காஞ்சிபுரம்: ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளிடையே, விபத்து குறித்து தெளிவாக அறிவுரை கூறிய, காவல் உதவி ஆய்வாளரின் பேச்சு, 'பேஸ்புக்' பக்கத்தில், பதிவு செய்யப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உயதிரகாரிகள் பலரும், அந்த காவல் உதவி ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏப்., 23 முதல், 29 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்
படுகிறது.காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து, மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு பற்றியும், விபத்து மற்றும் அதன் விளைவுகள் பற்றியும் வாகன ஓட்டிகளிடையே எடுத்து கூறி வருகின்றனர்.
சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றும், உதவி ஆய்வாளர், முத்துக்குமார், கடந்த 24ல், சதுரங்கப்பட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அபராதம் வசூலிப்பதை தவிர்த்து, விபத்து குறித்த விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தார்.
'விபத்து ஏற்படும் போது முதலில் தலையில் தான் அடிபடும்; உயிர் போனால் திரும்ப கிடைக்காது' என தெரிவித்த அவர், வாகன ஓட்டிகளை கட்டாயமாக ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினார்.அவரது பேச்சு, அங்கிருந்த வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும், ஒரு தாளில், இனி ஹெல்மெட் அணிந்து தான் வண்டி ஓட்டுவேன் என, பத்து முறை எழுதி வாங்கிய பின்னர், அங்கிருந்து அனுப்பியுள்ளார்.
அவரது அறிவுரை பேச்சு, காவல் துறை பேஸ்புக் பக்கத்திலும், வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, பலரால் பகிரப்பட்டு வருகிறது. காவல்துறை உயரதிகாரிகள் பலரும், உதவி ஆய்வாளரை பாராட்டிஉள்ளனர்.