சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

சிந்தனைக்களம் புதிய சட்டமும், உஷார் தருணங்களும்!

Added : மே 06, 2018
Share
Advertisement
பாரம்பரியமும், பழம் பெருமையும் மிக்க ஜனநாயக நாடான இந்தியாவில், நடந்திருக்கவே கூடாத ஒரு நிகழ்வு அது. துாக்கு தண்டனை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது, மத்திய அரசு. இந்தச் சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்திருக்கிறார். எதற்குப் புதிய சட்டம்...'12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்படும்' என்கிறது
 சிந்தனைக்களம்  புதிய சட்டமும், உஷார் தருணங்களும்!

பாரம்பரியமும், பழம் பெருமையும் மிக்க ஜனநாயக நாடான இந்தியாவில், நடந்திருக்கவே கூடாத ஒரு நிகழ்வு அது. துாக்கு தண்டனை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது, மத்திய அரசு. இந்தச் சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்திருக்கிறார். எதற்குப் புதிய சட்டம்...
'12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்படும்' என்கிறது அந்தச் சட்டம். 'எத்தனை குற்றவாளிகள் வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம்; ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்பது அடிப்படை நீதி.இதைக் கருதி தான், மனித உரிமை ஆர்வலர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும், ஆரம்பத்திலிருந்தே துாக்கு தண்டனையை எதிர்த்து வந்திருக்கின்றனர்.
இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிவுறுத்தப்படும் துாக்கு தண்டனை, குற்றம் செய்யத் துணிபவர்களை அச்சம் கொள்ள வைக்கும்; சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களைத் தடுக்கும், குறைக்கும் என்றெல்லாம் நம்பப்படுகிறது.சரி... கடுமையான சட்டங்களால் மட்டும், சிறுமியரின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், வன்முறைகளை குறைத்து விட முடியுமா?
'துாக்கு தண்டனையால் மட்டும் குற்றங்களைத் தடுக்க முடியாது' என்கிறார், வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். 'ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, கொலை செய்வதென்பது துயரமானது. பெண் அணிந்திருக்கும் உடை தான் பாலியல் பலாத்காரத்துக்குக் காரணம் என்கின்றனர்.
'ஆனால், 8 வயது குழந்தையோ, 4 வயது குழந்தையோ பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, பாலியல் வன்முறைக்கு, உடை ஒரு காரணமில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. அது, பெண்களின் மீதான வெறுப்பு, ஆணாதிக்கம்' என்றும் கூறுகிறார், தஸ்லிமா நஸ்ரின்.புதிய சட்டத்தின் படி, சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டால், அதை விசாரிப்பதற்கு, மாநில அரசு மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஆலோசனையுடன் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்காகவே, சிறப்பு தடயவியல் பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட உள்ளன. வழக்கு விசாரணை அதிகபட்சம் இரண்டு மாதங்களில் முடிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவர்கள், முன் ஜாமின் கோர முடியாது.ஜாமின் வேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பிலும், அரசுத் தரப்பிலும் கருத்து கேட்கப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்தத் தகவல்களை தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வைத்திருக்க வேண்டும்... என்றெல்லாம், இந்தச் சட்டம் குறித்தத் தகவல்கள் நீள்கின்றன.
கடுமையான சட்டங்களால் மட்டும் சிறுமியர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், வன்முறைகளை குறைத்து விட முடியாது. அதற்கு சமூகத்தில், வேரிலிருந்து சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். பெண்மையின் மேன்மை குறித்தப் புரிதலை சின்னஞ்சிறு வயதிலேயே ஆண் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். அது, ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து, ஊர் கூடித் தேர் இழுக்கிற பெரிய காரியம்!
இன்றையச் சூழலில், நம் பெண் குழந்தைகளை, இது போன்ற பாலியல் வன்முறைகளிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என, தெரிந்து வைத்துக் கொள்வது தான் அவசியமானது.அவற்றின் சில அடிப்படைகளைப் பார்ப்போம்.
முதலில், குழந்தை பாலியல் வன்முறை என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். 18 வயதுக்குக் கீழுள்ள ஆண் அல்லது பெண் குழந்தையின் மீது யாரோ ஒரு மனிதரால் அல்லது மனிதர்களால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை.
