பற்கள் பத்தும் செய்யும்!| Dinamalar

பற்கள் பத்தும் செய்யும்!

Added : ஏப் 19, 2018

ஒருவரை பார்த்த முதல் நொடியில் நாம் அவரிடம் கவனிப்பது என்ன என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 47 சதவீதம் பேர் சொன்ன பதில், அவர்களின் சிரிப்பு. ஆக, முகத்தில் முக்கியமாக இருப்பது பற்களும், சிரிப்பும்தான்.
பற்கள் என்றதும் நினைவிற்கு வருவது அழகான சிரிப்பு. பால் போன்ற வெண்மையான வரிசையான பற்கள். இப்படி அழகு சம்பந்தப்பட்ட பற்களை நாம் மனதில் வைத்துள்ளோம். ஆனால் பற்கள் அழகுக்கு உதவுவது அவற்றின் வேலையில் ஒரு சிறிய பகுதி. அழகை தாண்டி அவை செய்யும் வேலைகள் பல உண்டு.
பேச்சில் பெரும் பங்கு : சொற்களை சரியாக உச்சரிக்க மற்றும் சீராக பேசுவதற்கு பற்கள் மிகவும் முக்கியம். சொல் என்பது பல், நாக்கு, உதடு இவை மூன்றும் சேர்ந்து உருவாக்கும் ஓசை. வாயின் அமைப்பு, நாக்கின் நீளம், பற்களின் அளவு மற்றும் அமைப்பு இவை அனைத்தும் சொற்களை உருவாக்குவதில் பங்களிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொருவரின் பேச்சும், உச்சரிப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்று சரியாக இல்லாவிட்டால், பேசுவதில் தடை ஏற்படும். தெத்து பற்கள், கோணல் பற்கள், பற்கள் ஆடும்பொழுது அல்லது பற்கள் விழுந்து காலியாக இருந்தால் என அனைத்து சூழ்நிலையிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும். பற்களில் பலம் இல்லாமல் ஆடும்பொழுது நம்மால் வார்த்தைகளை சரிவர உச்சரிக்க முடியாது. சரியான இடத்தில் சரியான வரிசையில் பற்கள் இருப்பதும், பற்கள் இல்லாத இடத்தில் பற்கள் கட்டுவதும் ஒருவரின் பேச்சிற்கு அவசியமானது.உணவை சுவைத்து ருசித்து சாப்பிட ஆசை இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. ருசியை நம்மால் எப்படி உணர முடிகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். உணவை வாயில் போட்டதும் கரைய தொடங்கும். பின்னர் உணவை அரைப்பதற்கு பற்களும், உமிழ்நீரும் சேர்ந்து உழைக்கும். உணவு அரைந்து அதில் நம் சுவை அரும்புகளில் உள்ள திரவங்கள் கலக்கும்பொழுதுதான் உணவின் சுவை மூளைக்கு சென்றடையும். உணவின் சுவையை நாம் உணர முடியும். சரியான பற்கள் இல்லையென்றால், உணவை முழுதாக மசிக்க முடியாது. இதனால் எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் அதன் முழு திருப்தி நமக்கு வராது. சாப்பிடுவதற்கு அடுத்த கட்டம் அதனை விழுங்குதல், அதாவது வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு அனுப்புதல்தான் உணவை விழுங்குவது என்று பொருள். உண்ணுவதும், விழுங்குவதும் அடுத்தடுத்து சரியான இடைவெளியில் நடக்க வேண்டும். உணவை சரியான அளவு மசித்தபின் பற்கள் இறுக்கமாக மூடிக்கொண்டு நாக்கு நம் அன்னத்தின் மேல் அழுத்தினால்தான் உணவு வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு நகரும். உணவு மட்டுமல்லாது தண்ணீர் போன்ற