இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்

Updated : ஏப் 06, 2018 | Added : ஏப் 06, 2018 | கருத்துகள் (2)
Share
Advertisement
இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பெட்டிக்கடைகளில் பலசரக்கு வாங்கிய நிலை மாறி இணையக் கடைகளில் நாம் விரல்களால் விற்பனைச் சந்தைக்குள் நுழைந்து நாட்களாகிவிட்டன. ரயில்முன்பதிவு, மின்கட்டணம் செலுத்துதல், இணையவங்கிச் சேவை என்று இணையவாசிகளாகிவிட்டோம்.சில நொடிகள் இணையவேகம் குறைந்துபோனால்கூட நம்மால் தாங்க முடியா அளவு மனச் சோர்வுக்கு
 இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்

இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பெட்டிக்கடைகளில் பலசரக்கு வாங்கிய நிலை மாறி இணையக் கடைகளில் நாம் விரல்களால் விற்பனைச் சந்தைக்குள் நுழைந்து நாட்களாகிவிட்டன. ரயில்முன்பதிவு, மின்கட்டணம் செலுத்துதல், இணையவங்கிச் சேவை என்று இணையவாசிகளாகிவிட்டோம்.சில நொடிகள் இணையவேகம் குறைந்துபோனால்கூட நம்மால் தாங்க முடியா அளவு மனச் சோர்வுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் கூட அவற்றிலிருந்து விலகி தலை குனிந்தபடி நம் கையிலுள்ள ஸ்மார்ட் போன்களின் செயலிகளுக்குள் நுழைந்து எதையாவது தேடிக்கொண்டிருக்கும் கவனமற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றோம். நம் இனிய இரவுகளை இணையத்தில் தொலைத்து ஆண்டுகள் தாண்டிவிட்டன.விற்பனையாகும் தகவல்கள்துணிக்கடையிலிருந்து நாமே மறந்துபோன நம் பிறந்தநாளுக்கோ நம் திருமணநாளுக்கோ வாழ்த்து அட்டை எப்படி வருகிறது என்று நாம் என்றாவது சிந்தித்திருப்போமா? நம் வீட்டில் ஆறுமாதம் கழித்து நடைபெற உள்ள திருமணத்திற்கு எங்கள் கடையில் நகை வாங்குங்கள் என்று எப்படிக் கேட்க முடிகிறது என்று சிந்தித்திருப்போமா?

குருவாயூர் போனால் எந்த விடுதியில் தங்கலாம் என்றுகூகுளில் தேடிவிட்டு, முகநுால் வந்தால் முகநுால் திரையில் குருவாயூர் விடுதிகளின் விளம்பரம் எப்படி வருகிறது என்று என்றாவது சிந்தித்திருப்போமா? உடல் எடையைக் குறைக்க எந்த ஜிம்முக்குப் போவது என்று ஏதாவது ஒரு தேடு பொறியில் தேடிவிட்டு வருவதற்குள் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிறுவன விபரம் எப்படி முகநுாலில் வருகிறது என்று என்றாவது சிந்தித்திருப்போமா?


இரக்கமற்ற இணையம்:

அலைபேசிகள் பேசுவதற்கு என்ற நிலையை தாண்டி விட்டன. திருமண வீட்டிலும், இறப்பு வீட்டிலும், நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லச்சென்ற மருத்துவமனையிலும்கூட, நானே என் படத்தை தற்படமாய்(செல்பி) எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவேன் என்று தற்படப் பிரியர்களாக மாறி இருக்கிறோம். ஓடும் ரயிலுக்கு முன்னால் தற்படம் எடுத்துக் கொள்வதாய் தன்னுயிர் நீத்த மனிதர்களால் அலைக்கற்றைகள் கொலைக்கற்றைகளாக மாறி இருக்கின்றன. நீலத்திமிங்கலங்களின் கோர ஆணையேற்று கைநரம்புகளை அறுத்துக்கொண்டு உயிர்நீத்த சிறுவர்களின் மீது இணையம் இரக்கமில்லாமல் தன் கோரக்கரங்களை நீட்டியிருக்கிறது. இணையமில்லாதவர்களை இதய மில்லாதவர்கள் என்று சமூகம் புறந்தள்ளத் தொடங்கியிருப்பது எவ்வகையில் நியாயம்?

