இரண்டு தீர்ப்புகள்; இரு போராட்டங்கள்!| Dinamalar

இரண்டு தீர்ப்புகள்; இரு போராட்டங்கள்!

Updated : ஏப் 08, 2018 | Added : ஏப் 08, 2018 | கருத்துகள் (2)
Share
உச்ச நீதிமன்றம் வழங்கிய இரு வேறு தீர்ப்புகளால், நாடே இன்று, அமைதியற்ற சூழலை சந்தித்துள்ளது. முதலாவது தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பானது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தொடர்புடைய இந்த வழக்கில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது.அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள்,
உரத்த சிந்தனை,இரண்டு தீர்ப்புகள்; இரு போராட்டங்கள்!

உச்ச நீதிமன்றம் வழங்கிய இரு வேறு தீர்ப்புகளால், நாடே இன்று, அமைதியற்ற சூழலை சந்தித்துள்ளது. முதலாவது தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பானது.
தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தொடர்புடைய இந்த வழக்கில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது.அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும், ஜாதி, மதம் கடந்து, 'சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்' என, போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இரண்டாவது தீர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பானது. இதில், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை எதிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, வட மாநிலங்களில், பெரிய கலவரமாக, இந்த பிரச்னை வெடித்தது.
உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை, அமல்படுத்தக் கோரி ஒரு போராட்டம்; அதே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, 'அமல்படுத்தாதே' எனக் கோரி, மற்றொரு போராட்டம். அதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அமைதியில்லாத சூழல் நிலவுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமாக நடக்கும் போராட்டம், நான்கு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாகும்.
ஆனால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சம்பந்தமாக நடந்த போராட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது.இந்த சட்டம் சம்பந்தமாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பார்ப்போம்...
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், சுபாஷ் காசிநாத் மஹாஜன் என்பவர், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான, வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது; அதில், அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனர். இச்சட்டம் கொண்டு வந்ததற்கான நோக்கம் இதுவல்ல' என, தீர்ப்பளித்தது.
நீதிபதிகள், ஏ.கே.கோயல் மற்றும் உதய்.யூ.லலித் ஆகியோர் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக, சிலவற்றை குறிப்பிடலாம்; அவை:சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சமூகத்தினர், பிற ஜாதியினரின் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம், ஜாதி, மதம் எதுவாக இருப்பினும், தனி மனிதரை துன்புறுத்துவது, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களுக்கு எதிரானது.
அனைவரையும் சட்டம் பாதுகாக்க வேண்டும். அந்த சட்டத்தின் படி, புகார் அளிக்கப்பட்டால், முறையாக விசாரிக்காமல், உடனடியாக முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதை ஏற்க முடியாது.அப்படி செய்வது, அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, மேற்கண்ட சட்ட பிரிவில், புகார் அளிக்கப்பட்டால், ஒரு வாரத்திற்குள், போலீசார் முதற்கட்ட விசாரணை செய்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
எப்.ஐ.ஆர்., பதிவு செய்தாலும், உடனடியாக கைது செய்ய வேண்டியது இல்லை. தவறான புகார்களிலிருந்து அப்பாவிகளை காப்பாற்ற வேண்டியது, நீதிமன்றத்தின் கடமை. எனவே, தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும்.புகாருக்கு ஆளான நபருக்கு, முன் ஜாமின் அளிக்கக் கூடாது என, ஒட்டு மொத்த தடை எதுவும் இல்லை. குற்றச்சாட்டு பொய்யாக இருக்கும் பட்சத்தில், முன் ஜாமின் அளிக்கலாம். அப்பாவிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இச்சட்டத்தில், அரசு ஊழியரை கைது செய்ய வேண்டுமானால், அவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவரிடம், முன் அனுமதி பெற வேண்டும். அரசு ஊழியர் அல்லாத ஒரு நபரை கைது செய்ய வேண்டியிருந்தால், மூத்த காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம், எழுத்து மூலம் காரணம் தெரிவித்து, முன் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு கொடுமை இழைப்போர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.அது தான், இந்த கட்டுரையின் நோக்கமும் கூட.
ஆனால், அந்த உன்னத சட்டம், சிலரால் தவறாக பயன்படுத்தப்பட்டு, அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான், உச்ச நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது.'உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவால், வன்கொடுமை தடுப்புச் சட்டம் வலுவிழந்து போகும்; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்' என, அந்த பிரிவை சேர்ந்த சிலர் நினைக்கின்றனர்; அது உண்மையில்லை.
