சூலுார்:வி.சந்திராபுரம் ஸ்ரீகானியப்பர், மசராயர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
சூலுார் வட்டம், சுல்தான்பேட்டை அடுத்த வாரப்பட்டி ஊராட்சி வி.சந்திராபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீகானியப்பர், மசிரியாத்தாள் சமேத மசராயர் கோவில், 300 ஆண்டுகள் பழமையானது.
இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று, கடந்த, 25ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. ஸ்ரீகானியப்பர், மசராயர் உள்ளிட்ட மூலவர்களுக்கும், கணபதி, கன்னிமார், கருப்பராயர், உத்தண்ட ராயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகளும், புதிய சிலா ரூபங்களும் ஆகம சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது.
நேற்று காலை கடைசி கால யாக சாலை பூஜைகள் முடிந்து, புனிதநீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 8:00 முதல் 9:00 மணிக்குள் மூலவர், விமானம், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து தச தானம், தச தரிசனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கானியப்பருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.