பொய்யான, பில்லா போடுறாங்க, தில்லாவரி கட்டாமல் நல்லா கட்டுறாங்க கல்லா!| Dinamalar

பொய்யான, 'பில்'லா போடுறாங்க, 'தில்'லாவரி கட்டாமல் நல்லா கட்டுறாங்க கல்லா!

Added : மே 01, 2018
Share
ஈச்சனாரி கோவிலுக்குப் போவதற்காக, டூவீலரை உக்கடம் 'ஸ்டாண்ட்'டில் போட்டு விட்டு, சித்ராவும், மித்ராவும் டவுன் பஸ் ஏறினர். அதிசயமாக, கூட்டம் குறைவாக இருந்தது.''அக்கா! இன்னும் பாலம் கட்டவே ஆரம்பிக்கலை... அதுக்குள்ள 'இவ்ளோ' டிராபிக்கா இருக்கு. கட்ட ஆரம்பிச்சிட்டா, நினைச்சே பார்க்க முடியலை!'' என்று அரட்டையை ஆரம்பித்தாள் மித்ரா.''பூமி பூஜை போட்டாச்சு... சீக்கிரமே,
 பொய்யான, 'பில்'லா போடுறாங்க, 'தில்'லாவரி கட்டாமல் நல்லா கட்டுறாங்க கல்லா!

ஈச்சனாரி கோவிலுக்குப் போவதற்காக, டூவீலரை உக்கடம் 'ஸ்டாண்ட்'டில் போட்டு விட்டு, சித்ராவும், மித்ராவும் டவுன் பஸ் ஏறினர். அதிசயமாக, கூட்டம் குறைவாக இருந்தது.''அக்கா! இன்னும் பாலம் கட்டவே ஆரம்பிக்கலை... அதுக்குள்ள 'இவ்ளோ' டிராபிக்கா இருக்கு. கட்ட ஆரம்பிச்சிட்டா, நினைச்சே பார்க்க முடியலை!'' என்று அரட்டையை ஆரம்பித்தாள் மித்ரா.''பூமி பூஜை போட்டாச்சு... சீக்கிரமே, வேலை ஆரம்பிச்சிருவாங்க... முதல்ல, உக்கடம் - கரும்புக்கடைக்கு இடையில துாண்களை கட்டப்போறாங்களாம். பாலத்துல செய்ய வேண்டிய 'சேஞ்சஸ்' பத்தி, மும்பை கன்சல்டன்சிக்காரங்க, ரெண்டு மாசத்துக்குள்ள 'ரிப்போர்ட்' கொடுத்த பிறகு தான், 'செகண்ட் பேஸ்' வேலைய ஆரம்பிப்பாங்களாம்!'' என்றாள் சித்ரா.''இதுலயாவது, அரசியல் தலையீடு இல்லாம இருந்தா, பாலம் நல்லா வரும்,'' என்ற மித்ராவிடம், ''நம்ம ஊருல அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை மித்து... ஒரு சில எம்.எல்.ஏ.,க்களைப் பத்தி, வர்ற 'கம்பிளைண்ட்'களைப் பார்த்தா, இவுங்களை எல்லாம் நம்ம மக்கள் எப்பிடித்தான் தேர்ந்தெடுத்தாங்கன்னு மனசு கொதிக்குது... ஒரு எம்.எல்.ஏ., போலி மது பேக்டரியே நடத்துறார்ங்கிறாங்க. இன்னொரு எம்.எல்.ஏ., பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி, 'ஏசி பார்'னு சொத்துக்களா வாங்கிக் குவிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்... கோர்ட்டுக்குப் பக்கத்துல, அவர் வாங்கியிருக்குற 'ஏசி பார்'ல, 'டாஸ்மாக் கடை'யோட பேருல 'பில்'லு போட்டு, சரக்கு இறங்குதாம். டாஸ்மாக்ல இருக்குற டிரான்ஸ்போர்ட் மேனேஜர் ஒருத்தர் தான், இந்த 'பிராடு வேலை'க்கு மாஸ்டர் மைன்ட்'ன்னு சொல்றாங்க. எப்எல் 2, எப்எல் 3 லைசென்ஸ் 'பார்'களுக்கு, ஜிஎஸ்டி அதிகம்கிறதால, டாஸ்மாக் கடைகள் பேருல 'பில்'லைப் போட்டு, கிளப், ஓட்டல்கள்ல சரக்கு இறக்கிருவாராம்,'' என்றாள் மித்ரா.''