போராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா?| Dinamalar

போராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா?

Updated : ஏப் 04, 2018 | Added : ஏப் 03, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 போராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா?

போராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா?
1br@பிளாஸ்டிக்
ஆயிரம் ஆண்டுகளானாலும் மக்காமல் இருந்து மண்ணை மலடாக்கும் தன்மை கொண்டது.


நாம் அன்றாடம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளே பிளாஸ்டிக் கழிவுகளாய் மாறி பூதாகாரமான பிரச்னைகளுக்கு வித்திட்டு வருகிறது.
மக்களை நோயாளிகளாக மாற்றும் ,நாட்டின் சுற்றுச்சுழலுக்கு பெரும் கேடுவிளைவிக்கும், நம்முடைய புவி சூழலையே அழித்து ஒழிக்கும்.

இப்படி எவ்வளவு எழுதினாலும் சொன்னாலும் பிளாஸ்டிக் இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. காய்கறி கடையில் துவங்கி ஜவுளிக்கடை வரை பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்டு இறக்கும் கால் நடைகள் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சாக்கடைகள் அனைத்தையும் அடைத்துக் கொண்டு நீர் நிலைகளில் ஊறு ஏற்படுவதற்கும்,சுகாதாரக்கேடு உண்டாவதற்கும்,கொசுக்கள் வளர்வதற்கும் பரவுவதற்கும் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களே காரணம்.

பெய்யும் மழை நீர் மண்ணுக்குள் ஊடூருவமுடியாமல் தடுத்து மண்ணின் ஜீவனைப்பறித்து சிதைத்து வருவதும் பிளாஸ்டிக்தான்.

இத்தனை தீமைதரும் பிளாஸ்டிக்கை அழிக்க வழியேயில்லையா? என்று வேதனைப்பட்டவர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த போதிலட்சுமி.

திருமணம் குழந்தை குடும்பம் என்று சராசரியாக வாழ்வதற்கா நான் பிறந்தேன்? என்று தன்னையே கேட்டுக்கொண்டவர் நாட்டிற்கு வீட்டிற்கும் பலன்தரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினார்.

மகளிர் சுயநிதிக்குழு அமைக்கவேண்டும் ஆனால் பலரும் செய்வது போல டீக்கடை போடுவது ஒட்டல் நடத்துவது போன்றவைகளை செய்யக்கூடாது வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார்.

அப்போதுதான் பிளாஸ்டிக் தார் ரோடு போடும் மதுரை பேராசிரியர் வாசுதேவன் பற்றி அறிந்து அவரைச் சந்தித்தார்.பிளாஸ்டிக் தார் ரோடுகள் நீடித்து உழைக்கும். சாதாரண தார் ரோட்டைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் கூடுதல் பலன் தரும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பழுதடைவதில்லை. பராமரிப்பு செலவுகள் கிடையாது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். தட்பவெட்பநிலையை சீராக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளால் இவ்வுலகிற்கு ஏற்படும் அபாயத்தை நீக்கலாம் என்றெல்லாம் விவரமாக கூறியிருக்கிறார் மேலும் கூறுகையில்..

இப்போது போடும் ரோட்டின் ஜல்லியுடன் இந்த மூலப்பொருள் கலந்ததும் பிளாஸ்டிக் கோட்டிங் கிடைக்கும் அதனை தாருடன் கலந்து போட்டால் பிளாஸ்டிக் தார் ரோடு ரெடி. பிளாஸ்டிக்கை அழிக்க இதுவே சரியான வழி என்றும் சொல்லியிருக்கிறார் கூடவே தன்னால் தனியார் கல்லுாரிக்குள் போடப்பட்ட பிளாஸ்டிக் தார் ரோடுகளையும் காட்டியிருக்கிறார்.

விழிப்புணர்வு குறைவும்,ஊழலும் மலிந்துவிட்ட நமது நாட்டில் பிளாஸ்டிக் உற்பத்தியை தடுப்பதும் நிறுத்துவதும் அவ்வளவு சீக்கிரம் கைகூடிவிடாது ஆனால் மானாவாரியாக உற்பத்தியாகும் பிளாஸ்டிக்கை முறைப்படி அழிப்பதற்கு ஒரு நல்ல திட்டம் இருக்கிறது, அது பிளாஸ்டிக்கிற்கு எதிரானதாக நமது மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் தார் ரோடு போடுவதற்கு தேவைப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கினார்.

