ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டுமா?| Dinamalar

ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டுமா?

Added : ஏப் 28, 2018 | கருத்துகள் (22)
 ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டுமா?

துாத்துக்குடி ஸ்டெர்லைட், தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக, 'சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலை வேண்டாம்' என்ற போராட்டம், அந்த நகரில் நடக்கிறது. இந்த போராட்டங்கள், கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக நடக்கின்றன. எனவே, போராட்டத்தின் பின்னணி, அந்த தொழிற்சாலையின் அவசியம் குறித்து அனைவரும் அறிய வேண்டியது, நியாயம் தானே!

தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்புக்கான, உலகின் முன்னணி தொழிற்சாலைகளில், 10, சீனாவில் உள்ளன. அவற்றில் ஐந்து, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. அந்த ஐந்து ஆலைகளின் மொத்த உற்பத்தி, 32.5 லட்சம் டன்; உலக உற்பத்தியில், 12 சதவீதம்.பிர்லா தொழில் குழுமத்தின் சார்பில், குஜராத்தில் அமைந்துள்ள, 'ஹிண்டால்' தொழிற்சாலை, உலகின் ஆறாவது மிகப்பெரிய தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு ஆலை; இதன் உற்பத்தி ஆண்டுக்கு, 5 லட்சம் டன்.சிலி, மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும், தாமிர உருக்கு ஆலைகள் உள்ளன. இவை, உலகின் முதல், 10 ஆலைகளின் வரிசையில் உள்ளன. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, உலகின், 18வது இடத்தில் உள்ளது.நம் நாட்டு தாமிர சுரங்கங்களில் கிடைக்கும் தாது, உலக அளவில், 0.2 சதவீதம் மட்டுமே; உள்நாட்டு தேவைக்கு இது போதாது. எனவே, வெளிநாடுகளிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்து, துாய்மைப்படுத்தி, நம் நாட்டு தேவையை பூர்த்தி செய்கிறோம்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

தாமிரப் பொருட்கள், பல்வேறு இயந்திரங்கள் தயாரிப்பு, கட்டுமானத்துறை, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, போன்ற பல துறைகளுக்கு தேவைப்படுகின்றன.ஸ்டெர்லைட் நிறுவனம், லண்டனை தலைமையகமாக கொண்ட, 'வேதாந்தா' என்ற பெரிய நிறுவனத்தின் ஒரு அங்கம். இதன் உரிமையாளர், அனில் அகர்வால்; இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்; உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர்.பீஹாரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மும்பையில் சிறிய, பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து, உழைப்பால் உயர்ந்த கிருஷ்ண பக்தர். தன் மறைவுக்கு பின், சொத்தில், 75 சதவீதத்தை, இந்திய மக்கள் பெற வேண்டும் என, உயில் எழுதி வைத்துள்ளார்.தாமிர உருக்கு தொழில் வேண்டாம் என, குஜராத், கோவா, மஹாராஷ்டிரா, கேரளா என, பல மாநிலங்கள், ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில், 1994ல், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா, தமிழகத்திற்கு தொழில் பெருக்கம், வேலைவாய்ப்பு தேவை என்ற அடிப்படையில், அனுமதி அளித்தார். 1996ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலையை துவங்கி வைத்தார்.துவங்கிய நாள் முதல், ஏராளமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இந்த நிறுவனம் ஆளாகியுள்ளது. அவற்றை, பொதுமக்கள் ஆதரவுடனும், சட்டத்தின் துணையுடனும் சமாளித்து வந்தது; இப்போது, சற்று நிலை குலைந்துள்ளது.இந்த ஆலையின் கழிவுகள், நீரோடையில் கலக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, அந்த பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட பிற ஆலைகள் தான், கழிவுகளை நீரோடையில் கலந்தன என்பது, விசாரணையில் தெரிய வந்தது.பிற காரணங்களுக்காக, ஆலையை மூட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தீர்ப்பாய உத்தரவுகளால், இந்த ஆலை, இதுவரை, 85 நாட்கள் மூடப்பட்டது.அதன் பிறகு, தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம், 'நீரி' எனப்படும், தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் இறுதி ஆய்வு அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மீண்டும் இயங்கியது.