அது, பாலியல் ரீதியான தாக்குதலாக, துன்புறுத்தலாக, படம் பிடிப்பதாக… எதுவாகவும் இருக்கலாம். பாலியல் வார்த்தைகளால் காயப்படுத்துவது, பலவீனப்படுத்துவது, இணையதளங்கள் மூலமாகத் தொந்தரவு செய்வது, குழந்தைக்கு ஆபாசப்படம் காட்டுவது, குழந்தையை ஆபாசமாகப் படம் பிடிப்பது, பார்ப்பது.
பெரியவர்களின் பாலுறுப்புகளை குழந்தைகளுக்குக் காட்டுவது, குழந்தைகளை அவர்களின் உறுப்புகளைக் காட்டச் சொல்வது, குழந்தையின் குளியலறைக்குள் அவர்கள் அனுமதி இல்லாமல் நுழைந்து, அவர்கள் உடலைப் பார்ப்பது...இவையெல்லாம் மறைமுகமாக நிகழ்த்தப்படும் வன்முறைகளே!
அது, ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, உரிய வயதிலேயே, பிறரின், நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்த புரிதல்களைக் கற்றுத் தர வேண்டும்.அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் அந்தரங்க உறுப்புகளை, குளிக்கும் போதோ, பிற சமயங்களிலோ தொடுவது வேறு. மற்றவர்கள் தொடுவது வேறு என்பதைக் கற்றுத் தர வேண்டும்.
அப்படியான சூழ்நிலைகளில் ஒளிவு மறைவில்லாமல் குழந்தைகள் பெற்றோரிடமோ, பாதுகாவலரிடமோ அதைத் தெரிவிக்க வேண்டும் என்பதை, மென்மையாக அதே நேரத்தில் வலியுறுத்திக் கற்றுத் தர வேண்டும்.பெரும்பாலான சிறுமியருக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தில் நெருங்கிப் பழகுபவர்களே காரணமாக இருக்கின்றனர். அதனால், யாராக இருந்தாலும், பிற ஆண் தொடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை, குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.
ஒரு குழந்தை, பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளது என்றால், அதன் நடத்தை மூலமாகவும், உடலில் தெரியும் சில அறிகுறிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
அவை:
* படுக்கையில் சிறுநீர் கழிப்பது. திடீர் பழக்கமாக விரல் சூப்புவது; நகம் கடிப்பது* வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருப்பது. கேட்டாலும் பதில் சொல்லாமலிருப்பது* உடை பற்றிய அக்கறை இல்லாமல், அணியாமல் இருப்பது* பயம், துாக்கமின்மை* முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது* பிரியமான பொருட்கள், மனிதர்கள் மேல் திடீரென வெறுப்பை உமிழ்வது* ரகசியமான அல்லது கலகம் செய்வது போன்ற எதிர் நடவடிக்கைகள்* அந்தரங்க உறுப்புகளில் வலி, வீக்கம், சிவந்து காணப்படுதல்* துாக்கத்திலோ, தனிமையிலோ இருக்கும் போது அழுவது* பாலியல் தொடர்பான வார்த்தைகள், நடவடிக்கைகள், படங்கள் மீது அதற்கான அர்த்தம் புரியாமல் ஆர்வம் காட்டுதல்* தன் அல்லது பிறரின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டுப் பார்ப்பது* உடலில் காயங்கள், கீறல்கள் இருப்பது.இது போன்ற நேரங்களில், குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்:* உணர்ச்சி வசப்படக் கூடாது* குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப முயல வேண்டும். அதற்காகக் கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதோ கூடாது* குழந்தை அதிக வருத்தத்தில், கவலையில் இருந்தால், அது குழந்தையின் தவறு அல்ல என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்* குழந்தைக்கு எந்த விதமான பாலியல் வன்முறை ஏற்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு, குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், அது குறித்தத் தகவலைச் சொல்ல வேண்டும்* அவசியம் ஏற்பட்டால், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யலாம். மருத்துவ சோதனைக்கு பின், குழந்தையைக் குளிக்க வைத்து, உணவு, நீர் கொடுத்து, அவர்கள் வேறு ஆடைக்கு மாற உதவ வேண்டும்* மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என்றால், குழந்தையை முதலில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 'மப்டி'யில் இருக்கும் பெண் காவலரின் முன்னிலையில், குழந்தைக்கு