பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் திசை மாறுவதால், பருவ காலங்கள் மாறுவது தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. இந்த சூழலில், எப்போது வறட்சி ஏற்படும்; எப்போது பலத்த மழை கொட்டி தீர்க்கும் என்பதை கணிப்பதும், கடினமாக மாறி விட்டது.
வரும் காலங்களில் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடையும் என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பிரச்னையை எப்படி சமாளிப்பது என, பல நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.மாறி மாறி, வறட்சி ஏற்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழகமும், கர்நாடகாவும், காவிரி நீர் பங்கீடு பிரச்னையை, நிரந்தரமாக கையாள்வது எப்படி என, தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
காவிரி பிரச்னையை கையாள்வது குறித்து, முந்தைய ஆண்டுகளில், இந்த இரு மாநில அரசுகளும் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை.பருவ மழை பொழியும் காலத்தில் நீரை சேமித்து, வீணாகாமல் காப்பதற்கு, போதுமான அளவில் நடவடிக்கைகளை எடுக்க, இரு மாநிலங்களும் தவறி விட்டன.
இரு மாநிலங்களிலும் உள்ள ஏராளமான குளங்கள், ஏரிகள் துார் வாரப்பட்டு, நீரின் சேமிப்பு அளவை கூட்டியிருந்தால், இந்த பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கண்டிருக்கலாம்.தடுப்பணைகள் பல கட்டப்பட்டிருந்தால், மழை நீர் கடலில் கலப்பதை தவிர்த்திருக்கலாம். குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்வதற்கு மாறி இருந்தால், விவசாயத்திற்கான தண்ணீர் தேவை பெருமளவு குறைந்து இருக்கும்.
இவையெல்லாம், பல காலமாக கூறப்பட்டு வரும் பரிந்துரைகள். எனினும், இரு மாநிலங்களிலும் அவற்றை தகுந்த முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, காவிரி பிரச்னைக்கு, இதுவரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, வாதாட, 300 கோடி ரூபாய்க்கு மேல், இரு மாநில அரசுகளும் செலவிட்டுள்ளன.
உரிய சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், 2005ல், தமிழகத்தில், 349 டி.எம்.சி., மழை நீர் கடலில் கலந்து வீணானது. கடந்த, 1991 முதல், 2015 வரை, 1,165 டி.எம்.சி., நீர், தமிழகத்தின் கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் கலந்து வீணானது. அது போல, கர்நாடக மாநிலத்திலும், பல ஆயிரம், டி.எம்.சி., நீர் வீணாகிஉள்ளது.
இரு மாநிலங்களிலும், ஒரே சமயத்தில் வறட்சி ஏற்படுவதில்லை. உதாரணமாக, கடந்தாண்டு, தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டது; திருநெல்வேலி போன்ற இடங்களில் அபரிதமான மழை பெய்தது.அடிக்கடி ஏற்படும் வறட்சி பிரச்னையால், இரு மாநிலங்களிலும், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய, இக்கட்டான சூழ்நிலையில், இரு மாநிலங்களிலும் புதிய முறையில், தேவையான தண்ணீரின் உற்பத்தியை பெருக்குவதே, பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
கடல் நீரின் உப்பை அகற்றி, நீராக மாற்றும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரு மாநிலங்களிலும் பெருமளவு செயல்படுத்துவது மிகவும் அவசியம்.இரண்டு மாநிலங்களிலும் கடல் உள்ளதால், இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் தான். தமிழகத்தில் ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.தமிழகத்திற்கு, ஆண்டுதோறும், 55 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 80 சதவீதம் விவசாயத்திற்காக தேவைப்படுகிறது.
மீதமுள்ள, 20 சதவீதம் மட்டுமே, குடிநீர், தொழிற்சாலை உள்ளிட்டவைகளின் தேவைகளுக்காக உள்ளது.காவிரி நீர், பிற நதிகளின் நீர், மழை நீர் மற்றும் நிலத்தடி நீரை, விவசாயத்திற்கு உபயோகித்து, மீதி தேவைக்கு, கடல் நீரை சுத்திகரித்து, உபயோகிக்க வேண்டும்.இதனால், பருவ மழை தவறுவதால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை பெருமளவு சமாளிக்க முடியும். இரு மாநிலங்களிலும், ஒரு நாளுக்கு, 1,000 கோடி லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தினால், 6 முதல், 7 சதவீதம் வரை நீர் தேவை பூர்த்தியாகி விடும்.
சராசரியாக, ஒரு ஆண்டில், பருவ மழை பொய்த்தால், இரு மாநிலங்களிலும் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, இந்த அளவில் தான் இருக்கும்.நாள்தோறும், 1,000 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை தயாரிப்பதற்கு, 50 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். கடல் நீரை, குடிநீராக மாற்றுவதற்கான உற்பத்தி செலவு, லிட்டருக்கு, எட்டு பைசா மட்டுமே.தற்போது உலகெங்கும், 17 ஆயிரம் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாளும், 8,000 கோடி லிட்டர் கடல் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல உள்ளன. ஆனால், அவற்றின் உற்பத்தி அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அதுபோலவே, தமிழகத்திலும், கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றின் உற்பத்தி திறன், குறைவாக உள்ளது. கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்தை, தமிழகம், கர்நாடகாவில், தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்து, நிர்வகிக்கும் தொழில்நுட்பம் தெரிந்த பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வரக்கூடும்; அவற்றிற்கு அனுமதிக்கலாம்.
இதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறை வழிமுறைகள், ஊக்குவிக்கும் திட்டங்களை மத்திய அரசு உடனே வகுக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு, உலக வங்கியின் நிதியுதவி பெறுவது சாத்தியம் தான். தமிழகத்தில், பல நீர் பாசன திட்டங்களுக்கு, உலக வங்கியில், தேவையான அளவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அது போல், இந்த திட்டத்திற்கும், உலக வங்கியின் நிதியுதவியை பெற வேண்டும். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, தமிழகத்தின் தாகத்தை, தணிக்க வேண்டும்; காவிரி பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நிபுணர்களால் ஆலோசனை மட்டுமே தர முடியும். அரசால் மட்டுமே, திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இமெயில்:
nsvenkatchpnnai@gmail.com