புதுடில்லி:போபால் விஷவாயு கசிவு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவைக் குழு, வரும் 18ம் தேதி டில்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.போபால் விஷவாயு கசிவு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு மிகக் குறைந்த அளவாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்காவில் தலைமறைவாக உள்ளார். இவரைப் பற்றி தீர்ப்பில் எந்த விவரமும் இடம் பெறவில்லை. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் குறித்தும், இதில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக, மத்திய அமைச்சரவைக் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் அமைத்தார்."இந்த அமைச்சரவைக் குழு, 10 நாட்களுக்குள் இது தொடர்பான தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமரின் உத்தரவை அடுத்து, போபால் விஷவாயு கசிவு விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, வரும் 18ம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தீர்ப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், இதில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன், இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்படும் விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது.பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை அமைச்சகம் தான், இது தொடர்பான குறிப்புகளை தயார் செய்துள்ளது.இதில் என்ன விவரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது தெரியவில்லை. நாளை (இன்று) தான், இந்த குறிப்புகள் அமைச்சரவைக் குழு பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இதைப் பார்த்த பின்னரே, இதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
இதற்கிடையே, போபால் விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் கூறியதாவது:யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிதி உதவியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள போபால் நினைவு மருத்துவமனையின் தலைவராக, முன்னாள் நீதிபதி அகமதி செயல்படுகிறார். அவர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால், சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அப்துல் ஜப்பார் கூறினார்.
இந்நிலையில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தாய் நிறுவனமான "டோ கெமிக்கல்ஸ்'க்கு போபால் விஷவாயு கசிவு விபத்தில் உள்ள பொறுப்பு குறித்து, அமெரிக்காவில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில், அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.ஏனெனில், யூனியன் கார்பைடு சேர்த்து வைத்த மிதோ ஐசைல் சயனைடுக்கு அமெரிக்காவில் அனுமதி இல்லை. அதுபோல, அந்தக் கம்பெனி டோ கம்பெனியாகும் போது, முந்தைய கம்பெனியின் ஷரத்துகளை அப்படியே ஏற்கவில்லை என்றும், அதனால் நஷ்ட ஈடு குறித்து தனக்கு தொடர்பில்லை என்றும் ஏற்கனவே கூறியிருக்கிறது.
அர்ஜுன் சிங் மீது வழக்கு: யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை, பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததாக, ம.பி., முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங்கிற்கு எதிராக, போபால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பர்கான் கான் என்ற வக்கீல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு, வரும் 29ல் விசாரணைக்கு வரவுள்ளது. இதே குற்றச்சாட்டுக்காக, விஷவாயு கசிவு விபத்தின் போது, போபால் கலெக்டராக இருந்த மோடி சிங், அப்போதைய எஸ்.பி., சுவராஜ் புரி ஆகியோருக்கு எதிராகவும் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE