட்' பண்ணிடறாராம். ''இப்படியே போனால், தேசிய தாழ்த்தப்பட்டோர் துணை கமிஷனருக்கு 'பெட்டிஷன்' போட வேண்டியதுதான்னு, பாதிக்கப்பட்ட மக்கள் முடிவு பண்ணியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

அதற்குள் கூட்டம் குறையவே, இருவரும் சென்று, ''ஹாய்... சக்திவேல். கங்கிராஜூலேஷன்ஸ்,'' என்று மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி, சில நிமிடங்கள்
பேசி விட்டு, டைனிங் ஹால் பக்கம் சென்றனர். பாக்கு மட்டை தட்டில், டிபன் வாங்கி இருவரும், அருகிலிருந்த புல்வெளியில் அமர்ந்தவாறே, சாப்பிட துவங்கினர்.

''கூட்டுறவு தேர்தலில் பிரச்னை ஏதாச்சும் வந்தா, போலீசை 'யூஸ்'பண்ணிக்கோங்கன்னு, சொல்லீட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''ஓ... அப்ப.. பிரச்னை வரும்ன்னு சொல்லு,'' என்று சித்ரா சொன்னதும், ''ஆமாக்கா. போன வாரம் கட்சி ஆபீசுல மீட்டிங் நடந்துச்சுல்ல. அதில்தான், இப்படி சொன்னாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அமைச்சரே, இப்படி பேசுறார் என்றால், பிரச்னை வரும் போல. இதை, எதிர்க்கட்சியும், தோழர்களும் எப்படி சமாளிப்பாங்களோ தெரியலையே,'' என்று சிவாஜி 'டயலாக்' மாதிரி பேசினாள் சித்ரா.

''அதேமாதிரி, உள்ளாட்சி தேர்தலில் நிக்கலாம்னு 'பிளான்' இருந்தா, கூட்டுறவுல நிக்க வேண்டாம். மத்தவங்களுக்கு வழிவிடுங்க. ஒருத்தருக்கு ஒரு பதவி மட்டும்தான்னு, 'ஓபனா' சொல்லிட்டாராம்,'' என்று மித்ரா சொன்னதும், ''ஒரு பதவி என்ன? ஓராயிரம் பதவி கொடுத்தாலும், இவங்களுக்கு பத்தாது,'' என்று சொல்லி சிரித்தாள் சித்ரா.

சாப்பிட்டு முடித்த இருவரும், 'பீடா'வை மென்று கொண்டே, பார்க்கிங் நோக்கி நகர்ந்தனர். அப்போது, ''ஜெ., இருந்த வரை ஸ்டேஷன் பக்கம் எட்டி பார்க்காமல் இருந்த ஆளுங்கட்சிக்காரங்க, இப்ப ஆட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்குதாம்,'' என்றாள் மித்ரா.

''அட... பரவாயில்லையே. போலீஸ் மேட்டரை தெரிஞ்சு வைச்சு இருக்கிற. ஆமாம்.. நீ சொன்னது உண்மையே. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ரெண்டு பேரும்,

''சிட்டியில் இருக்கிற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள்கிட்ட, ''டாஸ்மாக் மதுக்கடைக்கு 'ரெய்டு' போகாதீங்க. ரூரலில் கண்டுக்காம இருக்காங்க. 'சிட்டி'யில் மட்டும் ஏன் 'ரெய்டு' பண்றீங்க,' னன்னு ஓபானாவே சொல்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இதென்ன... கொடுமையா இருக்கு,'' என்று மித்ரா, அங்கலாய்த்ததும், ''அட.. இரு மீதி விஷயத்தையும் கேளு. எம்.எல்.ஏ., சொல்றதையும் மீறி ரெய்டு போவதால், 'கமிஷனரை' டிரான்ஸ்பர் பண்றதுக்கு எல்லா வேலையும் நடக்குதாம். இத்தனையும் தெரிஞ்சுகிட்ட ஐ.எஸ்., போலீசார், 'கப்சிப்'ன்னு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

'பார்க்கிங்'கில் வண்டியை தேடி கண்டுபிடித்து, இருவரும் புறப்பட்டனர். அவ்வழியே, ஒரு கட்டடத்துக்கு முன், ஆளுங்கட்சி கொடிகள் பறந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த சித்ரா, ''ஏன்.. மித்து. என்ன விசேஷம்,'' என்றாள்.

