நிலத்தடியில் நீர் தேக்குவோம் வாருங்கள்

Updated : மே 06, 2018 | Added : மே 05, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
நம் நாடு உட்பட உலகின் பல நாடுகளிலும், மழைக் காலங்களில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புடன், அதிக அளவில் பயிர் சேதமும் ஏற்படுகிறது. அடுத்த சில மாதங்களிலேயே, வறட்சி ஏற்பட்டு, தண்ணீருக்காக மக்கள் தத்தளிப்பதும் நடக்கிறது. சரியான நீர் மேலாண்மை இல்லாதது தான், இதற்கு காரணம்.நிலத்தின் மேற்பரப்பில் உள்ள ஏரி, குளங்களின் நீர் கொள்ளளவு, ஒரு
உரத்த சிந்தனை, நிலத்தடி நீர்

நம் நாடு உட்பட உலகின் பல நாடுகளிலும், மழைக் காலங்களில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புடன், அதிக அளவில் பயிர் சேதமும் ஏற்படுகிறது. அடுத்த சில மாதங்களிலேயே, வறட்சி ஏற்பட்டு, தண்ணீருக்காக மக்கள் தத்தளிப்பதும் நடக்கிறது. சரியான நீர் மேலாண்மை இல்லாதது தான், இதற்கு காரணம்.

நிலத்தின் மேற்பரப்பில் உள்ள ஏரி, குளங்களின் நீர் கொள்ளளவு, ஒரு வரையறைக்கு உட்பட்டு தான் இருக்க முடியும். ஆனால், நிலத்தின் அடியில் எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் தேக்கலாம்; தேக்கிய நீரை, தேவைக்கு ஏற்ப, எடுத்து பயன்படுத்தலாம். இந்த ஐடியா, வினோதமாக இருக்கிறதா... தொடர்ந்து படியுங்கள்! மொத்த மழை நீரையும், ஒரு துளி கூட வீணாக்காமல், ஆழ்துளையிட்டு, நிலத்தடியில் சேமிக்க வேண்டும். நாம் இதுவரை செய்து வரும், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை அப்படியே, 'உல்டா'வாக, நிலத்தடியில் நீரை சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த திட்டம்! என்ன, குழப்பமாக இருக்கிறதா... அகப்பையில் வர வேண்டுமானால், சட்டியில் இருக்க வேண்டுமல்லவா... அதனால், சட்டியை முதலில் நிரப்ப வேண்டும். சட்டியாக நிலத்தடியை கருதி, அதில் சேரும் மழை நீரை சேமிக்க வேண்டும். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என, பார்ப்போம்...

தமிழகம், 1.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பு கொண்டது. 2005 - 2006 கணக்கெடுப்பு படி, சராசரியாக, 130 செ.மீ., மழை, மாநிலத்தில் பொழிகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு, 600 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது என, வைத்துக் கொள்வோம். மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து ஆறுகள் மூலம் பெறப்படும் நீர், 260 டி.எம்.சி., என கணக்கிட்டால், மொத்தம், 860 டி.எம்.சி., தண்ணீர் ஆண்டுக்கு கிடைக்கிறது. தரை மட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் அதிகபட்சமாக, 590 டி.எம்.சி., நீரை சேமிக்கலாம். மீதமுள்ள, 270 டி.எம்.சி., நீர், வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி, மனிதர்கள், கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், பெரு மழைக் காலங்களில், கடலுக்கு வீணாகச் சென்றடையும் நீர், 180 டி.எம்.சி., என, கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம், வீணாகும் நீர், 450 டி.எம்.சி., ஒரு சொட்டு நீரையும் வீணாக்காமல், நிலத்தடியில் சேமிக்க, 100 அடி ஆழத்திற்கு, 1 அடி விட்டமுள்ள ஆழ்துளை கிணறுகளை, 200 - - 300 அடி இடைவெளியில் வரிசையாக, கிழக்கு - மேற்கு மற்றும் வடக்கு - தெற்காக அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆழ்துளையிலும் முழு ஆழத்திற்கும், துளையிடப்பட்ட, பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்த வேண்டும்.
குழாய்களுக்குள், நிலத்தின் மேல் மட்டத்தில் இருந்து ஆழ்குழாய் நுனி வரை, தண்ணீர் சுத்திகரிப்பு அடுக்குகள் அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை ஒன்றோடு ஒன்று, சிறு கால்வாய் மூலம் இணைக்க வேண்டும்.

