புதுக்கோட்டை : மின்தடையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது, போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஆவேசமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல்வீசி எதிர் தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஐந்து பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்பின்றி மின்தடை செய்வதால் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின்தடை மற்றும் மின்னழுத்த குறைபாடுகளால் ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் ஸ்தம்பித்துள்ளது.
விவசாயப் பணிகளுக்கு நாள்தோறும் மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. பொறுமை இழந்த விவசாயிகள், பொன்னமராவதி மின்வாரிய கிளை அலுவலக உதவி செயற்பொறியாளரை நேரில் தொடர்புகொண்டு விவசாயப் பணிகளுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும். முடியாத பட்சத்தில் முன்னறிவிப்புடன் மின்தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்ற மின்வாரிய அதிகாரிகள், முன்னறிவிப்புடன் மட்டுமே மின்தடை செய்வதாக உறுதியளித்தனர். இருந்தும் அப்பகுதிகளில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின் வினியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதர நேரங்களில் மின்னழுத்த குறைபாடுகள் காரணமாக மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மின் வாரியத்தின் இத்தகைய அலட்சியப் போக்கை கண்டித்தும், தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரியும் பொன்னமராவதி மற்றும் ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், அம்மாப்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதற்காக நேற்று காலை 11 மணிக்கு கொப்பனாப்பட்டி சந்திப்பில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த கிராம மக்கள் தடையை மீறி பேரணியாக சென்றனர். தாலுகா அலுவலகம் அருகே இவர்களை வழிமறித்த போலீசார், கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொறுமை இழந்த போலீசார், பேரணிக்கு முன்னிலை வகித்த ஆலவயல் ஊராட்சி தலைவர் மலையாண்டி கையை பிடித்து இழுத்துத் தள்ளினர்.
இந்நிலையில், கிராம மக்கள் தரப்பிலிருந்து வீசப்பட்ட ஒரு கல் போலீசார் மீது விழுந்தது. இதில், ஏட்டு கணேசமூர்த்தி தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல் வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் மாறியது.
சம்பவத்தை தொடர்ந்து, பொன்னமராவதி மற்றும் கொப்பனாப்பட்டி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE