திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 'ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்' எனக் கூறிய மாணவி, அதேபோல், சாதித்து காட்டினார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே, தேவனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நீலகண்டன் என்ற மகனும், நித்யா என்ற மகளும் உள்ளனர்.இதில், நித்யா, 34. கடந்த, 2013ல், ஐ.ஆர்.எஸ்., தேர்வெழுதி வெற்றி பெற்று, வருமானவரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
'தினமலர்'
இவர், திருப்பூர், பாளையக்காடு முருகப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில், 1998 - 99ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 468 மதிப்பெண்பெற்றார்.அப்போது, 'தினமலர்' திருப்பூர் பகுதியில் வெளியான, 'சாதனை மொட்டுகள்' பகுதிக்கு, அவர் அளித்த பேட்டியில், 'கல்வியில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ்., ஆவது என்லட்சியம்' என்றார்.நம்பிக்கையை சிறிதும் தளரவிடாத அவர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,085 மதிப்பெண்பெற்றார்.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அதன்பின், ஐதராபாதில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருப்பினும், அவரது ஐ.ஏ.எஸ்., கனவு, அவரது துாக்கத்தை கலைத்து கொண்டே இருக்க, ஐதராபாதில், சிறப்புப் பயிற்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினார். நான்காவது முயற்சியில், அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
223வது, 'ரேங்க்'
நித்யா கூறிய தாவது:இன்ஜி., படிப்பு முடித்து, வேலை செய்து கொண்டே, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினேன். நான்காவது முயற்சியில், இந்திய அளவில், 223வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றேன்.
ஒன்றரை வயது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். கிராமப்புற மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், எனது பணி அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
தாய் கொலை
மகன் கைது
திருப்பூர், மே 3-
திருப்பூர் அருகே, தாய் தலையில், 'டிவி'யை போட்டு, கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், குஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜாதேவி, 75. மகன் சிவசண்முகம், 45, உடன், காங்கேயத்தில், வாடகை வீட்டில் வசித்தார். சிவசண்முகம் சற்று மனநலம் குன்றியவர்; திருமணமாகவில்லை.
தாயுடன் வசித்து வந்த அவர், திடீரென வெளியே செல்வதும், இரண்டொரு நாள் கழித்து திரும்புவதுமாக இருந்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியேறிய சிவசண்முகம், நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும், வீடு திறக்காமல் இருந்தது. அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியே பார்த்த போது, வீட்டினுள் ரத்தம் சிந்தி கிடந்தது.
போலீசார், கதவை உடைத்து பார்த்த போது, சரோஜாதேவி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
'டிவி'யை தலையில் போட்டு, அவரை சிவசண்முகம் கொலை செய்ததும், வீட்டின் பல இடங்களில் அவரது உடல் இழுத்து செல்லப்பட்டதும் தெரிந்தது. வீட்டு குளியலறையில் பதுங்கி
யிருந்த சிவசண்முகத்தை போலீசார் கைது
செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'மன நல சிகிச்சை பெற்று வந்த சிவசண்முகம், ஏதோ ஆவேசத்தில், 'டிவி'யை தாயின் தலையில் போட்டு கொன்று உள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது' என்றனர்.
தந்தையின் குடிப்பழக்கத்தால்
நெல்லை மாணவன் தற்கொலை
திருநெல்வேலி, மே 3--
டாக்டராகும் லட்சியத்துடன், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'மதுக்கடைகளை இனியாவது மூடவேண்டும்' என, அவர் எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி மாடசாமி. இவரது மகன், தினேஷ் நல்லசிவன், 18. பிளஸ் 2 தேர்வு முடித்து, 'நீட்' தேர்வுக்காக பயிற்சி பெற்றார்.
தினேஷின் தாய், இசக்கி யம்மாள் சில ஆண்டுக்கு முன் இறந்தார். பின், மாடசாமி இரண்டாவது
திருமணம் செய்து கொண்டார்.
