விடுமுறை விருந்தும், விளையாட்டும்| Dinamalar

விடுமுறை விருந்தும், விளையாட்டும்

Added : மே 11, 2018
 விடுமுறை விருந்தும், விளையாட்டும்

எங்களுடைய பள்ளிப்பருவத்தில், பள்ளிக்கூடத்திற்கு எப்போது கோடை விடுமுறை வரும் என ஏங்கித்தவித்திருப்போம். ஏனென்றால் விடுமுறை கிடைத்த மறுநாள், எங்களை தாத்தா பாட்டி வீடு, சித்தப்பா, பெரியப்பா வீடு என ஒவ்வொரு சொந்தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
எங்கள் உறவினர்களும், நாங்கள் செல்லும் போது வான்புகழ் வள்ளுவனின்,“இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பிவேளாண்மை செய்தல் பொருட்டு.”என்னும் கூற்றிற்கிணங்க எங்களை மனப்பூர்வமாக வரவேற்பதற்காகக் காத்திருப்பார்கள்.
அப்புறம் என்ன ஒரு மாதகாலம் மாறிமாறி ஒவ்வொரு உறவுகளின் வீட்டிலும், வேளாவேளைக்குச் செமத்தியானச் சாப்பாட்டுடன் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்… என ஒரு நொடிப் பொழுது போல் ஒருமாத காலம் உருண்டோடி போகும். பின்பு புதுத்தெம்பும் புத்தாடையும் அடுத்த வகுப்புக்கு வெற்றி பெற்ற மகிழ்ச்சியும் எழுச்சியுமாய் துள்ளிக் குதித்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கூடத்தைப் பார்த்து ஒரு கம்பீரநடை.
ஆஹா…! இப்பொழுது நினைத்தாலும் அந்த நிகழ்வுகளும் உறவுகளும் நம்மைப் புல்லரிக்கச் செய்கின்றன. இது எல்லாம் 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை!விருந்தும் பண்டமாற்று முறையும்எங்களின் வீட்டிலிருந்து உறவுகளின் வீடுகளுக்குச் செல்லும் போது ஒரு நாள்கூட வெறும் கையோடுப் சென்றதேயில்லை. ஏனென்றால், நாங்கள் வீட்டிலிருந்து விருந்து வீட்டிற்குச் செல்வதற்குத் தயாரான உடன், எங்கள் வீட்டிலிருக்கும் பாம்பழத்தையும் பலாப்பழத்தையும் பக்குவமாகப் பார்சல் செய்து எங்களிடம் தந்தனுப்புவார்கள். கூடவே சிலப் பலகார வகைகளும் இருக்கும்.

