மாதவம் செய்தவர்களா மங்கையர்கள்| Dinamalar

மாதவம் செய்தவர்களா மங்கையர்கள்

Added : மார் 29, 2018
Advertisement

பெண்கள் நாட்டின் கண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண்இருப்பாள். சமூக மாற்றத்திற்குபெண் கல்வியே அவசியம். தாயில் சிறந்த கோயில் இல்லை. நாட்டின் வற்றாத நதிகள் எல்லாம் பெண்கள் பெயரில் தான் ஓடுகின்றன. நம்மை தாங்கி சுமக்கும் பூமியையே பூமாதேவி என பெண்களை இந்தசமூகம் கொண்டாடுகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்" என்று அழகாகவும் "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பகட்டாகவும் சொல்லலாம். ஆனால் அத்தனையும் உண்மையா?.தன்னிகர் இல்லாத் தமிழ்இனத்தில் சங்க காலத்தில் இருந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை இன்று இல்லையே. அன்று முதல் இன்றுவரை அன்புக்கு அன்னை தெரசா. அரசியலுக்கு இந்திரா, விளையாட்டுக்கு பி.டி.உஷா என ஒரு சிலரை மையப்படுத்தி பெண்கள் வெற்றியை முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம்.சமூகத்தில் மாற்றங்கள் தேவை என துடிக்கிறோமே. ஆனால் அந்த மாற்றங்களை நாம் முழுமை யாக ஏற்றுக் கொள்கிறோமா?. இல்லையே ஏன்?பேச்சில் மட்டுமே உரிமை. அரசியலுக்கு செல்ல விரும்பும் பெண்களை, 'அகராதி பிடித்தவள்,' என அடக்கி வைக்கிறோம். விமானத்தில் பைலட் ஆக விரும்பும் பெண்களை, 'பாதுகாப்பில்லை,' என்று கூறி பட்டப் படிப்பு படிக்கவைக்கிறோம். விஞ்ஞானி ஆக விரும்பினால், 'காலங்கள் வீணாகும் கல்யாணம் பண்ணிக்கொள்,' என கட்டாயப்படுத்துகிறோம். விளையாட்டு வீராங்கனையை வீட்டு வாழ்க்கைக்கு உதவாது என்று முடக்கி வைக்கிறோம். நீச்சல் வீராங்கனையின் உடையில் விரசத்தை பார்க்கும் விமர்சனங்களுக்கு அஞ்சி முற்றுப்புள்ளி வைக்கிறோம்.சபைகளில் ஆண்களுக்கு முன் சட சட வென புரட்சிக்கருத்துக்களை புட்டு புட்டு வைக்கும் பெண்ணை, 'புகுந்த வீட்டிற்கு ஆகாது,' என்று பூட்டுப் போடுகிறோம். இவை எல்லாம் எங்கிருந்து தொடங்குகின்றன. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற அன்னையிடமிருந்தும், அள்ளி அனைத்துக்கொள்ளும் தந்தையிடமிருந்தும் தானே ஆரம்பிக்கிறது. ஏன் இந்த மாறுபட்ட மனப்பான்மை.திணிக்கப்படும் முடிவுகள் பெண்கள் கல்வி கற்கும்போது பேதைமை மறைகிறது, பெருமை சேர்கிறது என்று கூறுகிறோம். ஆனால் படித்த பெற்றோர்களே தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு சமூதாயத்தின் எதிர்காலத்திற்கு ஏமாற்றத்தையே தருகிறார்கள். சினிமாத் துறையில் நடிப்பைத் தவிர வேறு பிரிவுகளில் சாதித்த பெண்கள் எத்தனை பேர்? நீதித் துறையில் சிறந்த நீதிபதிகள் எத்தனை பேர்? எழுத்தாளராகவும், கவிஞராகவும், பத்திரிக்கையாளராவும் காலுான்றியோர் எத்தனை பேர்? ஏதோ ஒன்றிரண்டு பேர் மட்டுமே. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, போட்டித் தேர்வுகள்,வேலை, குடும்பம் எனசா(?)திக்கின்றனர். ஆனால் சாதனையின் உச்சங்களை எட்ட நினைக்கும் பெண்களுக்கு அதை எட்டுவதில் தான் எத்தனை சிக்கல்கள், தடைகள்,இடையூறுகள்.அன்னையின் அன்பு மொழிகளால் ஏற்படும் தடைகள். தந்தையின் அதிகாரத் தோரணையால் ஏற்படும் தடைகள். அண்ணன் தம்பிகளின் அச்சுறுத்தல்களால் ஏற்படும் தடைகள். அக்காள் தங்கைகளின் இயலாமையால் ஏற்படும் தடைகள். குடும்பத்தாரின் தெளிவில்லா குழப்பங்களால் ஏற்படும் தடைகள். சுற்றத்தாரின் வற்றிப்போன சம்பிரதாயங்களால் ஏற்படும் தடைகள். சமூகத்தின் சாஸ்திரங்களால் ஏற்பட்டத் தடைகள். அத்தனையும் தாண்டி சாதிக்க நினைத்தால் சாட்டையடியாய் விழுகிறது, அரசியல். வீடு பெண்ணிற்கு என்றும் வெளிஉலகு ஆணிற்கு என்றும் தீர்மானிக்கப் பட்ட அன்றே பெண்ணினம் முடக்கப்பட்டு விட்டது.
சமத்துவம் சமமானதா : இன்றைய உலகில் பெண்கள் போற்றப்படுகிறார்கள், பேச்சளவில். பெண்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள், ஏட்டளவில். அன்று முதல் இன்றுவரை காட்டு வேலை, கட்டட வேலை, கடைகளில் வேலை என்று ஆணும், பெண்ணும் உழைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஆணுக்கு ஒரு கூலி; பெண்ணுக்கு ஒரு கூலி. எங்கே இருக்கிறது, இங்கு சமத்துவம்?. இப்பேர்ப்பட்ட சூழலில் பெண்கள் பொருள் ஈட்டுவது கடமையாகவும், ஆண்கள் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வது பெரிய மனசாகவும் சித்தரிக்கப்படுகிறது. பெண் கல்வி பெரிதாக மாறி இருந்தாலும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதில் உள்ள குறைபாடுகள் சிந்திக்க வேண்டியவையாகவே உள்ளன. தன் மகனின் படிப்பிற்கு பல்வேறு நகரங்களுக்கு படையெடுக்கும், பார்த்து பார்த்து கல்லுாரிகளை தேர்வு செய்யும் பெற்றோர், தங்கள் மகளின் படிப்பிற்காக பக்கத்துக் கல்லுாரியை தேர்ந்தெடுப்பதில் தெரிகிறது, பெண்ணின் பெருமை. தங்கள் ஊரில் அல்லது அருகே படிப்பு வசதி இல்லை என்பதற்காக தான் விரும்பும் இடத்திற்கு சென்று கல்வி கற்க பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.நுாறு சதவிகிதம் இப்படி தான் நடக்கிறது என சொல்லிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான பெற்றோரின் எண்ணம் இது. இதை மறுக்கவும் முடியாது. "பெண்களுக்கு கல்வி வேண்டும் "ஆம் கடைக்கோடி சிறுமிக்கும் கல்வியை கொண்டு சேர்த்து விட்டோம். பெற்றோரும், மற்றோரும், ஆசிரியரும், ஆட்சியாளரும் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள். இதன் விளைவு என்ன? இன்னும் விடியல் காணாத வாழ்வுதான். கல்வியின் நோக்கம் கற்றவர்களிடமாவது (படித்த பெண்கள்) நிறைவேறி இருக்கிறதா?இல்லையே என்று தான் சட்டென சொல்லத் தோணுகிறது.
தேவை சிந்தனை விதைப்பு : இன்றைய சூழலில்குடும்பம், சமூகம், அரசியல், பொருளாதார தளங்களில் படித்த பெண்கள் தங்களுக்கு உரிய பங்கையும், முக்கியத்துவத்தையும், சமத்துவத்தையும், அங்கீகாரத்தையும் என்று பெறுகின்றனரோ அன்றுதான் மகளிர் மாண்புறுவர். கல்வியும் சமுதாயமும் செய்திகளைத் தராமல் சிந்தனையை விதைக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவம் மேடைப் பேச்சுக்களாக அமையாமல் வாழ்க்கை பாடங்களாக அமைய வேண்டும். பெண்களை பொருத்தவரை 'அல்ல' 'இல்லை' என்னும் சொற்கள், 'ஆம்', 'உண்டு' என்று மாறவேண்டும். சிந்திக்கும் மூளை அவளுக்கும் உண்டு. நிந்திக்க வேண்டாம், அவள் திறமையை.பெண்களே, அறிவியல்ஆராய்ச்சி என்றால் அன்னை என்ன சொல்வாரோ? புவியியல் ஆராய்ச்சி என்றால் புகுந்தவீட்டில் என்ன சொல்வாரோ? அரசியல் பிரவேசம் என்றால் சமூகம் என்னசொல்லுமோ? என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து சிதைத்துக் கொள்ளாதீர் உங்கள் கனவுகளை. சொல்பவர் சொல்லட்டும் எனச் சொல்ல இயலாமல் விடியலைக் காணாது வீணடைந்து விடாதீர் வீரப் பெண்களே. பிறந்த வீடு, புகுந்த வீடு தன் பெற்றோர் தன் பிள்ளைகள் அனைவருக்காகவும் வாழும் நீங்கள் கொஞ்சமேனும் உங்களுக்காக வாழுங்கள். சிந்திக்கும் மூளை பெண்ணிற்கும் உண்டு நிந்திக்க வேண்டாம் அவள் திறமையை.போற்றுவோம் பெண்ணைசிறகடிக்கும் ஆசை அவளுக்கும் உண்டு சிறைப்படுத்த வேண்டாம் அவள் எண்ணங்களை. மீசைகள் எல்லாம் பாரதியாகவும் தாடிகள் எல்லாம் பெரியாராகவும் மாறவேண்டும். மாற்றம் என்பது லட்சியமாக இல்லாமல் இலகுவானதாய் இருக்கவேண்டும். தீவிரமாய் இல்லாமல் தினந்தோறுமாய் இருக்கவேண்டும். சாதனையாய் இல்லாமல் சாதாரணமாய் இருக்கவேண்டும். மானுடத்தில் பெண்களை மாதவம் செய்தவர்களாய், தெய்வங்களாய் போற்றப்பட வேண்டாம்; தேவதைகளாய் அவர்களை பூஜிக்க வேண்டாம். ஒவ்வொரு மனங்களின் அடித்தளத்தில் இருந்து பெண்ணை, பெண்ணாய் மட்டும் போற்றினால் பெண்மை என்றும் பாதுகாக்கப்படும்.
- ஆர்.அய்யம்மாள், ஆசிரியை அரசு உயர்நிலை பள்ளிவன்னிவேலம்பட்டி

99941 74323வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X