மெல்ல மறையும் கோடை விளையாட்டுகள் : மீண்டும் துளிர்த்தால் மழலைகள் மலரும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெல்ல மறையும் கோடை விளையாட்டுகள் : மீண்டும் துளிர்த்தால் மழலைகள் மலரும்

Added : ஏப் 17, 2018

கோடை விடுமுறையில், ஆசை ஆசையாய் குழந்தைகள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்று, அறிவியல் வளர்ச்சியாலும், தொழில்நுட்ப கருவிகளின் வருகையாலும் மறைந்தும் மருவியும் வருகின்றன.முன்பெல்லாம், கோடை வந்தால், குழந்தைகள் ஓடியும், கூடியும் விளையாடி, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியாக்கி பொழுது கழித்ததுண்டு.அப்போதெல்லாம், கோலி, பம்பரம், கில்லி, காற்றாடி விடுதல், சோடா மூடி சேகரித்தல், கபடி, ஆவியம், கண்ணாமூச்சி, ஐஸ் பாய்ஸ், கர்ன்ட் ஷாக் என, விளையாடி மகிழ்வர். வீட்டுக்கு வீடு, பாண்டி, பல்லாங்குழி, கயிறு தாண்டுதல், பரமபதம், கல்லாங்காய், ஏழு கல் என, விளையாடி மயங்கி கிடந்தனர்.கிராமங்களில் இருந்து சென்னைக்கு மடைமாறிய விளையாட்டுகள், இன்று தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளைப் போல் தான் உள்ளன. அவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைப் போல, குடிசைவாசிகளும், ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் உள்ளோரும் உள்ளனர்.மறைந்து வரும் மகத்தான விளையாட்டுகள்...அஞ்சு, பத்து அடித்து, ஜான் போட்டால், கோலி, அவுஸ் எனவும், பம்பரத்தில் பத்தாங்கல்லு, பாறாங்கல்லு, தல்லேறி என, பலவகை உண்டு.கைப்பிடி தண்டால் அடித்து, கில்லியை வானில் பறக்க விடுவதில், தங்களது பலத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுவோர் பலர்.எதிராளியை வீழ்த்தி உயரே பறக்கும் காற்றாடி; பல்லாங்குழி முத்தெடுக்கும் தந்திரத்தில் லாவகமாக முன் கணக்கிடும் முறையை பார்த்தால், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் இல்லத்தரசிகளும் ஒரு கணம் மலைத்து போவர்.பாண்டி விளையாட்டில், நெற்றியில், 'பில்லை'யை வைத்துக் கொண்டு, கோடுகளில் கால்கள் படாமல், இடரிலும் இலக்கை அடைதல்.வாழ்க்கையில் ஏற்றதாழ்வை வெட்ட வெளிச்சமிடும் பரமபதம்; உயர வளர ஸ்கிப்பிங் கயிறு; சேமிப்பின் மகத்துவம் உணர்த்தும், சோடா மூடி சேகரித்தல் போன்று, மருவி வரும் விளையாட்டுகளின் பட்டியல் நீள்கிறது.தடைகளை தகர்த்தெறியும், ஆவியம் மணி ஆவியம்; குழு ஒற்றுமையை பிரதிபலிக்கும் கபடி; கால்களின் வலிமையை நமக்கே உணர்த்தும், ஓடி பிடித்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகள் நம்மிடையே மறைந்து போனதால் தான், நம் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தியின்றி தள்ளாடுகின்றன.போட்டியாளர் இருவர், மற்ற போட்டியாளர்களை பிடித்து சிறை வைக்க, அவர்களின் கண்களில் மண்ணை துாவி, சிறைப்பட்டவர்களை தொடுதல் மூலம் விடுவிக்கும், கரன்ட் ஷாக், போன்ற, உதவும் மனப்பான்மையை பிரதிபலிக்கும் விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன.இதுபோன்ற விளையாட்டுகளால், மன மகிழ்ச்சி ஏற்படுவதாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாடும் சிறுவர்கள் நமக்கு அனுபவம் சொல்கின்றனர்.இவ்வளவு அருமையான விளையாட்டுகளை விடுத்து, நம் பாரம்பரியம் தெரியாத, மேலைநாட்டு, 'கார்ப்பரேட் கேம் டெவலெப்பர்ஸ்' உருவாக்கும், கேம்ஸ்களை, குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதால், சோளக்கொல்லை பொம்மையாகி வருகின்றனர்.இதை பெற்றோர் உணர்ந்தால், மீண்டும் மழலைகள் துளிர்க்கும். அதை, காலம் விரைவில் உணர்த்தும்.

- -நமது நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X