எந்நாளும்... துன்பமில்லை!| Dinamalar

எந்நாளும்... துன்பமில்லை!

Added : ஏப் 04, 2018

'ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், லத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு துாதின் மொழி என்றும், இத்தாலி காதலின் மொழி என்றும் கூறுவது ஏற்கத்தகும் என்றால், தமிழ் இரக்கத்தின் மொழி' என்பார் தனிநாயக அடிகள். அவரது கூற்றை நுாற்றுக்கு நுாறு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தவை பக்தி இயக்கக் காலத்தைச் சார்ந்த தேவாரப் பதிகங்கள். ஏழாம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் எட்டாம் நுாற்றாண்டில் சுந்தரரும் பாடிய எண்ணாயிரம் பாடல்கள் 'தேவாரம்' என்ற பெயரால் பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. இவை இசையொடு இன்ன பண் என்று குறித்துக் காலங்காலமாகப் பாடப்பெற்று வருகின்றன. 'இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்குக் கிடைக்கவில்லை' என கூறுகிறார் பேராசிரியர் மு.வரதராசனார். இன்னும் ஒரு படி மேலாக, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் இன்று உலகமே போற்றிக் கூறும் உயரிய தன்னம்பிக்கை சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்ல வண்ணம் வாழலாம் : திருஞானசம்பந்தர் 'திராவிட சிசு' என ஆதிசங்கரரால் குறிப்பிடப் பெற்றவர்; குழந்தை ஞானியாகப் போற்றப்பட்டவர்; பிள்ளைப் பருவத்திலேயே 'தோடுடைய செவியன் விடையேறி துாவெண் மதிசூடி என் உள்ளங்கவர் கள்வன்' என இறைவனைப் பாடிய பெருமைக்கு உரியவர். அவருடைய பாடல்களில் கலக்கத்தையோ மனச் சோர்வையோ துயரத்தையோ மருந்துக்கும் காண்பது அரிது; மாறாக பாடல்கள் பயில்வோர் நெஞ்சில் ஊக்கமும் நம்பிக்கையும் விதைக்கும் வல்லமை படைத்தவை.சமணரும், பவுத்தரும் இல்லறத்தைப் பழித்து துறவறத்தையே பெருமையாகப் பேசி வந்த ஒரு கால கட்டத்தில் திருஞானசம்பந்தர் போலித் துறவையும், சாதி வேறுபாடு, தீண்டாமை முதலான சமூக அவலங்களையும் கடுமையாகச் சாடுவதிலும், பெண்களுக்கு நேர்ந்த இழிநிலையைப் போக்குவதிலும் ஆர்வம் காட்டினார்.இறைவன், உமை ஒரு பாகனாய் - அர்த்த நாரீசுவரனாய் - இருக்கும் கோலத்தைச் சுட்டிக்காட்டி, இந்த உலகில் எந்நாளும் நல்ல வண்ணம் வாழ முடியும் என்ற எண்ணத்தை ஊட்டி, நல்ல கதியை அடைவதற்கு எவ்வகையான குறையும் இல்லை என்று மக்கள் மனங்களில் நம்பிக்கையை ஆழமாக ஊன்றும் வகையில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல் இவ் வகையில் முத்தாய்ப்பானது.
அப்பாடல் வருமாறு:'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதும்ஓர் குறைவிலைகண்ணில் நல்லதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே''பெருந்தகையான சிவபெருமான் பெண்ணின் நல்லாளான உமை அம்மையோடு காட்சி தரும் போது மனக்கவலைக்கே இடம் இல்லை; வாழ்வில் நல்ல கதிக்கு யாதொரு குறைவும் நேராது; மண்ணில் எந்நாளும் நல்ல வண்ணம் வாழலாம்' என்கிறார் திருஞானசம்பந்தர்.
நம்பிக்கை பாடல் : ஒருமுறை திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களோடு வாதிடுவதற்காகப் புறப்பட நேர்ந்தது. அப்போது உடன் இருந்தவர் அந்த நாள் சோதிடப் படி நல்ல நாளாக இல்லை என்பதைக் குறிப்பிட்டுத் தடை எழுப்பினார். அந்நிலையில் திருஞானசம்பந்தர், 'எங்கள் தலைவன் சிவபெருமான் பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவன். கங்கையையும் பிறைச் சந்திரனையும் தனது முடியில் அணிந்தவன். என் உள்ளத்தில் குடிபுகுந்தவன். அவ்வாறு அவன் என் உள்ளத்தில் வீற்றிருப்பதால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களும் ராகு கேது என்னும் பாம்பு இரண்டும் ஒரு தீமையும் செய்ய மாட்டா. அவை எல்லாம் நல்லனவே; இறையடியார்களுக்கு மிக நல்லனவே' என்று அஞ்சாமையும் ஆர்வமும் ஊக்கமும் தெளிவும் நம்பிக்கையும் ததும்பி நிற்குமாறு ஒரு பதிகம் பாடினார்.'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனி பாம்பு இரண்டும் உடனேஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே'.'நல்ல' என்ற மங்கலச் சொல் இப் பாடலில் ஐந்து முறை வருகிறது. திருஞானசம்பந்தர் அருளிய இக் கோளறு பதிகத்தினை மனம் கலந்து, பொருள் உணர்ந்து படித்து வந்தால் போதும்; எந்நாளும் வாழ்வில் நல்லனவே நிகழும்.
