நீர்வளமிக்க தமிழகமாக மாற்றுவோம்!

Added : மே 12, 2018 | கருத்துகள் (2) | |
Advertisement
காவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது... ஒவ்வொரு ஆட்சியாளர்களும், 'உங்க கட்சி தான் காரணம்!' என, ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். நம் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, அனைத்தும் நமக்கெதிராக, தடுப்பணைகள் அமைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது.காவிரி பிரச்னையை, கட்சிகளின் பிரச்னையாக பார்க்காமல், எட்டு கோடி மக்களின் வாழ்வாதார பிரச்னையாக எண்ணி, மத்திய
நீர்வளமிக்க தமிழகமாக மாற்றுவோம்!

காவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது... ஒவ்வொரு ஆட்சியாளர்களும், 'உங்க கட்சி தான் காரணம்!' என, ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். நம் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, அனைத்தும் நமக்கெதிராக, தடுப்பணைகள் அமைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது.காவிரி பிரச்னையை, கட்சிகளின் பிரச்னையாக பார்க்காமல், எட்டு கோடி மக்களின் வாழ்வாதார பிரச்னையாக எண்ணி, மத்திய அரசு, நமக்கு செய்யும் துரோகங்களை எதிர்க்கவில்லை என்றால், தென்னாபிரிக்காவின், கேப்டவுன் நகருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட, 'டே ஜீரோ' நிலை தான், நமக்கு ஏற்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. அது என்ன, 'டே ஜீரோ' நிலைமை என்கிறீர்களா... உலகிலேயே, முதல் முறையாக, ஒரு பெரு நகரம், சொட்டுத் தண்ணீரில்லாத நிலைக்குப் போய் விடும் என்பதை தான், ஆங்கிலத்தில், 'டே ஜீரோ' என்று கூறுவர். கடந்த ஏப்ரல், 12 முதல், கேப்டவுன் நகரம், இந்த நிலையை அடையும் என, கூறப்பட்டது; அதிர்ஷ்டவசமாக தப்பியது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, கேப்டவுன் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடிய போது, 'இந்திய வீரர்கள், இரண்டு நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டிருந்தது; அந்த அளவிற்கு, தண்ணீர் பஞ்சம் நிலவியது.கேப்டவுன் நகரில், 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில், உலகின் பசுமையான நகரங்களில் ஒன்றாக அந்நகரம் இருந்தது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதை விட, மக்களின் அலட்சியம் காரணமாக, தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி சென்றது அந்த நகரம். எத்தனை பயங்கரம் பாருங்கள்! கடந்த, 2007ம் ஆண்டே, தென் ஆப்ரிக்காவின் நீர் மேலாண்மைத் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து, எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து, மக்களிடமும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மக்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை; தக்க நடவடிக்கைகளை, உரிய நேரத்தில் எடுக்கவில்லை. கடந்த டிசம்பரில், 'ஒரு நாளைக்கு, ஒருவர், 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மீறினால், அபராதம் என, அறிவிக்கப்பட்டது. 'பிப்ரவரி 1 முதல், ஒரு நாளைக்கு, ஒருவருக்கு, 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்' என, உத்தரவு கடுமையாக்கப்பட்டது. எனினும், அந்நகரம், எதிர்பார்த்தது போல, டே ஜீரோ நிலைக்கு போகவில்லை. அந்த நிலைக்கு பயந்ததால், தண்ணீர் சிக்கனத்தை மக்கள் உணர்ந்து, சிக்கனமாக பயன்படுத்த துவங்கினர். நகர் முழுக்க, 200க்கும் அதிகமான தண்ணீர் பெறும் மையங்களை அமைத்துள்ளது அரசு. வெளியிலிருந்து வரும் தண்ணீரை, அதில் நிரப்பினர்; வரிசையில் நின்று, மக்கள் பெற்றனர். இதே நிலையை, நாமும் சந்திக்கவிருக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை. அதற்குள்ளாக, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இதற்கு, 'உங்க கட்சி, எங்க கட்சி; நீ தான் காரணம், நான் தான் காரணம்' என, போட்டி போடும் நேரம் இது இல்லை. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, 'டே ஜீரோ' நிலை ஏற்படுவதற்கு முன், நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில், மக்கள் குவிவதை, சரியான திட்டங்கள் போட்டு, மாற்ற வேண்டும். தொழில் நகரங்களை நிர்மாணிக்கிற போது, மிக கவனமாக தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நம் அண்டை மாநிலங்கள், அதிகமான அணைகளை கட்டும் போது, சும்மா இருந்து விட்டோம். இனியும் அப்படி இருக்காமல், நீர்வள மேம்பாட்டிற்காக, நம் வரிப்பணம் செலவளிக்கப்பட, தமிழக அரசை வலியுறுத்துவோம். 'தமிழகத்திற்கு விடிவு... ஊட்டியில் அணை கட்ட வேண்டும்!' என்ற கோரிக்கை, சமீப காலமாக, காட்டுத் தீ போல், விவசாயிகள் மத்தியில் பரவி வருகிறது. தமிழகத்தின், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும், மோயர் ஆறு, பவானி ஆற்றுடன் இணையும், ஒரு கிளை ஆறு. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, பவானிசாகர் அணையில், பவானி ஆற்றுடன் இணைகிறது இந்த நதி. அதன் பின், பிரிந்து செல்லும், இந்த ஆற்றின் தண்ணீர், கர்நாடகத்தில் உள்ள, கபினி, நுாகு அணைகளில் கலந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில், ஒன்றாக இணைந்து, ஒகேனக்கல் வழியாக, தமிழகத்திற்கு வருகிறது. நாம் கொடுக்கும் தண்ணீரை, நமக்கே தராமல் வஞ்சிக்கிறது கர்நாடகம். ஆகவே, ஊட்டியில் இருந்து, தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து, அணை கட்டினாலே போதும், கர்நாடகா நம்மிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்பது, தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.'இதற்கு வாய்ப்பே இல்லை!' என, ஒரு சாரார் கூறுகின்றனர். 'இது வெறும் வதந்தி' என்கின்றனர் மறுசாரார். நான் என்ன சொல்கிறேன் என்றால், முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை. அணை கட்ட முடியவில்லை என்றால், தடுப்பணைகள் கட்டுங்கள்; குளம், குட்டை, ஏரிகளை உருவாக்கி, நம் தண்ணீரை, நாம் சேமித்துக் கொள்வோம்.தமிழர்களின் அறிவுத்திறனுக்கு, ஈடு இணை இல்லை; நாம் எதிலும் குறைந்தவர்கள் இல்லை. 'முடியாது' என்று கூறுபவர்களுக்கு, 'பனாமா கால்வாய்' ஒரு உதாரணம். வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள குட்டி நாடு தான், பனாமா. பசிபிக் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் அமெரிக்க கண்டங்களிடையே இணைக்கும் கால்வாய் தான், பனாமா கால்வாய். கடந்த, 1914ம் ஆண்டுக்கு முன், கப்பல்கள், தென் அமெரிக்காவைச் சுற்றித் தான் செல்ல வேண்டும்; இதற்கு, 28 ஆயிரத்து, 980 கி.மீ., ஆகும்; எரிபொருள் செலவு, கால விரயம் மிக அதிகம்! இதற்கு தீர்வு, பனாமா நாட்டின் இடையே, அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் கால்வாய் மூலம் இணைப்பது; ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை. பசிபிக் பெருங்கடலில் உள்ள கொலான் பகுதியில் இருந்து, மறுபக்கம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள, பனாமா கடற்கரை பகுதியை, கப்பல் சென்றடைய வேண்டும். 80 கி.மீ.,க்கு, மலைகளையும், சமதள நிலப் பரப்புகளையும் கடந்து, கப்பல்கள் செல்ல வேண்டும்; அவை, செல்லும் அளவுக்கு, அகலமும், ஆழமும் இருக்க வேண்டும்; இது சாதாரண வேலை இல்லை.பிரான்ஸ் நாட்டின் தலைமையில், 1881ல் கால்வாய் வெட்டும் பணி துவங்கியது; 22 ஆயிரம் தொழிலாளர்கள் இறந்தனர்; இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. பலர் முயன்றும் முடியாத இந்த திட்டத்தை, 1904ல் அமெரிக்கா, கையில் எடுத்தது. மேஜர் ஜெனரல் கோதல்ஸ், பனாமா திட்டத்திற்கு, தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார். மலைகளையும், நிலத்தையும் வெடிகுண்டு மூலம் வெடித்து, கால்வாய் அமைக்கும் திட்டம், பொருளாதார ரீதியாக சாத்தியப்படவில்லை. யோசித்தார் கோதல்ஸ். அப்போது, அவர் மனதில் உருவானது தான், இந்த அற்புத செயற்கை நீர் தொட்டி திட்டம். கடல்களுக்கு இடையே உள்ள மலைப் பகுதியில், மூன்று ஏரிகள் செயற்கையாக அமைக்கப்பட்டன. அதில் ஒன்று, காட்டுன் ஏரி; உலகில், மனிதன் உருவாக்கிய மிகப் பெரிய ஏரி இது தான். இப்போது, கடலில் இருக்கும் கப்பல், கடல் மட்டத்தில் இருந்து, 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரிக்கு செல்ல வேண்டும். பசிபிக் பெருங்கடலில் உள்ள கொலான் பகுதி கால்வாயில், 11 கி.