வங்கிக் கணக்கு இல்லாதவர்களைக் கூடக் காணலாம், ஆனால் முக நுால் கணக்கு இல்லாதவர்களைக் காணமுடியாது என்று முகநுால் நம் முகவரியாய் மாறிவிட்டன. மறந்துபோன நண்பனின் பிறந்தநாளை இரண்டு நாட்களுக்கு முன்பே முகநுால் நினைவுபடுத்தி அவருடனான பழைய நினைவுகளைப் படமாக எடுத்து நம்மைப் பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி ஆணையிடுகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் நாம் என்ன பதிவிட்டோம் என்று நினைவுபடுத்தி கண்களில் நீர்க்கசிய வைக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோது நமக்கு வேண்டியவர்கள் நலமாக இந்த இடத்தில் உள்ளார்கள் என்று காட்டுகிறது. வெளியூருக்குப் போய் இறங்கிய உடன் நம் நண்பர்கள் யார் யார் அருகில் இருக்கிறார்கள் என்று அவர்களை நமக்கும் அவர்களுக்கு நம்மையும் அடையாளம் காட்டுகிறது.


நடுங்கிய நம்பிக்கை:

பள்ளி நாட்களோடு தொடர்பு அறுந்து போன நண்பனை கணினித் திரைமுன் கொண்டு வந்து நிறுத்தும் முகநுாலின் நேர்த்தி கண்டு வியக்காதவர்கள் இருக்கமுடியாது. சிலந்தி வலைக்குள் சிக்கிய ஈயை மெல்ல மெல்ல சிலந்தி பசையால் கட்டிவைத்து கொட்டிக் கொட்டிக் கொல்லுமோ அதைப்போல் நேரத்தை நின்றுகொன்று நம் வாழ்வைத் தின்று கொண்டிருக்கும் இணையதளங்கள் மீது கவனத்தை ஏற்படுத்திய சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

இது இணையப்பதிவர்கள் இணையப்பயன்பாட்டை மறுஆய்வு செய்யவேண்டிய நிலைக்கு கொண்டு நிறுத்தி இருக்கிறது.அலாவுதீன் கையில் இருந்த அற்புதவிளக்காய் உலகம் முகநுாலை நினைக்கத் தொடங்கிய நிலையில்தான் “கேம்ப்ரிட்ஜ் அனலடிகா” என்ற சொற்கள் அதன் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்க்கத் தொடங்கின.பயனீட்டாளர்களுக்கே தெரியாமல் நம்மைப்பற்றிய தகவல்களை வேண்டியவர்களுக்கு முகநுால் நிறுவனம் தந்து ஏமாற்றியிருக்கிறது என்ற தகவல் முகநுால் பயனாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. உலகமெங்கும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து உரியவர்களுக்கு வழங்கும் சமூக ஊடகத் தகவல் விற்பனையாளர்கள் இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். முகநுாலில் அமெரிக்கப் பதிவர்கள்போட்டுவைத்த தகவல்களை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு எடுத்துத்தந்து வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளது கேம்ப்ரிட்ஜ் அனலடிகா நிறுவனம். அதாவது அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள் வணிக நோக்கத்திற்கு விற்கப்பட்டுள்ளன.


