நெருக்கடிகளை எதிர்கொள்ளுங்கள்| Dinamalar

நெருக்கடிகளை எதிர்கொள்ளுங்கள்

Added : ஏப் 17, 2018

நெருக்கடி என்பது தினம் தினம் வருவதல்ல. ஆனால் எப்போதாவது வந்துவிடும். அதை சமாளிக்க நாம் ஆயத்தமாக வேண்டும். இதுதான் நெருக்கடி நிர்வாகம் -(Crisis Management) என்பது. பெரும்பாலான கட்டடங்களில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதை தினசரி பயன்படுத்துவதில்லை. விமானம் புறப்படுவதற்கு முன், ஆபத்து வந்துவிட்டால் எப்படி செயல்படுவது என்று விளக்கிச் சொல்வார்கள். ஆனால் நாம் அதை சட்டை செய்வதில்லை. பொதுவான இடங்களில் முதல் உதவிப் பெட்டி இருக்கும். நாம் கவனம் செலுத்துவதில்லை. இவைகளை எல்லாம் சாதாரணமாக பார்த்தால் வீண் என தோன்றும். ஆனால் அவசர காலங்களில் அவை முக்கியத்துவம் பெறும்.ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் அபாய சங்கிலி இருக்கிறது. ஆனால் அதை எத்தனை பேர் இழுத்திருக்கிறார்கள்? அவசியம் ஏற்படும் போது அது பயன்படுகிறதல்லவா? பொதுவாக நெருக்கடிகளை நாம் விரும்புவதில்லை. வந்துவிட்டால் எதிர்கொண்டு அதை வெல்ல நம்மிடம் திட்டம் வேண்டும்.
மாற்றி யோசித்தால் : பசிபிக் பெருங்கடலில் புதியதாக ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் ஆதிவாசி மக்கள் வாழ்வதை அறிந்த செருப்பு தயாரிக்கும் நிறுவனம் தனது பிரதிநிதியை அனுப்பி வைத்தது. செருப்புகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது. ஆனால் அங்கு சென்ற பிரதிநிதி தனது முதலாளிக்கு போன் செய்து, 'எனக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு யாரும் செருப்பு அணிவதில்லை. பிறகு எப்படி விற்பனை செய்ய முடியும்?' என்று பேசினார்.'அங்கு யாரும் செருப்பு அணிவதில்லை என்பது நமக்கு நெருக்கடி அல்ல, வாய்ப்பு. செருப்பு அணிவதால் ஏற்படும் நன்மைகளை பிரசாரம் செய். பிறகு எளிதாக செருப்புகளை விற்றுவிடலாம்'. முதலாளி சொன்ன ஆலோசனை பலித்தது. செருப்புகள் அமோகமாக விற்பனை ஆயின. நமது சொந்த வாழ்க்கையிலும், நெருக்கடிகளை கண்டு பயப்படுகிறோம். பலாப்பழத்தின் மேலுள்ள முட்களை பார்த்து பயப்படுகிறோம். ஆனால் பக்குவமாக அறுக்கும் போது சுவையான சுளைகள் கிடைக்கின்றன அல்லவா?எனவே 'நெருக்கடி' என்கிற 'நெகட்டிவ்' வார்த்தையை பார்க்கும்போதெல்லாம் 'வாய்ப்பு' என்ற 'பாசிட்டிவ்' வார்த்தை நினைவுக்கு வரவேண்டும். நமது மூளையில், நெருக்கடி என்பதற்குப் பதிலாக வாய்ப்பு என்று மாற்றிக் கொள்ளும் பயிற்சி வேண்டும்.
