பண்ணாரி: பண்ணாரி சோதனைச்சாவடி அருகே, காட்டெருமை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கழுதைப்புலி, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து, திம்பம் மலை வரை, சாலை இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. விலங்குகள் அவ்வப்போது, குடிநீர் மற்றும் தீவனம் தேடி, சாலையை கடப்பது வழக்கம். ஒரு வாரமாக மழை பெய்வதால், வனப்பகுதியோரங்களில் புல் வளர்ந்து, பசுமையாகியுள்ளது. பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து, 500 மீ., தொலைவில் நேற்று மதியம், ஒரு காட்டெருமை, சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், மொபைல்போனில் படம் பிடித்துள்ளனர். மனிதர்களை கண்ணிமைக்கும் நேரத்தில், காட்டெருமை தாக்கும் குணம் கொண்டது. எனவே சாலையோரம் காட்டெருமையை பார்த்தால், வாகனங்களை நிறுத்த வேண்டாமென்று, மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.