மார்க் வருத்தம்:

நிறுவனர் மார்க் ஜுகர்ஸ்பர்க் ஐந்துகோடி பேரின் தகவல்களைத் திருடும் அளவு முகநுால் பாதுகாப்பற்றதாகிவிட்டதை அதிர்ச்சியுடன் ஒத்துக்கொண்டு “நான்தான் பேஸ்புக்கை தொடங்கினேன், அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நானே பொறுப்பு. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் நாமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் விழிப்பாக இருக்கவேண்டும்.நமக்கு உதவுகின்றன என்ற நோக்கத்தில் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யும் தேவையற்ற செயலிகள் (ஆப்ஸ்) ரகசியமாக நம்மை எவ்வாறு வேவு பார்க்கின்றன?

நம் வங்கித் தகவல்களை எவ்வாறு இணையத் திருடர்களுக்கு தருகின்றன என்று அறிந்தபோது ஸ்மார்ட்போன் செயலிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணரமுடிகிறது.நம் கடவுச்சொற்களைச் செயலிகள் விற்கும்போது நாம் வங்கியில் போட்டுவைத்த பணத்தை உலகின் ஏதோவொரு மனிதனும் திருடமுடியும் என்பது எத்தனை ஆபத்தானது? அலைபேசியில் தொடர்பில் யார் யார் உள்ளார்கள், அவர்களோடு நாம் நடத்தும் பணப்பரிமாற்றம் என்ன என்று நம் செல்பேசியில் உள்ள செயலிகள் நகலெடுத்து, நம்மை அடிமைப்படுத்த முயல்கின்றன. அலைபேசித் திரைகள் வழியே நாம் கண்காணிக்கப்படுகிறோம்.


புவியின் வெப்பம் அதிகரித்துள்ளது:

ஸ்மார்ட்போன்களின் தாக்கத்தாலும் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சாலும் புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் அளவுக்கதிகமான செயல்பாட்டால் காற்று மாசுபட்டு புவியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அலைபேசி பயன்பாட்டுக்குப் பின் அதிக அளவு மூளைப் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இலவச அறிவிப்பு நிறைய டீன்ஏஜ் பருவத்தினரை இணையத்தின் பக்கம் திருப்பி அடிமையாக்கியுள்ளது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இணையத்தில் உலாவி செயலிகளுக்குள் உள் நுழைந்து பார்க்கும் அளவு அடிமைக்குள்ளாக்கி வைத்திருக்கிறது.நள்ளிரவு கடந்தபின்னும் உறக்கமில்லாமல் முகம் தெரியாதவர்களுடன் உரையாடல்கள் தொடர்கின்றன. பள்ளி மாணவியர் பேக் ஐடி எனும் போலி பதிவர்களிடம் சிக்கிப் பொருள் இழந்து மானம் இழந்து வெளியில் சொல்லவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.நம் பிறந்தநாள், நாம் படித்தகல்வி நிறுவனம், நம் நண்பர்கூட்டம், நமக்கு என்ன பிடிக்கும்?

நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்றெல்லாம் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறது முகநுால். இனியும் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் குறிப்பாக, முகநுாலிலும் வாட்ஸ்ஆப்பிலும் வினாடிக்கு வினாடி பதிவேற்றவேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்; பிடிக்காதவர்களின் வீட்டையும் எரிக்கலாம். இணையம் வீட்டை எரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அதில் எரிந்து பொசுங்காமல் நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். இணையப்பயன்பாடு கூடாது என்பதல்ல நம் கருத்து. நம் சொந்த வாழ்வையும் சமூக வாழ்வையும் அது சீரழித்துவிடாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள உணர்த்துவதே நம் நோக்கம்.

-பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி - 99521 40275

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAGADEESAN - chennai,இந்தியா
06-ஏப்-201812:59:41 IST Report Abuse
JAGADEESAN அருமையான பதிவு வறவேற்கதக்கது...............
Rate this:
Cancel
Kali - Trichy,இந்தியா
06-ஏப்-201808:37:32 IST Report Abuse
Kali எனக்கு FB இல்லை WUP இல்லை ஆனால் நிம்மதி இருக்கிறது.பயணங்களில் சூழலை ரசிக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X