'ஆதார்' கார்டு குப்பையிலே... 'உதார்' விடும் அதிகாரி 'ஏசி' ரூமிலே...!

Updated : ஏப் 24, 2018 | Added : ஏப் 24, 2018 | |
Advertisement
கோடை வெயில் ஓய்வெடுத்து கொண்ட ஒரு மாலை நேரம். சித்திரை தேரோடும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்ராவும், மித்ராவும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அது முடிந்த பின், 'ஜில்' என்று காற்று வீசிய கோவில் பிரகாரத்தில், இருவரும் அமர்ந்தனர். பிரசாதமாக கொடுத்த தேங்காயை உடைத்து கொண்டே, ''கலெக்டர் ஆபீசில், பாம்பு புகுந்து விட்டதாமே,' என்று ஆரம்பித்தாள். ''ஆமாம். கலெக்டர்
'ஆதார்' கார்டு குப்பையிலே...  'உதார்' விடும் அதிகாரி 'ஏசி' ரூமிலே...!

கோடை வெயில் ஓய்வெடுத்து கொண்ட ஒரு மாலை நேரம். சித்திரை தேரோடும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்ராவும், மித்ராவும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அது முடிந்த பின், 'ஜில்' என்று காற்று வீசிய கோவில் பிரகாரத்தில், இருவரும் அமர்ந்தனர். பிரசாதமாக கொடுத்த தேங்காயை உடைத்து கொண்டே, ''கலெக்டர் ஆபீசில், பாம்பு புகுந்து விட்டதாமே,' என்று ஆரம்பித்தாள்.

''ஆமாம். கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலர் ஜீப்புக்குள் ஒரு பெரிய பாம்பு, அடிக்கிற வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல், புகுந்து விட்டது,'' என்றாள் சித்ரா.

''அப்புறம் என்ன ஆச்சு. பாம்பு கிடைச்சதா?'' என்று ஆர்வமாக மித்ரா கேட்டதும், ''இரவு நேரம் புகுந்த பாம்பு, தானாக சென்று விட்டதாம். ஒரு வேளை பாம்புக்கும் 'கமிஷன்' கொடுத்திருப்பார்களோ?'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.

''கமிஷன் பத்தி நீங்க சொன்னதும், நினைவுக்கு வருது. ஊரக வளர்ச்சித் துறையில், பணி செய்த கான்ட்ராக்டர்களுக்கு சில திட்டங்களில் நேரடியாக மாவட்ட ஆபீசிலிருந்துதான், செட்டில் செய்ய வேண்டும். அந்த வேலை பார்க்கற திருப்பதி ஆண்டவரின் பெயர் கொண்ட ஆபீசர், தன் பாக்கெட்டுக்கு தன் பங்கு தொகை 'ஹாட் கேஷ்' வந்ததும்தான், 'செக்' கொடுக்குறாராம். வட்டிக்கு கடன் வாங்கி வந்து அவருக்கு கமிஷன் கொடுத்துட்டுத் தான் செக் வாங்க வேண்டியிருக்கு என்று, கான்ட்ராக்ட்காரர்கள் புலம்பி தள்ளுகின்றனராம்,'' என்றாள் மித்ரா.

''அந்த 'வெங்கடாஜலபதியே' சொன்னாலும், நம்ம அதிகாரிகளை திருத்தவே முடியாது மித்து. அதை விடுப்பா...! சித்திரை தேரோடும்சப் டிவிசனில், மதுக்கடை, 'பார்'களில் சட்ட விரோத மது விற்பனை 'லேசா' குறைஞ்சிருச்சாம்,'' என்று சித்ரா சொன்னதும், ''அட... நிஜமாவாங்க,'' என்று மித்ராஆச்சரியப்பட்டாள்.

''மித்து, வாயை மூடிக்கோ, கொசு உள்ளே போகப்போகுது. 'பார்'களில் சரக்கு விற்பது பகிரங்கமாக தெரிஞ்சு, நிறைய பிரச்னை வந்திருச்சாம். அப்புறம் மாமூல் பிரிச்சு கொடுப்பதிலும், சிக்கல் இருப்பதால், இப்ப போலீஸ் கொஞ்சம் கெடுபிடி காட்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அதனால்தான், ஓட்டல், ரெஸ்டாரன்ட்களில் 'சில்லிங்' சேல்ஸ் ஜாஸ்தியாயிடுச்சு போல. யார் என்ன செஞ்சா என்ன? நம்ம பாக்கெட் நிரம்பினால் சரிதான்னு, போலீஸ்காரங்க நல்லாவே வேலை பார்க்கறாங்க,'' என்றாள் மித்ரா.