தன் எண்ணத்திற்கு ஏற்ற மகளிர்களைக் கொண்டு சுதேசி மகளிர் சுய உதவிக்குழுவினை கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கினார் மதுரை ஆத்திகுளம் நாராயணபுரத்தில் அரசு வழங்கிய பாழடைந்த கட்டிடத்தை புதுப்பித்தார் , மகளிர் திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக்கை அரைக்கும் எந்திரம் நிறுவப்பட்டது.

வீடு வீடாக தெருத்தெருவாக போய் பிளாஸ்டிக்கை ரோட்டில் எறியாதீர்கள் எங்களிடம் கொடுங்கள் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று கேட்டு வாங்கினர் அதுவும் போக பழைய குப்பைகளை வாங்கி விற்கும் வியாபாரிகளை அணுகி எங்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் தாருங்கள் என்று பணம் கொடுத்தும் வாங்கினார்.

இப்படி வாங்கிய பிளாஸ்டிக் குப்பைகளை தரம்பிரித்து எந்திரத்திற்கு அனுப்பி பிளாஸ்டிக் ரோடு போடும் மூலப்பொருளை மூடை மூடையாக தயாரித்தார்.ஒரு கிலோ முப்பது ரூபாய் ஒரு டன் 30 ஆயிரம் ரூபாய்.ஒரு டன் மூலப்பொருள் உபயோகித்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரோடு போடலாம்.

நிறுவனத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் முதல் மற்றும் பார்வையிட வந்த அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என்று எல்லோரும் ஆகா பிளாஸ்டிக்கை ஒழிக்க அருமையான திட்டம் என்று வாயார வானாளவு வாழ்த்தினார்.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது ஆனால் ரோடு போடும் கான்டிராக்டர்கள் யாரும் இந்த பிளாஸ்டிக்கை வாங்கிக் கொள்ள முன்வரவில்லை

காரணம் வேறு ஒன்றும் இல்லை இந்த பிளாஸ்டிக் மூலப்பொருளை கலந்து ரோடு போட்டால் நீண்ட காலத்திற்கு ரோடு நிற்கும் பிறகு எப்படி அவ்வப்போது ரோடு போடும் காண்ட்ராக்ட் எடுத்து பிழைக்கமுடியும் ஆகவே பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர்.

ரோடு போடும் கான்டிராக்டர்கள் தரும் கமிஷன் பணம் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர் முதல் கடைக்கோடி ஊழியர் வரை பாய்வதால் ஒப்பந்தகாரர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்யஇயலாத சூழ்நிலை

நாட்டிற்கு நன்மை செய்யப்போனால் இப்படி ஒரு பிரச்னையா? என்று கொதித்தெழுந்த போதிலட்சுமி, தயாரித்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களை கொண்டு போய் கலெக்டர் அலுவலக வாசலிலும்,மாநகராட்சி அலுவலக வாசலிலும்,ஊராட்சி முகமை அலுவலக வாசலிலும் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.இப்படி ஒரு நாளால்ல இருநாளல்ல தொடர்ந்து பல நாட்கள் பல இடங்களில் விடாமல் போராடினார்.

இவரது போராட்டம் காரணமாக அன்சுல் மிஸ்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த போது மாவட்டத்திற்குள் ரோடு போடும் போது இத்தனை சதவீதம் இந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கலந்துதான் போடணும் என்று உத்திரவிட்டு அப்படி ரோடு போட்டதற்க்கான சான்றோடு வந்தால்தான் பில் சாங்ஷனாகும் என்ற ரீதியில் உத்திரவு போட்டார்.

மிரண்டு போன காண்டிராக்டர்கள் போதிலட்சுமியிடம் ஒரு டீல் பேசினர் உங்க பிளாஸ்டிக் மூலப்பொருளை இத்தனை டன் விற்றதாக ஒரு பில் மட்டும் போட்டுக்கொடுங்கள் நாங்கள் உங்களுக்கு ஒரு தொகை தருகிறோம் அந்த பில்லைவைத்து நாங்கள் எங்கள் பில்லை பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

பொருளை விற்காமலே வெறும் பில் மட்டும் கொடுத்தாலே பணம் கொட்டுமென்று ஆசை காட்டியபோதும் அசராத போதிலட்சுமி அதற்கு வேறு ஆளைப்பாருங்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் துவங்கினேன் அது முறைப்படி நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லி ஒப்பந்தகாரர்களின் டீலை மறுத்தும் வெறுத்தும் ஒதுக்கினார்.

