புதுடில்லி : கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி :
2014 ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரை செயல்பாடற்ற சொத்துக்களின் மீதான கடன்கள் அல்லது பல காலமாக திருப்பிச் செலுத்தப்படாத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி புள்ளி விபரத்தின் படி, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் தொகை ரூ.2,41,911 கோடியாகும் என சுக்லாவின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மம்தா விளாசல் :
மத்திய அமைச்சரின் இந்த பதிலை கடுமையாக விமர்சித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி பல வகைகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.