இந்த ஆழ்துளை கிணறுகள், நிலப்பரப்பில் தாழ்வான இடங்களிலேயே அமைக்கப்பட வேண்டும். சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் இரு புறமும் குழாய்களை, நிலத்தடியில் அமைக்கலாம். நம் நாட்டின் சமவெளிகளில், நிலத்தடி மண்ணின் அமைப்பு, மேலிருந்து கீழாக, தோட்ட மண், 15 - 20 அடி ஆழம்; அதற்கு கீழே, தண்ணீர் ஊடுருவாத களிமண், 20 அடி ஆழம்: அதற்கு கீழே, மணல் பாங்கு, 35 - 40 அடி; அதற்கும் கீழே, தண்ணீர் சுலபமாக ஊடுருவாத செம்மண் போன்றவை, 15 - 20 அடி வரை இருக்கும்.
மேலும், கீழே, மணல் பாங்காக அல்லது தண்ணீர் ஊடுருவும் துாள் கற்கள், 40 அடி வரை இருக்கும். இவை, அடுக்கடுக்காக ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும். தண்ணீர் ஊடுருவாத மண் அடுக்கைத் தவிர்த்து, மற்றவற்றின் மண், மணல்களின் துகள்களுக்கு இடைவெளியில், நிறைய தண்ணீரை சேமிக்க முடியும். மழை நீர், இயற்கையாக, மண்ணின் மேல் அடுக்கில் மட்டுமே ஊடுருவும். பெரும்பாலும் கீழே உள்ள மற்ற அடுக்குகள் காய்ந்தே இருக்கும். அதற்குக் காரணம், களிமண் போன்ற அடுக்குகள் தண்ணீர் ஊடுருவதை தடை செய்கின்றன. ஆகையால், ஆழ்துளை கிணறுகள் மட்டுமே இதற்கு நல்ல தீர்வு.

மழை நீரானாலும், ஆற்றுப்பெருக்கு வெள்ளமானாலும், அங்கங்கேயே நிலத்தடியில் எந்த சேதாரமும் இல்லாமல், உடனுக்குடன் சேமிக்க முடிவதால், மக்கள் உபயோகத்திற்கு, தேவையான நேரத்தில் முழுவதுமாக கிடைக்கும்; கடலில் சென்று வீணாகாது.
ஏரிகள், குளங்கள் மற்றும் நதிகளின் தண்ணீர், சூரிய வெப்பத்தால், நீராவியாக வெளியேறுவதால் ஏற்படும் நஷ்டம் கணிசமானது.
ஆய்வின் படி, தினமும் நிகழும், உலர் வெப்ப சீதோஷ்ண நிலையால், 4.6 - 6.4 மி.மீ., வரை, நீர்பரப்பு ஆவியாகிறது. ஆனால், நிலத்தடியில் சேமிக்கப்படும் நீர் வீணாவதில்லை; இவ்வகை சேமிப்பே மிகவும் சிறந்தது. இதன் பயன்களும் அதிகம். மழை நீர் பெருக்கெடுத்து வீணாக ஓடும் போது, சாலைகள், கால்வாய், ஏரி, குளங்கள் சேதமாவது தவிர்க்கப்படும். நிலத்தடி நீரின் தன்மையும், சுத்தமும் பாதுகாக்கப்படும். நிலத்தின் கீழ் உள்ள மண்ணின் அமிலம் மற்றும் காரத்தன்மைகள், மழை நீரால் சமன்படுத்தப்பட்டு, சீர்பட நல்ல வாய்ப்புள்ளது.மண்ணின் உப்புத் தன்மையும், வெகுவாகக் குறைந்து, அந்த நிலத்தடி நீர் குடிக்கவும், விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகங்களுக்கும் ஏற்றவையாக மாறும்.

