அரசு மின்சார பெட்டிகளை சுற்றிலும் விளம்பரம்...ஆளுங்கட்சியினர் துவக்கும் புதிய வியாபாரம்!

Updated : ஏப் 24, 2018 | Added : ஏப் 24, 2018
Share
Advertisement
புத்தக தின தள்ளுபடியில், ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொண்டு, தோழியின் வீட்டுக்குப் படையெடுத்தனர் சித்ராவும், மித்ராவும். இருவரையும் வரவேற்ற தோழி, 'டிவி' பார்க்கச் சொல்லி விட்டு, ஜூஸ் போடுவதற்காக சென்று விட்டாள்.'டிவி'யில், வடிவேலு 'சூனா பானா; விடுறா, விடுறா' என்று மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார்.''வடிவேலைப் பார்த்ததும், போன வாரம், போத்தனுார்ல இருக்குற
அரசு மின்சார பெட்டிகளை சுற்றிலும் விளம்பரம்...ஆளுங்கட்சியினர் துவக்கும் புதிய வியாபாரம்!

புத்தக தின தள்ளுபடியில், ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொண்டு, தோழியின் வீட்டுக்குப் படையெடுத்தனர் சித்ராவும், மித்ராவும். இருவரையும் வரவேற்ற தோழி, 'டிவி' பார்க்கச் சொல்லி விட்டு, ஜூஸ் போடுவதற்காக சென்று விட்டாள்.

'டிவி'யில், வடிவேலு 'சூனா பானா; விடுறா, விடுறா' என்று மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார்.

''வடிவேலைப் பார்த்ததும், போன வாரம், போத்தனுார்ல இருக்குற குழந்தைங்க காப்பகத்துக்கு, 'மீடியா'காரங்களைக் கூப்பிட்டுப் போய், போராட்டம் நடத்துனவரு ஞாபகம் வந்துச்சு. மனநிலை சரியில்லாத குழந்தைங்க இருக்குற இடத்துல 'மீடியா'வைக் கூப்பிட்டுப் போய், போராட்டம் நடத்த எப்பிடித்தான் மனசு வருதோ?'' என்றாள்.

''பாவம் மித்து... அந்த குழந்தைங்க... ஏதாவது போராட்டம் பண்ணி, காப்பகத்தை மூடிட்டா அவுங்க எங்க போவாங்க... 250 குழந்தைகளுக்கும் இவுங்களால ஒரு வேளை சாப்பாடு போட முடியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.

''இப்பல்லாம் இந்த மாதிரி, ஏதாவது ஒரு போராட்டம் நடத்தி, மிரட்டி பணம் பறிக்கிறதே வேலையாப் போச்சு. இப்பிடித்தான், ஒருத்தர், ஒரு ஆஸ்பிடலை மிரட்டி, 'ஸ்கார்பியோ' வாங்குனாரு... இன்னொருத்தரு, ஆசிரமத்தை மிரட்டி, 'இன்னோவா' வாங்குனாரு,'' என்றாள் மித்ரா.

''ஆஸ்பிடல்னு சொன்னியே... நம்மூருக்குள்ள பிரைவேட் ஆஸ்பிடல்கள்ல, 'போர்ட்வின்'ங்கிற மயக்க மருந்தைத் திருடுன கும்பலைப் பிடிக்கிறதுல, போலீஸ்காரங்க ரொம்ப தீவிரமா இருக்காங்க. ஆனா, டாக்டர்கள் எல்லாரும் பயந்து நடுங்குறாங்க. அவுங்களுக்குள்ள 'யூனிட்டி' இல்லை. முதல்ல புகார் கொடுத்த ஐ.எம்.ஏ.,வும், இப்போ 'பேக்' அடிக்கிற மாதிரி இருக்குதாம்,'' என்றாள் சித்ரா.

''டாக்டர்கள் மட்டுமா பயப்படுறாங்க... சர்க்கார்சாமக்குளத்துல 'அசிஸ்டென்ட்' பொறுப்புல இருக்குற கல்வித்துறை அதிகாரியைப் பத்தி புகார் சொல்றதுக்கு லேடீஸ் டீச்சரும் பயப்படுறாங்க,'' என்றாள் மித்ரா.

''அவரு என்ன பண்ணுனாராம்?'' என்று கேட்டாள் சித்ரா.

''பாலியல் தொல்லைதான்... டீச்சர்கள்ட்ட மோசமா நடந்துக்கிறாராம். பேர்ல மட்டும் தர்மத்தை வச்சுக்கிட்டு, எட்டாங்கிளாஸ் புள்ளைங்களை தப்பா பாக்குறாராம்,'' என்றாள் மித்ரா.

  1. ''பள்ளிக் கல்வித்துறை நிலைமை, ரொம்ப மோசமா இருக்கு மித்து... தனியார் ஸ்கூல்களுக்கு 'ரினிவல் டைம்' ஆச்சா... மெட்ரிக் அதிகாரி, அங்க இருக்குற ஒருங்கிணைப்பாளர், முதன்மை அதிகாரின்னு ஆளுக்கு ஆளு தனித்தனியா ஆய்வு பண்ணி, வசூல் தட்டுறாங்களாம். ஒரு ஸ்கூலுக்கு எத்தனை பேருக்கு காசு கொடுக்குறதுன்னு, ஸ்கூல்காரங்க புலம்புறாங்க,'' என்றாள் சித்ரா.