துன்பம் இல்லை : திருநாவுக்கரசர் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் மந்திர மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு முறை திருநாவுக்கரசர் மீது பகைமை கொண்ட மகேந்திரப் பல்லவன், அவரை அழைத்து வருமாறு ஆணை இட்டான். அச் சூழலின் போது அவர் பாடிய பாடல் அவருடைய பெருமித உணர்வையும் ஆழ்ந்த இறைப் பற்றையும் புலப்படுத்துவதாகும்.'நாம் யாருக்கும் குடியாக அடங்கி வாழவில்லை. காலனுக்கும் அஞ்சுவதில்லை. நரகத்தில் சென்று இடர்ப்படுவதில்லை. பொய் கூறுவது எம் வாழ்வில் இல்லவே இல்லை. மகிழ்ச்சியாக வாழ்வோம். நோய் அறியோம். யாருக்கும் அடி பணியவும் மாட்டோம். எந்த நாளும் இன்பமே அல்லாமல் துன்பம் என்பது ஒருபோதும் எமக்கு இல்லை. எம் கடவுளாகிய சிவபெருமான் யாருக்கும் குடி அல்லாத தனித்தலைமை உடையவர். அவர் ஒருவருக்கே யாம் என்றும் மீளாத அடிமையாய் அவருடைய திருவடியைச் சேர்ந்திருக்கின்றோம்'.'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை'.பாரதி பாடல்'நாமார்க்கும் குடியல்லோம்' என்ற அப்பர் பெருமானின் அடியை மையமாகக் கொண்டே பாரதியாரும், 'நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் - இதுநமக்கே உரிமையாம் என்பது உணர்ந்தோம்பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் - பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்!' என்று பாடினார்.திருநாவுக்கரசரின் பாடல்களில் பக்தி மிகுந்து விளங்கியது. கல்வித் தெளிவும் தத்துவ ஞானமும் கொண்டவராக இருந்த போதிலும், கையில் உழவாரம் என்னும் களைக்கொட்டுக் கருவியை ஏந்திக் கோயில்களுக்குச் சென்று, அங்கு தரையில் கிடந்த புல்லையும் முள்ளையும் கொத்திக் கல் முதலியவற்றை அப்புறப்படுத்திக் கோயில் வளாகத்தைத் துாய்மை செய்வதையே தம் வாழ்வின் பெரும்பேறு எனக் கொண்டார்.என்னதான் துன்பங்கள் அணிவகுத்து வந்து தாக்கிய போதும், எவ்வளவு தான் நெருக்கடிகள் சூழ்ந்து நின்று சொந்தம் கொண்டாடினாலும், திருநாவுக்கரசரிடம் இருந்து வாழ்க்கையை வெறுத்து ஒரு சொல் கூட பிறக்கவில்லை; மாறாக
'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவழம்போல் மேனியில் பால்வெண்ணீறும்இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்றே நம்பிக்கையுடன் பாடினார்;என்றும் மணமகன் இவரது வாழ்விலும் வாக்கிலும் இதே போல் நம்பிக்கை ஒளிரும் தன்னம்பிக்கை சிந்தனைகளே மேலோங்கி நிற்கக் காணலாம். என்றும் மணமகன் போன்ற அழகிய கோலத்தில் விளங்கி, உலக வாழ்க்கையில் பெறும் இன்பங்களை எல்லாம் இறைவனிடமே உரிமையுடன் கேட்டுப் பெற்று மகிழ்ச்சி பொங்கப் பாடியவர் அவர். துறவு மனப்பான்மையையோ, உலக வெறுப்பினையோ அவருடைய பாடல்களில் சற்றும் காண முடியாது. பொருள் தர மனம் வராத வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வர்களின் வீடுகளை நாடிச் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடி வீணே காலத்தைக் கழிக்காமல், 'இறைவனுடைய கோயிலைப் பாடுங்கள். இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்; இடர் நீங்கி வாழலாம். நற்கதி கிடைக்கும். ஐயமே இல்லை' எனப் புலவர்களுக்கு அறிவுரை கூறுவதாகச் பாடியுள்ள பத்துப் பாடல்கள் இவ் வகையில் சிறப்பானவை.
-- முனைவர் நிர்மலா மோகன்எழுத்தாளர், மதுரை. 94436 75931We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X