நடந்த பாலியல் வன்முறையைப் பதிவு செய்ய உதவ வேண்டும்* குழந்தையின் வழக்கமான செயல்பாடுகள் எதுவும் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்* குழந்தை தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, யாராவது கேள்வி கேட்கும் போது, சரியாகச் சொல்வதற்கு உதவ முயற்சிக்க வேண்டும்* சத்தம் போட்டு, குழந்தையைக் குழப்பி விடக் கூடாது* தேவைப்பட்டால், குழந்தையின் குழப்பத்தைப் போக்க, கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு செய்யலாம்* பாலியல் வன்முறையில், குழந்தைக்கு ஏற்பட்ட உணர்வு, பயமா, விரக்தியா, அவமான உணர்வா, அச்சுறுத்தலா என்பதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்* பாலியல் துன்புறுத்தலின் போது, குழந்தை அமைதியாக இருந்ததா, குற்றவுணர்வு அடைந்ததா, அதன் பின் சம்பந்தப்பட்ட மனிதரைச் சந்திப்பதைத் தவிர்த்ததா என்பதையெல்லாம் மெள்ளக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்* அந்த நிகழ்வு, குழந்தையின் நண்பர்கள், சகோதரர்கள், குடும்பத்தினருடன் உறவை பாதித்ததா என்பதைக் கேட்டறிய வேண்டும்* குழந்தைக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறையைப் பற்றித் தெரிந்து கொண்டதும், பெற்றோரின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்* அதை உடனே, குழந்தை யாரிடமும் சொல்லவில்லை என்றால், அதற்கான காரணம்; இன்னும் அது குழந்தையை பாதிக்கிறதா; குழந்தைக்கு ஆதரவாக இருப்பது யார் போன்ற தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்* பாலியல் வன்முறைக்குக் காரணமான நபர் பற்றி, பெற்றோர் என்ன சொன்னார்கள் என்பதையும் குழந்தையிடம் கேட்டறிய வேண்டும்* குழந்தையிடம் விசாரிக்கும் போது, அதற்கு பயமேற்படுத்தாத சூழ்நிலை நிலவ வேண்டியது அவசியம்; மென்மையாகப் பேச வேண்டும்; குழந்தையிடம் நேரடியாகப் பேச வேண்டும்; குழந்தை சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும்* நம் வார்த்தைகளைச் சொல்லி, குழந்தையைக் குழப்பி விடக் கூடாது; பொறுமை காக்க வேண்டும்; நாமாக ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது; குழந்தையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது தெரிந்தால், உடனே மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள்:* அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டியது அவசியம். தனி மனிதர்களோ, நிறுவனங்களோ இதைச் செய்யத் தவறுவது, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டப்படி குற்றம்* குழந்தையிடம் விரிவாகப் பேசி, அதற்குப் பொருத்தமான ஒரு ஆலோசகரையும் ஏற்பாடு செய்ய வேண்டும்* அருகிலிருக்கும் மருத்துவமனையில் குழந்தையை அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்* ஒரு நிறுவனத்தில் பாலியல் வன்முறை நிகழ்ந்திருந்தால், அதிலிருக்கும் உயர் அதிகாரிகளுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்க வேண்டும்* குழந்தை எங்கே வசிக்கிறதோ, அதன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்* மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்* குழந்தைகள் நல கமிட்டிக்கு தகவல் சொல்ல வேண்டும்.
இவை தவிர, குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தர வேண்டும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால், பாதுகாப்புக்கு சில கருவிகளைக் கொடுத்து அனுப்பலாம். எவ்வளவு பழக்கமானவராக இருந்தாலும், மற்றவர்களிடம் ஓர் அளவுக்கு மேல் நெருக்கம் காட்டாமல் பழக வேண்டிய அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
பெற்றோரும் பாதுகாவலரும் குழந்தையின் மனம் கோணாமல், அதே நேரத்தில் அவர்களின் நடவடிக்கைகளை அன்றாடம் கவனிக்க வேண்டியது அவசியம்.நாம் நம் குழந்தைகளைப் பாதுகாப்போடு வளர்த்தாலே போதும். இது போன்ற அநியாயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X