புதுடில்லி: சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும், துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி,12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, துாக்குதண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கும், துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி, மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு, பார்லிமென்டில் ஆறு வாரத்துக்குள் ஒப்புதல் பெற வேண்டும். இல்லையெனில், அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அந்த சட்டத்துக்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கும் போது, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்வோருக்கும், மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்தமும், அதில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.