இதுல எப்பிடி, அவருக்கு காசு கிடைக்குது?'' என்று கேட்ட சித்ராவிடம், ''டாஸ்மாக்கை விட கிளப், ஓட்டல் 'பார்'கள்ல, சரக்கு விலை அதிகமாம். கடை பேருல 'பில்'லு போட்டு, அங்க இறக்குனா வரி குறைவு; லாபம் அதிகம். ஒரு பீருக்கு 20 ரூபா, 'ஆப்' பாட்டிலுக்கு 40 ரூபா, ஒரு 'ஃபுல்' பாட்டிலுக்கு 80 ரூபா வரைக்கும் 'பங்கு' வாங்கிக்கிறாராம்... எந்த டாஸ்மாக் கடை பேருல 'பில்'லு போடுறாரோ, அந்த கடை சூபர்வைசருக்கு, பாதிப் பங்காம். இதனால, கவர்மென்ட்டுக்கு, மாசத்துக்கு பல லட்ச ரூபா நஷ்டம்கிறாங்க!'' என்றாள் மித்ரா.''அவரைப் பத்தி, இன்னொரு தகவல் கேள்விப்பட்டேன். ''போன வாரத்துல ஒரு நாள், நைட் ஒரு மணிக்கு, போதையில படுவேகமா 'பைக்' ஓட்டிட்டுப் போயிருக்காரு. எஸ்.ஐ., ஒருத்தரு நிறுத்தி கேஸ் போட முயற்சி பண்ணுனப்போ, 'என்கிட்ட இருந்த மூணு லட்ச ரூபாயைக் காணோம்னு மேலதிகாரிகள்ட்ட கம்பிளைண்ட் பண்ணப்போறேன்'னு மெரட்டிருக்காரு. ''அந்த எஸ்ஐ, 'ரிட்டயர்டு' ஆகப்போறவராம். பயந்து, மன்னிப்புக் கேட்டு அனுப்பி விட்டுட்டாராம்,'' என்றாள் சித்ரா.இருவருக்கும் அருகில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர், 'ரவி... ஷாஜியை கூப்பிட்டு நாளைக்கு வந்துருங்க' என்று அலைபேசியில் பயங்கர சத்தத்துடன் பேசினார். சித்ராவைப் பார்த்து சிரித்தபடியே, 'டாபிக்'கைத் தொடர்ந்தாள் மித்ரா...''எம்.எல்.ஏ., ஒருத்தரு, கேஸ் ஏஜென்சி வாங்கிருக்கிறதா சொன்னியே... அந்த 'டோட்டல்' சொத்தும், அவரோட மக பேருல வாங்கிருக்காராம். நம்ம டிஸ்ட்ரிக்ட்ல அன்னதானம் போடுற 110 கோவில்களுக்கும், சிட்டியில இருக்குற அத்தனை 'டாஸ்மாக் பார்'களுக்கும் அங்கதான் கமர்சியல் சிலிண்டர் வாங்கணும்னு நச்சரிக்கிறாராம். ஆனா, 'ரேட் அதிகம்'னு இ.ஓ.,க்களும், பார் நடத்துறவுங்களும் யோசிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சிக்காரங்களுக்கு இது அறுவடைக்காலம்... ஆளுங்கட்சி பிரமுகர்ட்ட எடுபிடியா இருந்த ஒருத்தரை, அரசு இ-சேவை மையங்கள்ல கவர்மென்ட் கலெக்ஷனை வாங்குற பொறுப்புல போட்ருக்காங்களாம். அவரு, 'மக்கள்ட்ட 50 ரூபாய்க்கு 200 ரூபா வாங்குறீங்கல்ல... ஒவ்வொரு மையத்துல இருந்தும், மாசத்துக்கு அஞ்சாயிரம் மாமூல் கொடுங்க'ன்னு 119 மையங்களுக்கும் உத்தரவு போட்ருக்காராம். ரெவின்யூகாரங்க, புலம்புறாங்க,'' என்றாள் சித்ரா.''யாரு புலம்புனா என்னன்னு மாவட்ட ஆபீசர் ஜாலியா இருக்காராம்... ஏன்னா, அடுத்த வருஷமும் அவர் இங்க 'கண்டினியூ' பண்றதுக்கு 'சிக்னல்' கிடைச்சிருச்சாம்,'' என்ற மித்ராவிடம், ''அதுக்காக, கார் கதவைத் திறந்து விடுறது, தண்ணி பாட்டிலைத் திறந்து கொடுக்குறது, ஏர்போர்ட்லயும், பங்ஷன்லயும், ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து காத்துக்கிடக்கிறதுன்னு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்களுக்கு மட்டையா மடங்குறது என்ன நியாயம்னு கீழ் மட்டத்துல இருக்குற ஆபீசர்களே கொதிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''நியாயத்தைப் பத்தி நம்ம ஊருல பேசவே முடியாதுக்கா... சூலுார்ல பான்மசாலா பேக்டரி, அஞ்சு வருஷமா நடந்திருக்கு. இப்போ, சிபிஐ வருதுன்னு தெரிஞ்சதும், திடீர்னு 'ரெய்டு' நடத்திருக்காங்க. அதுலயும் என்ன பிடிச்சாங்கன்னு ஒரு 'டீட்டெயிலும்' சொல்ல மாட்டேங்கிறாங்க. அங்க 'ரெய்டு' போன பெரிய ஆபீசரே, இத்தனை வருஷமா மாமூல் வாங்கிட்டு, இப்போ 'கேம்' ஆடுறார்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து... மத்த முக்கிய அதிகாரிகளை எல்லாம் வேற இடத்துக்கு அனுப்பிட்டு, இந்த ஆபீசர் மட்டும் போனதைப் பார்த்தா, சரக்கைப் பிடிக்கப் போனாரா, சாட்சியை அழிக்கப் போனாரான்னு 'டவுட்' ஆகுது. ஆனா, இந்த பேக்டரியில, போலீஸ், புட் சேப்டி ஆபீசர்க எல்லாருமே நல்லா காசு பாத்திருக்காங்கன்னு தெளிவாத் தெரியுது!'' என்றாள் சித்ரா.''உண்மைதான்க்கா... இந்த கம்பெனி தயாரிச்ச பாக்குல 'நிகோடின்' இருக்குன்னு வேற மாவட்டத்துல கேஸ் போட்ருக்காங்க. அதுக்கு அப்புறமும் இதுக்கு லைசென்ஸ் கொடுத்திருக்காங்க. அதுலயும் 2014ல இருந்த ஆபீசர், நாலு வருஷத்துக்கு லைசென்ஸ் 'ரினிவல்' பண்ணிக் கொடுத்திருக்கிறதைப் பார்த்தா, 'வெயிட்'டா வாங்கிருப்பாரு போலிருக்கு,'' என்றாள் மித்ரா.''நம்மூரு, போதை நகரமா மாறிட்டு இருக்கு மித்து... நம்ம சுங்கம் பை-பாஸ்ல, போன வாரம் 40 கிலோ கஞ்சா பிடிச்சிருக்காங்க. எப்ஐஆர்லயும் அவ்ளோ அளவு போட்ட பிறகு, திடீர்னு 35 கிலோன்னு மாத்திட்டாங்களாம். அஞ்சு கிலோ கஞ்சாவை, 'எல் அண்ட் ஓ' பாக்குற 'இன்ஸ்' ஆட்டையப் போட்டுட்டாராம்,'' என்றாள் சித்ரா.''அதை வச்சு அவரு என்ன பண்ணுவாரு... யாராவது சின்ன வியாபாரிக்கு வித்து, காசு பார்ப்பாரு... இல்லேன்னா, யார் மேலயாவது, பொய்க்கேசு போடுறதுக்கு 'ஸ்டாக்' வச்சுக்குவாரு,'' என்றாள் மித்ரா.பண்பலையில் 'ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை... காஞ்சு போச்சுடா' என்று ராஜா பாடிக் கொண்டிருந்தார்.''அக்கா... ஏப்ரல், மேயில யாருக்கு காஞ்சு போனாலும், பள்ளிக் கல்வித்துறைக்கு அறுவடை காலம் தான்... எந்த ஸ்கூல்ல, எந்த சப்ஜெக்ட் டீச்சர் போஸ்ட்டிங் காலியா இருக்குன்னு 'சீக்ரெட் லிஸ்ட்' தயாராகுதாம்... இடத்தைப் பொறுத்து, மூணுல இருந்து அஞ்சு லட்சம் வரைக்கும் டிரான்ஸ்பருக்கு 'ரேட்' போகுமாம்... இந்த பட்டியல் நீளத்தைப் பொறுத்து தான், இங்க இருக்குற அய்யாவோட அண்ணன் 'சீட்', இருக்குமா, கிழியுமான்னு தெரியும்!'' என்றாள் மித்ரா.''அங்க அப்பிடியா... அரசு உதவி பெறும் கல்லுாரிகளைக் கவனிக்கிற ஒரு முக்கியமான ஆபீசர், ஒவ்வொரு காலேஜ்லயும் நல்ல நல்ல பாடப்பிரிவுல ரெண்டு ரெண்டு சீட் வாங்கி வச்சிருக்காராம்; எல்லாத்தையும் வித்துருவாராம். அது மட்டுமில்லாம, கவர்மென்ட் தர்ற தர ஊதியத்தை அனுமதிக்கிறதுக்கு ஆளுக்கு அஞ்சாயிரம் வசூல் பண்றாராம்,'' என்றாள் சித்ரா.''நிஜமாவே இது வசூல்ராஜாக்களுக்கு வசந்த காலம்... பொள்ளாச்சி 'ரூட்'ல இன்னும் நிறைய 'டிரெயின்' விடாம இருக்கிறதுக்காக, மாசாமாசம் ரயில்வே ஆபீசர்களுக்கு மாமூல் பெட்டி போகுதாம். செங்கோட்டைக்கு விட்ட சிறப்பு ரயில், நல்ல கூட்டத்தோட போயும், அதை நிறுத்திட்டாங்க. அதுக்கு 'ஆம்னி பஸ்'காரங்க தந்த பெட்டிதான் காரணம்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''மித்து... ஆட்சிக்கு ஆபத்து இல்லைன்னதும், நம்மூர்ல ஆளுங்கட்சிக்காரங்க சொத்து வாங்கிக் குவிக்கிறாங்க. ரயில்வே ஸ்டேஷன் எதிர்ல, விலை உயர்ந்த ரத்தினத்தோட பேரு கொண்ட ஓட்டலை, 45 கோடி ரூபாய்க்கு ஆளுங்கட்சி பினாமி ஒருத்தரு வாங்கிருக்காரு. இதுல 'பியூட்டி' என்னன்னா, வாங்கிக் கொடுத்தது, அதே ஏரியாவுல ஓட்டல் நடத்துற பிஜேபிகாரராம்,'' என்றாள் சித்ரா.பஸ்சில் கூட்டம் அதிகமானதால் இருவரும் பேச்சை நிறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X