மீ.,க்கு கப்பல் பயணமாகும். பின், மூன்று அடுக்கு பிரமாண்ட புனை தண்ணீர் தொட்டிகளை வந்தடையும். அதாவது, செயற்கை ஏரிக்கு வரும் கப்பல், முதல் புனை தொட்டிக்குள் நுழைந்த உடன், நுழைவு பகுதி, மிகப்பெரிய கதவுகளால் மூடப்படும்; பின், அத்தொட்டிக்குள், ஏரியின் நீர் நிரப்பப்படும். நீர்மட்டம் உயர உயர கப்பலும் உயரும்; 30 அடி உயரத்திற்கு சென்ற பின், அடுத்த தொட்டிக்கு கப்பல் நகர்த்தப்படும். தொடர்ந்து, இரண்டாவது தொட்டியின் நுழைவு வாயில் மூடப்பட்டு, அதன் நீர்மட்டம் உயர்த்தப்படும். இவ்வாறு, மூன்று புனைத் தொட்டிகளையும் கடந்து, 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரியை அடைந்து பயணித்த பின், மறுபக்கம் உள்ள, பனாமா நகரை நெருங்கும் போது, மறுபடியும் மூன்று அடுக்கு புனைத் தொட்டிகளின் மூலம், நீர்மட்டம் கீழிறக்கப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடலை கப்பல் சென்றடையும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!பனாமா கால்வாய் அமைக்கும் பணியில், 40 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்; அமெரிக்கா, அன்றைய கால கட்டத்திலேயே, 120 கோடி ரூபாயை செலவு செய்தது. 1914ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக பனாமா கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. நவீன உலகின், ஏழு அதிசயங்களில் ஒன்றாக, பனாமா கால்வாயை, அமெரிக்க சிவில் இன்ஜினியர்கள் குறிப்பிடுகின்றனர். நம் தமிழர்கள், எந்த விதத்திலும் குறைந்த அறிவுடையவர்கள் இல்லை. இளம் பொறியாளர்களே... தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என துடிக்கும் இளம் ஜல்லிக்கட்டு காளைகளே... ஆட்சியாளர்களே... தயவுசெய்து ஒன்று சேருங்கள். புதிய வழிகள் பிறக்கட்டும்; நம்மை ஏமாற்றும் அண்டை மாநிலத்தார் மூக்கின் மீது விரல் வைக்கட்டும். இனி, நம்மை சீண்டி பார்த்தால், அது அவர்களுக்கு தான் தீமை என்பதை, நம் அண்டை மாநிலத்தார் உணரட்டும்! அனைவரும் ஒன்றிணைந்து, நீர்வளம் மிக்க தமிழகத்தை உருவாக்குவோம். முடிவாக... மூன்று ஆண்டிற்கு பெய்ய வேண்டிய மழை, ஆறு மாதத்தில், நம் நாட்டில் பெய்கிறது. இவ்வளவு மழை நீரும் அப்படியே, கடலில் கலக்கிறது. இவற்றை வீணாக்காமல், மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தும் படி அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். குறைந்த அளவு தண்ணீரில், விவசாயம் செய்யும் நவீன தொழில் நுட்பங்களை, நம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வோம்.'மறை நீர்' தத்துவத்தை எப்போதும் மறக்காமல், பன்னாட்டு நிறுவனங்கள், இங்கு தொழிற்சாலைகள் அமைத்து, நம் தண்ணீரை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்துவோம். அதிக நீர் தேவைப்படும் விவசாய பொருட்களை ஏற்று மதி செய்வதற்கு, உரிய கட்டுப்பாடுகள் விதிக்கும் படி அரசுக்கு வலியுறுத்துவோம்.இப்படி செய்தால், நம் நீர் வளம் சுரண்டப்படுவது தடுக்கப்பட்டு, தமிழகம் நீர்வளமிக்கதாக மாறும்.

- ஜெனிபர் பிரேம் --

பத்திரிகையாளர்

இமெயில்: jjaneepremkumar@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (2)

Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
17-மே-201811:26:27 IST Report Abuse
Selvaraj Chinniah தலை வணங்குகின்றேன் சகோதரி. அருமையான கட்டுரை. தமிழா,தமிழா நாளை உனதே என்று பாட்டு பாடினால் போறாது. சகோதரி பதிவு இட்டுள்ளது போல். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழ் நாடடை காப்போம். அரசியல் வியாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை. நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஒன்று படுவோம். உயர்வு அடைவோம்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
23-மே-201816:28:31 IST Report Abuse
Darmavanஅருமையான விளக்கம்.சாதாரணமானவைகளும் கூட புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது..நம் மூட மக்கள் மாறினால்தான் இது நடக்கும்.அரசியல் திருடர்களை நம்பாமல் நல்லவைகளை தேர்ந்தெடுக்கவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X