அத்துமீறும் ஆண்களுக்கு ஒரு அறிவுரை!| Dinamalar

அத்துமீறும் ஆண்களுக்கு ஒரு அறிவுரை!

Updated : ஏப் 01, 2018 | Added : மார் 31, 2018 | கருத்துகள் (4)
உரத்த சிந்தனை, uratha sindhanai, ஆண்கள், பெண்கள்

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் காட்சிகள், வங்கிக்கடன் மோசடிகள், ஜாதி மத சர்ச்சைகள் என, பத்திரிகைகளில் செய்திகள் அவ்வப்போது மாறிய படி இருந்தாலும், நாள் தவறாமல், நாளிதழ்களில் ஏதாவது ஒரு மூலையில், சாதாரண செய்தியாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை செய்திகள் வருகின்றன.
அதுவும், சிறு பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அன்றாட செய்தியாகி விட்டன; மனதை அவை கனக்கச் செய்கின்றன.பள்ளியில் மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியர்கள் அசிங்கப்படுவதை, பத்திரிகைகளில் நாள்தோறும் பார்க்கிறோம். நல்லொழுக்கம், சிறந்த கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படி அறிவிழந்து நடந்து கொள்ளலாமா?
வீட்டிலேயே கூட, நெருங்கிய உறவுகளாலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும், பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற செய்திகளை படிக்கும் போது, மனம் பதறுகிறது. அதை எழுதவே என் பேனா கூசுகிறது... பெற்ற தந்தையே, தான் துாக்கி வளர்த்த மகளிடம் கொடூரமான செயலைச் செய்வது அக்கிரமத்தின் அநீதியின் உச்சம்.மது மயக்கத்தாலும், போதைப் பொருட்களுக்கு அடிமையானதாலும் தான், பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன.
ஆபாச திரைப்படங்கள், அசிங்கமான சமூக வலைதளங்கள் போன்றவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள் இல்லாதது தான், இது போன்ற வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம்.
அரைகுறை ஆடை அணிவதும், உடல் தெரிய உடை உடுத்துவதும் மட்டுமே, பிரச்னைகளுக்கு காரணம் என, பழியை பெண்கள் மீதே சுமத்துகின்றனர், ஒரு சில ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள்.நாகரிகமாக உடை அணிந்தாலும், கண்ணியமாக உடுத்துவது தான் பெண்களுக்கு அழகு, பாதுகாப்பு, அவசியமும் கூட! இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
அப்படியானால், பச்சிளம் குழந்தைகளிடமும், பள்ளி செல்லும் சிறுமியரிடமும், அவர்களின் உடையிலும், என்ன ஆபாசம் கண்டீர்? பெற்ற பெண்ணின், உடன் பிறந்த சகோதரியின்
உடையில் ஆபாசமா அல்லது மன விகாரத்தின் வெளிப்பாடா?இவை ஒரு புறமிருக்க, சமீபத்திய செய்திகள் மனதை உலுக்கி எடுத்தன.
பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து ஒருவன், கத்தி முனையில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இந்த நிகழ்வு ஏதோ, ஊர் பேர் தெரியாத வெளிநாட்டில் இல்லை... இதோ, நம்மை சுற்றியுள்ள தமிழக நகரங்களில்தான் அராஜகம் செய்திருக்கிறான், அறிவழகன் என்று பெயர் கொண்ட அறிவற்றவன்.ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களிலும், உலகின் எங்கோ ஒரு மூலையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக பார்த்திருப்போம், படித்திருப்போம்.
ஆனால் அவை, இப்போது நம்மைச் சுற்றி, நிஜமாகவே நடப்பது பயங்கரமானவை.'நள்ளிரவில் நகைகளுடன் ஒரு இளம் பெண் சாலையில் தனியே, எந்த பயமும் இல்லாமல் நடந்து செல்லும் நாள் தான், உண்மையான சுதந்திர தினம்' என்றார், நம் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால், பட்டப்பகலில் கூட செயின் பறிப்பும், 'ஆசிட்' வீச்சும், நகை பணத்துக்காக கொலை வெறித்தாக்குதலும் அதிகரித்து வருகின்றனவே!

காதலிக்க மறுத்ததால், வீடு புகுந்து ஒருவன், பெட்ரோல் ஊற்றி, பெண்ணை எரித்து கொலை செய்த கொடூர சம்பவமும் சென்னையில் தானே நடந்தது! அப்போது, காப்பாற்ற முயன்ற தாயும் பலியானது வேதனை, கொடுமை.சில நாட்களுக்கு முன் இதே காரணத்தால், கல்லுாரி வாசலில், கத்தியால் குத்தப்பட்டு உயிர் விட்டாள் அஸ்வினி.

