அடுத்த தலைமுறைக்கான சிந்தனை! '

Added : மே 03, 2018
Share
Advertisement
 அடுத்த தலைமுறைக்கான சிந்தனை! '

அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பவன் தலைவன். அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பவன்
அரசியல்வாதி' -ஒரு அறிஞன்

சொல்லியது. வாழையடி வாழை என்பது போல, அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறை என்று தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பது தானே உயிரினங்களின் இயல்பு. மனித இனமும் அப்படித்தானே.அடுத்த தலைமுறையை பற்றிய அக்கறையை, சிந்தனை, செயல் பாட்டின் மூலம், நாட்டின் தலைவன், வீட்டின் தலைவன், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள்
ஆகியோரும் வெளிப்படுத்த வேண்டுமல்லவா?

ஒரு நாடு வல்லரசாக வளர்வதற்கு அதுவும் ஒரு வழிதானே! ஒவ்வொரு குடும்பத்திலும் அடுத்தடுத்து தலைமுறைகள் தழைத்து வளரத்தான் செய்கின்றன.குடும்பத்தலைவன் பொறுப்பு
ஒரு குடும்ப தலைவனின் முக்கியமான பொறுப்பும் கடமையும் என்ன? சம்பாதிப்பது, வாரிசுகளை படிக்க வைப்பது. சொந்தமாக வீட்டை கட்டிக் கொள்வது. வீட்டுக்குதேவையான வசதிகளையெல்லாம் அமைத்து கொள்வது. டூவீலர், கார் வாங்குவது, பிள்ளைகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது. நல்ல வேலை கிடைக்க உதவுவது அல்லது தொழில்
வாய்ப்புகளை அமைத்து தருவது.

அது மட்டுமல்லாமல் தான் அடைந்த உயரத்தை விட, இன்னும்அதிகமான உயரத்தை, தனது அடுத்த தலைமுறையை எப்படி தொட வைப்பது என்பது குறித்து சிந்தனை, முயற்சி, ஊக்கம் தருதல் ஆகியவை. ஆனால் பொறுப்பும் கடமையும், இதோடு முடிந்து விடலாமா? இதையும் தாண்டி, தன் வீட்டு அடுத்த தலைமுறையை அற்புதமாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தானே மிகப்பெரும் பொறுப்பு.அதற்கான சிந்தனை சிறப்பாக இல்லையென்றால் அவன் என்ன குடும்பத் தலைவன்? சரி, அதுஎப்படி அற்புதமாக வார்த்து எடுப்பது?

நேர்மை சிந்தனைகளையும், ஒழுக்க உணர்வுகளையும் ஊட்டி வளர்ப்பது, தன்னம்பிக்கையாலும், தளராத மன உறுதியாலும்,சமாளித்து, சாதிக்கும் திறனை இளம் பருவத்திலேயே போதித்து புகட்டுவது. எவரிடமும் பண்பாட்டுடன் பழகுவது. வளர்ச்சிக்கு வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பழகிக் கொள்ள வைப்பது. இந்த வழிமுறைகள் போதும், ஒரு குடும்பத்தலைவன், தனது அடுத்த தலைமுறையை அற்புதமாக செதுக்கி வளர்ப்பதற்கு.அன்றைய தலைவர்கள்நாட்டின் தலைவர்கள் அன்று ஒரு மாதிரி, இன்று வேறு மாதிரி. மன்னனுக்குரிய பொறுப்புடன், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணையை கட்டிய கரிகால் சோழன், ஆங்கிலேயராக இருந்தாலும் இந்தியர்களுக்காக முல்லை பெரியாறு அணையை, தன் சொத்துக்
களை விற்று கட்டிய பென்னி குயிக்,நாடெங்கும், சாலை ஓரமெல்லாம் மரம் வைத்த அசோகன் எங்கே.

நாடு சுதந்திரமடைந்த பின், விவசாயத்தையும் தொழிலையும் கருத்தில் வைத்தது பெரும் பெரும் அணைகளையும், தொழிற்சாலைகளையும் நிர்மாணித்தது காமராஜ் அரசு. இந்த தலைவர்கள் எல்லாம் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்தவர்கள்.''முறைசெய்து காப்பாற்றும்
மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்''நேர்மையாக ஆட்சி செய்து மக்களை
காப்பாற்றும் அரசன், கடவுளுக்கு நிகரானவன்.

ஆனால், இன்றைய நிலை? ஊழல் வழக்கில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மாநில முன்னாள் முதல்வரை நாடே அறியுமே. ஊழலை விடுங்கள். அடுத்த தலைமுறை பற்றிய
அக்கறை எந்த தலைவனுக்கு இருக்கிறது? நீரை, காற்றை மாசுப்படுத்தி விட்டோம், ஏரிகளையும், குளங்களையும் துார்த்து விட்டோம்.