தினேஷ், மதுரையிலுள்ள பெரியப்பா வீட்டில் தங்கி, 10ம் வகுப்பு படித்தார். பின், நாமக்கல்
மாவட்டம் தனியார் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதினார்.
தினேஷின் தம்பி இசக்கிராஜா 13, தங்கை தனுஸ்ரீ, 11, ஆகியோர் சொந்த ஊரில் வசிக்கின்றனர். கூலி வேலைக்காக மாடசாமி கேரளா சென்று விட்டார்.
தந்தையின் குடிப்பழக்கத்தால் தினேஷ் விரக்தியில் இருந்தார்.
மதுரையில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே ரயில்வே மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
உடலை மீட்ட போலீசார் சோதனை செய்த போது, சட்டைப்பையில் இருந்து கடிதத்தை எடுத்தனர். அதை வைத்து அவர், தினேஷ் என தெரிந்தது.
கடிதத்தில், 'அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்து போனதற்கு அப்புறமாவது நீ குடிக்காமல் இரு. நீ குடிப்பதால், எனக்கு கொள்ளி வைக்காதே. இதுதான், என் ஆசை. அப்போது
தான், என் ஆத்மா சாந்தியடையும்.
இனியாவது பிரதமரும், முதல்வரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்' என, எழுதியுள்ளார். தினேஷ் உடல் கே.ரெட்டியபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மதுக்கடைக்கு விதி விலக்கா
நெடுஞ்சாலை அருகே, 500 மீட்டருக்குள் உள்ள மதுக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, பல கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், தினேஷ் தற்கொலை செய்துகொண்ட பாலத்தின் அருகே உள்ள, மதுக்கடை மூடப்படவில்லை.
இந்த கடையில், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், 'பார்' நடத்துகிறார். இதனால், விதிவிலக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவன் இறப்புக்கு பிறகும் மதுக்கடை அடைக்கப்படவில்லை; விற்பனை கனஜோராக நடந்தது.
ஒரே குடும்பத்தில்
3 பேர்
தற்கொலை
சேலம், மே 3-
கடனை கட்ட முடியாததால், ஒரே குடும்பத்தில், மூவர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஜங்கம சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜுனன், 55; இவருக்கு, இரண்டு மனைவியர். 35 வயதான இரண்டாவது மனைவிக்கு, 9 - 7 வயதில் இரு மகன்கள் இருந்தனர். அர்ஜுனன், இரண்டாவது மனைவியுடன் வசித்தார். 3 ஏக்கர் நிலத்தில், பயிர் செய்ய, உரக்கடை உரிமையாளர் குமரனிடம், மூன்று ஆண்டுகளுக்கு முன், மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடனை அடைக்க, அர்ஜுனன் சிரமப்பட்டு வந்தார்.
நேற்று காலை, அவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, அர்ஜுனன் உட்பட, நான்கு பேரும் மயங்கி கிடந்தனர். போலீசார், கதவை உடைத்து பார்த்த போது, அர்ஜுனன், இரண்டாவது மனைவி, அவரது, 7 வயது மகன் விஷம் குடித்து இறந்து கிடந்தனர்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த, 9 வயது சிறுவனை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கடன் பிரச்னையில், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது.
- பதிவாளர்கள்
இடமாற கவுன்சிலிங்?
சென்னை, மே 3-
கலந்தாய்வு முறையில், சார் - பதிவாளர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு வழங்க வேண்டும் என,
தமிழக பதிவுத்துறை
அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் நடந்த, இச்சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள தீர்மானங்கள் விபரம்:
பதிவுத் துறையில், இடமாறுதல் நடைமுறைகள் தொடர்பாக பதிவுத்துறை தலைவர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில், கலந்தாய்வு முறையில், சார் - பதிவாளர்களுக்கான இடமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். பதவி உயர்வுக்கான தகுதி நிலை பட்டியல்களை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நேற்றைய கொலை, தற்கொலை, பலி
லாரி மோதி ஓய்வு பெற்ற எஸ்.ஐ., பலி
சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர், அல்போன்ஸ், 65; ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்.