''இதேமாதிரிதான், பக்கத்துல இருக்கிற பல்லடம் ரோட்டில் பல இடங்களில், ஆளுங்கட்சி ஆதரவோட, 24 மணி நேர மது விற்பனை நடக்குதாம். அந்த 'நீதி ராஜாவே', சொன்னாலும், விற்கறதை நிறுத்த மாட்டாங்களாம். ஒட்டு மொத்த 'மாமூல்' பணத்தை, கனகச்சிதமாக, எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்து சரிக்கட்டிடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். தினமும் ஆயிரக்கணக்கில் பல அதிகாரிகளுக்கு படி அளந்து கொடுக்கிறாங்களே. அப்படி எவ்வளவு லாபம் பார்க்க முடியும்?'' என்று சந்தேகத்தை கிளப்பினாள் மித்ரா.

''அட, நீ வேற, கோவை பக்கத்துல இருக்கிற கண்ணம்பாளையத்திலிருந்து 25, 30 ரூபாய்க்கு 'டூப்ளிகேட்' சரக்கை வாங்கிட்டு வந்து, 150, 300 ரூபாய்க்கும் விற்கிறாங்க. அதில், பல மடங்கு லாபம் என்பதால், அள்ளி விடறாங்க. ஒரு நாளைக்கு இதில், ஏதாவது பிரச்னை வந்தால், அப்புறம் இருக்குது கச்சேரி,'' என்று விளக்கினாள் சித்ரா.

தேங்காய், பழத்தை சாப்பிட்டு விட்டு, ''மித்து, கெளம்பலாமா?'' என்று சித்ரா சொன்னதும், ''சரிக்கா... அந்தப்பக்கம், பார்க்கில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம்,'' என்றாள் மித்ரா. இருவரும், பார்க்கில் சென்று, பெஞ்சில் அமர்ந்தனர். கையோடு வாங்கி சென்ற சுண்டலை சாப்பிட ஆரம்பித்தனர். ''அர்பன் பாங்கில், தலைவரா இருந்தவரு, ஒரு போட்டோவ எடுத்துட்டு போயிட்டாராம்,'' என்று புதிர்போட்டு பேசினாள் மித்ரா.

''அட... புரியற மாதிரி சொல்லுடீ,'' என்று சித்ரா சலித்து கொண்டதும், ''திருப்பூர் அர்பன் பாங்க் தலைவரா இருந்தவரு, டைரக்டர்களாக இருந்த தோழர்களையும், 'கவனிச்சு', பதவிக்காலத்தை சுமூகமாக முடிச்சிட்டாரு. பதவி முடியற நாளில், அதிகாரிங்க, அவருக்கு 'பெரிய கவனிப்பு'க்கு ஏற்பாடு செஞ்சதும், ''மீண்டும் நான் தலைவரா வர விருப்பமில்ல. அதனால, நான் கொண்டு வந்த போட்டோவ மட்டும் எடுத்துட்டுப்போறேன்,''னு சொல்லிட் ஜெ.,-எம்.ஜி.ஆர்., இருந்த போட்டோவ மட்டும் கொண்டு போயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.

''அடடே... பரவாயில்லையே. ஆனா, கூட்டுறவு தேர்தல்லயும் சிலர், பாக்கெட்டை நிரப்பிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அதெப்படிங்கா?'' என்று மித்ரா கேட்டதும், ''ஆளுங்கட்சியில, மாவட்ட நிர்வாகிகளோட ஆட்களுக்கு, கூட்டுறவு சங்க பதவி இருந்தா மட்டும்தான் கூட இருப்பாங்க. இல்லாட்டி வேற 'டீமுக்கு' மாறிடுவாங்க. அதனால, கூட்டுறவு பதவி கொடுக்கறதுலயும், எம்.எல்.ஏ.,களும், மாவட்ட நிர்வாகிகளும் லாபம் பார்த்துட்டாங்களாம்.''

''அதாவது, ''எதிரணிய சேர்ந்தவங்க, 11 பேர் லிஸ்ட்ட கொடுத்து நச்சரிக்கறாங்க'ன்னு நைசா ஆரம்பிச்சு, வேண்டியத வாங்கிட்டு, அப்புறமா, 'உங்களுக்கே கொடுக்கறேன்'னு சொல்லி, வாய்ப்பு கொடுத்தாங்களாம்,'' என்று மித்ரா விளக்கியதும், சித்ராவின் மொபைல் போனில், 'உஜ்வாலா' பற்றிய 'வாட்ஸ்அப்' தகவல் வந்தது.

அதை படித்து கொண்டே, ''உஜ்வாலா திட்டம் பிரதமரோட திட்டம்ங்கறதால, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வழங்கல் அலுவலகமும் பெரிசா கண்டுக்கல. 'காஸ்' ஏஜன்சிகளே, பயனாளிகளை தேடித்தேடி, 'காஸ்' இணைப்பை கொடுத்தாங்களாம்,'' என்றாள் சித்ரா. ''இதே, தமிழக அரசின் திட்டமா இருந்தால், 'தாட்பூட்'டுன்னுவிளம்பரம் செஞ்சு, ஒரே அமர்க்களமா இருந்திருக்கும். மத்திய அரசுதிட்டம் என்பதால், அமைதியா முடிச்சிட்டாங்க போல,'' என்றாள் மித்ரா.

“இன்னைக்கு நடந்த மாதிரி இருக்குது. ஆனா, பத்து வருஷம் ஓடிடுச்சு,'' என்று சித்ரா சொன்னதும், ''நீங்க.. எதை சொல்றீங்க,'' என்று மித்ரா குழம்பினாள்.

“அட, நம்ம கலெக்டரோட கார் டிரைவர், பத்து வருஷமா, இங்கேயே இருக்கிறாராம். பொதுவா டிரைவர்களுக்கு, மூணு வருஷத்துக்கு ஒரு தடவ டிரான்ஸ்பர் நடக்கும். மாவட்டத்துல எல்லா டிரைவரும் மாறிட்டாங்க. ஆனா, இவரு மட்டும் ஏன் மாறலன்னு மத்தவங்க கேள்வி கேக்கறாங்க,” என்றாள் சித்ரா.

“அவர், அப்படி என்ன ஸ்பெஷல்?'' என்று மித்ரா கேட்க, ''ஒரு 'ஜான்' விஷயம் கூட தெரியலையேப்பா...'' என்று சிவாஜி பாணியில் கூறி சிரித்தாள் சித்ரா.

பார்க்கில், குழந்தைகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், 'காச்.. மூச்...' என்று சத்தம் கேட்டது. அதைப்பார்த்த மித்ரா, ''ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. கோவை சென்ற தனியார் பஸ்சில், 'குழந்தைகளுக்கு, அரை டிக்கெட் கொடுக்க முடியாது. 'புல்' டிக்கெட்தான் எடுக்கணும்,'னு, கண்டக்டர் சொல்லியிருக்கார்.

''அடுத்த நாள், இதுபற்றி, பாதிக்கப்பட்ட நபர், நம்ம 'கபாலி' ஹீரோகிட்ட புகார் செஞ்சாராம். ஒரு சில நிமிஷத்தில், சம்பந்தப்பட்ட தனியார் பஸ் மேலாளர், புகார் கூறியவரின் மொபைலுக்கு அழைத்து, 'இனிமேல் இதுமாதிரி நடக்காது,'ன்னு சொல்லி சமாதானம் செய்தாராம். என்னடா.. இது. புகார் கொடுத்து இவருகிட்ட. போன், அவங்ககிட்ட இருந்து வருதுன்னு, குழம்பிட்டாராம்,'' என்றாள்.

''மக்கள் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கிட்டு, விசுவாசத்தை, தனியார் பஸ் உரிமையாளருக்கு காட்டுறாரா? பேஷ்.. பேஷ்... நல்ல பாலிஸி. அதே 'ஹீரோ' எங்க போனாலும், 'நான் ரொம்ப 'ஹானஸ்ட்'னு சொல்வாராம். அதை செயலில் காட்டினால் பரவாயில்லை,'' என்றாள் சித்ரா.

