கஞ்சா விற்பனையில கலங்கிக்கிடக்குது ஊரு: அஞ்சாமல் சப்ளை பண்றது ரெண்டு பேரு!| Dinamalar

கஞ்சா விற்பனையில கலங்கிக்கிடக்குது ஊரு: அஞ்சாமல் 'சப்ளை' பண்றது ரெண்டு பேரு!

Added : ஏப் 03, 2018
Share
சரவணம்பட்டியிலுள்ள தோழியைப் பார்ப்பதற்காக, 'கால்டாக்சி'யில் சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர். பண்பலையில், ''நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...'' என்று எம்.ஜி.ஆர்., பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.''மித்து! நம்மூர்ல முதல்வர் தலைமையில நடந்த திருமண நிகழ்ச்சியில, 26 ஜோடி பழசுன்னு கட்சிக்காரங்க சொன்னதா பேசிட்டு இருந்தோமே... அது யாரோ கிளப்பி
 கஞ்சா விற்பனையில கலங்கிக்கிடக்குது ஊரு:  அஞ்சாமல் 'சப்ளை' பண்றது ரெண்டு பேரு!

சரவணம்பட்டியிலுள்ள தோழியைப் பார்ப்பதற்காக, 'கால்டாக்சி'யில் சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர். பண்பலையில், ''நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...'' என்று எம்.ஜி.ஆர்., பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
''மித்து! நம்மூர்ல முதல்வர் தலைமையில நடந்த திருமண நிகழ்ச்சியில, 26 ஜோடி பழசுன்னு கட்சிக்காரங்க சொன்னதா பேசிட்டு இருந்தோமே... அது யாரோ கிளப்பி விட்டதாம்... எல்லாமே புது ஜோடிதானாம்!'' என்றாள் சித்ரா.
''அப்புறம் எப்பிடி இப்பிடி ஒரு தகவல் பரவுச்சாம்?'' என்று கேட்டாள் மித்ரா.''ஏற்கனவே கல்யாணம் ஆன ஒண்ணு ரெண்டு ஜோடிகளை, கட்சிக்காரங்க கூப்பிட்டுப் போய், சேர்க்கச் சொன்னாங்களாம். அவுங்களுக்கு, தனியா சீர்வரிசைப் பொருளெல்லாம் கொடுத்துட்டாங்களாம்; அந்த 86 ஜோடியில சேர்க்கலையாம்!'' என்றாள் சித்ரா.''பரவாயில்லையே... ஆனா, அன்னிக்கு போட்ட கல்யாணச்சாப்பாடு, கொடுத்த சீர்வரிசையைப் பத்தி, இன்னமும் ஊருக்குள்ள ஆஹா, ஓஹோன்னு பேசிக்கிறாங்க... இன்னொரு விஷயத்தையும் 'கம்பேர்' பண்றாங்க,'' என்று நிறுத்தினாள் மித்ரா.''மதுரையில நடந்த கல்யாணத்தோட 'கம்பேர்' பண்றாங்களா?'' என்று கேட்டாள் சித்ரா.''இல்லையில்லை... தி.மு.க., ஆட்சி நடந்தப்பவும், இதே மாதிரி, ஸ்டாலினைக் கூப்பிட்டு வந்து, வருஷா வருஷம் கல்யாணம் நடத்துனாங்களே... அதைத்தான் 'கம்பேர்' பண்றாங்க. அப்பல்லாம், இவுங்க கல்யாணம் நடத்துறதுக்கு, ஊர்ல இருக்குற அத்தனை கம்பெனி, கடை எல்லாத்துலயும் செமையா வசூல் பண்ணுவாங்க. இப்போ, அதெல்லாம் கிடையாதே!'' என்றாள் மித்ரா.''அப்போ மட்டுமா... இப்பவும் தான், மாநாடு, கல்யாணம்னு உடன் பிறப்புகள், வசூல் பண்றாங்க. இதுல 'கலகல காமெடி' என்னன்னா, எல்லை தாண்டிப் போய், மத்த ஏரியாவுல வசூல் பண்றாராம், எம்எல்ஏ உடன் பிறப்பு!'' என்றாள் சித்ரா.