''அதை ஏன் கேக்குறீங்க. 'பப்ளிக் டாய்லட்' கழிவில் இருந்து, மீத்தேன் கேஸ் மூலம், சமையல் அறை ஒன்னு, மூணு வருஷத்துக்கு முன்னாடி,
22 லட்சம் ரூபாயில் கட்னாங்களாம். போன வாரம், இதை 'சவுத்' எம்.எல்.ஏ., திறந்து வச்சார். இதைப்பத்தி, கார்ப்ரேஷன் அதிகாரிகிட்ட கேட்டால், 'எங்களுக்கே தெரியாதுன்னு' சொல்றாங்களாம். விஷயம் என்னன்னா.. ஆபீசருக்கே தெரியாமல், 'போட்டோ'வுக்கு போஸ் கொடுத்துட்டு போயிட்டாராம். அப்புறம், அதோடு சாவி, ஆளுங்கட்சி வார்டு செயலாளர்கிட்ட இருக்குதாம். இந்த கூத்தை எங்கே போய் சொல்றதுன்னு, ஆபீசர்ஸ் புலம்பறாங்களாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.

“இந்த போலீஸ் ஏன்தான், இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடறாங்களோ?” என்றாள் சித்ரா.

கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க,'' என்ற மித்ரா சொன்னதும், ''மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டிட்டு, மாவட்டத்துல எல்லா பக்கமும் விதிமீறி சரக்கு வித்துட்டுதான் இருக்காங்க. கோழிப்பண்ணையூரில், பல கிராமங்களில், 'டாஸ்மாக்' சரக்கு விற்பதை, பலர் குடிசை தொழில்மாதிரி நடத்துறாங்களாம்,''

“இது பேப்பரில் வந்ததும், இன்ஸ்பெக்டர் உடனே போய், நாலு பேரை அரெஸ்ட் செஞ்சாரம். ஆனா, சாயந்திரமே பெயில வந்துட்டு, மறுபடியும் விக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். ஆனா, 'மாமூல்' வாங்கி குவிச்ச, அந்த இன்ஸ்பெக்டர் மேலே, எந்த நடவடிக்கையும் இல்லையாம்,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
''சரி.. போலீஸ்தான் இப்படின்னா... இந்த ஆர்.டி.ஓ., ஆபீஸில, லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாம். உனக்கு ஏதாவது தெரியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.

''ஓ... நல்லா தெரியுமே. வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு எந்த அதிகாரி வந்தாலும், அங்க இருக்கிற, நாலு புரோக்கர்ஸ் வச்சதுதான் சட்டமாம். எல்.எல்.ஆர்., போடறதில் ஆரம்பிச்சு, லைசென்ஸ், எப்.சி.,ன்னு, எந்த வேலையா இருந்தாலும், 'காசு.. பணம்.. துட்டு.. மணி,'தானாம்.

''வர்ற பொதுமக்கள் யாராவது எதிர்த்து கேட்டா, எல்லாத்தையும் கவனிக்கனும் என்று சொல்லி நான்கு பேரின் ஆட்டம் அதிகமாக இருக்குதாம். இவங்க, பேச்சுக்கு, அதிகாரியும் 'தாளம்' போடறாராம். இந்த நால்வரில் ஒருவர், தனக்கு போலீஸ் மத்தியில் அதிகார பலம் இருப்பதாக கூறி, வைட்டமின் 'ப'வை வாரி சுருட்டி கொண்டே இருக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.

''அதே.. ஆபீசில், இன்னும் இரண்டு புரோக்கர் ஆட்டமும், இவங்களை விட அதிகமாம். அதில் ஒருத்தர், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, விஜிலென்ஸில் மாட்டி, வெளியே வந்துட்டு, மீண்டும் பணம் கொடுத்து, உள்ளே வந்துட்டு, எப்.சி., புது வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் பார்க்குறாராம். இன்னொருத்தர் பணத்தை வசூல் பண்ணி, அதிகாரிகிட்ட கொடுத்துட்டு, கமிஷன் எடுத்துப்பாராம். 'லஞ்சம் அப்டின்னா, வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்தான்,'ன்னு சின்ன குழந்தைகளும் சொல்ற அளவுக்கு கட்டுக்கடங்காமல் கரை புரண்டு ஓடுதாம்,'' என்றாள் சித்ரா.

அதற்குள் 'ரெட்' சிக்னல் வரவே, நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடம், ஒருவர் நோட்டீஸ் வினியோகித்து சென்றார். அதை வாங்கிய, சித்ரா, ''முதன் முறையாக, டவுன்ஹாலில், 'வாங்க சம்பாதிக்கலாம்,' நாடகம் நடக்கிறது. பிரபாகரன், சத்ருகன், பாலு, குமார் இவர்களுடன், முத்துக்குமார், செந்தில்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். அனுமதி இலவசம்,'' என்பதை வாசித்து முடிக்கவும், 'கிரீன்' சிக்னல் விழவும் சரியாக இருந்தது. உடனே, வண்டியை, 'சர்ர்...' என்று
நகர்த்தினாள் சித்ரா.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X