இந்த இடைவெளியில் அன்சுல் மிஸ்ரா மாறுதலாகிவிட்ட பிறகு அவர் போட்ட உத்திரவும் காற்றில் பறந்துவிட்டது.டன் கணக்கில் அரைத்து சேர்த்துவைத்திருக்கும் பிளாஸ்டிக் ரோட்டிற்கான மூலப்பொருள் மூட்டைகளுடன் முறையான ஆணை வரும், ரோட்டிற்கும் நாட்டிற்கும் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்.

ஒரு பக்கம் இவரன்றோ சிறந்த சமூகசேவகி இதுவன்றோ சிறந்த மகளிர் குழு என்று பரிசும் பாராட்டும் குவிந்து கொண்டு இருக்கிறது ஆனால் இன்னோரு பக்கம் வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பணம் தரமுடியவில்லை ,குழு மகளிர்களுக்கு சம்பளம் போடமுடியவில்லை,பாங்கில் வாங்கிய கடனுக்கு தவனை கட்டமுடியவில்லை ஆனாலும் போதிலட்சுமி மனம் தளரவில்லை ஒரு நல்ல விஷயம் நம்மால்தான் விடியும் முடியும் என்று இருக்கும் போது ஏன் சோர்ந்துபோகவேண்டும் என்று போராட்டத்தை தொடர்கிறார்.இவரது பேராட்டம் வெற்றி பெற்று பிளாஸ்டிக் மூலப்பொருள் கலந்த ரோடுதான் போடவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.

தமிழகத்தில் போடவேண்டிய ரோடுகளும் புதுப்பிக்க வேண்டிய ரோடுகளும் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் துாரம் இருக்கிறது இவைகள் எல்லாம் பிளாஸ்டிக் ரோடுகளாக மாறினால் யாராவது மனசாட்சி உள்ள அதிகாரி வந்து மாற்றினால் நமது ரோடுகள் எல்லாம் நன்றாக இருக்கும் என்பதுடன் பிளாஸ்டிக் எனும் அசுரனை தேடினாலும் கிடைக்கமாட்டான் என்பதுதான் பெரிய நன்மையும் உண்மையுமாகும்.
இவருடன் பேசுவதற்கான எண்:9360503805

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-மே-201814:30:13 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி அன்சுல் மிஸ்ரா- வைத்தவிர அத்தனை பேரும் நல்லவர்கள் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
manmadhan - Hosur,இந்தியா
15-ஏப்-201816:01:15 IST Report Abuse
manmadhan உங்கள் வீட்டை சுற்றி, அல்லது தனியார் சாலைகளுக்கு, கல்லூரி, கம்பெனி சாலைகளுக்கு என்று, டன் கணக்கில் இல்லாவிட்டாலும் கிலோ கணக்கில் வாங்கினாலும் கூட அவர் அரைத்து வைத்துள்ள மூலப்பொருள் காலியாகி சம்பளம் கொடுக்கக் கூடிய நிலைமையும் ஊக்கமும் பிறக்கும்...வாழ்த்துக்கள் போதிலக்ஷ்மி..உங்கள் நிழலில் எத்தனை பேருக்கு ஞானம் கிடைக்கபோகிறதோ .. ...
Rate this:
Share this comment
Cancel
ravisankar K - chennai,இந்தியா
14-ஏப்-201807:43:58 IST Report Abuse
ravisankar K பாராட்டுகள் . வெற்று கூச்சல் போடும் கூட்டத்தின் மத்தியில் உங்களை போன்ற நல்லவர் ஒருவர். இதை நீங்கள் இணையத்தளத்தில் எடுத்து சென்றால் பல பேர் உங்களை ஆதரிப்பார்கள் . கலெக்டர் அவர்களுக்கு பல பேர் கையழுத்திட்டு மனு வாக செல்லும் . (அது போல பல மனுக்கள் ஆதரவு கேட்டு e mail மூலமாக வருகின்றன) . இதன் மூலம் பலன் அடைந்தவர் பல பேர் உள்ளனர் . இணையதளத்தின் பெயர் www . change .org . இதை தவறாமல் முயற்சி செய்யங்கள் . செலவு எதுவும் கிடையாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X