'சவுத் அரசர் ' ராஜ்ஜியத்தில்காசு...பணம்... துட்டு... மணி...மணி...!

Added : மே 08, 2018 | |
Advertisement
'மே தினம்... உழைப்பவர் சீதனம்,' என்ற பாடலை முணுமுணுத்தவாறு, சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள், மித்ரா. ''மே தினம் முடிஞ்சு, ஒரு வாரமாகியும், விஜயகாந்த் பாடலை பாடிட்டிருக்கே... என்னாச்சு மித்து?'' என்ற சித்ரா, தண்ணீர் கொடுத்தாள்.'மடக்மடக்' கென குடித்த மித்ரா, ''இல்லக்கா... திருப்பூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில், ஆளுங்கட்சியை விட தினகரன் கட்சிக்கு கூட்டம்
 'சவுத் அரசர் ' ராஜ்ஜியத்தில்காசு...பணம்... துட்டு... மணி...மணி...!

'மே தினம்... உழைப்பவர் சீதனம்,' என்ற பாடலை முணுமுணுத்தவாறு, சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள், மித்ரா. ''மே தினம் முடிஞ்சு, ஒரு வாரமாகியும், விஜயகாந்த் பாடலை பாடிட்டிருக்கே... என்னாச்சு மித்து?'' என்ற சித்ரா, தண்ணீர் கொடுத்தாள்.'மடக்மடக்' கென குடித்த மித்ரா, ''இல்லக்கா... திருப்பூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில், ஆளுங்கட்சியை விட தினகரன் கட்சிக்கு கூட்டம் ஜாஸ்தியாம், ''என்றாள்.''அக்கட்சி மாவட்ட நிர்வாகி ஒருத்தர், கூட்டத்தை காட்டணும் என்று, 'ஆண்களுக்கு 300, பிளஸ் ஒரு குவார்ட்டர்; பெண்களுக்கு 200, பிளஸ் ஒரு சேலையும் கொடுத்தாராம். லீவு நாள்தானேன்னு மக்களும் போயிட்டாங்க,'' என மேட்டரை போட்டுடைத்தாள் சித்ரா.''அதே கூட்டத்தில் இன்னொரு சுவாரசியமும் நடந்துச்சு. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வோட நெருங்கிய நண்பர் ஒருவர், தினகரன் கட்சி மீட்டிங்குக்கு போயிருக்கார். அவரை பார்த்த, மா.செ., மேடைக்கு அழைத்து, சால்வை போர்த்தி, பெரிய பதவியும் கொடுக்கறதா உறுதியும் கொடுத்துட்டாராம். அக்கா... இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்க,'' என்றாள் மித்ரா.“கோடை காலம் வந்தாலே ஒரே தண்ணி பிரச்னைதான். இதுல அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிச்சாச்சு. குழாயில தண்ணீர் வரலைன்னா, மக்கள் கேட்குற தில ஒரு 'லாஜிக்' இருக்கு,'' என்று சொல்லி நிறுத்தினாள்.''அய்யோ... என்னக்கா. பாதியில நிறுத்திட்டீங்க,'' என்று மித்ரா பரப்பானாள். “பறக்காதடி, சொல்றேன். கோழிப்பண்ணை ஊர்ல நடந்த கூத்தை கேளு. ரோட்டோரமா இருந்த நுங்கு கடைக்கு போன ஒரு 'போலீஸ் அதிகாரி, 'ஏய்யா... இப்படி இருக்கு. நுங்குல தண்ணியே இல்லைன்னு,' வியாபாரிகிட்ட தகராறு பண்ணிட்டு, நுங்கை காலில் போட்டு ஆத்திரம் தீர மிதிச்சாராம்,'' என்று சித்ரா முடிப்பதற்குள், ''இது என்ன, சின்னப்புள்ளைத்தனமா' இருக்கு,'' என்று வடிவேல் பாணியில் கூறி சிரித்தாள் மித்ரா.