நாங்கள் சில நாட்கள் அங்குத் தங்கி விட்டு, வீட்டிற்குத் திரும்பும் போது, அவர்கள் எங்களிடம், அங்குப் பக்குவமாய் உலர்த்தி வைத்திருக்கும் மரவள்ளிக் கிழங்கு, நெல், கருப்புக்கட்டி, அப்பம், முறுக்கு போன்ற பலவகைப் பலகாரங்களையும் தந்தனுப்புவார்கள். இது ஒரு பண்டமாற்று முறைக்குச் சமமாகவே இருக்கும்.இப்படிப்பட்டப் பொருட்களைக் கொண்டு வரும் போது, எங்கள் வீட்டில் இருப்போரின் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
பாரதியின் பாடல்
விருந்தினர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது, அவை கூட்டுக் குடும்பங்களாக இருப்பதினால், அங்கு பல வயது நிலையிலுள்ள ஏராளம் குழந்தைகள் இருப்பார்கள். அதனால் சொந்த வீடுகளில் உள்ளதைப் போன்ற கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. எனவே பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகளில் தொடங்கி கோலி, கபடி, கால்பந்து விளையாட்டு எனக் குழந்தைப் பட்டாளங்கள் கூடிக்களிக்கும்.
ஒரு வீட்டிலுள்ள குழந்தைகள் மட்டுமின்றி ஊரிலுள்ளக் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும். இவை குழந்தைகளிடையே ஓர் அன்னியோனியத்தை ஏற்படுத்தும். இப்படி கிராமப்புறங்களிலுள்ள பிள்ளைகளின் விளையாட்டைப் பார்த்து விட்டுத்தான், அன்றே அந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார்,
ஓடி விளையாடு பாப்பா! - நீஓய்ந்திருக்க லாகாது பாப்பா!கூடிவிளையாடு பாப்பா! - ஒருகுழந்தையை வையாதே பாப்பா.
என்னும் குழந்தைப் பாடலைப் பாடியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.கோடை விடுமுறையில் பெரும்பாலானக் குழந்தைகள் தண்ணீரில் நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்வார்கள். அதிகமான குளங்களும் ஆறுகளும், ஓடைகளும் நிறைந்திருக்கும். இப்போது அவை ஏதும் இல்லை என்பது வேறு விஷயம். விருந்து வீடுகளில் சென்றால் அங்கிருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை, இது போன்ற நீர் நிலைகளில் அழைத்துச் சென்று குளிக்கச் செய்வதும், நீச்சல் பயிற்சியைக் கற்றுக் கொடுப்பதும் இயல்பான ஒரு வழக்கமாக இருக்கும்.
இப்படி விருந்து வீடுகளுக்குச் செல்லும் போது எடுத்துக் கொள்ளும் நீச்சல் பயிற்சியானது, பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நீர்நிலைகளினால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும். அவர்களுக்கு கோடையில் கிடைக்கும் நல்ல உடற்பயிற்சியும் கூட.
படிப்புக்கு உதவி
கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்பும் போது, மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் படிப்பதற்காக ஒரு சிறு தொகையாவது உறவினர்கள் கொடுத்தனுப்புவார்கள். கூடவே தங்களின் தகுதிக்கேற்ப புத்தாடைகளையும், புத்தகங்களையும் வாங்கிக் கொடுப்பார்கள். இவை சாதாரணக் குடும்பங்களிலிருந்து பணக்காரர்களின் குடும்பங்களில் வரை இயல்பாக நடந்தேறும். இப்படி உதவுவது ஒரு குடும்ப பாசத்தின் தொடர்ச்சி.
கூட்டுக் குடும்பத்துடன் வாழும் வீடுகளில் நம் குழந்தைகள் விருந்திற்குச் சென்றால், அங்கிருந்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பகிர்ந்துண்ணும் மனநிலை, சகிப்பு தன்மை உட்பட பல்வேறு நற்குணங்களைக் கற்றுக் கொண்டு வரும்.இன்று நிலை என்னதற்போதையச் சூழ்நிலையில் இந்தக் குணாதிசயங்கள் அனைத்தும் போய், கோடை விடுமுறை வந்தால் கம்யூட்டர் கல்வியும், டியூஷன் வகுப்புகளும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுக்கான பள்ளி வகுப்புகளும் குழந்தைகளை அடிமைகளாக்கி விடுகின்றன.
அதனால் இளைய சமுதாயத்திடம் உறவு என்ற சொல்லின் அர்த்தமும், விருந்து என்ற சொல்லின் அருமையும், விளையாட்டு என்றச் சொல்லின்அடையாளமும் இல்லாமல் ஆகிப் போனது.கூடவே கூட்டுக் குடும்பம் என்னும் கோபுரம் சிதலமடைந்து, சின்னாபின்னமாகி உறவுகள் என்றச் சொல்லையே உச்சரிக்கத் தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டக் கதையாக மாறிவருகிறது.
எதிர்காலத்தில், தனிக்குடித்தனம் என்பதும், வீட்டிற்கு ஒரு பிள்ளை என்பதும் நம் நாட்டின் பண்பாட்டுக் கலாசாரத்திற்கு உலைவைப்பதாகவே மாறிவிடும். எனவே விடுமுறையில் நம் குழந்தைகளை உறவுகளின் இல்லங்களுக்கு அனுப்பி நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ளவும், உறவுகளை வலுப்படுத்தவும் வழிவகுப்போம்.
முனைவர்
கமல. செல்வராஜ்
கல்வியாளர், அருமனை94435 59841

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X