நான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்! ஏப். 23 உலக புத்தக தினம்| Dinamalar

நான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்! ஏப். 23 உலக புத்தக தினம்

Added : ஏப் 20, 2018
Advertisement
 நான் தான் உங்கள் புத்தகம் பேசுகிறேன்! ஏப். 23 உலக புத்தக தினம்

நண்பர்களே, வணக்கம். நான்

உங்களின் உற்றதோழன். ஒவ்வொருவர் உள்ளத்திலும், இல்லத்திலும் குடியிருக்கும் உயிரோவியம். எனது பெயர் புத்தகம். உங்களின் அன்றாட பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆண்ட்ராய்டு போனை அணைத்து வைத்துவிட்டு பத்து மணித்துளிகள் நான் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள். மனிதர்களே நீங்கள் இந்த மண்ணில் என்றைக்கு பிறந்துவிட்டீர்களோ, அன்றே இறப்பு என்பது உறுதியாகிவிடும். ஆனால் இந்த மண்ணில் இறப்பு என்ற ஒன்றே இல்லாத படைப்பு நான் மட்டும் தான். தலைமுறைகள் கடந்தும் தலைமை பொறுப்பு ஏற்க உங்களை தகுதிப்படுத்தும் ஆற்றல் எனக்கு உண்டு. நான் காலத்தால் அழியாத காவியம். ஜாதி, சமயம் எனக்கு தெரியாது. சமத்துவத்தை நான் விரும்புவேன். கடல், நாடு, கண்டம் கடந்தும் பாஸ்போர்ட், விசா எதுவும் இன்றி பயணிக்கும் உரிமை எனக்கு உண்டு. அனைத்து மொழிகளிலும் என் அவதாரம் இருக்கும். நீங்கள் வாழ வழிகாட்டுவேன். வசந்தத்தை சுட்டிக்காட்டுவேன்; வையகத்தை காத்து நிற்பேன்.
என்னுள் உள்ளது

நண்பர்களே நான் ஓலைச்சுவடியில் ஆரம்பித்து காகிதத்தால் கட்டமைக்கப்பட்டு இன்று இணையத்திலும் இணைந்து உள்ளேன். என்னுள் இல்லாதது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். நீங்கள் எதுகேட்டாலும் அது என்னிடத்தில் இருக்கும். குழந்தைகள் தொடங்கி வயதானோர் வரை வகை வகையான செய்திகளை தரம் பிரித்து வைத்திருக்கிறேன். அதனை உங்கள் உள்ளத்தில் இருத்திக்கொண்டால் உங்களை உச்சத்திற்கு எடுத்து செல்வேன். நாடாளும் சட்டமும் என்னிடத்தில் உண்டு. அரசாளும் அரசியலும் என் அரங்கேற்றத்தில் உண்டு. வாழ்ந்தவர்களின் வரலாற்றை பதிவிட்டு இருக்கிறேன். அனுபவத்தை அள்ளித்தெளித்து இருக்கிறேன். கற்பனைகளை விதைத்து இருக்கிறேன். நட்பை நாடறிய செய்திருக்கிறேன். கண்ணியத்தை கட்டிக்காத்து இருக்கிறேன். உடலுக்குள் உள்ளத்திற்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறேன். மருத்துவத்தை சொல்லிக்கொடுத்து இருக்கிறேன். அறம், பொருள், இன்பம், வீடு போன்றவற்றை சமூகத்திற்கு அடையாளம் காட்டி இருக்கிறேன். பக்தியை பரப்பி இருக்கிறேன். ஒழுக்கத்தை உரக்க சொல்லி இருக்கிறேன். நல்லவை, கெட்டவைகளை பிரித்துகொடுத்து இருக்கிறேன். ஒழுக்கங்கெட்ட வாழ்வியலை எச்சரித்தும் சென்று இருக்கிறேன். இந்த உலகிற்கு உங்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். வாழ்க்கையை வசந்தமாக்கி இருக்கிறேன். சமூகத்தை துாக்கிப்பிடித்து இருக்கிறேன். விவசாயத்தை கற்றுக்கொடுத்து இருக்கிறேன். சமையலையும் சொல்லிக்கொடுத்து இருக்கிறேன். சாகாவரம் பெற்ற பாடல்களையும் தனதாக்கி சரித்திரத்தில் இடம் பிடித்து இருக்கிறேன்.