இதனால், தற்போதைய, ஆண்டுக்கு, 4 லட்சம் டன் உற்பத்தியை, 8 லட்சம் டன் உற்பத்திக்கு விரிவுபடுத்த, 3,000 கோடி முதலீட்டில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், 'நிறுவன விரிவாக்கம் நிறுத்தப்பட வேண்டும்; ஆலை மூடப்பட வேண்டும்' என, உள்ளூர் மக்களை, சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். மக்களும் தீவிரமாக போராடி வருகின்றனர். அதற்காக அவர்கள் கூறும் சில உதாரணங்கள், அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளன. இதனால், போராட்டம், நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.தொழிற்சாலைகள், பெரிய அளவிலான திட்டங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்பதை, அந்த பகுதி மக்களுக்கு விளக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்டெர்லைட்டின் முக்கிய கடமை.ஏனெனில், இந்த நிறுவனத்தால், 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 30 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த நிறுவனம், 3.5 சதவீதம் கைகொடுக்கிறது.மூன்று ஆண்டுகளாக சிறந்த ஏற்றுமதி, இறக்குமதி விருதை பெற்ற இந்த நிறுவனத்தால், துாத்துக்குடி துறைமுகத்திற்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிறுவனம் மூடப்பட்டால், துாத்துக்குடி, வ.உ.சி., துறைமுகமும், வருமானமில்லாமல் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்படும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, 600 கோடி ரூபாய் செலவிட்டுள்ள இந்த நிறுவனத்தை நம்பி, 500 சிறு குறு தொழிற்சாலைகள், துாத்துக்குடி சுற்றுப்புறங்களில் இயங்குகின்றன. துாத்துக்குடியைச் சேர்ந்த, இரண்டரை லட்சம் மக்கள், இந்த ஆலையால் ஏதோ வகையில் பயன் பெறுகின்றனர்.பல விதமான அனுமதி மீறல்கள், இந்த ஆலை நிர்வாகத்தால் செய்யப்படுகின்றன என, தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை, சட்டப்படி எதிர்கொள்ளும் அந்த நிறுவனம், நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயங்கள் அனுமதியின் படி, தொடர்ந்து செயல்படுகிறது.பரப்பப்படுவது தவறான தகவல் என்பதை, பொதுமக்களுக்கு சுட்டிக்காட்ட, இந்த நிறுவனம் தவறி விட்டது. அல்லது சுட்டிக்காட்டிய விதம், அப்பகுதி மக்களுக்கு புரியும் விதத்தில் இல்லை என்பதையும் கூற வேண்டும்.இந்த ஆலையால், புற்றுநோய் அதிகரிக்கிறது என, புகார் கூறப்படுகிறது. ஆனால், புற்றுநோய் குறித்த உலக ஆய்வு நிறுவன அறிக்கை மற்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறையின், 2017 அறிக்கைகளின் படி, உண்மை அவ்வாறு இல்லை.சென்னை, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமாரி, திருவள்ளூர், கடலுார் போன்ற மாவட்டங்களில் தான், புற்றுநோய் அதிகம் உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில், சற்று குறைவாகத் தான் உள்ளது என, அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.'இந்த ஆலையால் தான், துாத்துக்குடியில் மழை பொழிவு குறைகிறது' எனவும் கூறப்படுகிறது. ஆனால், 2018 மார்ச், 14ல் வெளியிடப்பட்ட தேசிய வானிலை ஆய்வு அறிக்கையின் படி, துாத்துக்குடி மாவட்டத்தில், 32 சதவீத அதிக மழை பொழிந்துஉள்ளது தெரிய வருகிறது.