ஓடைகளைஒடுக்கி விட்டோம். மரங்களை வெட்டினோம். காடுகள் காணாமல் போயின. சாலை ஓரமெல்லாம் குப்பையின் குவியல்கள். அடுத்த தலைமுறை பற்றி பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இருக்கிறதா? அவர்களின் மனசாட்சியே இதற்கு பதில் சொல்லட்டும்.
அக்கறை இருக்கிறதாஇளைஞர்களின் படிப்புக்கு, திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்போ, தொழில் தொடங்கும் வாய்ப்போ வழங்க வேண்டியது ஆளும் தலைவர்களிடம் இருக்க வேண்டிய அக்கறை அல்லவா? இருந்தால் ஏன் ஏராளமான இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு விமானம் ஏறுகிறார்கள்?

உள்நாட்டிலேயே பெங்களூரு, ஐதராபாத், புனே, மும்பைக்கு ரயில் ஏறுகிறார்கள்? நாம் கிரிக்கெட்டில் வென்று கோப்பையை கொண்டு வந்தால் மட்டும் போதுமா? அது விளையாட்டுத் திறன், உடல் திறன், அதிலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அதில் விளையாடும் வீரர்களை விட, நடத்துகிறவர்களும், ஒளிபரப்பும் சேனல்களும் தான் பல மடங்கு பணம் பார்க்
கிறார்கள்.

ஆனால், அறிவு திறனிலும் நாம் ஆற்றலை காட்ட வேண்டாமா? உலக அளவில் போட்டியிடும் திறனை நமது பாட திட்டம் தருகிறதா? உலக அளவு என்ன? இந்திய அளவுக்கே தமிழக
மாணவர்கள் தயங்குகிறார்களே! 'நீட்' என்றால் மிரள்கிறார்களே! கலைமாமணி விருதுகள் வருடம் தோறும் வழங்குகிறோம். தொழில் விருது, விவசாய விருது, விஞ்ஞான விருது இவற்றுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் தரலாமே!

சினிமாவும் 'டிவி'யும் மிகப்பெரிய அளவில் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துபவை. நம் நேரத்தை எடுத்து கொள்பவை. அதனால் பெரிய அளவில் சமூக மேம்பாட்டுக்கான அக்கறை
இவற்றுக்கு இருக்கவேண்டும். அடுத்த தலைமுறை மீதான அக்கறையும் அவசியம்.
பத்திரிகைகள் நாட்டு நடப்பை தெளிவாக காட்டும் கண்ணாடிகள். நாட்டில் அதிகமாக அரங்கேறுவது அவலங்களும், அநியாயங்களும் தான் என்றால் அதற்கு இவை என்ன செய்யும்? என்றாலும் சமூக பொறுப்புணர்வு அவசியம்.

மக்கள் எப்படிஇன்றைய தலைமுறை மக்களை பற்றி என்ன சொல்லலாம்? இவர்களின் பலம் என்ன? அதி புத்திசாலிகள். டீக்கடை பெஞ்ச் ஆகட்டும், 'ஏசி'., அரங்கமாகட்டும், நாட்டு நடப்பவை தெளிவாக அலசுகிறவர்கள். பலவீனம்? அளவுக்கு மீறிய சகிப்பு தன்மை. கோடிகளில் கொள்ளை போனாலும்,கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்றாலும் வருடக்கணக்காய் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

நீதி நியாயங்களை கேட்டு வெறியோடு போராடமாட்டார்கள். போராடினாலும் தனித்தனியாய் பிரிந்து பிரிந்து போராடுவார்களே தவிர, ஒன்றாய் இணைந்து, திரண்டு பலம் காட்டுவது இல்லை. இந்த பலவீனங்கள் இருக்கும் வரை, எந்த பலம் இருந்து என்ன பயன்?
அடுத்த தலைமுறை பற்றிய அக்கறை இருக்கட்டும். பஸ், ரயிலில் போகிறோம். பல மணிநேரங்கள் பயணம் செய்கிறோம். இறங்கி விடுகிறோம்,

அடுத்து யாரோ ஏறுகிறார்கள். நாம் பயணித்த அந்த நேரத்தில் அந்த இருக்கைகளை, கழிப்
பறையை சுத்தமாக வைக்கிறோமா? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது; அதனை நாம் செயல்படுத்துவது எப்போது?

வீட்டு தலைவனாக, நாட்டு தலைவனாக, ஊடகங்களாக, பொது மக்களாக, இனியாவது, நமது அடுத்த தலைமுறையை பற்றி அக்கறைப்படுவோம். வாழப்போவதோ, வீழப்போவதோ யார்? நமது வாரிசுகள் தானே! ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதையாவது யோசிப்போம்; முடி
வெடுப்போம்; செயல்வடிவம் ருவோம்; சுயநலம் மறப்போம். பொது நலம் நினைப்போம்!

-தங்கவேலு மாரிமுத்து

எழுத்தாளர், திண்டுக்கல்

93603 27848

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X