வெற்றிக்கு வழி

வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் இப்படிப்பட்ட நிகழ்வுகளை சுற்றியே மனித சமூகத்தின் வாழ்வியல் நகர்ந்துகொண்டு இருக்கிறது. உங்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் என்னிடத்தில் மட்டுமே தீர்வு உண்டு. வெற்றி பெற்றவன் என்னை வாசித்து பழகி இருப்பான், தோல்வி அடைந்தவன் என்னை வாசிக்க மறந்து இருப்பான், வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவன் என்னை தேடிக்கொண்டிருப்பான். நான் ஒரு கோயில் எனது கருவறை பக்கங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். என்னை தொட்டு வணங்கி செல்பவர்கள் யாரும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை என்பது வசந்தம் மட்டும் இருக்கும் பூந்தோட்டமல்ல, அங்கே கல்லும் இருக்கும், முள்ளும் இருக்கும். ஏன் என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். ஏளனம் அதிகம் இருக்கும். வறுமையும் ஏழ்மையும் உனக்கு வழிவிடாமல் பிடித்து வைத்திருக்கும். இதிலிருந்து நீ எப்படி வெளியேறுகிறாய் என்பதில் தான் உன் வெற்றி இருக்கிறது. அதற்கான வாசல் என்னிடம் மட்டும் தான் இருக்கிறது. வந்துபோக உனக்கு மனமிருந்தால் ஒரு முறை என் கருவறை வாசலை உற்றுப்பார்; உனக்குள் ஒளிவட்டம் தோன்றுவதை நீ உணர்வாய்.உன்னை உலகிற்கு எடுத்துக்காட்டி உச்சத்தை தொடவைப்பேன். தோழனாக இருந்து தோள் கொடுத்து உன்னை தாங்கி பிடித்து தலை நிமிர செய்வேன். ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்வேன். தன்னம்பிக்கையை உன் அடிமனதில் தவழவிட்டு தரணி போற்றி வாழ வழியமைத்து கொடுப்பேன். வெற்றிக்கான சூட்சுமத்தை உன் காதோரம் ரீங்காரம் இட்டு சொல்வேன். என்னை வாசித்துப்பார் உன் சுவாசக்காற்று கூட என்னை பற்றி எடுத்து சொல்லும்.

என்னை புகழ்ந்தவர்கள்

கரையான் அரித்து தின்னும் காகிதங்கள் அல்ல நான். உங்கள் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றி தரும் கலங்கரை விளக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால் தான் வாழ்ந்து மறைந்தவர்கள் என்னை வாழ்த்திவிட்டு சென்றனர். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்னை வாழ்த்திக்கொண்டு இருக்கின்றனர்.தொட்டனை துாறும் மணற்கேனி மாந்தர்க்குகற்றனைத் துாறும் அறிவு'' என்று என்னை வாழ்த்தி மறைந்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவன். ஆம் நண்பர்களே என்னை தினமும் வாசித்துப்பாருங்கள்; உங்களுக்கு அறிவை அள்ளிக்கொடுப்பேன். இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் பிறந்த தினத்தை எனது பெயர் தாங்கிய உலக புத்தக தினமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டேன்.சிக்மன் பிராய்ட் எனும் உளவியல் அறிஞர் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அது போல, மனசுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு என உலகத்திற்கே எனது பெருமையை எடுத்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று என்னோடு ஒட்டி உறவாட அனுமதி கேட்டார் சரித்திர வீரன் நெல்சன் மண்டேலா. ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச்சிறந்த பரிசு புத்தகம் என்றார்

வின்சன்ட் சர்ச்சில். அறிஞர் அண்ணாதுரை புற்றுநோயால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொழுது தான் வாசித்த புத்தகத்தில் இன்னும் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அறுவை சிகிச்சையை தாமதமாக்கினார்.புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்று என்னை பெருமைப்படுத்தினார் லெனின். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சிறிதும் தயக்கமின்றி என்னை தாங்கி பிடித்தார் மகாத்மா காந்தி. சவப்பெட்டியின் மேல் மாலைகளுக்கும், பூக்களுக்கும் பதிலாக புத்தகங்களை வைக்க கேட்டுக்கொண்டார் ஜவஹர்லால் நேரு. என்னே ஒரு நேசம் இறந்த பிறகும் என்னை விட்டு விலக மனமில்லை. இப்படி என்னை வாழ்த்தியவர்கள் பலபேர்.
வாழவைப்பேன்

இந்த சமுதாயம் சமத்துவத்தையும், சம நிலையையும் அடைய வேண்டும் என்றால் நான் மட்டும் தான் தீர்வாக இருப்பேன். அகரமும் என்னுள் தான் ஆரம்பிக்கிறது. ஆராய்ச்சியும் என்னுள் தான் தொடங்குகிறது. குழந்தைகளுக்கு குழந்தை பாடல்களாகவும் இருக்கிறேன். நீதிக்கதைகள் சொல்லும் நீதிமானாகவும் அமைகிறேன். பள்ளியில் படிக்கும் பாடமாகவும் இருக்கிறேன். கல்லுாரியில் பட்டம் வாங்கி கொடுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கிறேன். என்னை அரசனும் வாசிக்கிறான், ஆண்டியும் வாசிக்கிறான்.ஆசிரியரும் வாசிக்கிறார்கள், மாணவர்களும், மேதைகளும் வாசிக்கிறார்கள். நகரத்திலும், கிராமத்திலும் வாசிக்கப்படுகிறேன். ஆண்களும், பெண்களும் வாசிக்கிறார்கள். என்னை வாசித்தால் தலைமுறைக்கும் வாழத்தடம் கிடைக்கும். உங்களின் கற்பனைகளை, சிந்தனைகளை வாசிப்பால் வசப்படுத்தலாம். நான் உங்களின் நண்பனாக இருந்து நல்வழிப்படுத்துவேன். உங்களின் கண்ணீரை துடைத்து கலங்கரை விளக்கமாக காட்சி கொடுப்பேன். உங்களின் மனக்கசடுகளை அகற்றி நல்ல மனிதனாக வாழ வழி அமைத்து கொடுப்பேன். தலை குனிந்து என்னை வாசியுங்கள் உங்களை தலை நிமிர்ந்து வாழவைப்பேன்.- எம்.ஜெயமணி, உதவி பேராசிரியர் ராமசாமி தமிழ் கல்லுாரிகாரைக்குடி. 84899 85231.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X