இந்த ஆலையால் தான், தாமிரபரணியின் தண்ணீர் அதிகம் செலவாகிறது எனவும் கூறப்படுகிறது. அதுவும் தவறு. ஆறு கடலில் கலக்கும் இடத்தில், 'சிப்காட்' நிர்வாகம் தண்ணீரை எடுத்து, ஆலைக்கு தருகிறது.மேலும், ஆலைக்கு தேவைப்படும், 60 சதவீத தண்ணீர், கடல் நீரை உபயோகமான தண்ணீராக மாற்றித்தரும், தனியார் நிறுவனத்திடம் இருந்தே வாங்கப்படுகிறது.ஸ்டெர்லைட் துவக்க உள்ள புதிய விரிவாக்க ஆலை, சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்படவில்லை; குடியிருப்பு பகுதியிலிருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே அமைக்கப்படுகிறது. இந்த விரிவாக்க திட்டத்திற்கு, சிப்காட் நிறுவனமே இடம் ஒதுக்கியுள்ளது.மேலும், தற்போதுள்ள ஆலையின் மிக அருகிலேயே, இந்நிறுவனத்தின், 5,000 ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.
மேலும், விரிவாக்கம் ஏற்படும் போது, அங்கும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் தயாராகும் என, ஆலை நிர்வாகம் தெரிவிக்கிறது.இந்த ஆலையில், சல்ப்யூரிக் அமிலம், அனுமதியில்லாமல் தயாரிக்கின்றனர் எனவும், தவறாக புகார் கூறுகின்றனர். ஆனால், 'தகுந்த அனுமதியுடன் தான், சல்ப்யூரிக் டை ஆக்சைடு, அமிலமாக மாற்றப்பட்டு, உரம், மருந்து, சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. 'மேலும், சல்ப்யூரிக் டை ஆக்சைடு வெளியேற்றம், அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே உள்ளது' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது;வெளியேற்றத்தை ஒவ்வொரு நொடியும் பதிவு செய்கிறது.நிலைமை இவ்வாறு இருக்க, தொழில் நகரமான துாத்துக்குடியில், இந்த ஆலைக்கு எதிராக ஏன் இவ்வளவு போராட்டங்கள்... இதன் பின்னணியில் யார் என்பதை, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது, அரசின் கடமை.'ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம், சமூக விரோதிகளால் துாண்டப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர், சமீபத்தில் குறிப்பிட்டது மிக முக்கியமானது.ஆலையில் வேலை செய்வோர், அதை திறக்க வேண்டும் என கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் சென்ற போது, அவர்கள் சென்ற பஸ்கள் உடைக்கப்பட்டு, அப்பாவி ஊழியர்களும், குழந்தைகளும் தாக்கப்பட்டனர்.இந்த நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு, வீடு வாடகைக்கு விடக்கூடாது என, பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஆலையில் உள்ள கோவில்களுக்கு பூஜை செய்யச் செல்லும் அர்ச்சகர்களும் மிரட்டப்படுகின்றனர்.அரசுக்கு எதிரான அமைப்புகள் எவை, அவற்றால் எழுந்துள்ள பிரச்னைகள் என்ன என்பது குறித்து, வேதாந்தா நிறுவனமும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களின் சந்தேகங்களை முழுவதுமாக போக்கி, பொதுமக்கள் ஒத்துழைப்புடன், விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது தான், அனைத்து தரப்பினரின் விருப்பம்.இதற்கான வழிமுறைகளை, மாவட்ட நிர்வாகம், அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், தொழில் வல்லுனர்களுடன் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதும், 3,000 தொழிலாளர் குடும்பங்கள்; பி அண்ட் சி மில் மூடப்பட்ட போது, 4,000 குடும்பங்கள்; நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால், 8,000 குடும்பங்கள் சின்னாபின்னமாயின.தமிழகத்தில், புதிய தொழில் முதலீடு இல்லை என்பதும், தற்போதுள்ள தொழிற்சாலைகள், இங்குள்ள குழப்பங்களை கருதி, பிற மாநிலங்களுக்கு செல்கின்றன என்பதும் உண்மையானால், தமிழகம் மிகவும் பாதிப்படையும்.ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தரும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டால், மிகப் பெரிய இழப்பு, தமிழகத்திற்கு ஏற்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும்; அதன் தாக்கம், பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். பிற நாடுகளின் தொழிற்சாலைகளும், இங்கு வர தயக்கம் காட்டும். ஒட்டுமொத்தமாக கடும் பாதிப்பு ஏற்படும்.எனவே, தமிழகத்தின் நலன், துாத்துக்குடி மாவட்ட மக்களின் நலன், சிறு குறு தொழில் முனைவோரின் நலன், ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்களின் நலன் போன்றவற்றை கருதி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது, அனைத்து தரப்பினரின் பொறுப்பு.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனும் பொய்யான முகமூடியுடன், போராட்டத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்தி வரும், தேச விரோத கும்பல்களை ஒடுக்கி, ஆலையை தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும். இதுவே, தொழில் வளர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்களின் வேண்டுகோள்!இ - மெயில்: krusaam@gmail.com டாக்டர் ந.ராமசுப்ரமணியன் பொருளாதார நிபுணர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X