''அவரோட வசூல் பராக்கிரமங்களைப் பத்திதான், ஊரெல்லாம் பேச்சா இருக்கு. டாஸ்மாக் 'பார்' ஏலம், மண்டல மாநாடுக்கு ஆளுங்கட்சியில இருந்து நிதியுதவின்னு ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' குவியுது. இப்பவே இப்படின்னா, ஆளுங்கட்சியாகி, அமைச்சரா ஏதாவது வந்துட்டா, என்னாகுறதுன்னு நம்மூர் வி.ஐ.பி.,க்களே மலைச்சுப் போயிருக்காங்க!'' என்றாள் மித்ரா.''அவுங்க ஆளுங்கட்சியா வந்தாலும் நம்மூர்ல தேறுறது ரொம்ப கஷ்டம்... காவேரி பிரச்னைக்காக நேத்து அவுங்க மூணு இடத்துல நடத்துன போராட்டத்துலயே, உடன்பிறப்புகளின் ஒற்றுமை தெரிஞ்சிருச்சே,'' என்றாள் சித்ரா.''உண்மைதான்க்கா... பொங்கலுார்க்காரரு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல போராட்டம் நடத்தி, தனி ஆவர்த்தனம் பண்ணுனாரு. பத்தரை மணிக்கு மறியல்னு 'ப்ளான்' பண்ணிருக்காங்க; ஒருத்தரும் வரலை. இவரு மட்டும் தனியா, அங்க இருக்குற ஓட்டல்ல உட்காந்திருந்திருக்காரு... அப்புறமா, அவரோட வள்ளல் மகன், கொஞ்சம் ஆட்களைக் கூப்பிட்டு வந்திருக்காரு. அப்பிடியும் நுாறு பேர் கூட தேறலை,'' என்றாள் மித்ரா.''அங்க அப்பிடியா... முத்துச்சாமி தரப்பு, வ.உ.சி.,கிரவுண்ட் பக்கத்துல பண்ணுச்சு... சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷன் முன்னால, எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில போராட்டம் நடந்துச்சு... எங்கேயுமே சொல்லிக்கிறாப்புல, பெரிய கூட்டம் இல்லை!'' என்றாள் சித்ரா.இவர்களின் காரை முந்திக்கொண்டு, மாநகராட்சி வாகனம் ஒன்று, வேகமாய்க் கடந்தது. அதைப் பார்த்த மித்ரா, மாநகராட்சி விவகாரத்தை ஆரம்பித்தாள்...
''அக்கா... நம்ம கார்ப்பரேஷன் பத்தி, ஒரு நல்ல சேதி... ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உருவாக்கம், செயலாக்கத்துல, இந்தியாவுல டாப் 10 சிட்டியில, நம்ம ஊரு ஒன்பதாவது இடத்தைப் பிடிச்சிருக்கு. தமிழ்நாட்டுல, முதலிடம்; இதை வச்சு, நம்ம கார்ப்பரேஷன் கமிஷனருக்கு, ஜனாதிபதி முன்னிலையில, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைப் பத்திப் பேசுறதுக்கு ஒரு 'கோல்டன் சான்ஸ்' கிடைச்சிருக்கு!''
''நம்ம ஊருக்கு ஏதாவது செய்யணும்னு, சென்ட்ரல், ஸ்டேட் ரெண்டு கவர்மென்ட்லயும் நினைக்கிறாங்க. ஆனா, அதைச் செயல் படுத்துறதுக்கு, கீழ் மட்ட அதிகாரிங்க யாரும் சரியில்லையே!'' என்றாள் சித்ரா.''அதென்னவோ உண்மைதான்... பதவிக்காக என்ன வேணும்னாலும் செய்யுறவங்கதான் அதிகமா இருக்காங்க. பதவிக்காக, போலி ஆவணம் தயாரிச்ச கார்ப்பரேஷன் ஏ.சி.,யை, கோர்ட் ஆர்டரை மதிச்சு, சேலத்துக்கு மாத்தி, கவர்மென்ட்லயே உத்தரவு போட்டாங்க. அதுக்கு அப்புறமும் அவரை மாத்த விடாம, நெருக்கடி இருந்திருக்கு. ஒரு வழியா, நேத்து அவரை இங்க இருந்து 'ரிலீவ்' பண்ணிட்டாங்க'' என்றாள் மித்ரா.''இனிமே, அவரோட இடத்தைப் பிடிக்க, போட்டி பலமா இருக்குமே!'' என்ற சித்ராவிடம், ''அதுல என்ன சந்தேகம்... சவுத் ஏ.சி., ஜூன்ல 'ரிட்டயர்டு' ஆகுறாரு...இந்த ரெண்டு இடத்தையும் கைப்பத்த, இப்பவே போட்டி பலமா இருக்கு. ஏ,சி. இன்சார்ஜா இருக்கிறவுங்க, சீக்கிரமே ஏ.சி.,ஆயிருவாங்க. அப்புறம்...'ஏஓ'க்கள், ஏ.சி. இன்சார்ஜ் ஆக முயற்சி பண்ணுவாங்க. அதுக்கான காய் நகர்த்தல்கள் வேகமா நடக்குது. எவ்ளோ 'ரேட்' போகுதுன்னு தெரியலை'' என்றாள் மித்ரா.
