காதல் பாடிய பாரதிதாசன் ஏப்.29- பாரதிதாசன் பிறந்த நாள்| Dinamalar

காதல் பாடிய பாரதிதாசன் ஏப்.29- பாரதிதாசன் பிறந்த நாள்

Added : ஏப் 26, 2018
Advertisement
 காதல் பாடிய பாரதிதாசன் ஏப்.29- பாரதிதாசன் பிறந்த நாள்

னிதினும் இனிதான காதல் உணர்வு காலங்காலமாகத் தமிழ் இலக்கியங்களில் இன்றியமையாத பாடற்பொருளாய் இடம்பெற்று வந்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசனும் காதல் பாடல்களை நிரம்பப் பாடியுள்ளார். மொழியுணர்வுக்கு அடுத்து காதல் உணர்வு அவரது பாடல்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.திருக்குறள் காமத்துப்பாலில் வரும் ஒரு தலைவி “செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க்கு உரை”எனத் தன் உணர்வை உணர்த்துவாள். பாரதிதாசன் படைக்கும் காதலியோ“ இருப்பதாய் இருந்தால் என்னிடம்சொல்க - நீ போவதாய் இருந்தால் என் கட்டைக்குச்சொல்” என்கிறாள்.திருவள்ளுவரின் தலைவி 'நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை' எனக் குறிப்பாக பேச, பாவேந்தரின்காதலியோ கறாராக - வெட்டு ஒன்று துண்டு இரண்டாக 'நீ போவதாய் இருந்தால் என் கட்டைக்குச் சொல்' என வெளிப்படையாக உடைத்துப் பேசுகிறாள்; 'பிரிந்த மறுகணமே இறந்து விடுவேன்' என்பதை 'என் கட்டைக்குச் சொல்' எனக் குறிப்பிடுவதன் மூலம் உணர்த்தி விடுகிறாள்.


காதல் சித்தரிப்புபாரதியின் கவிதா மண்டலத்தை சார்ந்தவர் பாரதிதாசன் என்பது காதல் சித்திரிப்பிலும் பொருந்தி வருகின்றது. பாரதியார் 'பெண்மை' என்ற கவிதையில் “காற்றில் ஏறிஅவ் விண்ணையும் சாடுவோம்காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே” என்று காதற் பெண்ணின் பார்வைக்கு உள்ள தனி ஆற்றலைப் பாடுவார். பாரதிதாசனும் 'சஞ்சீவி பர்வத்தின் சார'லில் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்”என்று பாடியுள்ளார்.கலிங்கத்துப் பரணியில் ஒரு சுவையான காட்சி. போருக்குச் சென்ற தன் கணவன் திரும்பி வந்திருப்பான் என்று எதிர்பார்த்து வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள் மனைவி; கணவன் வராமல் போகவே வீட்டுக் கதவை அடைக்கிறாள். இந்தத் திறப்பும் அடைப்பும் மாறி மாறி நிகழவே வீட்டு வாயிற் கதவின் குமிழ்கள் இங்கும் அங்கும் அலைந்து தேய்ந்து போகின்றன என்பது கலிங்கத்துப் பரணி காட்டும் சுவையான காதல் ஓவியம்.இதன் வளர்ச்சி நிலையாகக் 'கதவு பேசுமா?' என்ற தலைப்பில் ஓர் அழகிய காதல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார் பாரதிதாசன். தன் காதல் துணையைப் பிரிந்து சென்ற வேல்முருகன் காதலுணர்வு துரத்த வருகிறான்; ஏதும் பேசாமல் இரு விரலை மட்டும் தனது வீட்டுக் கதவில் ஊன்றுகிறான். 'திறந்தேன்!' என்று ஒரு சொல் வரக் கேட்கிறான். 'ஆஆ!இ மரக்கதவும் பேசுமா?' என்று வியப்பு மேலிடுகிறது அவனுக்கு. 'என்ன புதுமை!' என அவன் மருண்டு நிற்க மறுநொடியில் சின்னக் கதவு திறக்கிறது. அவன் தன் அருமைக் காதலியின் மலர்க் கையை நுகர்கிறான்; அவள் முகத்தில் புன்முறுவல் கண்டு உள்ளம் பூரிக்கிறான்; 'என்னேடி தட்டு முன்பு தாழ்திறந்து விட்டாயே?' என்று வியப்புடன் கேட்கிறான். அவனுக்கு மறுமொழியாக, “விட்டுப் பிரியாதார் மேவும் ஒரு பெண் நான்; பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்கருமரத்தால் செய்த கதவு”என்று கூறுகிறாள் அவனது உள்ளங்கவர் காதலி. பிரிந்து சென்ற கணவன் வரும் வரையில் வீட்டுக் கதவாகவே மாறி வழிமேல் விழி வைத்து எப்போதும் காத்திருக்கும் ஓர் உயிருள்ள பெண்ணோவியத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார் பாரதிதாசன்.


மரபை மாற்றல்


சங்க அக இலக்கியம் சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் காதலைப் பாடியது. பாவேந்தர் பாரதிதாசன் காதல் பாடல்களில் இம்மரபினை மாற்றியுள்ளார். ஏழை எளியோரின் காதலுக்கு ஏற்றம் தந்துள்ளார். கவிஞரின் 'இசையமுது' என்னும் நுாலில் காதல் பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.“கட்டி வெல்லத்தைக் கசக்குது என்றாள்; அவன் கட்டாணி முத்தம் இனிக்குது என்றாள்”என்பது சாதாரண பெண் தொழிலாளியின் காதல் மொழி.“அதோ பாரடி அவரே என் கணவர்; அதோ பாரடிபுதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி!”என்பது ஒரு மாட்டு வண்டிக்காரர் மனைவியின் வாய்மொழி.இங்ஙனம் ஏழை எளிய மக்களின் காதல் வாழ்வுக்குத் தலைமை இடம் தந்து பாரதிதாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்க மரபு மாற்றம் ஆகும்.


பத்து வழிகளில் காதல்


பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தலைவி தன் காதல் வேட்கையைத் தலைவன் முன்னே வெளிப்படையாக எடுத்துரைக்க மாட்டாள். பாரதிதாசன் படைக்கும் காதலி இவ் விதியினின்றும் சிறிது மீறிப் பத்து வழிகளில் தன் காதலை வெளிப்படுத்துகிறாள்;அக்காதலி இடம்பெறும் கவிதைக்குக் 'கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்?' எனத் தலைப்பிட்டுள்ளார் கவிஞர். காதலி முன்னே வருகிறாள்; தன் உடை திருத்துகிறாள்; மின்னிடை குலுக்குகிறாள்; அருகே வந்து தோளால் காதலனை இடித்துக் கொண்டு போகிறாள்; வீட்டின் பின்னே காதலன் போகும்போது கொஞ்சும் கருங்குயில் போலே மெல்ல மெல்லப் பாடுகிறாள்; காதலனின் நாய்க்குட்டிக்கு அவன் கண்ணெதிரே முத்தம் கொடுக்கிறாள்; சின்னச் சிட்டுக்களின் கூடல் கண்டு காதலனைப் பார்த்து அழுகிறாள்; காலம் கடத்தக் கூடாதென்று கையொடு பிடிக்கிறாள். 'என் மேல் ஆசை இல்லாவிட்டால் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா?' என்று நினைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான் காதலன்.


குடும்ப விளக்கு


'குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்னும் கருத்துக்கு இலக்கியமாகப் பாவேந்தர் பாரதிதாசன் படைத்துஉள்ள நுால் 'குடும்ப விளக்கு'. இந்நுால் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் ஐந்தாம் பகுதி 'முதியோர் காதல்' பற்றியது. அதில் வரும் மணவழகருக்கு வயது 105; அவரது துணைவி தங்கத்திற்கு வயது 100. 'ஒருவருக்காகவே மற்றவர்' என உருவாக்கப்பட்ட அம் முதியோரின் காதல் மாட்சியை மணவழகரின் கூற்றின் வாயிலாக நெஞ்சை அள்ளும் வகையில் புலப்படுத்துகின்றார் பாரதிதாசன்.“புதுமலர் அல்ல காய்ந்தபுற்கட்டே அவள் உடம்பு!சதிராடும் நடையாள் அல்லள்தள்ளாடி விழும் மூதாட்டி!மதியல்ல முகம் அவட்குவறள் நிலம்; குழிகள் கண்கள்!எதுஎனக்கு இன்பம் நல்கும்?இருக்கின்றாள் என்ப தொன்றே!”முதியவரின் நெஞ்சில் அவரது வாழ்க்கைத் துணையான முதியாளே வாழ்கின்றாள். அதே போல முதியவளின் நெஞ்சில் தேன் மழையாக இருக்கின்றார் முதியவர்; சலிக்காது அன்பு கொள்ளும் இரண்டு மனப் பறவைகளைக் 'குடும்ப விளக்'கின் இறுதிப் பகுதியில் சொல்லோவியமாக்கியுள்ளார் பாரதிதாசன்.பாவேந்தர் பாரதிதாசன் காதலைக் குறித்து நிரம்பப் பாடியிருக்கிறார்; காதலை நுணுக்கமாக, சுவையாகப் பாடியிருக்கிறார். சுவை கெடாது காதற் கவிதைகளைப் பாடுவதில் பாரதிதாசனாருக்கு நிகர் அவரே எனலாம்.பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X