கோவைக்கு, 'குழந்தை கும்கி'கள்! கட்டுப்படுமா காட்டு யானைகள்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு, 'குழந்தை கும்கி'கள்! கட்டுப்படுமா காட்டு யானைகள்?

Added : ஏப் 27, 2018
Advertisement

யானை - மனித மோதல் அதிகமாக நடந்து வரும் கோவைக்கு, பயிற்சியே இல்லாத 'கும்கி'களை வனத்துறை அனுப்பி வைத்துள்ளது; இதனால், காட்டு யானைகளைத் துரத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில், யானை - மனித மோதல் அதிகமாக நடந்து வருகின்றன. ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்; ஏராளமான பயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.குறிப்பாக, வறட்சி அதிகமுள்ள கோடை காலங்களில், காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும். அத்தகைய நேரங்களில், பயிற்சி பெற்ற 'கும்கி' யானைகளைக் கொண்டு, காட்டு யானைகள் துரத்தப்படுவதுண்டு.
இதற்காகவே, கோவைக்குற்றாலம் அருகிலுள்ள சாடிவயலில் கடந்த 2012ல், யானைகள் முகாம் அமைக்கப்பட்டது; 'பாரி, சுஜய்' ஆகிய இரு 'கும்கி'கள் கொண்டு வரப்பட்டன. அதிலிருந்து, பல்வேறு சம்பவங்களிலும் காட்டு யானைகளைத் துரத்த, இவை பெரிதும் உதவியாக இருந்தன. காயம் மற்றும் வயது முதிர்வு காரணமாக, இவ்விரு யானைகளுக்கும் ஓய்வளிக்கப்பட்டு, முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக, சேரன், 32, ஜான், 24, என்ற இரண்டு கும்கி யானைகள், கடந்த ஏப்., 3ல் சாடிவயல் முகாமுக்கு வந்துள்ளன.
இந்த இரு யானைகளுமே, காட்டு யானைகளைத் துரத்துவதில், அனுபவமும், பயிற்சியும் இல்லாதவை; இவற்றின் பாகன்களும், காட்டு யானைகளோடு சண்டை போடுவதற்கு பயிற்றுவிக்கும் திறன் படைத்தவர்களில்லை.
தற்போது, கடும் வறட்சியாக இருப்பதால், உணவு மற்றும் தண்ணீருக்காக, விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் காட்டு யானைகள் படையெடுக்கத் துவங்கியுள்ளன. இதனால், காட்டு யானைகளைத் துரத்துவதற்கு, 'கும்கி'களை, களம் இறக்க வேண்டிய கட்டாயம், எப்போதும் வரலாம்; இந்த சூழலில், அனுபவமில்லாத 'கும்கி' யானைகளை வைத்துக் கொண்டு, காட்டு யானைகளை எப்படி விரட்டுவார்கள் என்று வன உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தனியாக சென்று காட்டு யானைகளை துரத்த போதிய பயிற்சி பெறாத இவற்றை, காட்டு யானைகளைத் துரத்த அனுப்பினால், அவற்றால் இந்த யானைகளின் உயிருக்கே ஆபத்து வர வாய்ப்புள்ளது. இதுபற்றி கேட்டால், 'ஒரு முறை, புலி பிடிக்க ஜான் சென்றதாகவும், காட்டு யானை ஒன்றை விரட்ட, மற்ற கும்கிகளுக்கு துணையாக சேரன் களம் இறக்கப்பட்டதாகவும்' வனத்துறையினர் பதிலளிக்கின்றனர்.
காட்டு யானைகளைத் துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவமுள்ள 'கும்கி'களை வரவழைத்து, அவற்றுடன் சேரன், ஜான் இரண்டையும் நிறுத்தி, பயிற்சி தரப்படும் என்றும் விளக்கம் தருகின்றனர். ஒரு முறை, இவற்றை களம் இறக்கினால் தான், இந்த 'குழந்தை கும்கி'களின் வீர தீரம் தெரியவரும்.

பாதுகாப்பது மின்வேலி!
காட்டு யானைகளிடமிருந்து, மக்களைப் பாதுகாப்பதற்காக, கோவைக்குக் கொண்டு வரப்பட்ட 'கும்கி'கள், சாடிவயல் முகாமில் உள்ளன. அங்கு காட்டு யானைகள் வந்து விடக்கூடாது என்பதற்காக, முகாமை சுற்றிலும் மின் வேலி மற்றும் அகழி அமைத்து, வனத்துறை பாதுகாத்து வருகிறது. இதைப் பார்த்து விட்டு, 'கோட்டை நீயும் தாண்டக்கூடாது; நானும் தாண்ட மாட்டேன்' என்று வடிவேலு காமெடியை வைத்து, புதிய 'கும்கி'களுக்கு 'மீம்ஸ்' போட ஆரம்பித்து விட்டனர், இளைஞர்கள்.


-நமது நிருபர்-



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X