முதியோரை பேணுவதே முக்கிய கடமை| Dinamalar

முதியோரை பேணுவதே முக்கிய கடமை

Added : மே 02, 2018
Share
முதியோரை பேணுவதே முக்கிய கடமை

உலக மொத்த மக்கள் தொகை 760 கோடி. இதில் 13 சதவீதத்தினர் 60 வயதை கடந்தவர்கள் என 2017ம் ஆண்டு ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது. ஜப்பானில் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு முதியோர். அதற்கு அடுத்து ஜெர்மன், இத்தாலியில் 28 சதவீதம் பேர் முதியோர்.இந்தியாவின் 2011 மக்கள் தொகையில் 10 கோடியாக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2016 ல் 11.3 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது எட்டுபேரில் ஒருவர் முதியவர். உலக முதியோர் ஜனத்தொகையில் இந்தியா 2வது இடம். இந்தியாவின் 25 கோடி குடும்பங்களில் 14 சதவீத குடும்பங்களில் முதியோர் மட்டுமே உள்ளனர். முதியோர் சிலர் குடும்பத்தினரோடும், தனித்தும் வாழ்கின்றனர். வசதி படைத்தவர்கள் கடமைகள் முடிந்து, முதியோர் இல்லங்களில் காலம் கழிக்கின்றனர். இது நாகரீக வளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.
யாருடைய பராமரிப்பு : நல்ல சுபாவமுள்ள பெற்றோரை பிள்ளைகள் அன்பாக பராமரிக்கின்றனர். பெரும்பாலும் தயாராகத்தான் இருக்கும். தந்தையாக இருந்தாலும் அவரது சுபாவம் பிடிக்கவில்லையென்றால் பிள்ளைகள் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகன்- மருமகள் பராமரிப்பில் இருப்பதை விட மகள்- மருமகன் பராமரிப்பில் இருப்பதையே விரும்புகின்றனர். இவர்களை விட பெண்கள் மட்டும் உடைய குடும்பங்களில் அவர்களுடைய பெற்றோர்கள் இன்னும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றனர்.தன் கணவர் உதாசீனப்படுத்தினாலும் மாமனார் மாமியார்களை தன் பெற்றோரை போன்று பாதுகாக்கும் சில பாசமிகு மருமகளையும் ஆங்காங்கே காணலாம். பண்புடனும் பொறுமையாகவும், குடும்பத்திற்கு உதவிகரமாக உடைய பெற்றோர்களே, பிள்ளைகள் குடும்பத்தில் நீடித்து நிலைக்கின்றனர். இதற்கு எதிர்மறையாக நடந்து கொள்ளும் பெற்றோர் தாங்களாவே வெளியேறவோ அல்லது பிள்ளைகள் மூலமாக வெளியேற்றப்படும் நிலைக்கோ ஆளாகி விடுகின்றனர். தனித்து வாழும் பெண்களை விட தனித்து வாழும் ஆண் முதியோர் படும் வேதனை மிகக்கொடுமையானது. வளர்ந்த நாடுகளில் 'முதுமை' என்பது ஒரு அரிய சொத்து என கருதி பராமரிக்கின்றனர். அதற்கு மாறாக இந்தியாவில் பெற்றோர் நிலம், வீடு, ஆபரணங்கள் பொருள்களை பலவந்தமாகக்கூட பறிக்கும் இரக்கமற்ற பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துக்களை எழுதிக்கொடுத்தும் பெற்றோர் சரிவர பராமரிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை.சில குடும்பங்களில் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று விடும் வேளையில் பெற்றோர் பொருளாதார ரீதியாக வசதி இருந்த போதிலும் பிள்ளை பாசத்திற்கு ஏங்கி தவிக்கின்றனர். பெற்றோர் பராமரிப்பு சட்டம் 2007 இன்னும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மும்பையில் கோரம் : மும்பை அந்தேரியில் நடந்த கோர சம்பவம் இது. அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்த ரித்துராஜ் சகானியின்,43, தந்தை முன்பே இறந்து விட்டார். தாய் அதே பகுதியில் 10வது அடுக்கு மாடியில் தனியாக வசித்தார். பேச முயன்றபோது தொடர்பு கிடைக்கவில்லை. உறவினர்கள் யாரும் இல்லாததாலும், சுற்றத்தார் தொடர்பு இல்லாததாலும் 15 மாதங்களுக்கு பிறகு தன் தாயை காண, சகானி இந்தியா வந்த போது அவர் கண்ட காட்சி அனைவரின் இரத்தத்தையும் உறைய வைத்தது. சேலையில் மூடப்பட்டிருந்த எலும்பு கூடுடன் அவரது தாய் சோபாவில் பல மாதங்களுக்கு முன்பே இறந்து கிடந்தார். கடல் கடந்து பொருளீட்டும் பணிச்சுமையும்,குடும்ப சூழ்நிலைகளும் காரணமாக இருந்தால் கூட 15 மாதங்கள் வரை ஒரு மகன் தன் தாயுடன் தொலைபேசி தொடர்புகூட இல்லாமல் வாழும் நிலை எந்த இந்தியருக்கும் வரக்கூடாது. குஜராத், ராஜ்கோட்டில், பல் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் சந்தீப் நத்வாணி,36. இவரது தாய் ஜெயஸ்,64, நெடுநாள் நோயாளி. இவர் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து இறக்க நேரிட்டது. தன்தாய்க்கு மூளை சம்பந்தப்பட்ட நோய் இருப்பதால் மாடிக்கு சென்று தவறி விழுந்து இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு பின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதித்த போது, தாயாரை மேல்மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து தள்ளிவிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதனால் நம்மிடம் மனிதம், தாய்ப்பாசம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. சில குடும்பங்களில் தனித்து விடப்பட்ட, ஊதாசீனப்படுத்தப்பட்ட முதியோர் தங்கள் பிள்ளைகள், உறவினர் கொடுமை தாங்காமல் தாங்களாவே தற்கொலை செய்து கொள்ளவும் துணிகின்றனர். என்னென்ன வழிகளில் தங்களை மாய்த்துகொள்ள முடியுமோ அனைத்தையும் முயற்சிக்கின்றனர். வறுமையின் பிடியில் வாழும் முதியோர் சந்திக்கும் பிரச்னை எண்ணிலடங்காது. தான் வசிக்கும் ஓட்டை குடிசையும், கிழிந்து போன கீற்றுக்கூரைகளும், குளிர்ந்த தரையும், உடுத்தும் குளிர் தாங்கா உடையும் வீட்டினுள் வீசும் குளிர் நிறைந்த காற்றும் முதியோர் உயிருக்கு உலை வைக்கிறது.
முதியோர் சமுதாய மையம் : முதியோரை பாதுகாக்க தனியாக வாழ்வோரின் தொடர்பு எண்களை அவர்களுக்கான ெஹல்ப் லைனில் அளித்து அவர்களிடையே தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு ஊரிலும் முதியோருக்கென சமுதாய மையம் துவங்கிடலாம்.வாரம் ஒருமுறை பரிசோதிக்க நடமாடும் மருத்துவமனை, மதிய உணவு, படிக்க நாளேடுகள், வானொலி, இரவு தங்கல் வசதி என கிராம ஊராட்சிகள் மூலம் இலவசமாக அளிக்கலாம். பயன்பெறும் முதியோர் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகளை கண்டறிந்து பயனுறச்செய்யலாம்.மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு முதியோர் கிராமத்தை உருவாக்கலாம். இதற்கு பிரபல நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசின் முதியோர் இல்லங்கள் : இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் அரசே முதியோர் இல்லங்களை பராமரித்து வருகிறது. ஒவ்வொரு முதியவரின் மணிக்கட்டிலும் அவர்கள் இருப்பிடத்தை காட்டக்கூடிய ஒரு கருவி கட்டப்பட்டிருக்கும்.அதிலேயே அவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதய துடிப்பு போன்ற விபரங்களை தெரிந்து கொள்கின்றனர்.அவர்கள் குளியலறையில் இருக்கும் வேளையில் கூட இக்கட்டான சூழ்நிலை என்றால் ஒரு பட்டனை அழுத்தினால் இல்ல மேலாளருக்கும், ஆம்புலன்ஸ் மையத்திற்கும் உடனே தகவல் சென்று விடும். அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர் மருத்துவமனையில் இருப்பார்.தன்னந்தனியாக வாழும் முதியவர்கள் இருப்பிடத்தில் இதுபோன்ற தொழில் நுட்ப வளர்சசியின் பயன்கள் சென்றடைந்தால் மும்பையில் 15 மாதங்களாக ஒரு தாயின் சடலம் கேட்பாரற்று சோபாவிலேயே கிடந்து இருக்காது. பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் வளர்ச்சி என்று கூற முடியாது. சமுதாய ரீதியிலும் வளரும்போதுதான் இந்தியா முழுமையான வளர்ச்சி அடையும்.
--முனைவர் எம்.பி. போரையன்காந்திகிராம கிராமிய பல்கலை, திண்டுக்கல்.94861 45595

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X