காங்., கூட்டணியில் தி.மு.க., வெளியேறுமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

காங்., கூட்டணியில் தி.மு.க., வெளியேறுமா?

Updated : ஏப் 04, 2018 | Added : ஏப் 03, 2018 | கருத்துகள் (2)
காவிரி, தமிழகம், கர்நாடகா, திமுக, கருணாநிதி, காங்கிரஸ், ஸ்டாலின், சோனியா,ராகுல், அதிமுக, ஜெயலலிதா,சைதை துரைசாமி, அதிமுக

சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும், 1807-ல், காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் உருவான சிக்கல், 211 ஆண்டுகளாக தொடர்வது, வரலாற்று பிழை. இதனால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நாசமாகி கொண்டிருக்க, அரசியல் கட்சிகளோ, காவிரியில் தங்கள் தேர்தல் விளையாட்டை, கனஜோராக அரங்கேற்றி வருகின்றன.
'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை' என, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசை எதிர்த்து, இப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சிக்கலை தீர்ப்பதற்கு, ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கட்சிகள், மத்திய அரசை எதிர்த்து போராடுவது தான் வேடிக்கை. காவிரி பிரச்னையில், தி.மு.க., எத்தகைய அரசியல் சித்து விளையாட்டை அரங்கேற்றியது என்பதை, காவிரி நதிநீர் பங்கீடு குறித்த நீண்ட வரலாற்றில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

*கடந்த, 1807-ல் தொடங்கிய காவிரி பிரச்னையில், பல சுற்று பேச்சுக்கு பிறகும் தீர்வு எட்டப்படவில்லை. 85 ஆண்டுகள் கழித்து, 1892-ல், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுவதில் பிரச்னை ஏற்படவே, மீண்டும் சிக்கல் உருவானது

* கர்நாடகா, தமிழகம் ஏற்கும் வகையில், 1924-ல், ஒப்பந்தம் போடப்பட்டது. 50 ஆண்டு காலம் செல்லத்தக்க இந்த ஒப்பந்தம், 1974-ல் முடிவுக்கு வந்தது. அப்போது, காங்கிரசை சேர்ந்த, இந்திராவுடன் கூட்டணி வைத்திருந்தார், தி.மு.க., தலைவர், கருணாநிதி. பார்லிமென்டுக்கு மட்டும் தான் தொகுதிகள் தருவோம்; சட்டசபைக்கு கிடையாது என, கறாராக, பேரம் பேசிய கருணாநிதி, இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவே இல்லை

*ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறிய கருணாநிதியை கண்டித்து, அன்றைய காங்கிரஸ் தலைவர், பக்தவத்சலம், காட்டமாக அறிக்கை வெளியிட்டார். கருணாநிதியின் அக்கறையின்மை காரணமாகவே கபினி, ஹேமாவதி போன்ற அணைகளை, தமிழகத்தின் அனுமதியில்லாமல் கர்நாடகா கட்டிக்கொள்ள முடிந்தது. இந்த அணை கட்டப்படுவதை தடுக்கவும், கருணாநிதி முயற்சிக்கவில்லை என்பதால் தான், காவிரியில் வந்து கொண்டிருந்த ஓரளவு தண்ணீரும் நின்று

*கடந்த, 1986-ல், முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., காவிரி நதி நீர் விவகாரத்திற்கு தீர்வு காண, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, 1990-ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது

*நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, 1991ல் வந்த போது, தமிழகத்திற்கு, 205 டி.எம்.சி., தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. ஏற்காத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில்

* கர்நாடகாவை சேர்ந்த, தேவகவுடா, தி.மு.க., தயவுடன், 1996-ல், பிரதமர் பதவிக்கு வந்தார். அப்போது கூட காவிரி நதிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு கருணாநிதி முயற்சிக்கவில்லை

*நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, 2007-ல் வெளியானது. அதன் படி தமிழகத்திற்கு, 192; கேரளாவுக்கு 30; புதுச்சேரிக்கு, 7 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும் என, தீர்ப்பு வழங்கப்பட்டது

* அப்போது, தமிழகத்தில், தி.மு.க.,வும், மத்தியில் காங்கிரஸும் தான் ஆட்சியில் இருந்தன என்றாலும், இந்தத் தீர்ப்பை அரசாணையாக்க கருணாநிதி முன்வரவில்லை. அன்றைய, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த போதும், அரசியல் லாபத்துக்காக, தி.மு.க., அமைதி காத்தது. ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு போய், சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே, தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