மக்கள், கால்நடைகள், பயிர்களுக்கு மழை வெள்ளத்தால் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மழை பெய்த உடன், ஆழ்துளை கிணறுகள் உள் இழுத்துக் கொள்வதால், மழை காலங்களிலும் கூட, மற்ற நாட்களை போலவே, நீர் தேங்காமல் சுத்தமாக இருக்கும். மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது; பயிர் சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்படும். ஏரி, குளங்கள் மற்றும் ஆறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகள் தகுந்த இடைவெளிகளில் அமைப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்த்தப்படும். மேலும், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும், சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்படும். வெள்ள நீர், கடலில் கலந்து வீணாவதும், முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

மழை நீரும், ஆற்று நீரும் முழுவதுமாக நிலத்தடியில் சேமிக்கப்படுவதால், நம் தேவைகளை முழுவதுமாக எதிர்கொள்ள முடியும். விவசாயமும் ஆற்று நீரை நம்பி இருக்கத் தேவையில்லை. தேவைக்கு ஏற்றார் போல் நிலத்தடி நீரை, மோட்டார் பம்ப் மூலம் எடுத்துக்கொள்ளலாம். பெருமழை பெய்தாலும், நீர் உடனுக்குடன் எங்கும் தேங்காமல் வடிந்து விடுவதால், சாலை உட்பட நிலத்தின் மேற்பரப்பு எப்போதும் காய்ந்த நிலையில் இருக்கும். ஆகையால், புழு, பூச்சிகள், கொசு மற்றும் ஈக்கள் பெருக்கம் முற்றிலுமாக தடைபடும். அந்தந்த பிராந்தியத்தில் உள்ள மழை அளவு, நீரோட்டம், மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல், ஆழ்துளை குழாய் கிணறுகளின் ஆழம், விட்டம், அதில் பொருத்தப்பட வேண்டிய குழாய், அவற்றை இணைக்கும் கால்வாய்களின் அளவு, மழை நீர் சுத்திகரிப்பு அடுக்கு மாறுபடும். நுாறு ஆண்டுகளுக்கு மேல், தாக்கு பிடிக்கக்கூடிய தரமான, துரு பிடிக்காத குழாய்களை ஆழ்துளையில் பொருத்த வேண்டும். குழாய்களின் துளைகளின் அளவு, மழை நீர் உடனுக்குடன் சுற்றியுள்ள மண்ணிற்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் வெளியேற ஏதுவாக வடிவமைக்கப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, குழாயின் உட்புறத்தில், முக்கியமாக குழாயின் துளைகளில் படிந்திருக்கக்கூடிய பாசி, நுண் துகள்கள் போன்றவற்றை இயந்திர, மாசு நீக்கி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணற்றின் அடியில் படிந்திருக்கும் மண் துகள்களை, மணல் - நீர் உறிஞ்சி மூலம் எளிதாக வெளியேற்றி விடலாம். மழை நீர் சுத்திகரிப்பு அடுக்குகளையும், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். இணைப்புக் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும். மற்றபடி, வேறு நிரந்தர செலவுகள் அதிகம் இருக்காது.

சரி, இதற்கு எவ்வளவு செலவாகும் என, பார்க்க வேண்டுமல்லவா... 100 மீட்டருக்கு ஒரு ஆழ்துளை கிணறு என, வைத்துக் கொண்டால், 1 சதுர கிலோ மீட்டருக்கு, 100 கிணறுகள் போட வேண்டும்.தமிழகத்தின் பரப்பளவு, 1.30 லட்சம் சதுர கி.மீ., என்பதால், மலை, பாறைகள், கரடுகள் நீங்கலாக, ஆழ்துளை கிணறுகள் போடக்கூடிய சமவெளி பிரதேசம், 70 சதவீதம் தான்.
இது, 91 ஆயிரம் சதுர கி.மீ.,யாக இருக்கும்; 91 லட்சம் கிணறுகள் போட வேண்டியிருக்கும். அதில், கட்டடங்கள், சாலைகள் போன்றவை போக, மீதமுள்ள இடங்களில், 60 லட்சம் கிணறுகள் போட வேண்டும். ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு, 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றால், தமிழகம் முழுக்க, 36 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், மழை, வெள்ளத்தால் நம் பொருளாதாரம் சந்திக்கும் இழப்பு, மக்களின் அவஸ்தை போன்றவற்றை கணக்கிட்டால், நிலத்தடியில் நீரை சேமிப்பதற்காக செலவிடும் தொகை சொற்பமே! கடலில் வீணாகும் நீரையும், ஆவியாகும் நீரையும் சேமித்தாலே, நாம் அண்டை மாநிலங்களுடன், நீருக்காகப் போராட வேண்டிய நிர்பந்தம் வெகுவாகக் குறையும்.