சிறிய உதாரணம் : பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டு மாணவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். ஒருவன் மிகவும் கவலைப்படுகிறான். அப்பா, அம்மா திட்டுவார்களே என்று குழம்புகிறான். இந்த உணர்வுகள் அவனை எங்கே கொண்டு போய்விடும் என்று சொல்ல முடியாது. இன்னொரு மாணவன் என்ன செய்தான் தெரியுமா? தனக்கு படிப்பு வரவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, கார் மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்துவிட்டான். பிறகு அவன் அந்த துறையில் முன்னேறினான். வெற்றி பெற்றான். கதவுகள் மூடுவதற்கு மட்டுமல்ல, திறப்பதற்கும்தான்.நெருக்கடி நிலை என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம். எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை பொறுத்து நிலைமை மாறுபடுகிறது. பண நெருக்கடி, நேர நெருக்கடி, உடல்நிலை நெருக்கடி, கல்வி, வேலை பற்றிய நெருக்கடி, நட்புகளையோ, உறவுகளையோ இழக்க நேரிடும் போது ஏற்படும் நெருக்கடி, முடிக்கவேண்டிய வேலைகளை சரியான கால எல்லைக்குள் முடிக்க முடியாததால் ஏற்படுகின்ற நெருக்கடி. இப்படியாக நெருக்கடியின் எல்லை நீண்டு கொண்டே போகும்.இதைப் போலவே நிறுவனங்களில், அமைப்புகளில் ஏற்படும் நெருக்கடிகள் பட்டியலும் நீளமானது. இவை தவிர பொதுவான நெருக்கடிகளும் உண்டு. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகள், உள்நாட்டு கலவரம், வெளிநாட்டு படையெடுப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுதல், மழையின்மை போன்ற நெருக்கடிகளும் உண்டு. இவைகளை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுவதே வாழ்க்கை. இதற்காக நான்கு விஷயங்களை நாம் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
1. தடுப்பு முறை 2. தயாரிப்பு3. பதிலடி 4. மீட்டெடுத்தல்
தடுப்பு முறை : ஒரு குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி ஏற்பாடுகள் நமக்கு தெரியும். பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதும், போலியோ ஒழிக்கப்படும் கட்டத்தில் இருப்பதற்கும் இந்த முறைதான் காரணம். மகாமகம், கும்பமேளா, சித்திரை திருவிழா போன்ற சந்தர்ப்பங்களிலும், முக்கிய பிரமுகர்கள் வருகையின்போதும் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த வகையை சேர்ந்ததுதான்.நெருக்கடிக்கு தயாராவது என்பது அலுவலகங்களிலும், பெரிய நிறுவனங்களிலும் தீயணைப்பு கருவிகள் இருக்கும். இவைகளை எப்படி இயக்குவது என்பதும், எப்படி பாதுகாப்பாக தப்புவது என்பதும் முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்வதுதான்.கட்டடங்களில் தீ விபத்து அலாரம் பொருத்தப்பட்டிருந்தாலும்அது ஒலிக்கிற போது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பது முக்கியம். அதற்காகத்தான் முன்னெச்சரிக்கை பயிற்சியை நடத்துவார்கள். அது நம்மை வழிநடத்தும். இல்லாவிட்டால் ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிடும்.புறநிலையில் இப்படிப்பட்ட முன் தயாரிப்பு இருப்பதுபோலத்தான், தனி மனிதனுக்கான நெருக்கடிகள் வரும்போது அவர்களுக்கான ஆளுமை பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி ஆகியவை நடத்தப்படுகின்றன.