திரவங்கள், மாத்திரை போன்ற கடினமான பொருட்கள் என பலவற்றை சரியான நேரத்தில் சரியான முறையில் விழுங்குவதற்கு பற்கள் உற்ற துணையாக இருக்கின்றன. வாயின் சுத்தத்தில் பற்களின் பங்கு என்ன என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும். எல்லா மனிதரும் காலை கண்விழித்த உடன் செய்ய வேண்டிய முதல் வேலை பல் துலக்குவது. வேப்பங்குச்சி, சாம்பல், செங்கல், பொடி, டூத்பேஸ்ட் , பிரஷ் என வடிவம் மாறினாலும் பழக்கம் ஒன்றுதான். நம் முன்னோர் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள். சுத்தம் செய்யாத பற்களின் மேல் ஒரு படலம் உருவாகும். அதில்தான் கிருமிகள் தங்க ஆரம்பிக்கும். இவற்றை சரியாக அகற்றாவிட்டால் பல் சொத்தை, ஈறு நோய் போன்றவற்றை உருவாக்கும். எனவே பற்களை சுத்தமாக வைப்பதன் மூலம் வாயின் சுத்தமும் பாதுகாக்கப்படுகிறது.
முகத்தின் சமவிகிதம் : மனித முகம் மூன்று சம பங்காக பிரிக்கப்படுகிறது. தலை உச்சியில் இருந்து புருவம் வரை முதல் பாகம். புருவத்தில் இருந்து மூக்கின் நுனி வரை இரண்டாம் பாகம். மூக்கின் நுனி முதல் வாய் நாடி வரை மூன்றாம் பாகம். இந்த மூன்று பாகங்களும் சரியான சமவிகிதத்தில் இருப்பதுதான் இயற்கை. இதில் ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் இயற்கை விகிதங்களை உட்பட்டுதான் இருக்கும். பற்கள் இல்லாமலோ அல்லது பற்கள் சரியான வரிசையில் இல்லாவிட்டாலோ, முகத்தின் மூன்றாவது பாகம் மற்ற இரண்டு பாகங்களோடு ஒத்துப்போகாது. இதை சரிசெய்யாவிட்டால் ஒருவரின் முகத்தோற்றமே மாறிவிடும். சரியான பல் வரிசை முகத்தின் சமவிகிதத்தை தக்க வைக்க முடியும். எலும்பின் பலம் பற்களின் பலத்தை பொறுத்தே தாடையில் எலும்பின் அளவு இருக்கும். எப்படி மரத்தின் வேர்கள் மண்ணை அரிக்காமல் பிடித்துக்கொள்ளுமோ, அதேபோல்தான் பற்களும் அதைச்சுற்றி உள்ள எலும்பை தேயாமல் பிடித்து வைத்துக்கொள்ளும். பல் இல்லாத வாயில் வேர் இல்லாத மண் போல சிறிதுசிறிதாக எலும்பின் அளவு குறைந்துவிடும். இதனால் தாடையே வலுவிழந்துவிடும். இதனால்தான் விழுந்த பற்களை உடனடியாக கட்டுவது அவசியம். சரியான இடத்தில் பற்கள் நிலையாக இருப்பது தாடை எலும்பின் பலம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.
உடல் ஆரோக்கியம் : வாயே நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி. ஒருவரின் உடல் உபாதைகளில் முக்கியமான பலவற்றை அவரின் பற்களையும், வாயையும் பார்த்தே கணித்துவிடலாம் என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. வாய் துர்நாற்றம் அனைவராலும் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் ஒன்றாகும். ஆனால் இவை வாயில் உள்ள பிரச்னைகளால் வருவதைவிட உடலில் உள்ள உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறுகள் அதிகமாக உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். உடலில் வைட்டமின் சத்து குறையும்போது ஈறு நோய்களும், வாய் எரிச்சலும் ஏற்படும். ஆக, நம் உடலில் ஏற்படும் பல வகை நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும், உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
