சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

குடும்ப சூழ்நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறதே, என்ன செய்வது?

Added : மே 11, 2018
Advertisement
குடும்ப சூழ்நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறதே, என்ன செய்வது?

குடும்பத்தைப் பற்றியும், அடுத்தவருக்காகவும் கவலையும் துன்பமும் கொள்வது உயர்ந்த விஷயமென்று நினைப்பவர்களுக்கு, இந்தப் பதிவு நிதர்சனத்தை புரியவைக்கிறது! ஆனந்தமாக இருக்கும்போது ஒருவர் அடையும் சாத்தியங்கள் எத்தகையது என்பதும் புரிகிறது!

கேள்வி: எங்காவது யாருக்காவது துயரம் நேரும்போது, அது குடும்பத்திலாகட்டும், அல்லது இயற்கைச் சீரழிவாகட்டும், அந்த நேரத்தில் நான் என் திறமையை முழுவதுமாக இழந்துவிடுகிறேன். தீர்வை நோக்கிப் போவதற்கு பதிலாக அதைப் பற்றி நினைப்பதிலேயே நேரம் செலவழிக்கிறேன். உதாரணமாக சீனாவில் பூகம்பத்தின்போது ஒரு குழந்தையை அதன் தாய் காப்பாற்றினாள், ஆனால் அதில் அந்த தாய் இறந்துவிட்டாள். நான் அந்தக் குழந்தை பற்றியே சில காலம் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான், அது குறித்து என்னால் ஏதும் செய்ய முடியாது என்று உணர்ந்தேன்.

சத்குரு: குடும்பத்தில் துன்பம் வந்ததாக நீங்கள் கூறினீர்கள். துன்பம் எப்போதும் குடும்பத்திலிருந்து வராது, குடும்பத்தை இதற்காக குற்றம் சாட்டாதீர்கள். உங்களுக்குள்தான் துன்பம் நடக்கிறது, இல்லையா?

துன்பம் குடும்பத்திலிருந்துதான் வருகிறது என்று நினைத்தால் ஏன் குடும்பத்தில் இருக்கிறீர்கள்? தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள். குறைந்தபட்சம் நீங்கள் இல்லாமல் அவர்களாவது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள், இல்லையா?

துன்பம் குடும்பத்திலிருந்து இல்லை. உங்களுக்குள்தான் துன்பம் நடக்கிறது. குடும்பத்தில் குறிப்பிட்ட சூழ்நிலை இருக்கலாம், ஆனால் துன்பம் இருப்பது உங்களுக்குள்தான், இல்லையா? சூழ்நிலைக்கும் அனுபவத்திற்கும் உள்ள இடைவெளியை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். சூழ்நிலை குடும்பத்தில் நடக்கலாம், ஆனால் துயரம் உங்களுக்குள்தான் நடக்கமுடியும், இல்லையா? யாராவது ஒருவர் சூழ்நிலையை உண்டாக்கலாம், ஆனால் துன்பத்தை உண்டாக்குவது நீங்கள்தான், இல்லையா? யாரோ வாழ்ந்தார்கள், அது ஒரு சூழ்நிலை. அது உங்களுக்குத் துன்பத்தை உண்டாக்கியிருக்கலாம்; யாராவது இறந்திருக்கலாம், அது ஒரு சூழ்நிலை. அது உங்களுக்குத் துன்பத்தை உண்டாக்கியிருக்கலாம்; ஆனால் குடும்பம் உங்களுக்குத் துன்பத்தைக் கொண்டுவரவில்லை. குடும்பம் பலவித சூழ்நிலைகளைக் கொடுத்தது. உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தது நீங்கள்தான். இந்த சூழ்நிலைகளையெல்லாம் நீங்கள் தவிர்க்க நினைத்தால் சன்னியாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். சன்னியாசம் வேறு விதமான ஒரு சூழ்நிலை. குடும்ப சூழ்நிலையைத் தவிர்க்க நினைத்து இந்த சூழ்நிலையை எடுத்துக் கொள்கிறீர்கள், இல்லையா? குடும்ப சூழ்நிலையைக் கையாளும் திறமை இல்லாததால் சன்னியாச சூழ்நிலையை எடுத்துக் கொள்கிறீர்கள். இந்த சூழ்நிலை வேண்டாம் என நினைத்தால் அந்த சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. நீங்கள் தயாரா? நீங்கள் தயாரில்லை. எனவே சூழ்நிலையைக் குறை கூறாதீர்கள்.

துன்பம் உங்களுடைய தேர்வுதான்…
குடும்பம் என்னும் சூழ்நிலை நீங்களாக விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்ததுதான், இல்லையா? ஊரை வேண்டுமானால் நீங்கள் விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம், இது நீங்கள் பிறந்து வளர்ந்த இடமாக இருக்கலாம், ஆனால் குடும்ப சூழ்நிலை என்பது நீங்களாக விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்ததுதான்.