* இறுதித் தீர்ப்புக்கு தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் தலை வணங்காமல், சீராய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டு பிப்ரவரி, 16ல், உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு, 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என, இறுதித் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை, ஆறு வாரங்களுக்குள் அமைக்கவும் உத்தரவிட்டது

நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி, மத்தியிலும், கர்நாடகாவிலும், காங்கிரஸ் அரசு தான் நீண்ட காலம் ஆட்சி புரிந்துள்ளது. அதுபோல, காங்கிரஸ் கட்சியுடன், தி.மு.க., தான் நீண்ட காலமாக நட்பு கொண்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும், ஆட்சியில் இருக்கும் போது, காவிரி பிரச்னையில் தமிழர் நலனுக்காக எந்த முயற்சியையும் அவை செய்ததில்லை என்பது தான் வரலாறு. மத்திய, பா.ஜ., அரசு எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும், அறிவிப்பு வெளியிட்டாலும், அதை கண்ணை மூடி, எதிர்த்து போர்க்கொடி உயர்த்துவது காங்கிரசின் வழக்கம். ஆனால், காவிரி பிரச்னையில் மட்டும் காங்கிரஸ் அமைதி காக்கிறது. சோனியா, ராகுல் ஆகியோர், இதுவரை காவிரி பிரச்னையில் வாய் திறக்கவே இல்லை என்பதில் இருக்கிறது, அரசியல் சூட்சுமம்.

இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, கூடங்குளம், மீத்தேன் விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராக நின்ற காங்கிரஸ், காவிரி விவகாரத்திலும் எதிர்த்தே நிற்கிறது என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவராகியுள்ள, ராகுல் என்ன செய்திருக்க வேண்டும்... 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மேலும், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சித்தராமையா செயல்பட முடிவெடுத்ததை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்குமாறு, கர்நாடக அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, மறுசீராய்வு மனு போடக் கூடாது என்றும், நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படுவது தான் ஜனநாயக மரபு என்றும் எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், இதில் எதையும் ராகுல் செய்யவில்லை; செய்யவும் மாட்டார். ஏனென்றால், தமிழகத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை. ஆனால், கர்நாடகாவில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, அந்த கட்சி வலிமையுடன் இருக்கிறது. அதனால், ஆட்சியை தக்க வைப்பதற்காக, கர்நாடகா பக்கம் ஆதரவாக நிற்கிறது, காங்கிரஸ்.மத்திய அரசு இப்போது நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், அ.தி.மு.க., அரசும், நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும், நீதிமன்றம் மூலம் பிரச்னையை சீர்செய்ய முயற்சிக்கின்றன. ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகளை, தி.மு.க., ஆதரிக்கவில்லை.

'காவிரி பிரச்னைக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறார். இலங்கையின், முள்ளிவாய்க்காலில், ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த, தி.மு.க., மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தது... பதவியை ராஜினாமா செய்தனரா... தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில், மத்திய அரசுக்கு, தி.மு.க., கடிதம் தானே எழுதிக்கொண்டு இருந்தது... பதவியை ராஜினாமா செய்தால், இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும் என்றால், வாழப்பாடி ராமமூர்த்தி, மத்திய அமைச்சர் பதவியை, மானத்துடன் பதவியை துாக்கி எறிந்த போதே, நியாயம் கிடைத்திருக்க வேண்டுமே!

காவிரி பிரச்னையில் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும், தி.மு.க., இப்போதும் அரசியல் செய்கிறதே தவிர, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கிடையாது. காவிரி பிரச்னையில் உண்மையான அக்கறை, தி.மு.க.,வுக்கு இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்...
அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து, டில்லிக்கு சென்று, காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியா, தலைவர், ராகுலை சந்தித்து, தமிழகத்தின் அவல நிலைமையை தெளிவாக விளக்கியிருக்க வேண்டும். தமிழகத்தில் காவிரி ஆறு மட்டும் தான் இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில், துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற நதிகள் பாய்கின்றன. காவிரி ஆறு, கர்நாடகாவை விட, தமிழகத்தில் தான் அதிக துாரம் பயணிக்கிறது என்பதால், தமிழகத்திற்கு தான், காவிரியில் அதிக உரிமை இருக்கிறது. 'ஒரு நதி உருவாகும் இடத்தை விட, அதிக துாரம் பாயும் இடத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்கிறது, சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதி. ஐ.நா., சபை விதிமுறையும், 'கடைமடை பகுதிக்குத் தான் நதியின் உரிமை அதிகம்' என்கிறது. எனவே, காவிரியில், கர்நாடகாவை விட, தமிழகத்திற்கு தான் அதிக உரிமை உள்ளது.

தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய, 192 டி.எம்.சி., காவிரி நீர், சமீபத்திய தீர்ப்பு மூலம், 177.25 டி.எம்.சி.,-யாக குறைக்கப்பட்ட போதும், தமிழகம் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொண்டது. 'தமிழகம் போல கர்நாடகாவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க செய்ய வேண்டும்' என, ராகுலுக்கு, தி.மு.க., அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இத்தனை நாளும் இதை செய்யாத ஸ்டாலின், இனியாவது உடனடியாக, சோனியா, ராகுலை சந்தித்து, செய்ய வேண்டும். காவிரிக்கு ஆதரவு தரவில்லை என்றால், கூட்டணியில் இருந்து விலகுவோம் என, காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அது போல, கர்நாடக, காங்கிரஸ் முதல்வர், சித்தராமையாவை சந்தித்து, 'நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்குங்கள்' என, கேட்க வேண்டும்.

கர்நாடகாவின் தேவைக்குப் போக, மீதம் இருப்பதை, தமிழகத்திற்கு தருவோம் என சொல்வது, சமூக நீதி அல்ல. காவிரியின் மீதான நமது உரிமையைக் கேட்கிறோமே தவிர, யாசகம் கேட்கவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு தான், தி.மு.க., இப்போது அழுத்தம் கொடுக்க வேண்டும். பார்லிமென்டில் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்காக உரிமைக்குரல் எழுப்பினால், நிச்சயம், ஆளும் கட்சி பணிந்தே தீரும். ராகுல் உத்தரவிட்டால் சித்தராமையா பணிந்து நடப்பார்.
அதனால், தி.மு.க., இப்போது செய்ய வேண்டியது, காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து மிரட்டுவது தானே தவிர, கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, அப்பாவி மக்களுக்கு மேலும் துன்பம் தருவது அல்ல.

கடந்த, 1998- முதல், காங்கிரஸ், பா.ஜ., என, பிற அனைத்து கூட்டணி ஆட்சியிலும், 16 ஆண்டுகள், தி.மு.க., பங்கெடுத்துள்ளது. இருந்தும், கட்சத்தீவு, காவிரி நதிநீர் பிரச்னை, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை போன்ற எதையும் தீர்ப்பதற்கு, அந்த கட்சி முயற்சி செய்ததில்லை. எனவே, காவிரி பிரச்னையில், தமிழக, அ.தி.மு.க., அரசும், மத்திய, பா.ஜ., கூட்டணி அரசும், என்ன செய்ய வேண்டும் என, ஆலோசனை சொல்லும் தகுதி, அருகதை, தி.மு.க.,வுக்குக் கிடையாது.

உண்மையிலேயே, தி.மு.க.,வுக்கு காவிரி பிரச்னையில் அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் மற்றும் காங்கிரசை எதிர்த்து, கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். காங்கிரஸ் கூட்டணியால் கிடைத்த, எம்.எல்.ஏ., மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், தி.மு.க.,வினர் ஒருபோதும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். கடைசி நிமிடம் வரை பதவி சுகம் அனுபவிக்கவே ஆசைப்படுவர். தி.மு.க., இப்போதும், தமிழக நலன் அல்லது விவசாயிகள் நலனுக்காக போராட்டம் நடத்தவில்லை. எப்படியாவது ஓட்டுகளை பெற்று, பதவிக்கு வர வேண்டும் என்ற, அரசியல் ஆதாயத்துக்கு தான், போராடுவது போல நாடகம் ஆடுகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். ஸ்டாலின் வேஷம் போடுவது, நாட்டுக்காக அல்ல; ஓட்டுக்காக மட்டும் தான்!
சைதை துரைசாமி,
அ.தி.மு.க.,
முன்னாள் மேயர்,
சென்னை மாநகராட்சி

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X