குறட்டைக்கு குட்பை : உறங்கும்போது சுவாசக்குழாய்களில் ஏற்படும் தடைகளினால் வரும் சத்தமே குறட்டை. பற்கள் நேரடியாக குறட்டைக்கு காரணமாக முடியாது. ஆனால், சில பிரச்னைகளால் குறட்டை தொல்லை அதிகரிக்கும். அதாவது ஞானபற்கள் முளைக்கும் முன்னர் தாடையில் வீக்கம் ஏற்பட்டால், அதனால் குறட்டை அதிகம் ஆகலாம். கீழ்த்தாடை தலையுடன் சேரும் இடத்தில் தேய்மானம் ஏற்பட்டாலோ, துாங்கும்பொழுது நாக்கு சுவாசக்குழாய்க்கு தடையாக இருந்தாலோ குறட்டை வரலாம். இவ்வாறு வரும் குறட்டையை கட்டுப்படுத்த பற்கள் மற்றும் வாயினால் முடியும். இதற்கு அவரவர் அளவிற்கேற்ப வாயில் ஒரு சாதனம் பொருத்த வேண்டும். அது சுவாசக்குழாய்க்கு எந்த தடையுமின்றி காற்றுப்போக வழிவகுக்கும். இதை குறிப்பிட்ட காலம் உபயோகப்படுத்தினால் குறட்டை தொல்லையில் இருந்து விடுபடலாம். பற்களின் மூலம் கழுத்து வலி ஏற்பட 3 காரணங்கள் உண்டு. ஒன்று ஞானப்பற்கள் எனப்படும் கடைசி கடவாய் பற்கள். சிலருக்கு தாடை எலும்புக்குள் புதைந்து இருக்கும். இதைச்சுற்றி கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால் கழுத்து வலி போன்று தெரியும். இரண்டாவது கீழ் பற்களில் வெகு நாட்களாக கவனிக்கப்படாத சொத்தை மூலம் சீழ் உண்டாகி, அது கழுத்து வரை பரவும் பொழுது கழுத்தில் வலி தெரியும். மூன்றாவதாக பற்களில் சொத்தையே இல்லாமல் கூட பற்களை அதிகம் கடிப்பவர்களுக்கு தாடை எலும்பில் சாதாரண அளவைவிட அதிகமாக அழுத்தம் உண்டாகும். தாடை சார்ந்த தசைகள் கழுத்திலும் உள்ளன. இதனால் கழுத்தில் உள்ள தசைகளிலும் வலி வரும். பற்களை சரிசெய்தால் அதனால் ஏற்படும் கழுத்து வலியும், தலை வலியும் சரியாகிவிடும்.
தன்னம்பிக்கை தரும் பற்கள் : கோணலாக அல்லது தெத்து பற்கள் இருப்பவர்கள், முன் பற்களின் நடுவே இடைவெளி இருப்பவர்கள்,பற்கள் இல்லாமல் இருப்பவர்கள், அது தெரியாமல் இருக்க பற்கள் தெரியாமல் பேசவும் சிரிக்கவும் செய்வார்கள். இதுதொடர்ந்தால் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். நம்மையும் அறியாமல் மற்றவர்களுடன் பேசுவதை குறைக்க நேரிடும். நன்றாக பேசுபவர்கள் திடீரென வெளிஇடங்களுக்கு வர தயங்குவார்கள்; பிறரை சந்திப்பதை தவிர்ப்பார்கள். இவை எல்லாம் தேவை இல்லாத பயம். எந்த நிலையிலும் பற்களை சரிசெய்து நிலையான பற்களை பொருத்தலாம். இதன்மூலம் இழந்த சிரிப்பையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். பற்களின் பலத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து, பற்களின் பாதுகாப்பில் தேவையான நேரத்தில் தேவையான அக்கறை செலுத்தினால் உடலும் மனதும் வளம் பெறும்.
-டாக்டர் ஜெ. கண்ணபெருமான்,

மதுரை. 94441 54551

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X