“அட... அவசரக்குடுக்க... இதையுங்கேளு. வந்தது யாருன்னு தெரியாமல், கோவப்பட்ட, நுங்கு வியாபாரி, அருவாளை துாக்கி காட்டுனாராம். உடனே, நம்ம அதிகாரி, 'ரோந்து' போலீஸ்காரர்கிட்ட சொல்லி நுங்கு, அருவாள்ன்னு எல்லாத்தையும் பறிமுதல் செஞ்சுட்டாரு. இனிமேல், அந்த ஆள் அங்க நுங்கு, விக்க கூடாதுன்னு ஆர்டர் வேற போட்டுட்டாராம்,'' என்று விளக்கினாள் சித்ரா.''நல்லவேளை, அரிவாளை நிறுத்திட்டாரு. இல்லேன்னா, சங்குதான் ஊதியிருக்கோணும். அதிகாரியாக இருக்கிறவங்க, 'குண'த்தை 'சேகரி'ச்சு வைச்சுக்கோணும். இல்லாட்டி, மக்கள்கிட்ட வாங்கி கட்டிக்க வேண்டியதுதான்.இங்கு அவனவனுக்கு, குடிக்கறதுக்கே தண்ணியை காணோம்னு, ரோட்டில் உட்கார்ராங்க. இதில், இவரு ஒருத்தரு,'' என்று மித்ரா சொன்னதும், ''அவரை சொல்லி குத்தமில்லை. மேலிடத்தில், சாட்டை வெச்சு சுத்தினா பரவாயில்லை. எதையும் கண்டுக்காம இருந்தா, இதை விட நடக்கும்,'' என்றாள் சித்ரா.''ரூரலில் இப்படின்னா.. 'சிட்டி'யில், இதை விட கூத்து நடக்குதாம்,'' என்று யூகமாக பேசினாள் மித்ரா.''ஆமாம்.. நாகமென 'சீறும்' அதிகாரியை எப்படியாவாது, இங்கிருந்து துாக்கியடிக்கோணும்னு... மீண்டும் நம்மோட வசூல் வேட்டையை மீண்டும் துவக்கி துாள் கிளப்போனுமின்னு, 'குட்டி' அதிகாரி கள், ஆளுங்கட்சி புள்ளிகள் துணையோடு மெட்ராஸ்ல டென்ட் போட்டிருக்காங்களாம். இந்த ஆட்சியில அது நடந்தாலும் நடக்கும். நேர்மையா இருந்தா... அரசியல்வாதிங்க விடுவாங்களா பின்ன...'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா. இன்னொரு விஷயத்த கேள்விப்பட்டியா... திருப்பூர் சவுத் போலீஸ் லிமிட்ல, டாஸ்மாக் சரக்கு சேல்ஸ் காலங்காத்தால ஆறு மணிக்கெல்லாம் துாள் கிளப்புதாம்...'' என, மித்ரா முடிப்பதற்குள்...''அதான், போலீசுக்கு மாசாமாசம் மாமூல் போகுதுல்ல. அப்புறம் என்னவாம்? கைநீட்டி காசவாங்கிட்டபின்னால, சட்டமாவது; ஒழுங்காவது; எல்லாமே மண்ணுதான்...' என, கொந்தளித்தாள் சித்ரா.'அக்கா... ஆத்திரப்படாதே சொல்றத முழுசாக் கேளு. டாஸ்மாக் சரக்கு மட்டுமல்ல, ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சான்னு இன்னும் பல சமாச்சாரமும் சவுத்ல சக்க போடு போடுது... வில்லங்க விவகாரமான பெட்டிஷன் வந்தா... அதுலயும் கலெக்ஷனாம்... சவுத் அரசர் காட்டுல நல்ல மழைதான் போ...' என, மித்ரா முடிப்பதற்குள் குறுக்கிட்ட சித்ரா...''''இதென்ன பெரிசு... அவரப் பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு; அடுத்தவாரம் சொல்றேன்...' என, பீடிகை போட்டவாறு வேறு விஷயத்துக்கு தாவினாள்.''பொதுநல அமைப்பை சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின்படி, வஞ்சிபாளையத்தில் போலி டாக்டர் ஒருவரை, அனுப்பர்பாளையம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தகவல் கொடுத்த நபரை, இரண்டு எஸ்.ஐ,கள் மிரட்டியுள்ளனர்,''''என்னடா.. நெருப்பில்லாமல், புகையாதேன்னு பார்த்தால், இந்த இரண்டு எஸ்.ஐ.,யும் போலி டாக்டரிடம் மாமூல் வாங்கிட்டு, விசுவாசத்தை அவருக்கு காட்டியுள்ளனர்,'' என்றாள் சித்ரா.''