அப்போது, மித்ராவின் மொபைல் போன், 'அடேய்... நண்பா! உன்னை வெல்வேன்' என்று ரஜினி பாடல் 'ரிங் டோன்' ஒலிக்க, ''அடடே.. அப்படியா? இவங்களை திருத்தவே முடியாது,'' என, இரண்டு நிமிடம் பேசிவிட்டு வைத்தாள்.

''யாரை, திருத்த முடியாதுன்னு, சொல்றே,'' என்று சித்ரா கேட்டதும், ''இருக்கா.. சொல்றேன்,'' என்று கூறி, தண்ணீரை குடித்து முடித்த மித்ரா, ''திருப்பூரில் சமீபத்தில், ஒரு நிறுவனம் ஒன்று, டீலர்களுக்கு கமிஷன் தொகையை சரியா கொடுக்கறதில்லைன்னு ஒரு பிரச்னை வந்தது.''

''அதுக்காக, அந்த நிறுவன விளம்பர போர்டை வைக்க கூடாது,'ன்னு டீலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தெரிஞ்சுகிட்ட, சில பத்திரிகைகாரங்க, 'நாங்க பார்த்துக்கிறோம்,'னு சொல்லிட்டு, 'ஸ்பாட்'டுக்கு போனாங்களாம். ஆனா, அங்க, ரெண்டு தரப்புக்கு கைகலப்பு நடந்து, ஸ்டேஷனுக்கு புகார் போயிடுச்சாம்.''

''இதை சாதகமாக பயன்படுத்திட்ட, மூன்று 'டிவி' ரிப்போர்ட்டர்ஸ், ராத்திரியோட ராத்திரியா, கோவைக்கு போய், அஞ்சுக்கு அப்புறம், நான்கு இலக்க'அமவுன்ட்' வாங்கிட்டு, பிரிச்சு வைச்சுக்கிட்டாங்களாம்,'' என்று மித்ரா மூச்சு விடாமல் சொன்னதும், ''அடடே, பரவாயில்லையே. நீயும், துப்பறியும் வேலையை அப்பப்ப நல்லாவே பார்க்கிறாய் மித்து,'' என்று பாராட்டினாள் சித்ரா.

அப்போது, மொபைல்போனை, மித்ரா தனது, கைப்பையில் வைத்த போது, அவளது ஏ.டி.எம்., கார்டு, கீழே குப்பையில் விழுந்தது. அதை எடுத்து, துாசி தட்டி, பைக்குள் வைத்தாள். அதைப்பார்த்த சித்ரா, ''இதே மாதிரிதான், ஆதார் கார்டுகளை குப்பையில் இருந்து எடுத்த பிரச்னையில், ஒரு 'போஸ்ட்மேனை' சஸ்பெண்ட்' செய்தனர். ஆனால், குப்பைக்குள் ஆதார் கிடப்பதாக போன் மூலமாக, பொதுமக்கள் தகவல் தெரிவிச்சும், யாரும் சரியா, 'ரெஸ்பான்ஸ்' பண்ணலையாம். 'அட்லீஸ்ட்' உயரதிகாரிக்கு சொல்லியிருக்கணும். ஆனா, இப்படி, 'அலட்சியமா' இருந்த ஆபீசரை கண்டுக்காமல் விட்டுட்டாங்களாம்,'' என்றாள்.

''சரிக்கா... இருட்றதுக்குள்ள, கிளம்பிடலாம்,'' என்று மித்ரா சொல்ல, ''ஓ.கே., பா..'' என்று எழுந்த சித்ராவும் நடக்க ஆரம்பித்தாள். ''அவிநாசி தேரோட்டத்துல, அரசியல் கட்சிக்காரங்க யாரும், 'மைக்' பிடிச்சு பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

வழக்கமா பேசுற நபர், மரியாதை இல்லாம, 'ஜன்னை' பிடிக்கிறவங்களை, ஒருமையில பேசுறாருன்னு, பலரும் கோவில் ஆபீசில் புகார் செஞ்சாதால, இந்த முடிவெடுத்துட்டாங்களாம்,'' என்று சித்ரா கூறி, 'ராமசாமி' பந்தல் நிலையம் அருகில், நின்ற, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X