மவுலிவாக்கம் சிறுமி ஹாசினி வழக்கை எடுத்துக் கொள்வோம்... வீட்டு காம்பவுண்டுக்குள் விளையாடி கொண்டிருந்த குழந்தையை, அழைத்துச் சென்று, கொடூரமாய் இம்சை செய்து, எரித்து கொன்று விட்டான், ஒரு படித்த முட்டாள்.பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்புவதற்குள், வீட்டுக்கு கீழே குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தங்கள் செல்ல மகளுக்கு, இப்படி ஒரு பேராபத்து வந்து சேரும் என, அந்த பெற்றோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாவம்!இதை படித்த போது, பதைபதைத்துப் போனது மனது.

பாலியல் பலாத்காரம்

செய்து, ஈவு, இரக்கம் இல்லாமல், கொடூரமாக கொலையும் செய்த ஒருவனை, ஜாமினில் வெளியே விட்டதால், பெற்ற தாயையும் கொன்ற பெரும் பழி, பாவத்துக்கு ஆளாகி, துாக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறான், தஷ்வந்த் என்ற கயவன்.இன்ஜினியரிங் படித்து, மென்பொறியாளராக பணியாற்றியவனுக்கு, கீழ்த்தரமாக புத்தி வேலை செய்ய என்ன காரணம்?
'அந்த' ஒரு விஷயத்தில் மட்டும் தான், படித்தவன், படிக்காதவன்,
ஏழை, பணக்காரன், இளைஞன், முதியவன், அந்த ஜாதி, இந்த மதம் என்ற, எந்த ஒரு பேதமும் கிடையாது. ஆண் என்ற அகம்பாவம், திமிர். இதில், நீதிபதி, கவர்னர் என, யாரும்
விதிவிலக்கல்ல.

எட்டு மாத பெண் குழந்தை முதல், 80 வயது பாட்டிகள் கூட தப்பவில்லை என்பது, எவ்வளவு அருவருக்கத்தக்க, வெட்கக்கேடான விஷயம்! மனநலம், உடல் நலம் குன்றிய பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்வது, ஆண் வர்க்கத்துக்கே அசிங்கம்.

அடக்கடவுளே... என்ன மாதிரியான உலகமிது... இதற்கெல்லாம் ஒரே தீர்வு... குற்றம் செய்தவனுக்கு உடனடி தண்டனை. அடுத்தவன், அந்த தப்பைக் கனவிலும் நினைத்துப் பார்க்க
முடியாத அளவுக்கு, தண்டனை கடுமையானால் தான், ஆண் சமுதாயம் திருத்தும்.அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற கடுமையான தண்டனைகள் தான், பெண்களையும், சிறுமியரையும், கொடூரர்களிடம் இருந்து காப்பாற்றும்.

உண்மையில் சொல்லப்போனால், தண்டனை வழங்கும் அந்தக் காட்சிகளை என்னால் முழுமையாக பார்க்கக் கூட முடியவில்லை; ஓர் உயிர் வதைபடுவதை காண சகிக்கவில்லை. அவன் நல்லவனோ, கெட்டவனோ தெரியாது.ஆனால், ரத்தமும் சதையும் உணர்வுமுடைய
ஓர் உயிர். இதே கருணையைத்தான் ஆண்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்.அதற்காக எல்லா ஆண்களையும், நான் குறை கூறவில்லை. காம வெறி பிடித்து அலையும், வாய்ப்பு கிடைத்தால்,
எவ்வித அசிங்கங்களையும் செய்யத் துடிக்கும், சில ஆண்களைத்தான் சாடுகிறேன். வெறும் சதையை மட்டும் பார்க்காமல், சக உயிராய், எங்கள் உணர்வுகளை மதிக்கப் பழகுங்கள்.

பெண்ணுக்கே உரிய, இளகிய மனமும், தாய்மை குணமும் மேலிட, இவ்வாறு நினைத்தாலும்,
வர வர சில ஆண்கள் செய்யும் கொடுமைகள், அக்கிரமங்கள் அறியும் போது, மனதைக் கல்லாக்கி விடுகின்றன.ஒரு உயிர் மண்ணில் பிறக்கும் போது, சந்தோஷத்தில் பூரிப்பதும், மண்ணை விட்டு மறையும் போது, அழுது துடிப்பதும் தான் இயல்பு.

