'மாவட்டத்தில், அறிமுகம் இல்லாத நபர்களை கண்டால், குழந்தை கடத்த வந்ததாக கருதி, பொதுமக்கள் அவர்களை தாக்குகின்றனர். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம்' என, ஒலிபெருக்கி மூலம், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன், தனியாக இருக்கும் பெண்களை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக ஒரு செய்தி பரவியது. இந்த வதந்தியால், அறிமுகம் இல்லாத புதிய நபர்களை, மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்தன.
அந்த பரபரப்பு சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது, குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக புரளி கிளம்பியுள்ளது. இந்த புரளி, சமூக வலைதளங்கள் மூலம், வேகமாக பரவி வருகிறது.
இதனால், அப்பாவி நபர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.இதை தவிர்க்கும் விதமாக, காவல் துறையினர், ஒலிபெருக்கி வாயிலாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சந்தேகப்படும்படியான புதிய நபர்களை கண்டால், அவர்களை துன்புறுத்தாமல், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.
திருத்தணி
வட மாநில வாலிபர்கள் சிலரை, கிராம பொதுமக்கள் தாக்கிய பின், போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். விசாரணைக்கு பின், அவர்கள் அப்பாவி நபர்கள் என்பது தெரிய வருகிறது.
வட மாநிலத்தவர் மீது நடத்தும் தாக்குதலை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் நகரங்களில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதில், வடமாநிலத்தினர் மற்றும் அப்பாவிகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 98 கிராமங்களிலும், டி.எஸ்.பி., சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஊத்துக்கோட்டை
நான்கு நாட்களாக, ஊத்துக்கோட்டை, அண்ணாநகர், எட்டிக்குளம், பாலவாக்கம், செஞ்சியகரம், ஆரணி, பெரியபாளையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில், மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி பரவுகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்கள், இரவு நேரத்தில் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன், சாலையில் திரிகின்றனர்.
அசம்பாவிதம் எதும் நிகழக்கூடாது என, ஊத்துக்கோட்டை போலீசார், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்களில், வட மாநிலத்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்த கூடாது என, 'நோட்டீஸ்' ஒட்டியுள்ளனர்.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் கூறியதாவது:குழந்தைகள் கடத்தல் என்ற செய்தி, வெறும் வதந்தி. கிராமங்களில், வெளியாட்கள் நடமாடினால் உடனடியாக அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களை தாக்குவது குற்றச் செயலாகும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -