பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின், பினாமி சொத்துகளை, வருமான வரித்துறை முடக்கியது.
முறைகேடு :
பீஹார் மாநில முன்னாள் முதல்வரான, லாலு பிரசாத் யாதவ், 2004 - 2009ம் ஆண்டுகளில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே ஓட்டல்களை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓட்டல் குத்தகை தருவதற்காக, பாட்னா நகரில், ஷேக்புரா என்ற இடத்தில், 3 ஏக்கர் நிலம், லாலு குடும்பத்தினருக்கு லஞ்சமாக தரப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த இடத்தில், 'பேர்குரோ ஹோல்டிங்' என்ற நிறுவனம், வணிக வளாகம் கட்டும் பணியைத் துவங்கியது. அந்த நிறுவன இயக்குனர்களாக இருப்பவர்கள், லாலுவின் குடும்பத்தினர் என்பதால், அந்த இடத்தை, அமலாக்கத்துறை முடக்கியது. அதையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
உத்தரவு :
இந்நிலையில், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை, வருமான வரித்துறையும் முடக்கி, உத்தரவு பிறப்பித்துஉள்ளது. கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற, லாலு பிரசாத் யாதவ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.