ஆனால், ஒருவனுக்கு துாக்கு தண்டனை என, அறிவித்த பின், பட்டாசு வெடித்து போலீசாரே இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்றால், அந்த, தஷ்வந்த் ஒரு நரகாசுரன் தான்!பெற்ற தாயையும் கொன்ற பிறகு, அவனுக்கு இந்த உலகில் வாழ, என்ன தகுதி இருக்க முடியும்... அவன் தந்தைக்கு என் அனுதாபங்கள்!பொதுவாக மனதாலும், உடலாலும், மென்மையானவர்கள், பெண்கள். அவர்கள் அரும்பத் துவங்கும் போதே, கசக்கி எறியாதீர்கள்.

ஆண், பெண் இருவருக்கும், 15 வயது வரை தான், பட்டாம்பூச்சிகளாய் பறக்கும் பருவம். பின், உயர் கல்வி, வேலை, குடும்பம் என, பொறுப்புகள் கூடி விடும்.ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது... பெண்களை தவறான எண்ணத்தோடு அணுகும் ஆணுக்கும், ஒரு குடும்பம்
இருக்குமல்லவா... அவனுக்கும் தாய், சகோதரி, மனைவி மற்றும் மகள் இருக்கத் தானே
செய்வர்... அவர்களும் பிறர் போல, பொது வெளிக்கு வந்து தானே ஆக வேண்டும்...
நம் குடும்பத்துக்கும் பிறரால், இது போன்ற ஆபத்து நேரலாம் என்ற பய உணர்வே அவர்களுக்கு கிடையாதா?

சுதந்திர தின உரையில், பிரதமர், மோடி கூறியது போல், ஆண் குழந்தைகளுக்கும் நல்ல அறிவுரை கூறி வளருங்கள்; அவர்களையும் கண்காணியுங்கள். பெண்களை மதிக்க, சக உயிராய் நேசிக்க பழக்குங்கள்.சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை, வரலாறு காணாத வெற்றிகரமாக்கிய நம் தமிழக இளைஞர்களை, இன்னொரு விஷயத்துக்காகவும், ஊடகங்களும், பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

ஐந்து, ஆறு நாட்கள், இரவு, பகலாக கூடியிருந்த போதிலும், சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டதை, பத்திரிகைகள் பெரிதும் பாராட்டி, கொண்டாடின. அதை, உலகமே வியந்து பார்த்தது.அந்த, எங்கள் ஆண் இளைஞர்களிடம் ஒரு வேண்டுகோள்... குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் தாக்கு தலை தடுக்க, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து, கூட்டமான இடங்களில், பதாகைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உடன் படிக்கும் பெண்ணை, சகோதரியாக பாருங்கள்.

சாலையில் நடந்து செல்லும் பெண்ணை, சதை பிண்டமாக பார்க்காதீர்கள். பஸ்சில் அருகே அமரும் பெண்ணை, தாயாக, தங்கையாக கருதுங்கள். தனிமையில் செல்லும் பெண்களை, உங்கள் பெண்களாக கருதுங்கள்.உங்களால் மட்டுமே இதுவும் சாத்தியம். இனியொரு கொடுமை, எங்கும் நிகழாத வண்ணம், ஆண்களே உறுதி கொள்வீர்!இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த பொறுப்பு என, பிறர் எண்ணிக் கொள்ளாதீர்கள். இந்த சமுதாயத்தில் தான், உங்கள் மகனும், மகளும் உலாவ வேண்டும். எனவே, அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பின் நிறுவனர்கள், பள்ளி, கல்லுாரிகளின் உரிமையாளர்கள் என, அனைவரும், உங்கள் பொன்னான நேரத்தை, இந்த சமூக அவலத்தை போக்க, சற்றே செலவிடுங்கள்.

இப்போது நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால், பின் வருந்த நேரிடும். அதே நேரம், தவறான பெண்களை, அதற்கான அமைப்புகளிடம் காட்டிக் கொடுத்து, தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். நீங்களாக எல்லா பெண்களையும், 'அந்த' பெண்கள் போல நினைத்துக் கொண்டு, பழி, பாவங்களை செய்யாதீர்கள்.

'வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதரும் தலை கவிழ்ந்தார்' என்றார், பெண்மையைப் போற்றிய, எங்கள் பாரதி. ஆனால், வீடுகளில் கூட பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கும் சமூகமும், சட்டமும், அரசும், தலை கவிழப்போகிறதா, தலை நிமிர போகிறதா என்பது, உங்கள் செயலில் தான் இருக்கிறது. செய்வீர்கள் தானே... சகோதரியின் அன்பு வேண்டுகோள் இது!

இ-மெயில்:
ikshu1000@yahoo.co.in

அபிராமி சமூக ஆர்வலர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X