ஏங்க்கா... திருப்பூரில், லஞ்ச ஒழிப்புன்னு ஒரு துறை செயல்படுதா.. இல்லையான்னு, 'லென்ஸ்' வைச்சுதான் பார்க்கணும்போல,'' என்றாள் மித்ரா.''ஏன்.. என்னாச்சு?'' என்று சித்ரா ஆர்வமாக கேட்டதும், ''சிட்டியில இருக்கிற, இரண்டு ஆர்.டி.ஓ., ஆபீசிலும், லஞ்சம் கொளுந்து விட்டு, அக்னி நட்சத்திரத்தை காட்டிலும், அதிகமா எரியுதாம். இங்க மட்டுமல்ல.. இப்படி பல ஆபீசிலும், லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதாம். கோடை மழை வருதோ.. இல்லையோ... சில அதிகாரிகள் காட்டில், லஞ்ச மழை பெய்யாத நாளே இல்லையாம்,''''இவங்கள 'பொறி' வைச்சு பிடிச்சு, 'காப்பு' போடாம, வி.என்.டி.சி.,காரங்க என்ன பண்றாங்கன்னு, நேர்மையான சில போலீஸ்காரங்க ஆதங்கமா கேட்கிறாங்களாம் ,'' என்று சொன்ன மித்ரா, ''ஆளுங்கட்சி கோஷ்டி மோதலால், தேர்தல ரத்து செய்ற அளவுக்கு போயிருச்சாம்,''என்று கூட்டுறவு தேர்தலுக்கு தாவினாள்.''ஆமாம்... மித்து. ஹவுசிங் சொசைட்டியும், 'அர்பன்' பாங்கும் முக்கியமானது. அதனால, மாவட்ட செயலாளர் ஹவுசிங் சொசைட்டியையும், சவுத்எம்.எல்.ஏ., அர்பன் பாங்க்கையும் பங்கு போட்டுட்டாங்களாம். ஆனா, 'மாஜி' அமைச்சர் தலைவராகலாம்னு கணக்கு போட்டியிருந்த ஹவுசிங் சொசைட்டியில மட்டும், தேர்தல் ரத்தாகிடுச்சு.அர்பன் பாங்க் தேர்தல் சத்தமில்லாம நடந்திருச்சே. இதுலயும், ஆளும்கட்சிக்குள்ள சந்தேகம் இருக்குது. கோஷ்டி பூசல்ல எதிர்க்கட்சிகள் கூட சேர்ந்து இப்படி பண்ணிட்டாங்ளோனு பேசிக்கறாங்க',' என்றாள் சித்ரா.''இது தெரிஞ்சு கடுப்பான, மாஜி, முதல்வர்கிட்ட போயி 'ஆனந்தமா'புகார் செஞ்சிருக்காரு. சரியான காரணமே இல்லாம, ஹவுசிங் சொசைட்டி தேர்தலை ரத்து செஞ்சுட்டாங்க. தேர்தல் அதிகாரி மீது 'ஆக்ஷன்' எடுக்கணும்னு, ஒத்தைக்கால் நிக்கறாராம். அதனால தான், மே தின கூட்டத்துக்கு அவரு 'லேட்டா' வந்தாராம்,'' என்றாள் மித்ரா. ''அப்புறம் என்னாச்சு?''என்று ஆர்வமாக கேட்டாள் சித்ரா.''விழாவுக்கு வந்த 'மாஜி' மேடை ஏற மாட்டேன்னு கீழே உட்கார்ந்துட்டாராம். எல்லா நிர்வாகிகளும், மேல வாங்கன்னு கீழே போயி சமாதானம் செஞ்சு, கூட்டிட்டு போனாங்களாம். அப்புறம் கொஞ்ச நேரத்துல கிளம்பி போயிட்டாராம்,''என்றாள் மித்ரா.''அரசல்.. புரசலாக இருக்கிற, கோஷ்டிப்பூசல், இப்போதெல்லாம், 'பகிரங்கமா'யிடுச்சுன்னு சொல்லு,'' என்றாள் சித்ரா.''அமராவதி ஆத்துல மணல் அள்றதுல, துட்டு செமையா விளையாடுதாம். இதில், ரொம்ப கறாரா இருந்த 'லேடி' தாசில்தாரை பதவியில இருந்தே துாக்கிட்டாங்களாம். சில வருவாய்த்துறை ஆட்களே, மணல் திருட்டுக்கு ரொம்ப 'ெஹல்ப்' பண்றாங்களாம்,''என்ற மித்ரா, ''அக்கா... நான் கெளம்பறேன். அடுத்த வாரம் 'செமஸ்டர்' வருது,'' என்று சொல்லி கிளம்பியதும், வாசலுக்கு சென்று வழியனுப்பினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X