எனவே குடும்பம் உங்களுக்கு துன்பத்தை உண்டாக்கவில்லை, அது சூழ்நிலைகளைத்தான் உண்டாக்கியது. நீங்கள்தான் துன்பத்தை உண்டாக்கிக் கொண்டீர்கள். துன்பத்தை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஏனெனில் துன்பப்பட்டால், அதிலிருந்து வேறு நல்லது கிடைக்கும் என நம்புகிறோம். எந்த நல்லதும் அதிலிருந்து கிடைக்காது. மேலும் துன்பம்தான் கிடைக்கும். அப்படியானால் என்ன நடந்தாலும், எனக்கு நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால், நான் மகிழ்ச்சியில் குதிக்க வேண்டுமா? அப்படிச் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட வழியில்தான் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆனந்தம் உங்களை வற்புறுத்துவதில்லை. நான் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறேன், ஆனந்தத்தினால் நான் சிரிக்கமுடியும். ஆனந்தத்தினால் நான் அழ முடியும். ஆனந்தத்தினால் நான் அமைதியாக உட்கார முடியும். ஆனந்தத்தினால் இந்த உலகில் நான் சுறுசுறுப்பாக இயங்கமுடியும்.

ஒரு குறிப்பிட்ட நடத்தையையோ செயலையோ ஆனந்தம் அறிவுறுத்துவதில்லை. ஆனந்தம் உங்களுக்கு நிலையான, அழியாத அடிப்படைத் தளத்தை மட்டுமே அமைத்துக் கொடுக்கிறது. அழிவில்லாத அந்தத் தளத்தில் நீங்கள் நின்றுவிட்டால், பிறகு அது மெதுவாக உங்களை உங்கள் இருப்பையும் தாண்டிய சூழ்நிலைகளுக்கு எடுத்துச் செல்கிறது. திடீரென ஒரு உயரமான தளத்தில் நீங்கள் நிற்கிறீர்கள், அது உங்கள் தன்மையை பாதிப்பதில்லை. நான் வாழும் சூழ்நிலையிலிருந்து அது என்னை மிகவும் விலக்கி வைத்துவிடுமா? அப்படியும் கிடையாது. துன்பத்தில் விழுந்து விடுவோம் என்ற பயம் இல்லாதபோதுதான் உங்கள் வழியில் வரக்கூடிய எல்லா வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள், இல்லையா?

சத்குருவிற்கு தோல்வியால் அவமானம் ஏன் வருவதில்லை?
நான் வந்து உட்கார்ந்தாலே ஆசிரியர்களும் பிரம்மச்சாரிகளும் தன்னார்வத் தொண்டர்களும் பயந்து விடுகின்றனர், ஏதேனும் புதிய திட்டத்தை அறிவித்து விடுவேனோ என்று? ஏனெனில் எந்தத் திட்டத்தையும் அறிவிப்பதற்கு நான் பயப்படுவதே இல்லை. அது நன்றாக நடந்தால், நல்லது; அது நடக்கவில்லையென்றால் என்ன செய்யமுடியும்? அது எப்படி நடந்தாலும் நான் இதேபோலத்தான் இருப்பேன். எனவேதான் முடியவே முடியாத திட்டங்களில் எல்லாம் ஈடுபடுகிறேன் (சிரிக்கிறார்). நான் 114 மில்லியன் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் நட வேண்டும் என்று முதலில் சொன்னபோது, “சத்குரு, 114 மில்லியன் என்றால் எவ்வளவு என்று தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறினேன், “என்ன பிரச்சினை? நமக்கு எதில் அக்கறை இருக்கிறதோ அதற்கு பாடுபடுவோம், நாம் 1 மில்லியன் நடுகிறோமா அல்லது 114 மில்லியன் நடுகிறோமா என்பது முக்கியமல்ல. நாம் அக்கறை செலுத்தும் விஷயத்தில் என்ன தேவையோ அதை நாம் செய்வோம், அவ்வளவுதான்”. அது முடியாது என்று ஏன் எண்ணுகிறீர்கள்?

ஏற்கனவே தமிழ்நாட்டில் 70 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு மரக்கன்று இன்று நட்டு 2 வருடம் பராமரியுங்கள், அது ஓரளவு வளர்ந்த பிறகு, மற்றொரு மரக்கன்று நடுங்கள், இலக்கு நிறைவேறிவிடும். இது முடியாததா? 2 வருடங்களுக்கு ஒரு மரம் நட்டு வளர்க்க உங்களால் முடியாதா? இப்படித்தான் மிக எளிய சாத்தியங்களையும் நீங்கள் எட்டாத தொலைவாக நினைத்துக் கொள்கிறீர்கள். ஏனெனில் துன்பம் பற்றிய 'ஒரு வேளை இந்தத் திட்டத்தை ஆரம்பித்து உலகெங்கும் அறிவித்துவிட்டு அது நடக்காமல் போனால் அவமானத்தினால் நான் இறந்தே போவேன்' என்னும் பயத்திலேயே இருக்கிறீர்கள். ஆனால் அவமானப்பட்டு நான் இறக்க மாட்டேன். நாம் இவ்வளவு கன்றுகள் நட்டு அதில் ஒன்று கூட மரமாக வரவில்லையென்றாலும் நான் அவமானத்தினால் இறக்க மாட்டேன். தண்ணீர் விட்டு காப்பாற்றாததால் நீங்கள்தான் இறக்க வேண்டும், நான் ஏன் இறக்க வேண்டும்? (அனைவரும் கைதட்டல், சிரிப்பு) நான் அவமானத்தினால் இறக்கமாட்டேன்.

