விரட்டி விரட்டி வெளுக்கத்தோணுது...| Dinamalar

விரட்டி விரட்டி வெளுக்கத்தோணுது...

Updated : ஏப் 20, 2018 | Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
விரட்டி விரட்டி வெளுக்கத்தோணுது...எண்பத்தாறு வயது பெரியவர் ஒருவர் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வி்ல் பொய்யாய் ஜோசியம் சொல்பவர்களையும் மருத்துவம் பார்ப்பவர்களையும் தனது நகைச்சுவையான பேச்சால் கிழித்து நார் நாராய் தொங்கவிட்டார்.

சென்னை திநகரில் உள்ள சுருக்கெழுத்தாளர்கள் சங்கத்தின் மாடியில் மாத மாதம் திநகர் நகைச்சுவை மன்றத்தின் கூட்டம் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.

மன்றத்தின் நிறுவன தலைவர் லயன் எஸ்.சேகர் தலைமைதாங்க, குணசேகரன் தொகுத்து வழங்க,நேசன் நெப்போலியன் உள்ளீட்ட விருந்தினர்கள் அனைவரும் தங்கள் பங்கிற்கு மேடைக்கு வந்து ஜோக்குகளால் அரங்கத்தை குலுங்க வைத்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக அம்பத்துார் நாராயணன் மேடையேறினார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் முதல் ஆசிரியராக விளங்கியவர் மாநில மத்திய அரசுகளில் நல்லாசிரியர் விருதுகளை பெற்றவர் பணி ஒய்வுக்கு பிறகு உடம்பும் மனசும் ஆரோக்கியமாக இருக்க நகைச்சுவையாக இருப்பதும் பேசுவதுமே மேலானது என்பதை உணர்ந்து பேசிவருபவர்

இப்போது எண்பத்தாறு வயது ஆகிறது இப்போதும் தன்னந்தனியாகவே எல்லா கூட்டங்களுக்கும் போய் கலந்து கொள்பவர்

நான் எங்கே போனாலும் கால் டாக்சிதான் என்றார் அவ்வளவு வசதியானவரா என்று அனைவரும் யோசிப்பதற்குள் என் கால்தான் டாக்சி என்று சொல்லி சிரிக்கவைத்தார்.

அதன்பிறகு அடுத்த சில மணித்துளிகள் அவையில் அவரது நகைச்சுவை ராஜாங்கம்தான்...மனிதர் எதற்கும் யாருக்கும் பயப்படுவது போல இல்லை அனைவரையுமே புரட்டி எடுத்துவிட்டார்.

இனி அவர் பேசுவதைக் கேளுங்கள்..

நான் இன்றைக்கு பேப்பரில் இன்றைய பலன் பார்த்தேன்

மேஷ ராசிக்காரர்களுக்கு காரக்குழம்பு ஆகாது என்று எழுதியிருதது அடேய் அடிக்கிற வெயிலுக்கு எந்த ராசிக்காரனுக்குமே காரக்குழம்பு ஆகாதுதான்டா

இன்று கதிர் அறுப்புக்கு உகந்த நாள் என்று ஒரு இடத்தில் போட்டு இருந்தது பங்குனி மாதமே அறுவடை முடிந்து சித்திரையில் வயல் காய்ஞ்சு தீய்ஞ்சுட்டு இருக்கு இப்ப எங்க கதிரை அறுக்கிறது ஏய்யா இ்ல்லாததை சொல்லி கழுத்தறுக்கீறீங்க

இன்று பண வரவு என்றிருந்தது அதற்கேற்ப எண்பது வயதை தாண்டிய முதியோர்களுக்கு மூவாயிரம் ரூபாய் இலவசம் என்று ஒரு விளம்பரம் வேறு காணப்பட்டது ஆட்டோவிற்கு இருநுாறு ரூபாய் கொடுத்து அடித்துபிடித்து அந்த இடத்திற்கு போனேன் நீயெல்லாம் இன்னும் உயிரோடவ இருக்கே என்பது போல பார்த்து என் பர்த் சர்ட்டிபிகேட் ஆதார் கார்டு ஒட்டர் ஐடி என்று எல்லாவற்றையும் கேட்டு சரிபார்த்தான் பிறகு சரி பணத்தை கொடுக்கிறோம் ஆனால் உங்ககிட்ட கொடுக்கமுடியாது உங்க பெற்றோர்ட்டதான் கொடுக்கமுடியும் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?என்று ஒரு குண்டைப் போட்டான் அப்பதான் புரிந்தது இவன் ஒரு ப்ராடு என்று, ஆட்டோக்காரருக்குதான் அன்று பணவரவு எனக்கு செலவுதான்..

காலையில் எழுந்துட்ட காபி இல்லைன்னா 'பால்தான்'ங்கிற நிலமை வாழுற என்னைப் போய் சர்க்கரை இருக்கு அதைச்சாப்பிடாதீங்க இதைச் சாப்பிடாதீங்க என்று மிரட்டி மிரட்டியே நோயாளியாக்கிட்டாங்க இப்ப எல்லாத்தையும் விட்டுவிட்டு பூமிக்கு அடியில் விளைந்த சீனிக்கிழங்கைதான் நிறைய சாப்பிடுறேன், சுகர் லெவல் நார்மலா இருக்குன்னு நானே சொல்லிக்கிறேன் ஏன்னா எந்த டாக்டரும் சொல்லமாட்டாங்க காரணம் கையைப்பிடிச்சு பார்க்கிற டாக்டருங்க இப்ப இல்ல பையைப்பார்க்கிற டாக்டருங்கதான் இருக்காங்க

ப்ரிட்ஜ்ல வச்சதா சாப்பிட்டு சாப்பிட்டு கடைசியில் நம்மளையும் இப்ப ப்ரிட்ஜ்ல வச்சுதான் வழியனுப்புகின்றனர்

இப்படி பேசி பலரையும் சிரிக்க வைத்த நாராயணன் சந்தேகமில்லாமல் ஒரு நடமாடும் நகைச்சுவை பொக்கிஷம்தானே...

தொடர்புக்கு தலைவர் சேகர் எண்:9790775571.

-எல்.முருகராஜ்

-murugaraj@dinamalar.in
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X