பயணங்கள் பாதுகாப்பாய் அமையட்டும் : ஏப்.23--30 சாலை பாதுகாப்பு வார விழா

Added : ஏப் 25, 2018
Advertisement
பயணங்கள் பாதுகாப்பாய் அமையட்டும் : ஏப்.23--30 சாலை பாதுகாப்பு வார விழா

இந்திய சாலைப் போக்குவரத்து துறை கணக்கின்படி 2015 ஆண்டில் 54,72,144 கிலோ மீட்டர் சாலைகள் இருக்கின்றன. இச்சாலைகளில் 21 கோடி வாகனங்கள் மக்களைச் சுமந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாகனங்களின் இயக்கங்களே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. இத்தகைய வாகன போக்குவரத்து நகர மயமாதல், புதிய பொருளாதார கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கம் காரணமாக தவிர்க்க முடியாதது. பயணமில்லாத படிப்போ, திருமணமோ, வேலை வாய்ப்போ, கண்டுபிடிப்போ, வாழ்க்கையோ இல்லை என்ற எல்லைக்கு மனித இனம் தன்னை தயார்படுத்திக் கொண்டது. மகாத்மா காந்தியடிகள் சட்டம் பயில வெளிநாடு சென்றபோது அயல்நாடு செல்வது நமது குல வழக்கத்தில் இல்லை எனவும், எனவே அவர் குடும்பத்தை தள்ளி வைப்பது என்ற முடிவினை சமூகம் எடுத்ததாகவும் காந்தியடிகள் சுய சரிதையில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைக்கு ஊர் விட்டு ஊர் தேசம் விட்டு தேசம் செல்லாமல் வாழ்க்கையின் உயர்வுகளை அடைவது இயலாததென்ற நிலையுள்ளது.
பயணம் பாதுகாப்பானதா? : இத்தகைய பொருளாதார, வாழ்வாதார பயணங்கள் பாதுகாப்பாய் அமைய வேண்டியது அவசியமானது. பொருள் தேடும், தொழில் தேடும், கல்வி தேடும், குடும்பத்தில் பொருள் ஈட்டும் ஒரே நபர் சிறிய கவனக் குறைவால் ஏற்படும் சாலை விபத்தால் இறக்கும் போது அக்குடும்பம் என்னாவது. இந்திய போக்குவரத்து மற்றும் சாலைகள் துறை அமைச்சகத்தின் கணக்கீட்டீன்படி 2016 ஆண்டில் 4,80,652 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளது. இதில் 1,50,785 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2005ம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு சுமாராக ஒரு லட்சத்திலிருந்து 1,50,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய உயிரிழப்புகளினால் இந்திய மனிதவளம் வீணாகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூக அந்தஸ்து முழுமையாக அதலபாதாளத்திற்கு செல்வதுடன் அக்குடும்பம் மீளாத்துயரில் தவிக்கிறது. இத்தகைய இழப்பினை தனி மனித, தனிக்குடும்ப இழப்பாக கருத முடியாது. இது இந்திய மனித வள மேம்பாட்டிற்கான தடைக்கல்லாகவே கருதப்படல் வேண்டும். எனவே தான் மத்திய மாநில அரசுகள் சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
காரணங்கள் : சாலை விபத்துகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப, தனிமனித காரணங்கள் இருந்தாலும், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காததே முக்கிய காரணம். அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, மது மயக்கத்தில் வாகனங்களை இயக்குவது, அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது, சரக்கு வாகனங்களில் பயணிப்பது ஆகியன முக்கியக் காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளன. வாகனங்களை இயக்குபவர் பிறர் தன்னை முந்திப் போகும்போது தனது கர்வம், ஈகோ உந்தித் தள்ளுவதால் சாலைவிதிகளை மீறி அதிவேகமாக வாகனம் இயக்குவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது.ஜாதீபக் என்ற ஆய்வாளர் சாலைவிதிமீறல்கள் குறித்து டில்லியில் நடத்திய ஆய்வில் தெரிவிப்பதாவது:பொதுவாக பெரும்பாலானோர் சாலை விதிகளை மதிப்பது கிடையாது. வாகனத்தில் வருபவர்களுக்கும், பாத சாரிகளுக்கும் வழி தருவதே இல்லை. ஆய்வு செய்யப்பட்ட 50 பேரில் 9 பேர் தாங்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தெரிந்தே ஓரிரு முறைகள் சாலை விதிகளை மீறி இருப்பதாக ஒத்துக்கொள்கின்றனர், என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 2017ல் 65 ஆயிரத்து 562 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதன் மூலம் 16157 பேர் உயிரிழந்துள்ளனர். 74572 பேர் சிறு காயம் அடைந்துள்ளனர். இந்தியாவில் அதிக வாகன விபத்து நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலும், உயிரிழப்பவர்களில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த 2வது மாநிலமாகவும் திகழ்கிறது. இத்தகைய வாகன விபத்துக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் நடைபெறுகிறது, உயிரிழப்புகளில் தலைக் கவசம் அணியாதோர் அதிகம்.
நடவடிக்கைகள் : விபத்தில் உயிர் இழப்பினை தடுக்க பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளோடு, சாலை விதியினை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதிவேகம், சரக்கு வாகனங்களில் பயணிப்பது, அலைபேசியைப் பயன்படுத்துதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், சிக்னல்களை மீறுதல் உள்ளிட்ட ஆறுவகையான குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், நிரந்தரமாக ரத்து செய்யப் படுவதும் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் 2017ல் மட்டும் 1,56,694 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 36 சதவீதம் பேர் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசுவதும், சுமார் 20 சதவீதம் பேர் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களாகவும் உள்ளனர். வாகனம் ஓட்டும்போது குடும்பத்தில் உள்ளவர்களை மனதில் கொள்வோம்.சாலை விதிகளை மதிப்போம். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம். அலைபேசியைப் பயன் படுத்துவதைத் தவிர்ப்போம். சிக்னல்களை மதிப்போம். சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்ப்போம். மனிதவளம் காப்போம். ஏப்ரல் 23 முதல் 29 வரை சாலைப் பாதுகாப்பு வாரம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இக்காலக் கட்டத்தில் மனித உயிர் விலைமதிப்பில்லாதது; அதனை பாதுகாக்க சாலை விதிகளை மதிப்போம் என்ற பிரசாரத்தை ஒவ்வொரு வாகன ஓட்டியும் கருத்தில் கொள்வதோடு பிறரை உணரச்செய்வோம். சட்டங்களும், திட்டங்களும், விழாக்களும் வெற்றியைப் பெறுவது என்பது, அது பெரும்பகுதி மக்களால் நடைமுறைப்படுத்தும்போது மட்டுமே, என்ற உண்மையை உலகறியச் செய்வோம்.
'சாலைப் பாதுகாப்பே உயிர்ப் பாதுகாப்பு' :
--முனைவர் சு. கிருஷ்ணன்புள்ளியியல் உதவி இயக்குனர்போக்குவரத்துஆணையர் அலுவலகம்சென்னை90420 90063

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X