கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலையின் நடுவே தடுப்பு அமைத்தால், போக்குவரத்து பாதிக்கும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவசர கதியில் பணிகள் மேற்கொண்டு வரும், மாநில நெடுஞ்சாலை துறையினர் மீது, பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே, பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலம் முதல், கும்மிடிப்பூண்டி பஜார் வீதி வழியாக கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் வரையிலான, 6.6 கி.மீ., - ஜி.என்.டி., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது.அதை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகளுக்காக, 17.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 2016ம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த ஆண்டு இறுதி வரை, சுணக்க நிலையில் இருந்த விரிவாக்க பணிகள், மூன்று மாதங்களாக விறுவிறுவென நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் அவசர கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் இருந்து, கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலம் வரை, சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால், சாலை விரிவாக்கம் முழுமை பெறாமல், பழையபடி இருவழி சாலை போலவே காட்சியளிக்கிறது.
இந்நிலையில், மேற்கண்ட இடத்தில் சாலையின் நடுவே, கான்கிரீட் தடுப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி அமைத்தால், இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவது நிச்சயம் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவசர கதியில் பணிகள் மேற்கொண்டு வரும் மாநில நெடுஞ்சாலை துறையினர் மீது, வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை முழுமையாக விரிவாக்கம் செய்த பின், சாலை நடுவே கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.