நெருக்கடிக்கு பதிலடி : நெருக்கடி ஏற்படும்போது கொஞ்சம் அவகாசம் கிடைத்தாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் ஆற்றலை நாம் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு வேடிக்கை சம்பவத்தை பார்ப்போம். ஒரு பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. அதில் பாஞ்சாலி சபதம் நாடகம் போட ஏற்பாடாயிற்று. பையன்கள் மட்டுமே படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் என்பதால் பாஞ்சாலியான நடிக்க ஒரு அழகான பையனை தேர்வு செய்தார்கள். துச்சாதனாக நடிக்க ஒரு முரட்டுப்பையனை தயார் செய்தார்கள்.பல நாட்கள் ஒத்திகை நடந்தது. ஆனால் அந்த இரண்டு பையன்களும் சண்டை போட்டுக் கொண்டு சில மாதங்களாக பேசாமலிருந்தார்கள். ஆசிரியர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் குறித்த நாளன்று நாடகத்தை மேடையேற்றிவிட்டார்கள். பாஞ்சாலியாக நடித்த பையனின் உடம்பில் சுற்றப்பட்டிருக்கும் புடவையை மெதுவாக இழுக்க வேண்டும் என்று துச்சாதனனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் பழி வாங்கும் உணர்ச்சியில் பாஞ்சாலியின் புடவையை சடாரென்று இழுத்து விட்டான். பாஞ்சாலி இப்போது அரை டவுசரோடு நின்றான். பெரிய நெருக்கடி ஏற்பட்டதை எண்ணி ஆசிரியர்கள் பதறினர்.ஆனால் பாஞ்சாலியாக நடித்த பையன் நெருக்கடிக்கு பதிலடி தந்தான். 'கண்ணா... கிருஷ்ணா... புடவை தந்து என் மானத்தைக் காப்பாற்றுவாய் என நினைத்தேன். ஆனால் நீயோ அரை டவுசர் போட்ட பையனாகவே மாற்றி மானத்தை காப்பாற்றிவிட்டாய்' என்றதும் அரங்கம் அதிர்ந்தது.
மீட்டெடுத்தல் : ஒரு பிரபலமான கவிதை உண்டு. பத்துமுறை விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது: நீ ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா? அவருடைய பெயர் வான்ஸ்ஆம்ஸ்டிராங். சைக்கிள் வீரர் ஒருவர் பல போட்டிகளில் வென்று சாதனை படைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு புற்று நோய் என்றும், நாட்களை எண்ணும்படி டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அவர் அஞ்சவில்லை. அதே மன உறுதியோடு சாகசங்களை புரிந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்! புற்று நோயின் உக்கிரம் குறைந்தது. சிகிச்சையும் கைகொடுத்தது. அவர் புற்றுநோயை வென்றுவிட்டார்.நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சிக்கல்கள் நம்மைத் தேடி வருகின்றன அல்லது நாம் சிக்கல்களை நாடிச் செல்கின்றோம். சிக்கல்கள் தீண்டும் போது,பொதுவாக நான்கு விதமாக நடந்து கொள்ள முடியும்.1. அடி, உதை, போராட்டம் : வீட்டில் தொடங்கி உலகம் முழுக்க சிக்கலைத் தீர்க்க வழிமுறை வன்முறைதான் என்ற நம்பிக்கை இருக்கிறது. நெருப்பை, நெருப்பால் அணைக்க முடியாது.2. ஓடிப் போதல் : சிக்கல்களிலிருந்து சில காலம் ஓடி ஒளியலாம். பெரிய சிக்கல்களாக வரும் போது திக்கித் திணற வேண்டி இருக்கிறது. சின்னச் சிக்கல்களையும் சமாளித்துப் பழகி பெரிய சிக்கலை எதிர்கொள்ளலாம்.3. உறைந்து போதல் : ஒரு சிலர் சிக்கல்கள் குறுக்கிடும் போது என்ன செய்வது என்று தெரியாமலேயே அப்படியே உறைந்து போய் விடுகிறார்கள். அதாவது, அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை.
4. எதிர் கொள்ளுதல் : சிக்கல்களைத் துணிந்து நின்று எதிர்கொண்டால், சிக்கல்கள் சிதைந்து போகும்-. இந்த ஆற்றலே நமக்குத் தேவைப்படுகிறது.'இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துார்வது அஃதொப்ப தில்'-நெருக்கடி என்ற பூட்டைத்திறக்க, வள்ளுவர் தரும் மந்திரச் சாவி இது.
--முனைவர்இளசை சுந்தரம்எழுத்தாளர், மதுரை98430 62817We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X