தண்ணிக்காக நடந்த போராட்டம்...தப்பாக புரிந்து கொண்ட உடன் பிறப்புகள்!| Dinamalar

'தண்ணி'க்காக நடந்த போராட்டம்...தப்பாக புரிந்து கொண்ட உடன் பிறப்புகள்!

Added : ஏப் 10, 2018
Share
மித்ராவின் வீட்டிற்குள் நுழையும்போதே, ஏதோ ஓர் இனிய வாசம், சித்ராவை வரவேற்றது...''மித்து... அம்மா ஏதாவது புதுசா 'டிரை' பண்றாங்களா... வாசம் துாக்குதே,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.''புதுசு இல்லக்கா... ரொம்ப பழசு... 'நம்ம ஊரு சந்தை'யில வாங்குன சிறுதானியத்துல, மரச்செக்கு எண்ணெய் உதவியோட அம்மா, முறுக்கு, சீடை எல்லாம் செய்யுறாங்க,'' என்றாள் மித்ரா.''அய்யோ...
 'தண்ணி'க்காக நடந்த போராட்டம்...தப்பாக புரிந்து கொண்ட உடன் பிறப்புகள்!

மித்ராவின் வீட்டிற்குள் நுழையும்போதே, ஏதோ ஓர் இனிய வாசம், சித்ராவை வரவேற்றது...''மித்து... அம்மா ஏதாவது புதுசா 'டிரை' பண்றாங்களா... வாசம் துாக்குதே,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள்.
''புதுசு இல்லக்கா... ரொம்ப பழசு... 'நம்ம ஊரு சந்தை'யில வாங்குன சிறுதானியத்துல, மரச்செக்கு எண்ணெய் உதவியோட அம்மா, முறுக்கு, சீடை எல்லாம் செய்யுறாங்க,'' என்றாள் மித்ரா.
''அய்யோ... சரியான கூட்டமாமே... நான் தான் 'மிஸ்' பண்ணிட்டேன்!,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யுன்னு அங்க வராத காரே இல்லை... சிறுதானிய சாப்பாடு, நாட்டுக்கோழி முட்டை, பாக்குமட்டை, அந்தக் காலத்து கிலுகிலுப்பைன்னு, அந்த ஏரியாவுக்குள்ள போனப்போ, 'டைம்' மெஷின்ல ஏறி, அம்பது வருஷத்துக்கு முன்னால போய் வந்தது மாதிரி இருந்துச்சுக்கா,'' என்றாள் மித்ரா.''வந்தவுங்க எல்லாம் துணிப்பை, பாத்திரமெல்லாம் கொண்டு வந்திருந்தாங்களாமே!,'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சித்ரா.''எல்லாருமே, பை கொண்டு வந்திருந்தாங்க. எண்ணெய்க்கு பாத்திரம் கொண்டு வராதவுங்களுக்கு 'தகர டின்'ல கொடுத்தாங்க... நிஜமாவே கலக்கல்க்கா... கார்ப்பரேஷன், 'ராக்', இயற்கை அமைப்புகள் எல்லாத்துக்குமே ஒரு 'ராயல் சல்யூட்' அடிக்கணும்!,'' என்றாள் மித்ரா.சுடச்சுட முறுக்கு, சீடையை எடுத்துக் கொண்டு, ஹாலில் போய் உட்கார்ந்து, 'டிவி'யைப் பார்த்துக்கொண்டே, இருவரும் அசை போட ஆரம்பித்தனர். காமெடி சேனலில், 'வெடிகுண்டு முருகேசன்' படக்காட்சியைப் பார்த்ததும், சித்ரா ஆரம்பித்தாள்...''படத்தோட பேரைப் பார்த்ததும், நம்ம சிட்டில 'சீரியஸ் க்ரைம்'களைக் கண்டு பிடிக்கிற 'ஸ்குவாடு'ல இருக்குற ஒரு 'இன்ஸ்' ஞாபகம் வந்துச்சு... குனியமுத்துார்ல 'எல் அண்ட் ஓ'ல சம்பாதிச்சது போதலைன்னு, இந்த போஸ்ட்டிங்கை கேட்டு வாங்கிட்டு வந்திருக்காரு.''''ஒரு வேளை, 'க்ரைம் இன்வெஸ்டிகேஷன்'ல ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்குமோ என்னவோ?,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் ஒண்ணுமில்லை... அவரோட ஒரே இன்ட்ரஸ்ட் துட்டு தான்... 'சிசிபி'க்கு வர்ற பல பெட்டிஷன்ஸ், இவரு கைக்கு தான் வருது. அதை விசாரிக்கிறேன்கிற பேருல, அவரும், அவரே மெனக்கெட்டு 'எல் அண்ட் ஓ'வுல இருந்து கூப்பிட்டு வந்த எஸ்.ஐ.,யும் சேர்ந்து, வசூல் தட்டி எடுக்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''வலுவான கூட்டணி; பலமான அறுவடைன்னு சொல்லு... கார்ப்பரேஷன்லயும் இதே கூட்டணி ராஜ்யம் தான்!,'' என்றாள் மித்ரா.''