''இதுவும் 'ரேட்' மேட்டர் தான்... நம்மூர்ல முக்கியமான இடத்துல இருக்குற ஒரு 'அப்பார்ட்மென்ட்'ல 'ஓஎஸ்ஆர்' இடத்தை, வேற மாதிரி மாத்திட்டாங்க. அதை நம்ம 'டவுன் பிளானிங்' கண்டு பிடிச்சிட்டாரு. ஆனா, நடவடிக்கை எடுக்கலை. அந்த நிலத்தோட மதிப்பை வச்சு, 'ரேட்' பேசி, வலுவா ஒரு 'அமவுன்ட்' கறந்துட்டாராம்,'' என்றாள் சித்ரா.''வரி கட்டலைன்னு, பல 'அப்பார்ட்மென்ட்'களுக்கு முன்னால, குப்பைத் தொட்டியை வச்சிட்டு இருக்காங்க. போன வருஷம், 'டீமானிஸ்டேஷன்' இருந்ததால, 'ப்ளாக் மணி'யை வச்சு, வரியைக் கட்டிட்டாங்க. இந்த வருஷம், ஒரு சதவீதம் தான் வரி வருமானம் கூடிருக்கு. ஆனா, 25 கோடி ரூபா, அதிகமா வந்திருக்கு,'' என்றாள் மித்ரா.''வரி வருமானத்தை விடு... இந்த வருஷம், நம்ம கார்ப்பரேஷன் போட்ட பட்ஜெட், துல்லியமானது இல்லை; வரவு-செலவு ரெண்டையுமே ரொம்பவே குறைச்சுக் காமிச்சிருக்காங்கன்னு சொல்றாங்க. நம்ம ஊருக்கு 'ஈக்வலா' திருப்பூர் கார்ப்பரேஷன்ல பட்ஜெட் போட்ருக்காங்கன்னா, எங்கேயோ இடிக்குதே!'' என்றாள் சித்ரா.''அதைப் பத்தி யாரு கவலைப்படுறாங்க... இப்போதைக்கு 'லோக்கல் பாடி எலக்ஷன்' இல்லைன்னு தெரிஞ்சு, ஆளுங்கட்சிக் காரங்க ரொம்பவே 'அப்செட்' ஆயிருக்காங்க. அதனால, கூட்டுறவு பதவியையாவது கைப்பத்துவோம்னு களம் இறங்கிட்டாங்க,'' என்றாள் மித்ரா.பண்பலையில், 'இதயமே இதயமே' என்று, எஸ்பிபி உருகிக் கொண்டிருந்தார்.''மித்து... நம்ம ஜி.எச்.,ல 'ஹார்ட் பிராப்ளம்'னு 'அட்மிட்' ஆன கோவிந்தன்கிற ஒரு பேஷன்ட்க்கு, காப்பீட்டுத் திட்டத்துல 'ட்ரீட்மென்ட்' கொடுக்குறதுக்கு, 'ஆதார்' அட்டையைக் கேட்டு, 'டார்ச்சர்' பண்ணுன விவகாரம், பெரிய அளவுல வெடிச்சிருச்சு!'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்...அவர் 'ட்விட்டர்'ல இதைப்பத்தி தாறுமாறா போட்டுட்டாராமே'' என்றாள் மித்ரா.''அதே தான்... வானதி சீனிவாசன், நடிகை கஸ்துாரி, எஸ்.வி.,சேகர் எல்லாரும் அவருக்கு 'சப்போர்ட்' பண்ணி, 'ட்வீட்' பண்ணிருக்காங்க. கடைசியில, சீப் செகரட்டரி, மினிஸ்டர் விஜயபாஸ்கர் வரைக்கும் விவகாரம் போயி, அப்புறம் தான் 'ட்ரீட்மென்ட்'டை ஆரம்பிச்சிருக்காங்க. அவரை மாதிரி, ஜி.எச்.,க்கு வர்றவுங்க எல்லாம் 'ட்விட்டர்'ல போட முடியுமா?'' என்றாள் சித்ரா.
''அக்கா... நம்மூர் ஜேடிசி மேல, விஜிலென்ஸ் விசாரணை நடக்குதுல்ல...அவரு குவிச்ச சொத்துல, சிக்குனது ஒரு துளிதானாம். அவுங்க வரப்போறது, அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சு, எல்லா ஆவணங்களையும் கடத்திட்டாராம். விஜிலென்ஸ் கமிஷனர் மோகன் பியாரே, நேத்தும் கூட விசாரிச்சிட்டுப் போயிருக்காரு. என்ன நடவடிக்கை எடுக்கப்போறாங்கன்னு தான் தெரியலை!'' என்றாள் மித்ரா.
''அவரு... விஜிலென்ஸ்லயே எல்லாரையும் 'கரெக்ட்' பண்ணிட்டதா, ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல பேசிக்கிறாங்க. நம்மூர்ல, மாமூல் வெட்டுனா, கஞ்சாவையே கடை போட்டு விக்கலாம்!'' என்று விரக்தியோடு பேசினாள் சித்ரா.
''கரெக்ட்க்கா... நம்மூர்ல காலேஜ் பசங்களுக்கு பெரிய அளவுல கஞ்சா சப்ளை பண்றது காளம்பாளையம் அக்கா, ரவின்னு ரெண்டு பேர சொல்றாங்க... இவுங்க ரெண்டு பேரை இதுவரைக்கும் போலீஸ் தொடவே இல்லை... ஒரே காரணம் மாமூல்!'' என்றாள் மித்ரா.பண்பலையில், 'திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்' என்று, டிஎம்எஸ் குரல் ஓங்கி ஒலிக்க, இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டனர். பேச்சு, வேறு திசைக்கு மாறியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X