அந்த சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை... விசாரணை முறையில் தான், மாற்றம் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முறை, சட்ட பிரிவுகளை மாற்றி விடாது. 'அதனால் பாதிக்கப்படுவோம்' என்ற, அச்சம் கொள்ள தேவையில்லை.உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நடைமுறைகள், ஏற்கனவே புலன் விசாரணை அதிகாரிகளால் பின்பற்றப்படுபவை தான்.
எடுத்துக்காட்டாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரிக்கும் வழக்குகளிலும், சி.பி.சி.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு பிரிவு, விசாரிக்கும் வழக்குகளிலும், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.சிறப்பு புலனாய்வு பிரிவுகளுக்கு வரும் புகார்கள் மீது, முதலில், 'பிரிலிமினரி என்கொயரி' எனப்படும், முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டு உண்மையானது தான் என,தெரிந்த பின், உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்.
அதன் பின் தான், புலன் விசாரணை எனப்படும், 'இன்வெஸ்டிகேஷன்' துவங்கும். ஆனால், இந்த முறை, எல்லா புலனாய்வு நிறுவனங்களும், எல்லா வழக்குகளிலும் கடைபிடிப்பதில்லை. அதனால், இது மற்றவர்களுக்கு புதிய நடைமுறையாக தெரிகிறது.
எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து விட வேண்டும் என, எல்லாரும், ஏன், ஒரு சில புலன் விசாரணை அதிகாரிகளும், உயர் போலீஸ் அதிகாரிகளும் கூட, இந்த கருத்தை கொண்டுள்ளனர்; இது, தவறான கருத்தாகும்.எப்.ஐ.ஆர்., பதிவு செய்த உடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கும், அதிகாரிகளுக்கும், அதை அனுப்பி வைக்க வேண்டும். பின், புலன் விசாரணை அதிகாரி சம்பவம் நடந்த இடம் சென்று, சாட்சிகளிடம் விசாரணை செய்து, வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், வழக்குக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். இதை, முதற்கட்ட புலன் விசாரணை என்று கூறுவர். முதல் கட்ட விசாரணையில், குற்றச்சாட்டு உண்மை என, தெரிந்த பின் தான், குற்றம் சாட்டப்பட்ட நபரை, கைது செய்ய முயற்சிக்க வேண்டும்.அதை விடுத்து, எப்.ஐ.ஆர்., போட்டவுடன், குற்றம் செய்தவரை கைது செய்து விட வேண்டும் என, எந்த சட்டத்திலும் கூறவில்லை. இதை தான், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
ஒரு குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் போது, 'ரிமாண்ட் ரிப்போர்ட்' எனப்படும், கைது அறிக்கையுடன், முதல் புலன் விசாரணை செய்ததற்கான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.அதாவது, ஆவணங்கள் இணைக்கப்படவில்லை எனில், சில நீதிபதிகள், 'கைது செய்தது தவறு' என்று கூறி, கைது செய்யப்பட்டவரை, தன் சொந்த ஜாமினில் விடுவித்து விடுவார்.
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கும் தீர்ப்பால், தேவையற்ற கைது தவிர்க்கப்படும்.இதை அறிந்தும், அறியாதது போல, காங்கிரஸ் கட்சி, மத்திய, பா.ஜ., அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகிறது. அரசியல் காரணங்களுக்காக, உண்மையை மறைக்கப் பார்க்கிறது. இதனால், தேவையற்ற குழப்பங்கள் நாட்டில் ஏற்படுகின்றன.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசுக்கு இருக்கத் தானே வேண்டும்... உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் உண்மையை தன்மையை, அந்த தீர்ப்பை எதிர்த்து போராடும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது, காங்கிரசின் கடமையும் தானே!
கர்நாடக சட்டசபை தேர்தல், காங்கிரஸ் அரசுக்கு பாதகமாக அமைந்து விடும் என்பதற்காக, காவிரி வாரியம் விவகாரத்தில், வாய்மூடி மவுனம் காக்கும் ராகுல் தலைமையிலான காங்கிரஸ், வன்கொடுமை சட்டத்தில், தவறான பிரசாரம் மேற்கொண்டுள்ளன.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், மத்திய அரசும், உச்ச நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த பிரச்னை சம்பந்தமாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், லோக்சபாவில், தாமாக முன் வந்து, அளித்த விளக்கத்தில், 'வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்கான எந்த செயலிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் நலன்களை பாதுகாப்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது' என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதை, அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள, மறு சீராய்வு மனு, விசாரணைக்கு வரும் போது, இந்த வழக்கில் இன்னும் தெளிவு பிறக்கும்.
அது போல, காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது. நல்ல தீர்ப்பே கிடைக்கும் என, நம்பிக்கை யுடன் காத்திருப்போம்.எந்த சூழ்நிலையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பாக உள்ள, வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகாது என, நம்புவோம்.அது போல, காவிரியில், தமிழகத்தின் உரிமையும் மறையாது என, உறுதி கொள்வோம்.
தேவ் பாண்டே
சமூக ஆர்வலர்
இ - மெயில்:
dev.pandy@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X