அது தெரிஞ்சது தான... நீ யாரையோ குறிப்பிட்டுச் சொல்றது மாதிரி இருக்கே?,'' என்ற சித்ராவிடம், ''கரெக்ட்க்கா... டிஎம்கே பீரியட்லயே, 'ஜேஎன்என்யுஆர்எம்' திட்டத்துல, குப்பைத்தொட்டி, டஸ்ட் எடுக்குற வண்டி வாங்குறேன்னு கோடிகள்ல அள்ளித்தட்டுன 'குப்பை' இன்ஜினியர் தான், இப்போ கார்ப்பரேஷன்ல 'பவர்புல்'லா இருக்குறாரு,'' என்றாள் மித்ரா.''அவரு மேல விஜிலென்ஸ் என்கொயரி, டிபார்ட்மென்ட் விசாரணை நடக்குதுன்னாங்க... கொஞ்ச நாள், சென்னைக்கு மாத்துனாங்க. திரும்பவும் எப்பிடி இவ்ளோ 'பவர்புல்'லா வந்தார்னு தெரியலையே!,'' என்றாள் சித்ரா.''ஆளுங்கட்சி 'சப்போர்ட்'தான்... ஆனா, 'இவ்ளோ' பேரு டேமேஜான ஆள்ட்ட, 'ஸ்மார்ட் சிட்டி', ஜேஎன்என்யுஆர்எம்னு எல்லா 'ஸ்கீம்'மையும் கொடுத்து, பதவி உயர்வும் கொடுத்திருக்காங்க...ஜீரணிக்கவே முடியலை!,'' என்றாள் மித்ரா.''அவருக்கு புரமோஷன் கொடுத்ததே 'தப்பு'ன்னு, கேஸ் போட்ட லேடி இன்ஜினியர்கள் ரெண்டு பேரையும், 'டம்மி' போஸ்ட்டிங்ல போட்டு, ரெண்டு பேருக்கும் ஒரு ரூம், சேர் கூட கொடுக்காம, அலைக்கழிக்கிறாங்களாமே,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... குப்பை இன்ஜினியரோட அதிகாரம், உச்சத்துக்குப் போயிருச்சாம்; ஆட்டமும் ஓவரா இருக்காம். அவர் தான் இப்பிடி பண்றாராம்!,'' என்று மித்ரா சொல்லும்போது, 'டிவி'யில் 'என்ன கொடுமை சரவணன்' என்று, 'சந்திரமுகி' பிரபு தலையில் அடித்துக் கொள்ளும் 'சீன்' வந்ததைப் பார்த்து விட்டு, இருவரும் சேர்ந்து சிரித்தனர்.''இதை விட கொடுமை... வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் தான்; நாலே நாலு பஸ் நிக்கிறதுக்கு, ரெண்டே கால் கோடி காலி... இப்ப வர்ற பஸ்களுக்கே இடம் போதாது; ஒரு தொலைநோக்கே இல்லாம கட்டிருக்காங்க. வணிக வளாகம் கட்டுறதா சொன்னாங்க. அதுவும் கட்டல... 'கழுதைக்குப் பேரு முத்துமாலை'ங்கிறது மாதிரி, எதுக்கும் உதவாத பஸ் ஸ்டாண்ட்டுக்கு முனையம்னு வேற பேரு!,'' என்று கொதித்தாள் சித்ரா.''கார்ப்பரேஷன்ல, பதவிக்கு நடக்குற போட்டியில, 'துாத்துக்குடி ரிடர்ன்' இன்ஜினியர், எப்பிடியோ 'சிட்டி இன்ஜினியர்' ஆயிட்டாரு. ஆனா, சி.இ.,ரூம்க்குப் போகல... அங்க போனா, கொஞ்ச நாள்லயே பதவி போயிருதாம். அதனால, 'ஸ்மார்ட் சிட்டி' சி.இ.ஓ.,க்கு தயார் பண்ணுன ரூம்ல இருக்க முடிவு பண்ணிருக்காராம்,'' என்றாள் மித்ரா.''ஏன்... அங்க யாருமே இனிமே வர மாட்டாங்களா?,'' என்று கேட்டாள் சித்ரா.''அதைப் பத்தியும் ஒரு கதை ஓடுது...போன கவுன்சில்ல 'செகண்ட் ஆப்'ல 'டவுன் டாடி'யா இருந்தாரே...மன்னர் மகன்... அவருக்கு அந்த 'போஸ்ட்டிங்' கொடுக்கப்போறதா, ஒரு தகவல், காதுல விழுந்துச்சு... நம்பவே முடியல!,'' என்றாள் மித்ரா.''அதுக்கு வாய்ப்பிருக்கான்னு தெரியலை... ஆனா, இவருக்கும், ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கும் இடையில, 'சிண்டு' முடிச்சு, பிரச்னை பண்ணுன கான்ட்ராக்டரோட சுயரூபம் தெரிஞ்சு, அவரைத் துரத்திட்டாங்கள்ல...அதனால, இப்போ, மன்னர் மகனோட, ஆளுங்கட்சி தரப்புல சமாதானமாயிட்டாங்கன்னு நம்ம 'சோர்ஸ்' ஒருத்தரு சொன்னாரு,'' என்றாள் சித்ரா.''ஏதோ எல்லாரும் சேர்ந்து, நம்ம ஊருக்கு நல்லது செஞ்சா சரி,'' என்றாள் மித்ரா.''