இந்த திட்டத்தை இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்தினால், முழு பயனும் நம் நாட்டிற்கே கிடைக்கும். ஏனெனில், பூகோள அமைப்பு ரீதியில், நம்முடன் ஒட்டியிருக்கும் நாடுகள் வெகு சிலவே. அவையும் மலைப்பாங்கானவை. அது போல, இந்த திட்டத்துடன் இணைத்து, சூரிய மின் சக்தியையும் உற்பத்தி செய்யலாம். ஆழ்துளை கிணற்றின் அருகே, கம்பத்தை நட்டு, அதன் உச்சியில் சூரிய மின் தகட்டை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மேலும், 'தெர்மோ கபுள் பவர் ஜெனரேஷன்' என்ற முறையும் உள்ளது. இதன் படி, கம்பியின் ஒரு முனையை ஆழ்துளை கிணற்றின் அடியிலும், மறுமுனையை கம்பத்தின் உச்சியில், சூரிய தகட்டிலும் இணைக்க வேண்டும். ஆழ்துளை கிணற்றின் அடியில், நிலத்தடி நீரின் குளிர்ச்சி மிகவும் குறைவாகவும், கம்பத்தின் உச்சியின் சூரிய தகட்டின் உஷ்ணம் மிக அதிகமாகவும் இருக்கும். கம்பியின் இரு முனைகளிலும் ஏற்படும் உஷ்ண வேறுபாடு, அக்கம்பியில், 'எலக்ட்ரான்' அணுத் துகள்களில் ஓட்டத்தை துாண்டச் செய்ததும், கம்பியில் மின்சாரம் உற்பத்தியாகும். கம்பிகளை, 'கிரிட்' எனப்படும் மின் தொகுப்பு மூலம் இணைத்து, தேவையான உபகரங்களை பொருத்தி, போதுமான மின்சாரத்தை பெறலாம். சிறு துளி தான் பெரு வெள்ளம்; சிறு வோல்ட் தான் பெரு மின்சாரம். வெள்ளம், வறட்சி, அவற்றுடன் தொடர்புடைய மின் பற்றாக்குறையால் பாதிப்படையும் நம் மாநிலம் மற்றும் நாட்டிற்கு, இந்த திட்டம் கைகொடுக்கும். ஆட்சியாளர்கள் பின்பற்றுவரா?

ஜானகிராமன் பாலசுப்ரமணியன்
சிவில் இஞ்ஜினியர்,
தமிழ்நாடு மின்வாரியம் (பணிநிறைவு)
e-mail: hindupuja@yahoo.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

spr - chennai,இந்தியா
13-மே-201807:09:17 IST Report Abuse
spr மிகச் சிறப்பான கருத்தே இதுதான் மாற்றுவழியில் யோசிப்பது என்பது நதி நீர் இணைப்புக்கு கோடி கொடுப்பதாகக் கூறும் திரு ரஜினி இதனை ஆதரிக்கலாம் அவரது ஆதரவாளர்கள் மூலமே இதனை நிறைவேற்றலாம் அவரது (அறிவிக்கப்படாத) கூட்டாளிகளான பாஜக உடன் நிற்கலாம் முயற்சி செய்து பார்க்கலாமே ஆனால் பராமரிப்பு மட்டும் அரசை நம்பித்தான் இருக்கும் என்ன செய்ய நியுட்ரினோவுக்காக பாதாளம் வரை தோண்டும் நமது பொறியாளர்கள் இதனை எளிதில் செய்ய முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X