''அய்யாவோட அண்ணன், இங்க வர்றதுக்கே, 19 லட்ச ரூபா கொடுத்தாராம்... அதை எடுக்கணும்ல,'' என்றாள் மித்ரா.

இருவருக்கும் பழங்களுடன், 'மாதுளை ஜூஸ்' கொண்டு வந்தாள் தோழி. மூவரும் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டே, பேச்சைத் தொடர்ந்தனர்.

''சித்ரா... நுாறடி ரோட்டுல, புதுசா பாலம் கட்டுற இடத்துல, ஆறு காருல தாரு விழுந்து, அலங்கோலமானது தெரியுமா?'' என்று கேட்டாள் தோழி.

''வாட்ஸ் ஆப்ல படம் வந்துச்சு... பார்த்தேன். அந்த பாலத்தால இன்னும் என்னென்ன சோதனை வரப்போகுதோ... நிஜமாவே, அதை 'டிசைன்' பண்ணுன அந்த இன்ஜினியரை தேடிக் கண்டு பிடிச்சு, ஒரு பாராட்டு விழா நடத்தணும் மித்து,'' என்றாள் சித்ரா.

''தார் விழுந்ததைப் பேசுனதும், நம்ம நேரு ஸ்டேடியம் ஞாபகம் வந்துச்சு... போன வாரம், 14வது ஜூனியர் பெடரேஷன் அத்லெட் நடந்துச்சு. இந்தியா முழுக்க இருந்து, 840 பேர் வந்திருந்தாங்க. ஆனா, 'டிராக்' படு கேவலமா இருந்திருக்கு. கேரளா டீமை கூப்பிட்டு வந்த பி.டி.உஷா, அதைப் பார்த்துட்டு, 'இந்த தார் ரோட்டுல எம்புள்ளைங்க எப்பிடி ஓடப்போகுதோ'ன்னு நொந்துட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அடக்கொடுமையே... இந்த போட்டிக்குதான், நம்மூர்ல காலேஜ் நடத்துற மேடம், 10 லட்ச ரூபா கொடுத்தாங்களாமே. அதுல ஒரு லட்ச ரூபாயாவது செலவழிச்சிருப்பாங்களா?'' என்று கேட்டாள் மித்ரா.

''காலேஜ்ன்னியே... ஹோப்ஸ் காலேஜ் பக்கத்துல இருக்குற 'டாஸ்மாக் பார்', 24 மணி நேரமும் நடக்குது. அங்க தான், ஆம்னி பஸ்களை எல்லாம் நிறுத்தி, ஆள் ஏத்துறாங்க. லேடீஸ் நிக்க முடியலை,'' என்றாள் சித்ரா.

''அந்த 'பார்' நடத்துறவரு, ஆளுங்கட்சில ரொம்ப செல்வாக்கான ஆளாம்... 'பேட்ரல் போலீஸ்' போய், சத்தம் போட்டா, 'மேலயே 'கரெக்ட்' பண்ணிட்டோம். உன் வேலையைப் பாத்துட்டுப் போ'ன்னு 'பப்ளிக்' முன்னாலயே, திட்றாராம்,'' என்றாள் மித்ரா.

அதைக் கவனிக்காத சித்ரா, 'நாகராஜ்ன்னு இங்க யாரும் இல்லியே... ராங் நம்பர்' என்று அலைபேசியைத் துண்டித்து விட்டு, பேச்சை தொடர்ந்தாள்.

''மறுபடியும் ரூரல் போலீசைப் பத்திதான் நிறைய புகார் வருது... துடியலுார் ஸ்டேஷன் ஏரியாவுல, ஏற்கனவே கஞ்சா, லாட்டரி 'ஜம்ஜம்'ன்னு விக்குது. இப்போ புதுத்தொழிலா, 'ஸ்பா ட்ரீட்மென்ட்'ங்கிற பேருல, ரெண்டு இடத்துல, 'அந்த' தொழில் அமோகமா நடக்குதாம். அடுத்ததா, லுானா நகர்ல புது பிராஞ்ச் 'ஓபன்' பண்ணப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இவுங்க பாடு இப்பிடின்னா, இதுல இருந்து புதுசா ஆரம்பிச்ச தடாகம் ஸ்டேஷன்ல வேலை பாக்கிறவுங்க நிலைமை பரிதாபம்... தினமும் யானை வர்ற ஏரியாவுல ஸ்டேஷனைத் திறந்திருக்காங்க. இந்த போலீஸ்காரங்க, மக்களைப் பாதுகாப்பாங்களா, அவுங்களை பாதுகாத்துக்குவாங்களா'ன்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.