ஊருக்கு நல்லதா... நம்ம ஊர்லயா... சான்சே இல்லை... இதுவரைக்கும் 'இல்லீகல் பார்' மட்டுமே நடத்திட்டு இருந்தவுங்க, இப்போ 'இல்லீகல் சரக்கே' தயாரிச்சு, 'பார்'கள்ல 'சப்ளை' பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்... அதுலயும் ஆளுங்கட்சி ஆளு ஒருத்தர் தான், கார்ப்பரேஷன் எல்லைக்கு வெளியில, இதுக்கு 'பேக்டரி'யே நடத்துறார்னு கேள்விப்பட்டேன்... தகவலை உறுதிப்படுத்திட்டு, ஆள் யாருன்னு சொல்றேன்,'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள் சித்ரா.''கவுண்டம்பாளையம், துடியலுார் ஏரியாக்கள்ல தான், 'டூப்ளிகேட்' சரக்கு ரொம்பவே புழங்குதுன்னு உளவுத்துறை நண்பர் ஒருத்தரும் சொன்னாரு. அங்க... துடியலுார் லிமிட்ல 24, பெரியநாயக்கன்பாளையம் லிமிட்ல 17 'இல்லீகல் பார்' நடக்குதாம்... ஒரு 'பார்'க்கு ஏழாயிரம் ரூபா மாசாமாசம் ஸ்டேஷனுக்கு மாமூல் போகுதாம்,'' என்றாள் மித்ரா.''சரக்குன்னதும், நம்மூர்ல இந்த உடன் பிறப்புகள் பண்ணுன கூத்து ஞாபகம் வந்துச்சு... காவிரிக்காக போராடி, கொஞ்ச நேரம் உள்ள இருக்குறதுக்குள்ள 'சரக்கை' உள்ள விடலைன்னு போலீஸ் கூட தகராறு பண்ணுன வீடியோவைப் பார்த்தியா?,'' என்றாள் சித்ரா.''பார்த்தேன்... பார்த்தேன்... ஆவாரம்பாளையத்துல ஒரு தடவை, இதே மாதிரி போராட்டத்துல 'அரெஸ்ட்' பண்ணி, மண்டபத்துல வச்சிருந்தப்போ, சீட்டு விளையாடி ஒரு கேஸ் போட்டாங்க. இப்போ, இப்பிடி... தண்ணிக்காக போராடுங்கன்னு தலைமை சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ,'' என்று சிரித்தாள் மித்ரா.இருவருக்கும், சுக்கு மல்லி காப்பி கொண்டு வந்து கொடுத்தார் அம்மா. 'டிவி'யில் ஏதோ பக்திப்படம் ஓடிக் கொண்டிருந்தது.''மித்து... வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்ல ராஜகோபுரம் கட்டணும்னு, பக்தர்கள் முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, அதுக்கு அனுமதி கொடுக்க, அஞ்சு லட்ச ரூபா லஞ்சம் கேக்குறாங்களாம் அறநிலையத்துறை ஆபீசர்ஸ்!,'' என்றாள் சித்ரா.''அடக்கொடுமையே... எதை எடுத்தாலும் அஞ்சு லட்சமா... பேரூர், தொண்டாமுத்துார், ஆலாந்துறை ஏரியாக்கள்ல நம்பர் லாட்டரி, மணல் கடத்தல்னு செம்ம காசு கொழிக்குதாம்... அதனால, அங்க உளவு பாக்குற வேலைக்குப் போக ஏக போட்டியாம். பேரூருக்கு அஞ்சு லட்சம், ஆலாந்துறைக்கு மூணு லட்சம்னு பேரம் நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.''அதை விடு... கூட்டுறவு தேர்தல்ல ஏக கூத்து நடக்குது... காளம்பாளையத்துல, ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ்.,னு ரெண்டு கோஷ்டிக்குள்ள யாருக்குப் பதவின்னு போட்டியாம்... அன்னுார் தாசபாளையத்துல, அ.தி.மு.க.,-டிடிவி அணி ரெண்டு தரப்பும், ரகசிய கூட்டணி வச்சுக்கிட்டு, பதவியை பங்கு போட்டுக்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''டிடிவி அணியோட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் போன வாரம், 'சேலஞ்சர்' ஓட்டல்ல நடந்துச்சாம்...அதுல வரவேற்றுப் பேசுன 'மாஜி' கவுன்சிலரம்மா, 'அண்ணே... உங்களுக்கு என்ன பதவி, அவருக்கு என்ன பதவி'ன்னு கேட்டுக்கேட்டு, வரவேற்றாங்களாம்,'' என்று சொல்லி சிரித்தாள் மித்ரா. அலைபேசி அழைக்கவே, 'சிக்னல்' கிடைக்காமல், வெளியே சென்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X