நான் ஆனந்தத்துடன் இறந்துபோவேன். நான் இறக்கும்போது இந்த உலகம் ஒரு அழகான இடமாக மாறியிருந்தால் ஆனந்தத்துடன் இறந்து போவேன். இந்த உலகம் நரகமாக எரிந்து கொண்டிருந்தாலும் நான் ஆனந்தத்துடன் இறந்து போவேன். நான் எதற்காக பயப்பட வேண்டும்? எனவே நிலைத்த தன்மையுடனும் துன்பத்தின் பயம் இல்லாமலும் இருக்கும்போது நீங்கள் ஒவ்வொருவருடனும் ஒவ்வொன்றிலும் விருப்பத்துடன் ஈடுபடுகிறீர்கள், இல்லையா? உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் விருப்பத்துடன் ஈடுபடுகிறீர்கள்.

இப்போது துன்பத்தின் பயம் இருக்கிறது. எனவே உங்கள் ஈடுபாட்டைச் சுற்றி சுவர் எழுப்பியுள்ளீர்கள், இல்லையா? குடும்பத்தையே துன்பமாக நினைத்தால், உங்களால் சமூகத்தில் ஈடுபட முடியுமா? ஈடுபடமாட்டீர்கள், இல்லையா? ஏனெனில் துன்பத்தின் பயம் உங்களை ஆட்சி செய்கிறது. அந்த அடிப்படையைத்தான் நீங்கள் மாற்ற வேண்டும்.

நீங்கள் இன்னும் 100 மடங்கு அறிவுடன் செயல்பட…
ஆனந்த அலையின் நோக்கமே அதுதான். உங்களுக்குள் ஆனந்த அலையில் இருக்க வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமே. அப்படி நீங்கள் ஆனந்த அலையில் இருக்கும்போது, வெளியே நமக்கு எந்த அளவு திறமை இருக்கிறதோ அந்த அளவு ஈடுபடுவோம். மேலும் நமது திறமையும் குறிப்பிடும் அளவிற்கு அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய நரம்பியல் விஞ்ஞானமும், நாளையே உங்கள் நரம்பு மண்டலத்தை மாற்றியமைத்து உங்களை இன்னொரு ஐன்ஸ்டீனாக மாற்றமுடியும் என்று கூறுகிறது. ஆம், நாம் முன்னர் கூறி வந்ததெல்லாம் வெற்றுப் பேச்சு இல்லை என நிரூபணம் ஆகிவிட்டது. உங்களுக்குள் சரியான செயல்கள் நடந்தால், தற்போது நீங்கள் இருப்பதைவிட 100 மடங்கு அதிகமான அறிவுடன் செயல்படுவீர்கள் என்பதற்கு விஞ்ஞான சான்றுகள் உள்ளன. உங்களுக்குள் நடக்க வேண்டிய நல்ல விஷயம் நீங்கள் எப்போதும் ஆனந்தத்திலேயே நிலைத்திருப்பதுதான். துன்பத்திற்கு அங்கே இடமேயில்லை. இப்படி நீங்கள் செய்துவிட்டால் நீங்களே நினைத்துப் பார்க்காத அளவு உங்கள் உடலும் மனமும் மெதுவாக மிகத் திறமையுடன் செயல் புரிய ஆரம்பிப்பதைப் பார்ப்பீர்கள்.

மனிதர்கள் மிகுந்த வல்லமையான மனிதர்களாக மாறுவார்கள். ஒரு பயணம் குறித்தே நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம், படைப்பிலிருந்து படைப்பவராகவே மாறும் பயணம் குறித்து. படைப்பின் மூலம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. ஒரு சதைப் பிண்டமாகவே இருப்பதா அல்லது படைப்பவராகவே மாறுவதா என்பது உங்கள் கையில் இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தியுடனும் வாய்ப்புடனும்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அந்த முயற்சியில் இறங்குவது மிகவும் முக்கியம். ஏதோ ஒன்றைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது முக்கியமல்ல. உங்கள் குடும்பம் ஒரு பிரச்சினையாக இருந்தால் அதை விட்டுவிட்டு இன்றே என்னை வந்து பாருங்கள். உங்கள் துன்பங்களுக்கு உங்கள் குடும்பம்தான் காரணம் என்று நீங்கள் கருதினால் இன்றே குடும்பத்தை விட்டு விலகிவிடுங்கள். குடும்பத்தை விட்டு விலகி ஆனந்த நிலையில் நிலைக்க எங்களை வந்து பாருங்கள். முடியுமானால் அப்படிச் செய்யுங்கள். ஆனால் அதை நீங்கள் செய்யமாட்டீர்கள், எனவே அங்கேயே இருங்கள்(சிரிக்கிறார்)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X