''புது ஸ்டேஷனை எமகண்ட நேரத்துல திறந்துட்டாங்களாம்... இடி, மின்னல், மழையும் வந்து மெரட்டிருச்சு. பிரச்னை இடியா இறங்கப்போகுதா, மண்ணு கடத்தல், சரக்கு, கஞ்சா, லாட்டரின்னு வசூல் மழை பொழியப் போகுதான்னு தெரியலை. இதுல இன்னொரு 'காமெடி' என்னன்னா, இந்த ஸ்டேஷனுக்கு எதிர்ல நஞ்சுண்டாபுரம் ஊராட்சி ஆபீஸ் இருக்கு. புது ஸ்டேஷன் திறக்கிறதுக்கு, அவுங்களுக்கு 67 ஆயிரம் ரூபாய் செலவாயிருச்சாம்,'' என்றாள் சித்ரா.

''மண்ணு கடத்தல்னு சொன்னியே... நொய்யல்ல மணல் கடத்தலுக்கு எதிரா போராடுறவுங்க மேலயே கேஸ் போடுறதுக்கு, ரெவின்யூ டிபார்ட்மென்ட்காரங்க திட்டம் போட்ருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

''ரெவின்யூன்னா அப்பிடித்தான்... நம்ம கார்ப்பரேஷன் ஈஸ்ட் ஆபீஸ்ல, 'ரெவின்யூ'ல அசிஸ்டென்ட் போஸ்ட்ல இருக்குற ஒருத்தரு, 'டெபுடி' ஆபீசருக்கு 'பி.சி.,'யா இருந்ததை வச்சு, சீனியாரிட்டி இல்லாமலே, அந்த இடத்துக்கு வந்தாராம். அவரை போன வாரம் மாத்திட்டாங்க. மறுபடியும் 'டெபுடி'யைப் பார்த்து, நாலே நாள்ல மறுபடியும் அதே இடத்துக்கு வந்துட்டாரு,'' என்றாள் சித்ரா.

''கார்ப்பரேஷன் டவுன் பிளானிங்லயும், பெரிய ஆபீசருக்கும், உதவி ஆபீசர்களுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்காம்... அஞ்சு மண்டலத்துல இருக்குற மூணு பேரு, 'எம்.இ.' படிக்கிறோம்னு லீவு போட்டுப் போயிட்டாங்க. அதனால, அந்த மூணு மண்டலத்தையும் சேர்த்து, பெரிய ஆபீசரே பாக்குறாராம்,'' என்றாள் மித்ரா.

இடையில் புகுந்த தோழி, ''இந்த மருதமலையில, வருஷத்துக்கு 16 கோடி ரூபா வருமானம் வருதுன்னு சொல்றாங்க. ஆனா, இந்த ராஜகோபுரத்துக்குப் போற படிக்கட்டுல, கிரானைட்டைப் போட்டு, கூரை போடாம வச்சிருக்காங்க. வெயில்ல காலை வைக்க முடியலை; மழை பேய்ஞ்சா வழுக்குது. ஏதாவது பண்ணச் சொல்லுங்கப்பா,'' என்றாள்.

''மருதமலையைப் பத்திப் பேசவும், அந்த சாமி பேரைக் கொண்ட பொங்கலுார்க்காரரு ஞாபகம் வந்துச்சு. தெற்கு மாவட்ட கூட்டத்துல அவரு பேசுறப்போ, 'நம்ம கட்சியில இப்போ 'ஐ.டி., விங்க்'தான் 'பவர்புல்'லா இருக்கு. அவுங்க தர்ற தகவல் தான் இனிமே எடுபடும்'னு சொல்லிருக்காரு. உடன் பிறப்புக எல்லாம், 'ஐ.டி.,விங்க்' நிர்வாகிகளைப் பார்த்தா, 'ஸ்பெஷல் கும்பிடு' போடுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''நம்ம 'கொங்கு பெல்ட்'ல இருக்குற ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ங்க சில பேரு சேர்ந்து, கருணாநிதி குடும்ப கேபிள் நிறுவனம் மாதிரி, புதுசா கேபிள் நிறுவனம் ஆரம்பிக்கிறாங்களாம். அதுக்காகவே, அரசு கேபிளை முடக்குற வேலைகள் ஆரம்பிச்சிருச்சாம். போலீஸ் கேபிளில் 'பிரீ'யாக இருக்குற இடத்தைப் பயன் படுத்தப்போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இன்னொரு 'மெகா வசூல் திட்டம்... நம்ம மாவட்டத்துல, இ.பி., டிரான்ஸ்பார்மர், ஜங்ஷன் பாக்ஸ்களுக்கு பாதுகாப்பு தர்றதாச் சொல்லி, சுத்தி கம்பி வலை போட்டு, 25 ஆயிரம் இடத்துல விளம்பரம் வைக்க ஆளுங்கட்சி பினாமி கம்பெனி பேருல முயற்சி நடக்குதாம்,'' என்ற மித்ரா, 'அக்கா நேரமாகுது; கிளம்பலாம்' என்றாள். தோழிக்கு 'பை' சொல்லி விட்டு, வண்டியைக் கிளப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X