இவர், நேற்று மதியம், 2:15 மணியளவில், இருசக்கர வாகனத்தில், பெரம்பூர் ரயில்வே குடியிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாநகராட்சி குப்பை லாரி, அவரது வாகனத்தின் மீது உரசியது. அதில் நிலை தடுமாறி விழுந்த அவர், லாரியில் சிக்கி காயமடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அல்போன்ஸ் இறந்தார். அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
வயிற்று வலியால், 'மெக்கானிக்' தற்கொலை
சென்னை, மடிப்பாக்கம், பாண்டித்துரை தெருவைச் சேர்ந்தவர், பாலாஜி, 28; மெக்கானிக். இவருக்கு, மனைவி மற்றும், 2 வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், பாலாஜி, நேற்று முன்தினம், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்
சிறையில் கைதி தற்கொலை
ஈரோடு மாவட்டம், ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 42. இவர், 2015ல் சத்தியமங்கலம் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று காலை, சிறையில், சீனிவாசன் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்; வழியிலேயே உயிரிழந்தார்.
மண் சரிந்து தொழிலாளி பலி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்தவர் மலைக்கண்ணன், 50; கிணறு வெட்டும் தொழிலாளி. இவர், சில தொழிலாளர்களுடன், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பூவாணிபேட்டை பகுதியில் நேற்று, ஒருவரது வீட்டு கிணற்றை துார்வாரும் பணியில் ஈடுபட்டார். கிணற்றுக்குள் திடீரென மண் சரிந்து, மலைக்கண்ணனை மூடியது. தீயணைப்பு வீரர்கள், 12 மணி நேரம் போராடி, அவரது உடலை மீட்டனர்.
தொழிலாளி தற்கொலை
பெரம்பலுார், ஆலம்பாடி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபன்ராஜ், 24; மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், ஒப்பந்த தொழிலாளர். இவருக்கும், முதன்மை செவிலியரான ராஜகோபால், 45, என்பவருக்கும், பணி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரது துாண்டுதலில், டாக்டர் ஒருவர், ஸ்ரீபன்ராஜை கண்டித்து, திட்டியுள்ளார்.
அப்போது ராஜகோபால், ஸ்ரீபன்ராஜை கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிகிறது. மனமுடைந்த ஸ்ரீபன்ராஜ், வீட்டில் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், நேற்று இறந்தார்.
பஸ் மோதி மாணவர் பலி
நாகர்கோவில் அருகே பள்ளம் அன்னை நகரை சேர்ந்தவர் பாலமோகன். இவரது மகன் பெர்டினாந்து பவுல், 15. சமீபத்தில், 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மகள் பெரோனாதமி, 13. நேற்று காலை பெர்டினாந்து பவுல், பைக்கில், தங்கையுடன் கடைக்கு சென்றார்.
அப்போது எதிரே வந்த பஸ், பைக் மீது மோதியது. இதில், பெர்டினாந்து பவுல் பலியானார்.
விபத்தில் போலீஸ்காரர் பலி
புதுக்கோட்டை, தெம்மாவூரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 28; மாத்துார் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர். ஏப்., 26ல், வடகாடு பகுதியில் நடந்த சாலை விபத்தில், பார்த்திபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர், நேற்று உயிரிழந்தார்.
நிலை தடுமாறி விழுந்தவர் பலி
சென்னை, புழல், காவாங்கரையைச் சேர்ந்தவர், ராஜாமணி, 64; 'ஏசி' மெக்கானிக். நேற்று காலை, 9:30 மணியளவில், இருசக்கர வாகனத்தில், வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டார். அப்போது, நிலைத் தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த
மருத்துவர்கள், ராஜாமணி இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.